தீபாவளி மேளா - இந்திய தூதரகம்.
வாசிங்டன். அக்டோபர் 15 2006
நேற்று மாலை இந்திய தூதரகத்தில் தீபாவளி மேளா கொண்டாடப் பட்டது. இரண்டு வாரம் முன்பு அழைப்பிதழ் அனுப்பி இருந்தார்கள். என் நண்பர்கள் சிலர் வருடா வருடம் நடக்கும் இந்த விழா நன்றாக இருக்கும் என்றார்கள்.
சரி எப்பொழுதும் தமிழ்ச் சங்கவிழாக்கள், பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா, இலக்கியகூட்டம் இப்படி போய் போய் சில சமயம் அலுப்பு தட்டிய பொழுது இந்த விழா அழைப்பிதழ்வந்தது. சரி போய் வரலாம் என்று நேற்று மாலை கிளம்பினேன். அந்த அழைப்பிதழிலில் என்ன உடை, என்ன நேரம், காரை எங்கு நிறுத்துவது எனப் பல முன்னரே சொல்லி இருந்தார்கள்.
மாலை 6.30 மணிக்கு துவக்கம் என்று போட்டு இருந்தது. மாலை 6 மணிக்கு வாசிங்டன்நகர பகுதியில் உள்ள மாசூசெட்டஸ் அவென்யுவில் இந்திய தூதரகம் அலுவகம் உள்ளது.அதற்கு நேர உள்ள மிகச்சிறிய பூங்காவில் அண்ணல் காந்தி அடிகள் சிலை இருந்தது. அதனைஓர் புகைப் படம் எடுத்துவிட்டு, விழா அறைக்குள் சென்றேன்.
விழாவிற்கு வரும் பொழுது விழா அழைப்பிதழ், அடையாள அட்டை (நல்லவேலை ரேசன் கார்டுகேட்க வில்லை) கொண்டு வர சொல்லி இருந்தார்கள். எனது நண்பர்கள் சிலர் என்னோடு வரஆசைப் பட்டார்கள், ஆனால் விழா அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே வரலாம் என்று கண்டிப்பாகமின் அஞ்சலில் சொன்ன காரணத்தால் நான் மட்டும் செல்ல நேரிட்டது. அங்கு சென்றால் வழக்கம்போல் கும்பலாக எல்லோரும் உள்ளே சென்று கொண்டு இருந்தார்கள். என் நண்பர்களை நினைத்துமனம் மிக வருத்தப் பட்டது.
வரவேற்பு அறையில் ராசீவ் காந்தி படம், மன் மோகன் சிங், அப்துல் கலாம் படம் மாட்டி இருந்தது.அங்குதான் அனைவரும் கும்பலாக நின்று கொண்டு இருந்தார்கள். கிட்டதட்ட 100 பேர்கள் இருக்கலாம்.நம் இந்திய மக்கள் எல்லோரும் பனராஸ், காஞ்சி புரம் பட்டு புடவைகளிலும், காட்டன் புடவைகளிலும், பளபள சுடிதார்களிலும் ஜொலித்தார்கள் என்றால் மிகை ஆகாது. எல்லோருமே கிட்டதட்ட 45 வயது முதல்65 வயது வரை இருந்தனர். ஆண்கள் பலர் ஜீப்பாகளிலும், கோட் சூட்டும், சிங் மக்கள் நீண்டஅழகான கறுப்பு நிறத்தில் தலைப் பாகையும் அணிந்து இருந்தார்கள். மருந்துக்கு கூட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் (?) காணப் படவில்லை. எல்லோரும் ஹாய், ஹேப்பி தீபாவளி என்று சொல்லி கொண்டுஇருந்தார்கள்.
இந்திய தூதுவர் திரு சென் ஆங்கிலத்தில் 5 நிமிடம் வரவேற்றும் தீபாவளிக்கு வாழ்த்தியும் பேசினார். சின்மாயானந்தா ஆசிரமத்தில் இருந்து சாமியார் ஒருவர் தீபாவளி என்றால் என்ன? என்றும் வந்த எல்லோரையும் வாழ்த்தியும் பேசினார். அந்த சாமியாரிடம் எல்லோரும் பவ்யமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். சாமியாருக்கு அருகில் சூப்பராக இரு பெண்கள் இருந்தார்கள். அவர்களிடம் இரண்டு நிமிடம் கடலை போட்டேன். விழா முழுக்க 90% சதவீதம் ஹிந்தியுலேயே நடந்தது. சொற்பமாய் ஆங்கிலம் இருந்தது.
முக்கியமான கொடுமை என்னவென்றால் மொத்த விழா இரண்டு மணி நேரமும் நின்று கொண்டே பார்க்க வேண்டும். மொத்தமாய் ஓர் 10 சேர்கள் போடப்பட்டு இருந்த்து, அதில் வயதான தாத்தா பாட்டிகள் அமர்ந்து இருந்தார்கள், அதை விட கொடுமை வடக்கு இந்திய பெண்கள் இரண்டு மூன்று பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். அவர்களுக்கு ஓர் சிறிய மேடைக் கூட இல்லை. நடைபாதையில் அருகே, மாடிபடி ஏறும் படிக்கு கீழே பெண்கள் ஆடியது மனதிற்கு மிகுந்த வருத்ததை அளித்தது. என்ன கொடுமை இது?
விழாவிம் சிறப்பம்சம் 11 வயது நேபாள சிறுமி "கதக்" ஆடினாள். நடனம் மிக அருமை. மொத்த கூட்டமும் மெய் மறந்து ரசித்தது. என்னவென்று சொல்வது?கடந்த 7 ஆண்டுகளாக பரத நாட்டியம் பார்த்து பார்த்து போராடித்த என் கண்களுக்கு "கதக்" மிக அருமையாகவும், அவள் சுழன்று சுழன்று ஆடியது பார்ப்போர் கண்களுக்கு விருந்து அளித்தது. என்னடா இந்த 2 மணி நேரமும் சொதப்பலாக ஆகிவிட்டதே என்ற நினைத்த பொழுது இந்த பெண்ணின் நடனம் ஓர் புத்துணர்வை தந்தது. அந்த பெண்ணைப் பார்த்து வாழ்த்தி அவள் குரு யார் என்ற வினவிய பொழுது, அவளின் தந்தை என்ற பொழுது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உணவு மிக அருமை. இனிப்பு ஜிலேபியும், ஜாமூனும் சூப்பர். அசைவம் இல்லாதது சற்று மனதிற்கு வருத்தமாக இருந்தது.
மொத்தத்தில் இந்திய தூதரகத்தில் நடந்த விழா மிக சாதரணமாக இருந்தது. அந்த சிறுமி நடனமும், உணவு நன்றாக இருந்த காரணத்தால் மனதை தேற்றிக் கொண்டு அமைதியாக எஸ்கேப் ஆனேன்.
பரப்பரப்பான வாசிங்டன் மாசூசெட்டஸ் அவென்யூவில் சில்லென்று காற்றில், மிதமான குளிரில் சற்று தூரம் நடந்து வந்தது மனம் சற்று லேசானது. அடுத்த நாள் திங்கள் என்ற பொழுது ஏதோ ஓன்று மனதை அழுத்தியது.
"எவனோ ஒருவன் வாசிக்கிறான், நான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்..." என்ற பாடலை மனதில் ஓடவிட்டு வீட்டிற்கு சென்றேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
1 Comments:
நிர்மல்
தங்கள் வருகைக்கு நன்றி.
புகைப் படம் உள்ளது. முடிந்தால் போடுகிறேன்.
எனக்கு ஓர் மின் அஞ்சல்
mpsiva23@yahoo.com அனுப்புங்களேன்.
நன்றி
சிவா...
Post a Comment
<< Home