Thursday, February 03, 2005

கவிஞர் அறிவுமதி...எளிமையின் இலக்கணம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் அறிவுமதியோடு பேசி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரிடம் என்னை டெட்ராய்டில்(மிச்சிகனில்) வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் அறிமுகப் படுத்திக் கொள்ளும் பொழுது அவருடைய கவிதையை சொல்லி என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

(கவிதை...
"என்னை எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது,
அவரையும் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது,
ஆனால் எங்களைதான் யாருக்கும் பிடிக்கவில்லை")

காதல் வயப்பட்டு இருக்கும் ஒர் பெண் எழுதவதாக இந்த கவிதை எனக்கு அவர் கவிதைகளில் மிகப் பிடித்த ஒன்று.

ஒவ்வொரு கலைஞர்களும் விழா முடிந்து அடுத்தவாரமே வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க சார்பாக நடக்கும் முத்தமிழ் விழாவில் கலந்துக் கொள்வது வழக்கம். அதன் படியே அறிவுமதி அண்ணனும் வந்து இருந்தார்கள். விழா நன்கு சிறப்பாக நடைபெற்றதைப் பார்த்து அவர் மிக ஆவலோடு "சேது" திரைப்படத்தில் வரும் "எங்கே செல்லும் இந்தப் பாதை..." என்றப் பாடலை நன்றாகப் பாடினார்.
தமிழில் எல்லா முண்ணனி இசை அமைப்பாளர்களுடன் பழகியதை நினைவு கூர்ந்தார். இளையராஜா மற்றும் ரகுமானின் எளிமைகளைப் பற்றியும், அவர்கள் இசை வளத்தை பற்றியும் பெருமையாக சொன்னார். பாரதிராஜா, பாலுமகேந்திரா அவர்களிடன் துணை இயக்குனாராக பணி ஆற்றியதையும் சொன்னார். எதிர்காலத்தில் தரமான தமிழ் படமும் முக்கியமாக ஆங்கில வார்த்தைகளே வராமல் திரைப்படத்தை தயாரிக்கவேண்டும் என்றார்.

மிக எளிமையாக அன்போடும், பண்போடும் அனைவருடனும் பழகினார். கனடா சென்றால் அங்கு உள்ள நம் ஈழத் தமிழ்ர்களோடு அமர்ந்து அவர்களின் விடுதலைக்கு தரமான தமிழ் பாடல்களை இயற்றி தருவார் என்று எனது ஈழ நண்பர் ஒருவர் சொன்னார். ஈழ மக்களின் விடுதலையைப் பெரிதும், மனதார விரும்புபவர்.

தமிழ் திரைப்பட உலகில் "அண்ணன் அறிவுமதி" என்று எல்லோராலும் அன்பாக செல்லமாக அழைக்கபடுபவர். இயக்குனர் பாலா அவர்கள் அண்ணன் அறிவுமதிப் பற்றி கூறுகையில் வேடதாங்கலில் பறவைகள் சரணலாயம் இருப்பதைப் போல, அண்ணன் அலுவலத்திற்கு அனைத்து இளம் கவிஞர்களும் இங்கு வந்து அடைகலம் ஆவதாக குறிப்பிட்டு உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னால் கூட புதிய இளம் கவிஞர் முத்துகுமார் அண்ணன் அறிவுமதிப் பற்றி பாராட்டி விகடனில் பேட்டி கொடுத்துள்ளார்.

நான் சென்ற முறை தமிழகம் சென்ற பொழுது அண்ணனைப் பார்க்க தி.நகர் அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன். வாசலில் ஒர் பெண்மணி அண்ணன் வந்து விட்டார்கள் நேரா, உள்ளப் போய் வலதுப் பக்கம் திரும்புங்கள், அண்ணன் அலுவலகம் தெரியும் என்றார். ஓர் சிறிய வரவேற்பு அறை. உள்ளே அண்ணன் மற்றொரு அறையில் அமர்ந்து இருந்தார். என்னைக் கண்டதும் மிக உற்சாகம் ஆகி அன்போடு பழ்கினார். அமெரிக்காவில் உங்கள் வீட்டில் உணவு நன்றாக இருந்ததைப் நினைவு கூர்ந்தார். அவ்வளவு தூரத்தில் இருந்து என்னைப் பார்க்க வந்தது மிக்க மகிழ்ச்சி என்றார். என் சித்திப் பையன் சரவணனை அழைத்து சென்றேன். அவனுக்கு மிக மகிழ்ச்சி. அது மட்டும் அல்ல, என் சித்தி பையன் என்னிடம் தமிழ் திரைப்பட உலகில் மற்றும் இலக்கிய வட்டாரத்தில் அண்ணன் மிகப் பெரிய ஆள் என்றும், எல்லோருக்கும் நன்கு உதவுபவர் என்றும் சொன்னான்.

அதாவது பல இளம் கவிஞர்கள் பலர் அண்ணனின் அலுவலத்தில் வந்து போவார்களாம். மிகப் பெரிய திரைப்பட இயக்குனர்கள் அண்ணன் அறிவுமதியிடம் எடுக்கப் போகும் புதியத் திரைப் படத்திற்க்கு 5 அல்லது 6 பாடல்கள் கேட்பார்களாம். ஆனால் அண்ணன் அந்த இயக்குனரிடம் நான் 2 பாடல்கள் அல்லது 1 பாடல் எழதித் தருகிறேன், மற்றப் பாடல்களை இங்கு இருக்கும் இளம் கவிஞர்கள் எழுதித் தருவார்கள் என்பாராம். தமிழ்த் திரை உலகில் ஓரே ஒரு பாடல் எழத எத்தனோயோப் பேர் தவம் கடக்க, ஆனால் அண்ணனோ தனக்கு வந்த வாய்பை பிறருக்கு மனதார விட்டுக் கொடுக்கும் தன்மை என்னைப் பிரமிக்க வைத்தது. எப்படிபட்ட மனம். எவ்வளவு எளிமை. வரும் காலத்தில் அவர் மேன் மேலும் வளர வேண்டும், அதனால் பலரும் வளர வாய்ப்பு ஏற்படும்.

கவிஞர் அப்துல் ரகுமான் ஒருமுறை தன்னுடைய கவிதையில் ,

"எரியும் அழகான தீபத்தைவிட
ஏற்றிவிட்ட தீக்குச்சி பெரிதல்லவா?"
(தீக்குச்சி என்றத் தலைப்பில்) என்றாரே,

அந்த கவிதை கூட அண்ணன் அறிவுமதி போன்றோர்காக எழுதப்பட்டதா என்று நான் நினைத்துப் பார்ப்பது உண்டு.

இப்படிபட்ட எளிமையான, நல்ல உள்ளங்களோடு பழகும் வாய்பை ஏற்படுத்தி கொடுத்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கு என் மனம்மார்ந்த நன்றிகள் பல...

நன்றி
சிவா...
வாசிங்டன்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger Thangamani said...

நானும் அவரைப்பற்றி மிக நல்லவிதமாகவே கேள்விப்பட்டிருக்கிறேன். திரையுலகில் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் மிக எளிதில் கிடைப்பதுதான் என்றாலும், அறிவுமதி அவரது குணநலன்களுக்காகவும், கொள்கைகளுக்காகவும் போற்றப்படுவது கண்கூடு.
நன்றி!

Thursday, February 03, 2005 3:17:00 PM  
Blogger இளங்கோ-டிசே said...

அறிவுமதி ஒரு வித்தியாசமானவராய்த்தான் தமிழ்த் திரையுலகத்தில் இருக்கிறார். இயன்றளவு தமிழில் பாடல்கள் எழுதுவது, கடவுள்களைப் பற்றி (ஜெயம் படம் ஓர் உதாரணம்) எழுதுவதைத் தவிர்ப்பது என்று உறுதியாக இருக்கின்றார். மற்ற கவிஞர்கள் பெண்களை ஆபாசமாய் எழுதி எதிர்ப்பு வந்ததைக்கண்டும், இந்தப் பெண்களை எல்லாம் ரோட்டில் ஓடவிட்டு எரிக்கவேண்டும் என்று தங்கள் 'ஆண்மையை' பறைசாற்றியபோது, சற்று ஆபாசமாய் எழுதிய 'வாடி வாடி நாட்டுக்கட்டை' என்று பாடலுக்காய் பிறிதொரு பொழுதில்
பிறரைப்போலல்லாது, மன்னிப்பும் தயக்கமின்றி அறிவுமதி கேட்டிருந்தாய் நினைவு.

Thursday, February 03, 2005 9:47:00 PM  
Blogger கயல்விழி said...

கவிஞர் அறிவுமதி ஒரு சிறந்த கவிஞர். பல தடவை அவரது கவிகளை ரீரீஎன் கேட்டிருக்கிறேன். சுனாமிக்காக அவர் வடித்த கவிதை கூட உருக்கமாய் இருந்தது. அவரது பேச்சுத்தமிழ் கூட நின்று கேட்கவைக்கும் தன்மை வாய்ந்தது. உங்களுக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்ததை இட்டு மகிழ்ச்சி சிவா. அதை எம்முடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

Friday, February 04, 2005 11:08:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது