Thursday, August 28, 2008

போராளி அய்யா நெடுமாறனுக்கு ஓர் கடிதம்

வாசிங்டன்
ஆக் 28 2008

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அய்யாவிற்கு

இன்னும் உங்கள் மீது ஓரளவு மரியாதை வைத்து இருக்கும் உலகத் தமிழன் சார்பாக உங்களுடன் ஓரிரு வார்த்தைகள்...

கடந்த ஒரு வார காலமாக உங்களது தினமணி அறிக்கையும், அதனை தொடர்ந்து கலைஞரின் கவிதையும் அதற்கு பதிலுக்கு ஓர் மறுப்பு கடிதமும் நீங்கள் வெளியிட்டதை பார்க்கும் பொழுது சராசரி தமிழனாக மனம் ரொம்ப வருத்தம் அடைகிறது!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் தொடர்ந்து கலைஞரை சீண்டுவதன் உள்நோக்கந்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பலன்?! உங்களும் கலைஞருக்கும் அப்படி என்னதான் தனிப்பட்ட பிரச்சினை?! உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், உங்களுக்கு கலைஞரின் மீது அப்படி என்ன தீராத கோபம் மற்றும் வெறுப்பு?! அரசியலுக்கு அப்பாற்பட்டு நீங்கள் கலைஞர் மீது ஓர் வெறுப்பை வைத்துள்ளதன் மர்மம்தான் என்ன?!

ஈழ மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் உங்களை கிட்டதட்ட 18 மாதங்கள் சிறையில் தள்ளிய ஜெயலலிதாவை நீங்கள் கலைஞரைப் போல இப்படி விமர்சித்து உண்டா? அந்த அடக்குமுறை ஆட்சிதமிழர்களுக்கு எதிரான ஆட்சி மீண்டும் வந்துவிட கூடாது என்று நீங்கள் போரடியது உண்டா?! இந்தஅரசியல் களத்தில் நமக்கு யார் வேண்டும், யார் வேண்டாம் என்று உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை!

கலைஞரிடம் உங்களுக்கு பிடிக்காத எவ்வளவோ விசயங்கள் இருக்கலாம்? ஆனால் அவருக்கு ஈழ மக்களின் மீது அன்பும், மரியாதையும், அவர்கள் படுகின்ற துன்பங்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத நபர் என்றுநினைக்கிறீர்களா? அல்லது கலைஞரை அப்படி ஒதுக்கி விட முடியுமா? அப்படி என்றால் தமிழ்ச் செல்வன் மறைவிற்கு அவர் இரங்கல் தெரிவித்ததை இன்றுவரை நீங்கள் மனதார பாராட்டவில்லையே?! ஏன்?!

நீங்கள் மிகப் பெரிய அரசியல் தலைவரும் அல்ல! உங்களுக்கு என்று பெரிதான எந்த வாக்கு வங்கியும் இல்லை! பிறகு எதற்கு கலைஞருடன் ஓர் எதிர் கட்சி தலைவர் போல் நீங்கள் நடந்து கொள்கீறீர்கள்?

நீங்கள் ஓர் மக்கள் போராளி! குறிப்பாக இனம், மொழி என்று உங்களுக்கு என்று ஓர் பாதையை வகுத்துக் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு ஈழப் பிரச்சினை மிக முக்கியம்! இந்த பாதையில் நீங்கள் தொடர்ந்து போராடி கொண்டு வருவதை தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அறிவார்கள்! உங்களுக்கு என்று இனி இழப்பதற்கு என்று எதுவும் இல்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்!

ஆனால் கலைஞருக்கு?! கலைஞர் ஈழ தமிழர்களின் வெற்றிக்கு மிகப் பெரிய போராட்டமோ அல்லது நீங்கள் எதிர்பார்க்கின்ற மிகப் பெரிய உதவிகளோ செய்யமால் இருந்து இருக்கலாம்! ஆனால் அவர் இழந்த இழப்புகள் எவ்வளவோ?! விடுதலைப் புலிகள் நடமாட்டம், தொடர்பு என்று கலைஞரின் ஆட்சியை கலைத்ததைநாடு அறியுமே?! அதுமட்டுமா? திமுக மற்றும் திக பல பிரபலங்கள் இதனால் தொடர்ந்து விசாரணைக்கு உட்பட்டார்களே?! இன்னமும் தொடர்ந்து மிரட்டல்கள்! இவற்றிக்கு அப்பாற்பட்டு கலைஞர் ஈழ மக்களின் விடுதலையை ஆதரிக்கவில்லையா? அவருக்கு என்று ஓர் எல்லை உண்டு! காரணம் அவர் மிகப் பெரிய அரசு பதவியில் இருப்பவர். மிகப் பெரிய இயக்கத்தின் தலைவன்! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாம் ஓர் இரவில் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் உணர வாய்ப்பில்லை!

உங்களது இயக்கத்தில் நல்லப் பேச்சாளர் ஆன மற்றோரு போராளி சுப வீரபாண்டியன் கூட உங்களின் கருத்துகளோடு மாறுப்பட்டு கலைஞர் ஆட்சி வேண்டும் என்று ஊர் ஊராக சென்று கலைஞரை ஆதரித்தார். கலைஞர் ஆட்சிக்குவந்தப் பிறகு உங்கள் தனிப்பட்ட விருப்பு வெருப்புகளுக்கு அப்பாற்பட்டு அவரை இன்றுவரை நீங்கள் வாழ்த்தவில்லை மற்றும் பாராட்டவில்லை! வயது காரணமாகவும், மரியாதை நிமித்தம் காரணமாகவும் கலைஞரை நீங்கள் ஓரு முறை நேரில் பாராட்டி இருந்தால், இப்படி ஓர் மனகசப்பு பெருகி இருக்காதே?! உங்களின் இத்தனை வயது அனுபவம் அதற்கு உதவவில்லையே?!

நீங்கள் உண்மையிலேயே ஈழ மக்களின் விடுதலைதான் முக்கியம், நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு முக்கியம் அல்ல என்று நினைத்து இருந்தால், கலைஞரிடம் ஓரளவு நட்பு பாராட்டி பல காரியங்களை சாதித்து இருக்கலாமே?!அவருக்கும் வயது கிட்டதட்ட 85, உங்களுக்கும் வயது கிட்டதட்ட 70, உங்கள் நட்பால் பல நல்ல காரியங்களை தமிழ்நாட்டிலும், ஈழ மக்களிடத்தும் செய்து இருக்கலாம்! என்ன செய்வது உங்களது ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை!

உங்களது இந்த ஈகோவால் நீங்கள் தொடர்ந்து தினமணியில் கலைஞரை திட்டி அறிக்கை விடுங்கள்! அவரும் பதிலுக்கு தொடர்ந்து கவிதை எழுதட்டும்! இதனால் பாதிப்பு யாருக்கு?! மகிழ்ச்சி யாருக்கு?! என்பதை நீங்களும் ஒரளவு அறிந்து இருப்பீர்கள்! கலைஞரை தினமும் தாக்குவது முக்கியமா? அல்லது உங்களது ஈழ மக்கள் விடுதலை போராட்டம் முக்கியமா?! என்பதை நீங்கள் முடிவு செய்தால் நல்லது?!


வருத்ததுடன்
மயிலாடுதுறை சிவா...




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

10 Comments:

Blogger களப்பிரர் - jp said...

தினந்தோறும் சாகும் மீனவர்கள், இலங்கை அரசுக்கு ஆயுதமும் மற்ற உதவியும் அளிக்கும் நடுவண் அரசு, இன்னும் பல பொடா கைதிகளின் வழக்கை திரும்ப பெறாமை, காலம் காலமாக இருக்கும் காவேரி பிரச்சனை, முல்லை பெரியாறு, இப்பொழுது ஒக்கேநேக்கள்.... இப்படி இருக்கும் எண்ணற்ற மக்கள் பிரச்சனைகளில் தி . மு . க ஆட்சியின் செயல்பாடுகள் சகித்து கொள்ள முடியாதவையே. அவற்றை எல்லாம் அய்யா நெடுமாறன் அவர்கள் மீண்டும் மீண்டும் சமயம் கிடைக்கும் பொழுது எல்லாம் சொல்லியும் எழுதியும் வந்தார்.

இதெற்கெல்லாம் கலைஞர் பதில் கவிதை எழுதவில்லை !!!

Thursday, August 28, 2008 3:15:00 PM  
Blogger ஜோ/Joe said...

சிவா,
உங்கள் எண்ணங்கள் பல விடயங்களில் என் எண்ணங்களோடு ஒத்துப் போவதற்கு இந்த்த பதிவு மற்றொரு சான்று.

ஈழத்தமிழர் பிரச்சனையில் திமுக-வை விட பாதிக்கப்பட்ட கட்சி இல்லை என அறிந்திருந்தும் , இன்றும் கொள்கையளவில் ஈழ விடுதலையை ஆதரிக்கும் கலைஞரை தனிப்பட்ட முறையில் வன்மம் பாராட்டும் நெடுமாறன் ஐயா ,ஈழத்தமிழருக்கும் வெளிப்படையாகவே எதிராக செயல்பட்டு வரும் ,அதனால் தேர்தல் பலன் அடைந்த ஜெயலலிதா -வை அந்த அளவுக்கு எதிர்க்கவில்லை என்பது பல சந்தேகங்களுக்கு உள்ளாக்குகிறது.

நெடுமாறனே ஆட்சிக்கு வந்தாலும் இதைவிட வேறென்ன கிழித்து விட முடியும் என தெரியவில்லை.

கலைஞரின் கவிதையை முதலில் வாசித்து மிகவும் மனம் வருந்திய நான் ,பின்னர் அதற்கு முந்திய நெடுமாறனின் கேவலமான தாக்குதலை படித்த பின்னர் தான் கலைஞரின் கோபத்தை உணர முடிந்தது .

Thursday, August 28, 2008 6:10:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

களப்பிரர்

தங்கள் வருகைக்கு நன்றி! சமுதாயப் பிரச்சினைக்களுக்கு கவிதை எழுத வேண்டிய அவசியம் இல்லை!

கலைஞர் ஆட்சி பொற்கால ஆட்சி என்று சொல்லவில்லை, ஆனால் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வதையும் ஏற்று கொள்ள முடியாது!

என்னுடைய ஆதங்கம் எல்லாம் அய்யா நெடுமாறன் கலைஞரை எதிர்ப்பது போல ஜெ வை எதிர்த்தாரா?!

ஜோ

உங்கள் எண்ணமும் என் எண்ணமும் ஒத்து போவதிற்கு மகிழ்ச்சி!

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Friday, August 29, 2008 6:51:00 AM  
Blogger சிக்கிமுக்கி said...

//அவருக்கு ஈழ மக்களின் மீது அன்பும், மரியாதையும், அவர்கள் படுகின்ற துன்பங்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத நபர் என்றுநினைக்கிறீர்களா? //

தம்முடைய குடும்பத்தாரின்

நலத்தையும் சொத்து

அதிகாரநிலைகளையும்

காப்பாற்றிக்கொள்ளவும்

காட்டப்படும் கவலையும்

அக்கறையும் தமிழ் மக்களின்

நலன்களுக்காகக் காட்டப்படவில்லை

என்றே பல கட்சி சார்பற்ற தமிழர்கள்

கருதுகிறார்கள்.

குறிப்பாக, ஈழத்தமிழர் நலன் பற்றி இன்றைய இக்கட்டான சூழ்நிலையில்
கொஞ்சமும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

Friday, August 29, 2008 6:53:00 AM  
Blogger Kumky said...

உள் விவகாரங்களை புரிந்துகொள்ளாமல் எழுதியுள்ளீர்கள். காலத்தால் உணர்வீர்கள்....
தயவு செய்து பழ.நெடுமாறனின் நேர்மையை சந்தேகிக்காதீர்கள்.

Friday, August 29, 2008 7:27:00 AM  
Blogger தமிழன் said...

சிவா உண்மையில் நான் போடலாம் என்று எண்ணிய கருத்தை நூறு சதவிகிதம் அப்படியே போட்டு உள்ளிர்கள். உண்மையில் கலைஞர் மேல் இவருக்கு என்ன கோபம், இப்படி தமிழ் விரும்பும் அனைவரும் அடித்து கொண்டால் எதிரிக்கு தானே கொண்டாட்டம்.

Friday, August 29, 2008 8:46:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

kumky

வருகைக்கு நன்றி! அய்யா நெடுமாறனின் நேர்மையை நான் சந்தேகித்தால் தலைப்பை வேறு மாதிரி அல்லவா வைத்து இருப்பேன்?!

சிக்கிமுக்கி

நான் எழுதியப் படி அவர் அரசு பதவியில் இருக்கும் பொழுது ஓர் எல்லைக்கு உட்பட்டுதான் எதையும் செய்ய முடியும்!

தீலீபன்

ஒத்த கருத்திற்கு நன்றி

மயிலாடுதுறை சிவா...

Friday, August 29, 2008 10:34:00 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

//எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாம் ஓர் இரவில் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் உணர வாய்ப்பில்லை! //

கலைஞர் ஒன்னும் பெரிதாகக் கிழிக்க வேண்டாம். அவரிடம் யாரும் ஒன்னும் எதிர்பார்க்கவில்லை. அவர் தன் மனதுக்குள் ஈழமக்கள் விடுதலையை ஆதரிக்கிறார் என்றே நான் இன்னும் கருதுகிறேன். அப்படிப்பட்ட அவரது மனசாட்சிப்படி இந்த ஆட்சியில் என்ன செய்திருக்கிறார்னு ஒன்று சொல்ல முடியுமா? பழைய புலிக்கதைகள், ஜெயலலிதா மற்றும் ஆட்சிக்கலைப்பு கதைகள் பற்றி மட்டுமே இன்னும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள், கேட்டுப் புளித்துப் போய் விட்டது.

அவர் புலியையும் ஆதரிக்க வேண்டாம், பூனையையும் ஆதரிக்க வேண்டாம். ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் (குழந்தைகள் உள்பட) சிங்கள அரசின் பொருளாதாரத் தடையாலும், குண்டுவீச்சாலும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாகியிருப்பதை மனதில் கொண்டு இது வரை கலைஞர் என்ன புடுங்கினார் என்று ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னால் எல்லோரும் வாயை மூடிக் கொண்டிருப்பார்கள். அவர் புலியை எதிர்த்துக்கூட அறிக்கை விடட்டும், எத்தனையோ நாய், நரிகளெல்லாம் புலியெதிர்ப்பு ஊளையிட்டுக் கொண்டிருப்பதைப் போல யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. நான் கேட்பதெல்லாம் அப்பாவித் தமிழ் மக்களெல்லாம் அங்கு பட்டினியால் சாகிறார்கள். குழந்தைகள் பால் கூட இல்லாமல் தவிக்கிறார்கள். கலைஞர் என்னத்தைக் கிழித்தார் என்று சொன்னால் நல்லது.

