Thursday, August 26, 2010

பேராசிரியர் மம்மதுவின் தமிழின் முதல் இசை பேரகராதி – அறிமுக விழா


சென்னை. ஆகஸ்டு 15, 2010.

தேவநேய பாவணர் அரங்கில் மதுரை பேராசிரியர் மம்மது அவர்களின் கடின உழைப்பால் உருவான தமிழின் முதல் இசை பேரகராதி அறிமுக விழா நடைபெற்றது.

விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், சென்னைப் பல்கலை கழக இசைத் துறை சிறப்பு நிலைப் பேராசிரியர் எஸ் ஏ கே துர்கா, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கே ஏ குணசேகரன், மற்றும் நட்பு இணையத்தளத்தின் ஆசிரியர் மணா கலந்து கொண்டு நூலை பற்றி அறிமுகம் செய்தார்கள்.

விழாவின் தொடக்கத்தில் எளிமையான இசை நிகழ்ச்சி நடைப் பெற்றது. இந்த இசை நிகழ்வில் “என்றும் நினைவில் இருக்கும் பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்களுக்கு” நினைவஞ்சலியை போற்றும் வகையில் இசை நிகழ்வு இருந்தது. கேசிஎஸ் அருணாசலம், எம்பி சீனிவாசன், டிஎம் செளந்திரராஜன், ஏஎம் ராஜா, லீலா, காமூ ஷெரிப், கேவி மகாதேவன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சம்மந்த மூர்த்தி ஆச்சார்யா போன்ற பலரின் பாடல்கள் பாடப்பட்டது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட பாடல்கள் இன்றும் நீங்கா நினைவில் இருப்பது பழைய பாடல்களுக்கான சக்தியை உணர முடிந்தது.

விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழின் முதல் இசை பேரகராதியை பாராட்டி பேசும் பொழுது, இது ஒரு பல்கலை கழகம் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு மனிதனாக படைத்தது மிகப் பெரிய சாதனை என்று மனதார பாராட்டினார். நூலின் ஆசிரியர் மம்மது அய்யாவின் 5 ஆண்டு கால உழைப்பு நன்கு தெரிகிறது என்றார். 20 பேராசிரியர் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு போராசிரியராக படைத்து இருப்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது என்றார். இசை அகராதியில் உள்ள பல புதிய சொற்களுக்கு புதிய பரிணாமத்தில் புரிந்து கொண்டேன் என்றார். முத்தமிழின் இயல், இசை, நாடகத் துறையில், இசைக்கு இந்த அகராதி ஒரு அங்கீகாரம் என்றார். ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம் வந்து இதனை அறிமுகப் படுத்தி வாழ்த்தி பேசி இருக்க வேண்டும் என்றார்.

அடுத்து பேச வந்த இசைத்துறை சிறப்பு நிலை பேராசிரியர் துர்கா, தமிழில் இசைத் துறையில் உண்மையை நிறுவதற்கு மிகப் பெரிய சான்று இந்த இசை பேரகராதி என்றார். நூலின் ஆசிரியர் “யாப்பு” மற்றும் “புரசோலி” பற்றி விரிவான செய்திகளை எல்லோருக்கும் விளங்கும் வண்ணம் ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்றார். இந்த இசை பேரகராதியில் பண்டைய இசை கருவிகளைப் பற்றியும் இதில் பதிவு செய்து இருக்கிறார் என்றார். அகராதி மிகச் சுருக்கமாக உள்ளது என்றும், அய்யா மம்மது அவர்கள் இதனை கலைகளஞ்சியமாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கே ஏ குணசேகரன், இசை பேரகராதியை மிகவும் வெகுவாகப் பாராட்டி பேசினார். தமிழின் சிறப்பு லகரம் பற்றியும், காலப் போக்கில் நாம் பண்பாட்டில் நாம் இழந்தவற்றைப் பற்றியும், யாழ்பாண நூலகம் தீ வைத்து கொளுத்தப் பட்ட விவரங்களும், குறிப்பாக ஏராளமான இசைப் பற்றிய புத்தகங்கள் எரிக்கப் பட்டதை நினைவு கூர்ந்தார்.

இறுதியாக ஏற்புரையில் பேராசரியர் மம்மது அய்யா, எப்படி இந்த இசை பேரகராதி திட்டமிட்ட எழுதப் பட்டது என்றும், அமெரிக்கா வாழ் தமிழர் திரு பால் பாண்டியன் இதற்கு நிதி உதவி செய்ததுப் பற்றியும், நன்றியோடு நினைவு கூர்ந்தார். நிறைய கருத்துகளில் கே ஏ குணசேகரனும், துர்காவும் ஒன்று போல சிந்திக்கிறார்கள் என்றார். எனது அடுத்த திட்டம் “பண் களஞ்சியங்கள்” (ராகங்கள்) பற்றி என்றார். அடுத்த மூன்றாவது திட்டமாக, பண்டைய இசைக் கருவிகள் பற்றியும், அதனை படத்தோடு காட்சி குறுங்தகடுகளாக, டிவிடி முறையில் தயாரிக்க உள்ளோம் என்றார்.

இதுவரை தமிழ் இசை ஆய்வாளார்களுக்கு இசைக்கு என்று ஒரு அகராதி இல்லை என்பது மிக வருந்ததக்க விசயம். இந்த இசை பேரகராதியை அந்த குறையை போக்கிற்று. மேலும் மொழி மரபுகள், பண்பாடுகள் பற்றிய சான்றுகள் இந்த இசை பேரகராதியில் இருப்பது மிக மிக பெருமையான விசயங்கள்.

நிறைய ஊடகங்களும், நாளிதழ், வார இதழ்களில் இருந்து நிருபர்கள் வந்து இந்த அறிமுக விழாவில் கலந்து கொண்டார்கள்.

வைகோவும் இந்த இசை பேரகராதியை படித்துவிட்டு அய்யா மம்மதுவை வரவழைத்து பாராட்டி பேசி இருக்கிறார். மம்மது அய்யாவின் தமிழ் பெயர், “மாறன் வழுதி” என்பதாகும். வைகோ குறிப்பாக தமிழனால் எதுவும் முடியும் என்பதற்கு இந்த இசை பேரகராதி ஒரு சான்று என்றார்.

அமெரிக்காவாழ் தமிழர்களுக்கு பேராசிரியர் மம்மது அய்யாவை அறிமிக படுத்தியது “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை”. இந்த பேரவைக்கு நன்றிகள் பல…

நன்றி

மயிலாடுதுறை சிவா...

புகைப்பட உதவி : நட்பூ தளம்

கட்டுரை உதவி : பேராசிரியர் மம்மது (மாறன் வழுதி)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது