Chandini Bar - நெஞ்சை உருக்கும் நடிகை தபுவின் ஹிந்தி திரைப் படம் - 2
Atul தன்னுடைய கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு, போலிஸ் அவனை என்கவுண்டரில் போட்டுதள்ளுகிறது. இங்குதான் மும்தாஜின் வாழ்க்கை சீர் குலைந்து போக ஆரம்பிக்கிறது. எந்த மனிதர்கள் அவள் கணவனுக்கு பயந்து பண உதவி செய்தார்களோ, அவர்களே பின்னால் அவளுக்கு எந்த பண உதவியும்செய்யமால் நிராகரிகிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவள் மீண்டும் "சாந்தினி பாரில்"நடனப் பெண்ணாகிறாள். தன் மகனையும் மகளையும் எந்தத் தீயச் சக்திகளும் தீண்டிவிடாமல், அவர்களைக் கண்களில் வைத்து, நன்றாகப் படிக்கவைக்கிறாள்.
மும்தாஜின் 16 வயது மகன் ஓரு நாள் கிரிகெட் ஆடசெல்லும் பொழுது, அவனது நண்பர்களின் தவறுக்காகஅவனையும் காவல்துறை அழைத்துச் செல்லுகிறது. போதாக் குறைக்கு அவனது அப்பா பழைய அடியாள்என்பதாலும், காவல்துறை அவனை வெளியே விட மறுக்கிறது. மும்தாஜ் தனது நண்பரின் உதவியோடுஅவனை வெளியே எடுக்க ஓர் அரசியல் பிரபலம் ஒரு லட்சம் கேட்கிறார், சிறிய பையன் என்பதால்ரூபாய் 75,000 ஒத்துக் கொள்ளுகிறார். ஆனால் மும்தாஜிடம் வெறும் 25,000 மட்டுமே இருக்கிறது.
கதையில் இந்த காட்சிதான் என் மனதை மிக மிக ஆழமாக பாதித்தது. மேற் கொண்டு பணத்திற்கு என்ன பண்ணுவது என்று மும்தாஜ் தவித்துக்க் கொண்டு இருக்கையில் மும்தாஜின் மகளை நீ போய்படி இங்கே நிற்காதே என்றுச் சொல்லிவிட்டு, தன் குடும்ப நண்பரிடம் (அவர் 'மாமா' வேலை பார்ப்பவர்) (Rajpal Yadav) பணத்தை எண்ணிக் கொண்டும், பற்றாகுறை காரணமாக அழுதுக் கொண்டு இருக்கும்பொழுது, அவள் நடனம் ஆடிய "சாந்தினி பாரின்" உரிமையாளரிடம் உதவி கேட்பாள், அவரும் மறுத்துவிட அந்த நண்பர் மும்தாஜிடம் தயங்கி தயங்கி பழைய வாடிக்கையாளர்களை கூப்பிட்டு பேசிப் பார்க்கவா? என்று கேட்கவும், அதற்கு மும்தாஜ் அமோதிப்பதுப் போல் அமைதியாக உட்கார்ந்து இருப்பதும், பழைய வாடிக்கையாளர் ஒருவர் மும்தாஜ் வயதானவாள், வேறு புதிய சரக்கை தா என்று சொல்லுவதும், இன்னோரு வாடிக்கையாளர் என்ன மும்தாஜ் அப்படிப் பட்ட பெண்ணா? எவ்வளவு நாளாக தொழில் செய்கிறாள் என்றும், இவர்கள் ரூபாய் 8000 கேட்கவும் அந்த மார்வாடி வாடிக்கையாளர் ரூபாய் 5000 தான் தர முடியும் என்று கறாராக சொல்ல, மும்தாஜ் பரவாயில்லை ஒத்துக் கொள் என்று சைகை காண்பிப்பதும் மனக் கண்களை விட்டு நீங்கா காட்சிகள்! இதில் என்ன கொடுமை என்றால் இவை அனைத்தையும் அவள் மகள் கேட்டு கொண்டு இருப்பாள். கணவனை தவிர வேறு யாரிடமும் தொழில்ரீதியாக மும்தாஜ் சென்றதில்லை, மகனை சிறையில் இருந்து மீட்க அவள் தன்னை பிறரிடம் பணத்திற்காக விற்பதாகக் காட்டுவது பரிதாபத்திலும் பரிதாபம்! அம்மா மும்தாஜ் படும் பணச் சிரமங்களை காண சகிக்காமல் மகளும் அதே சாந்தினி பாரில் போய் நடன்ப் பெண்ணாக ஆடுவதும், அங்கு ஓர் வயதான ஆளிடம் தன்னை விற்று பணம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து தன் அம்மாவின் கைகளில் பணத்தைக் கொடுத்துவிட்டு கதறி அழுவது கொடுமையிலும் கொடுமை.
வெள்ளி அன்று சிறை சென்ற மகன், திங்கள் அன்று அந்த அரசியல் பிரபலம் மூலம் மீட்கப் படுகிறான், அந்த இரண்டு தினத்திற்குள் சிறையில் மும்தாஜின் மகன் இரு இளைஞர்களால் வண்புணர்ச்சிக்கு ஆளாகிறான். இரண்டு தினத்தில் அவனின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது. சிறையில் இருந்து மீண்டு வந்ததும், அவன் வண்புணர்ச்சிக்கு ஆளானாதை எண்ணி வருத்தப் பட்டு கொண்டே இருக்கிறான். மும்தாஜ் அவனை நன்கு படி எனவும், நல்ல வேலைக்கு செல்லலாம் எனவும் சொல்வதை காதில் வாங்காமல், தீடீரென்று கோபமாக எழுந்து கடைவீதிக்கு செல்லுகிறான். மும்தாஜும் அவனை பின் தொடருகிறாள். கடைவீதியில் அவனை வண்புணர்ச்சிக்கு ஆளாக்கிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறான். அதனை பார்த்த மும்தாஜ் அப்படியே தலையில் கைவைத்துக் கொண்டு கதறி கதறி அழுகிறாள்.
வாழ்நாள் முழுவதும் எது நடக்க கூடாது என்று மகனையும், மகளையும் பார்த்து பார்த்து வளர்த்தும் சந்தர்ப்ப சூழ்நிலைக் காரணமாக மகள் விலை மாது ஆகிவிட்டாள், மகன் கொலைக் காரன் ஆகிவிட்டான், மும்தாஜ் எந்தவித தனித் தன்மையும் இல்லாமல் மீண்டும் நடனப் பெண்ணாகவே வாழ்க்கையை தொடருகிறாள் என்று சோகமான கதையை முடிக்கிறார் இயக்குனர்.
தான் கடந்த பாதையில் கசப்பான அனுபவம் காரணமாகவும், தன் கணவனின் நிழல் உலக அனுபவம் காரணமாகவும், தப்பி தவறி கூட இந்த பாதிப்புகள் தன் குழந்தைகள் மீது வர கூடாது என்பதில் கவனமாக இருந்து அவர்களை வளர்த்து ஆளாக்கினாலும், காலமும், அவர்கள் சூழ்நிலையும் மீண்டும் பழைய வாழ்க்கையிலேயே மும்தாஜை தள்ளுகிறது. இதனை இயக்குனார் காட்சிக்கு காட்சி சிறப்பாக கையாண்டுள்ளார். இயக்குனர் நினைத்து இருந்தால் மகனையும், மகளையும் நன்கு படித்து ஆளாவதைப் போல காண்பித்து இருக்கலாம், ஆனால் யதார்த்த உண்மையை மறைக்க தயாராக இல்லை இயக்குனர்.
இப்படி ஓர் பாத்திரத்தில் எப்படி தபுவால் நடிக்க முடிந்தது?. பாரில் நடனப் பெண்ணாக, விலைமாதுவாக, பாசம்மிக்க தாயாக படம் முழுக்க ஓர் மென் சோகத்தோடு வாழ்ந்து இருக்கிறார். இந்த திரைப் படம் பம்பாயில் நிறையை விருதுகளைப் பெற்று இருக்கிறது. இத் திரைப் படத்தின் ஆரம்பித்திலேயே இது பாரில் நடனப் பெண்களைப் பற்றிய படம் என்றும், அவர்கள் வாழ்க்கையில் இன்னோரு பக்கம் என்றும், அவர்கள் வயிற்று பிழைப்பிற்காக பாரில் நடனம் ஆடுவதற்கு தலைவணங்குவதாக ஆரம்பித்திலியே இயக்குனர் சொல்லிவிடுகிறார். அவர்களின் பின்னால் இருக்கும் வேதனைகளை, துயரங்களை, துல்லியமாக பதிவு செய்து இருக்கிறார் Madhur. ஹிந்தியில் தவிர்க்க முடியாத படம் இது. தபுவிற்காக இந்த படத்தை தாரளமாக பார்க்கலாம்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
7 Comments:
:(
முதல் பாகம் நேற்று படிக்கும்போதே மனதிற்கு ஒரு மாதிரியாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். மதுர்பண்டார்கரின் டிராபிக் சிக்னல் படம் வாங்கி வந்து விட்டேன். இன்னும் பார்க்கும் மன சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை. :(
உங்களின் விமர்சனப்போக்கு நேர்த்தியாக இருந்தது. வாழ்த்துக்கள்
சென்ஷி
வருகைக்கு நன்றி. Traffic Signal பார்த்துவிட்டு ஓர் பதிவு இடுங்கள்...
சிவா...
நானிதனை படம் வெளிவந்த ஆரம்பநாட்களிலேயே பார்த்திருந்தேன்.திரும்பவும் உங்கள் வரிகளில் காட்சிகளை மீட்டிப்பார்க்க முடிந்தது.நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
நல்ல படம்.தமிழில் இவ்வாறான படங்கள் வருவது அருகிவிட்டது.தபு சிறந்ததொரு நடிகை.அவரது முகத்தில் சோகத்தின் சாயல் எப்பொழுதும் படிந்திருப்பதானது இப்பாத்திரத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கிறது.
படத்தின் இயக்குனரையும்,அழகாக எழுதிய உங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.
பாராட்டுக்கள் நண்பரே :)
//இயக்குனர் நினைத்து இருந்தால் மகனையும், மகளையும் நன்கு படித்து ஆளாவதைப் போல காண்பித்து இருக்கலாம், ஆனால் யதார்த்த உண்மையை மறைக்க தயாராக இல்லை இயக்குனர்.//
இயக்குனர் பாராட்டுக்குரியவர்.பாக்கக் கிடைத்தால் பார்ப்பேன்.
நன்றி சுரேஷ், யோகன், ரிஷான்
சிவா...
நெஞ்சை உருக்கியது தபுவா இல்லை படமா என்று கடைசிவரை எனக்கு புரியவில்லை சிவா! :)
கார்த்திக்
மனசை உருக்கியது தபு :-))
நெஞ்சை உருக்கியது படம் :-)
சிவா...
Post a Comment
<< Home