அவர் இந்திய அரசாங்கத்திலிருந்து எதையும் பிச்சை கேட்டுக் கூட அனுப்ப வேண்டாம். தமிழகத்தில் மக்களிடமிருந்து உணவு மட்டும், மருந்துப் பொருட்கள் திரட்டப் பட்டு புழுத்து நாறிக் கொண்டு கிடக்கின்றன. செஞ்சிலுவைச் சங்கத்தினர் தாங்களே அவற்றை ஈழத்து மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் சம்மதித்தனர். செஞ்சிலுவைச் சங்கத்தினர் போர் நடக்கும் இடங்களிலெல்லாம சுதந்திரமாக இம்மாதிரியானத் தொண்டுகளைச் செய்ய போரிடும் நாடுகளால் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவிலுள்ள மனிதத்தன்மையற்ற பார்ப்பனிய மத்திய அரசு அவற்றை இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கின்றது. கலைஞர் இந்த விசயத்தில் ஒரு புல்லையாவது புடுங்கினாரா என்று கேட்டுச் சொல்லுங்கள். அப்புறம் என்ன பெருமைக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் கலைஞர் ஈழமக்களை ஆதரிக்கிறார் என்று. இதைத்தான் இருபது ஆண்டுகளாக சோ இராமசாமி கூட சொல்லிக் கொண்டிருக்கிறான், “புலிகளைத்தான் எதிர்க்கிறேன், ஈழமக்களை ஆதரிக்கிறேனென்று”. இரண்டு பேருக்கும் என்ன வேறுபாடு என்று சொல்கிறீர்கள்? தமிழ்ச்செல்வனுக்குக் கவிதை எழுதினார் என்று சொல்லாதீர்கள். அவருடைய கவிதை துக்கத்திலிருக்கும் பொழுது கேட்க நல்லாயிருந்தது, ஆனால் நாக்கு வழிக்கக் கூட உதவாது.

நன்றி - சொ.சங்கரபாண்டி

Friday, August 29, 2008 3:31:00 PM  
Blogger அபி அப்பா said...

அருமை சிவா. நான் எழுத வேண்டும் என நினைத்த மாதிரியே இருக்கு இந்த பதிவு!!

Tuesday, September 02, 2008 3:00:00 AM  
Blogger ஜோசப் பால்ராஜ் said...

நான் இன்னும் நெடுமாறன் அவர்களின் முதல் அறிக்கையை படிக்கவில்லை. எனவே என்னால் கருத்து எதுவும் சொல்ல இயலவில்லை.

ஆனால் விடுதலைப்புலிகளின் பெயரால் திமுக ஆட்சியை இழந்தது என்றாலும், அது பெயருக்குக் கூறப்பட்ட காரணம்தான் என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அன்று ஆட்சியைக் கலைக்க எம்.கே.நாராயணனுன், சு.சாமியும் கையில் எடுத்த ஆயுதம் விடுதலைப்புலிகள் தொடர்பு என்பது. அன்றைய கவர்னர் கையெழுத்துக் கூட இல்லாமலேயே கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது. எனவே அதை சொல்லி இங்கே பயன் இல்லை. ஆனால் ஆட்சிக்கலைப்பு அனுதாபத்தையும் தாண்டி ராஜிவ் மரண அனுதாப அலை வீசியதால் தேர்தல் தோல்வியை சந்தித்தார்கள் என்பதை மறுக்க இயலாது.

என்ன தான் ஒரு மாநில அரசின் தலைவராக முதல்வராக இருந்தாலும், அவருடைய வரம்புக்குட்பட்டு இவரால் ஈழத்தமிழர்களுக்கு உதவ முடியாதா என்ன? தமிழ்செல்வனின் மறைவுக்கு கண்ணீர் கவிதை எழுதிவிட்டால் மட்டும் போதுமா ? இருப்பவர்களை வாழ வைக்க வழிகாணது செத்தபின் கவிதை எழுதி என்ன பயன்? கவிதை மட்டுமா ஒரு மூத்த தமிழ் தலைவரால் செய்ய முடிந்தது? மற்ற மாநிலத்தவர்கள் தங்கள் மாநில பிரச்சனைகளுக்கு முதல் உரிமை கொடுத்துவிட்டு அப்புறம் தான் தேசியம் பேசுகின்றார்கள். ஆனால் தனித்தமிழ்நாடு எனும் கோரிக்கையோடு ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவர் தமிழர்களின் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு தேசியம் பேசி என்ன பயன்? ஈழத்தமிழர்கள் பிரச்சனையை விடுங்கள், நம் தமிழக மீனவர்கள் இலங்கையினரால் சுடப்பட்ட போதெல்லாம் வெறும் கடிதம் மட்டும் எழுதுவதுதான் ஒரு மாநில முதலமைச்சர் என்ற வரம்புக்குள் அவரால் செய்ய முடிந்ததா ? கடிதம் மட்டும் போதுமா? இதுவே கர்நாடக மீனவர்களை இலங்கையினர் சுட்டுக்கொன்றிருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? முதல் வேலையாக அனைத்துக்கட்சி கூட்டம் போட்டிருப்பார்கள், அடுத்து அனைத்து எம்.பி க்களும் கட்சி பாகுபாடு இன்றி நாடாளுமன்றத்தில் தங்கள் மீனவர்களை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடி நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க செய்திருப்பார்கள். அதை கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் நடத்திக்காட்டியிருக்கும்.

தற்போது எம்.கே.நாராயணன் வந்து கலைஞரை பார்த்துவிட்டு இனி இலங்கைப் படையினர் நம் மீனவர்களை சுட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு போனார். அவர் சொன்னது போல் இப்போது சுடுவது இல்லை. ஆனால் பிடித்து வைத்து உருட்டுக் கட்டையால் அடித்து அனுப்புகின்றார்கள். கேவலம் ஒரு கையகல நாட்டுப் படை பிராந்திய வல்லரசு நாட்டு மீனவர்களை அடித்துக்கொண்டும், சுட்டுக்கொண்டும் இருப்பானாம், அதை பார்த்துக்கொண்டு இவர் கடிதம் எழுதுவாராம். மானங்கெட்ட மத்திய அரசும் அதை வேடிக்கை பார்க்குமாம். அடிவாங்குவது தமிழன் தானே என்று மத்திய அரசு வேண்டுமானால் சும்மா இருக்கலாம், ஆனால் தமிழர் தலைவர் இவர் மத்திய கூட்டணி அரசில் முக்கியப் பங்கு வகிப்பவர், சொன்னதை கொடுக்கவில்லை என ஆரம்பத்திலேயே அடம்பிடித்து தன் வழிக்கு கொண்டுவந்தவர் மீனவர்களின் வாழ்வாதரப் பிரச்சனைக்கு வெறும் கடிதம் மட்டும் எழுதினால் போதுமா?

நானும் தீவிரமான திமுக சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் தான். ஆனால் தற்போதைய கலைஞர் ஆட்சி மிக மோசமாக இருக்கின்றது என்பதுதான் என் ஆதங்கம்.
சன் டிவி பிரச்சனையில் கலைஞர் டிவி கொண்டுவந்த வேகம் வேறு எதிலும் இல்லை, இலவசங்களை காட்டியே ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை அவர் எந்த நல்லவற்றையும் செய்ய மாட்டார்.

தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் எல்லாம் மக்களை திசை திருப்பும் முயற்சிதானே தவிர வேறில்லை. மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியவில்லை. அறிவிக்கப்பட்ட மின்வெட்டே 5 மணி நேரமாம். கேட்கவே கொடுமையாக இருக்கின்றது. இதில் இவர் கவிதை எழுதிக்கொண்டே இருக்கின்றார். கேட்டால் அந்த மாநிலத்தைப் பார், இந்த மாநிலத்தைப் பார் என ஒப்பீடு மட்டும் வரும். அதுதான் ஒரு மாநில முதல்வர் செய்ய கூடியதா?

நெடுமாறன் போய் தானாக பேசக்கூடிய அளவில் கலைஞர் நல்லாட்சியை இம்முறை தரவில்லை என்பதுதான் என் ஆதங்கம்.

Tuesday, September 02, 2008 3:04:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது