Thursday, June 26, 2008

வன்னியர்களுக்காக ராமதாஸ் என்னதான் செய்திருக்கிறார்?....தீரன்

நன்றி : குமுதம்....

இன்றைய வன்னிய சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரும், அதன் அரசியல் அமைப்பாகத் தொடங்கப்பட்ட பா.ம.க.வின் முன்னாள் தலைவருமான தீரன் இன்று எதிர்நிலையிலிருந்து, `வன்னியர்களுக்காக ராமதாஸ் என்னதான் செய்திருக்கிறார்? பட்டியலிட முடியுமா?' என்றும் சவால் விடுகிறார்.

தி.மு.க.தான் வன்முறைக் கட்சி என்று ராமதாஸ் பேசியிருக்கிறாரே?

``தி.மு.க. வன்முறைக் கட்சியா? பா.ம.க. வன்முறைக் கட்சியா? என்ற வாதத்திற்கே நான் வரவில்லை. ஆனால் மற்றொரு கட்சியை வன்முறைக்கட்சி என்று சொல்லுகின்ற தகுதி ராமதாஸுக்கு இல்லை. தமிழக அரசியலில் நேரடித் தாக்குதல் என்ற வன்முறைக் கலாசாரத்திற்கு ஆரம்ப விதையே ராமதாஸ்தான். வன்னியர் சங்கத் தலைவரான வன்னிய அடிகளாரை விழுப்புரத்தில் ஆட்களை வைத்துத் தாக்குதல் நடத்தினார். வாழப்பாடி ராமமூர்த்தியிடம் பலகோடி ரூபாய் பணத்தை வாங்கி அனுபவித்துவிட்டு, கடைசியில் சேலத்தில் அவர் எம்.பி.க்கு நின்றபோது, அவரைத் தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்து அவரையும் அவரது ஆதரவாளர்களையும் ஆட்களை வைத்துத் தாக்கினார். பா.ம.க.விலிருந்து என்னை நீக்கிவிட்டு ஆட்களை ஏவி என்மீது தாக்குதல் நடத்தினார். பண்ருட்டி ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களையெல்லாம் தாக்குவதுதான் ராமதாஸின் நோக்கமாகவே இருந்து வந்துள்ளது. அதேபோல், ராமதாஸின் வலதுகரமாக இருக்கும் காடுவெட்டி குருவோ, `வாழப்பாடி தலையை எடுத்துவிடுவேன், தீரன்தலையைஎடுத்துவிடுவேன்' என்று பேசியிருக்கிறார். இப்போது தி.மு.க. தலைவர்களைப் பேசி வருகிறார் குரு. அதையும் ராமதாஸ்அனுமதிக்கிறார்.''

தி.மு.க. கூட்டணியிலிருந்து நீக்கப்பட்ட பா.ம.க., இனி என்ன செய்யும்?

``சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா அளித்த பேட்டியில் பா.ம.க.வுக்கு தங்கள் கதவு திறந்திருக்கிறது என்று கூறியிருந்தார். இதுபோன்ற பேச்சுகள்தான் ராமதாஸை இன்றும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க.விலிருந்து வெளியேறினால், அ.தி.மு.க.! அ.தி.மு.க.விலிருந்து வெளியேறினால் தி.மு.க. என்பதுதான் ராமதாஸின் கொள்கையாக உள்ளது. திராவிடக் கட்சிகளின் தோள்களில் சவாரி செய்தே பா.ம.க.வை உயிரோட்டமுள்ள கட்சியாகக் காட்டி வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ராமதாஸை தொங்கலில் விட்டுவிட்டால், அவரது கொள்கையற்ற அரசியல் அஸ்தமித்துவிடும். வன்னிய சமுதாயத்தினரும் ராமதாஸுக்கு மாற்றாக இன்னொரு அரசியல் மேடையை எதிர்பார்க்கத்தொடங்கியுள்ளனர். தமிழக முக்கிய கட்சிகள் அதை வளர்த்தெடுத்தால் வன்னியர் சமுதாயத்தின் வாக்குகளை ஏலம் போட்டு விற்கும் ராமதாஸின் சாயம் வெளுத்துப் போகும். அத்துடன் சமுதாய மக்கள் உண்மையான பலனடைய வழி பிறக்கும்.''

ராமதாஸால் வன்னிய சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா?

``நிச்சயமாக இல்லை. வன்னிய சமுதாயத்தினரின் பல கோடி வாக்குகளைக் கணக்குக் காட்டி தனிப்பட்ட முறையில் அவர்தான் வளர்ந்து வருகிறாரே தவிர, அவரால் வன்னிய சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லை.வன்னிய சமுதாயத்துக்காகவே போராட ஆரம்பிக்கப்பட்டதுதான் வன்னியர் சங்கம். அதேபோல் வன்னிய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் அவர்களுக்குத் தனிப்பட்ட அரசியல் அந்தஸ்து பெறவும் தொடங்கப்பட்டதுதான் பா.ம.க.! தொடங்கப்பட்டபோது கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது, `மத்தியில் இரண்டு சதவிகிதம், மாநிலத்தில் இருபது சதவிகிதம் வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு' என்ற கோரிக்கை.
1998 முதல் மத்தியிலும், மாநிலத்திலும் மாறி மாறி ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கும் ராமதாஸ், இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டுவர ஏதாவது செய்தாரா?வன்னியர்கள் மேம்பட உருவாக்கப்பட்ட பா.ம.க.வைத் தலைமையேற்று நடத்திச் செல்லும் ராமதாஸ், சமுதாயத்தினர் மேம்பட என்னென்ன செய்துள்ளார் என்று வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா?''


தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராமதாஸாலேயே வன்னிய சமுதாயத்தினருக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறும் நீங்கள், உங்களைப் போன்ற தலைவர்களால் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?

``மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள யாராலும் எதையும் சாதிக்கமுடியும் என்பதை உலகப் போராளிகளும், தலைவர்களும் நிரூபித்திருக்கிறார்கள். 1996 முதல் 2001 வரை தி.மு.க. ஆட்சியின்போது பா.ம.க.வின் சாதாரண எம்.எல்.ஏ.வாகத்தான் இருந்தேன். அப்போதும் நான் தனிப்பட்ட முறையில் அன்றைய முதல்வர் கலைஞரிடம் பேசி எத்தனையோ காரியங்களைச் செய்துள்ளேன். உதாரணத்திற்கு, வன்னியர்கள் மீது போராட்ட காலங்களில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்க வைத்தேன். தொடர் சாலை மறியல் போராட்டத்தில் பலியான 25 தியாகிகள் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிதி உதவியும், மாதம் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பென்ஷனும் கிடைக்க வழி செய்தேன். வன்னியர்களுக்கு உயர் பதவிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து ராமதாஸின் சம்பந்தியான ராஜ்மோகனுக்கு டி.ஜி.பி. பதவி கிடைக்க வைத்தேன். சென்னை, சேலம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களிலும் வன்னியர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வைத்தேன். வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தமிழறிஞரான பேராசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்களையெல்லாம் நாட்டுடைமையாக்க வைத்தேன். வாழப்பாடி ராமமூர்த்தியுடன் சேர்ந்து ராமசாமி படையாச்சிக்கு சிலை திறந்தேன். இடஒதுக்கீட்டை சுழற்சி முறையில் (ரோஸ்டர் சிஸ்டம்) கொண்டு வரச் செய்தேன். இதன்மூலம் வன்னியர் சமுதாயம் இடம்பெற்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் 11-வது இடத்திலிருந்து நிலை மாறி மூன்றாவது இடத்திற்கு வந்தது. இதன்மூலம் எண்ணற்ற வன்னிய சமுதாயத்தினர் இன்றளவும் பயன்பெற்று வருகின்றனர். வன்னிய சமுதாயத்தினரின் பொதுச் சொத்துக்களை எல்லாம் இணைத்து வன்னிய பொதுச் சொத்து நலவாரியம் அமைக்க அரசாணை பிறப்பிக்க வைத்தேன். இவையனைத்தையும் கலைஞர் ஆட்சியில் ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்தே என்னால் செய்ய முடிந்தது. ஆனால், நீங்கள் சொல்வதைப் போல் தமிழக அரசியலில் முக்கியத் தலைவராக இருக்கும் ராமதாஸ் வன்னியர்களுக்காக என்ன செய்தார் என்று சொல்லட்டும்.''

வன்னிய சமுதாயத்தினரில் தனிப்பெரும் தலைவராக ராமதாஸ்தான் பேசப்படுகிறாரே?

``யார் பேசுகிறார்கள்? அவர்தான் அப்படி காட்டிக்கொண்டு ஒரு மாயையான தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். மேடையில் தன்னைப் பாராட்டிப் பேசிய 23 பேருக்கு ரயில்வேயில் வேலை போட்டுக் கொடுத்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ். ஆனால்,தொடர் சாலைமறியல் போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தந்து பா.ம.க.வை உருவாக்கிய 25 தியாகிகள் குடும்பங்களும் இன்று சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு அல்லல்பட்டுக் கொண்டுள்ளன. சுகாதாரத் துறையையும், ரயில்வே துறையையும் கையில் வைத்திருக்கும் ராமதாஸ், அவர்களின் குடும்பத்திற்கு ஏதாவது வேலை போட்டுத் தந்திருக்கக்கூடாதா? தொடர் சாலை மறியல் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் தியாகி பாப்பனப்பட்டு ரெங்கநாத கவுண்டரின் மனைவி தனது மகனை அழைத்துக்கொண்டு டிரைவர் வேலை கேட்டு ராமதாஸிடம் போனார். அந்த மகனிடம் காரை கொடுத்து அதற்கு ஒரு ரெட்டியார் டிரைவரை சூப்பர்வைசராக வைத்து அவர் எப்படி காரை ஓட்டுகிறார் என்று பரிசோதித்த ராமதாஸ், அப்புறம் சொல்லி அனுப்புவதாகச் சொல்லி அனுப்பிவிட்டார். இது நடந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது. அந்த முதல் தியாகியின் குடும்பம் கூலி வேலை செய்து சாப்பிட்டு வருகிறது.வன்னியரை மற்றவர்கள் ஏமாற்றக்கூடாது என்பதற்காகத்தான் பா.ம.க. தொடங்கப்பட்டது. ஆனால் வன்னியரை வன்னியரே ஏமாற்றலாமா?''

வன்னிய பொதுச் சொத்துகளைப் பராமரிக்க உருவாக்கப்பட்ட நலவாரியம் இப்போது எப்படி இருக்கிறது?

``கேரளாவில் ஈழவர் சமுதாயத்தினரின் பொதுச் சொத்துக்களை சமுதாயத்தின் பேரைச் சொல்லி மற்றவர்கள் சுருட்ட நினைத்தார்கள். அப்போது அரசு தலையிட்டு ஸ்ரீமான் நாராயண குரு தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி. யோகம்) என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, 1500 கோடி ரூபாய் சொத்தை காப்பாற்றித் தந்தது. இப்போது அந்த அமைப்பின் மூலம் பல கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதுபோல் இஸ்லாமிய சமுதாயத்தினரின் பொதுச் சொத்துக்களைப் பராமரிக்க வக்ஃப் போர்டு இருப்பதைப் போல் வன்னியர்களின் பொதுச் சொத்துக்களைப் பராமரிக்க உருவாக்கப்பட்டதுதான் `வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்.' பத்து வருடத்திற்கு முன் நான் எடுத்த கணக்கின்படி அதன் மதிப்பு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய். இப்போது அது பதினைந்தாயிரம் கோடி ரூபாயைத் தொட்டிருக்கும். செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளை, ஆளவந்தார் அறக்கட்டளை, சேலத்திலுள்ள கந்தசாமி கவுண்டர் அறக்கட்டளை... இப்படிப் பல அதில் அடங்கும். தமிழகத்தின் வட மாவட்டங்கள் மட்டுமின்றி திருநெல்வேலி, குற்றாலம், திருச்செந்தூர் இப்படிப் பல இடங்களிலும் வன்னிய பொதுச் சொத்துக்கள் இருக்கிறது. இவை சம்பந்தப்பட்ட இருபத்தொன்பது உயில்களை நானே தனிப்பட்ட முறையில் சேகரித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளேன்.

அதில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் சொந்தமாகச் சம்பாதித்த சொத்துக்கள் தங்களின் மறைவுக்குப் பிறகு உலக வன்னிய குல க்ஷத்திரிய மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் ராமதாஸோ, தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகிகளாகப் போட்டுத் தொடங்கியுள்ள வன்னிய கல்வி அறக்கட்டளையின் பெயரில் இந்தச் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். உதாரணத்திற்கு சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வன்னியர் வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை தனது அறக்கட்டளைக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அதேபோல் சென்னை புரசைவாக்கம் புவனேஸ்வரி தியேட்டர் அருகிலுள்ள குட்டித் தெருவில் வன்னிய குல க்ஷத்திரிய மகாசங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்தையும் எழுதி வாங்கிக்கொண்டார். வன்னிய பொதுச் சொத்துக்களை அறக்கட்டளையின் பெயரில் ராமதாஸ் அபகரிப்பதை அரசு தலையிட்டு தடுக்கவேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய கோரிக்கை'' என்றார் தீரன்.

படங்கள் : நாதன்ஸீ
புஷ்கின் ராஜ்குமார்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger அபி அப்பா said...

நன்றி! ஆக என்ன செய்யலாம்! நான் ரெடி நீங்க ரெடியா! நான் ஏற்கனவே பதிவு போட்டாச்சு! நீங்க அதுக்கு முன்னமே வெற்றி கொண்டான் அய்யா பேச்சை போட்டு சூடு கிளப்பியாச்சு!!! சொல்லுங்க நான் ரெடி! நீங்க ரெடியா??????

Thursday, June 26, 2008 11:52:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது