யுத்தம் வேண்டாம்: முதலமைச்சர் கருணாநிதி
நன்றி : விகடன்
இலங்கை பிரச்சினையில் தமிழக கட்சிகளுக்குள் யுத்தம் வேண்டாம்: முதலமைச்சர் கருணாநிதி
சென்னை, ஆக. 22-: இலங்கைப் பிரச்சினையில் கட்சிகளுக்குள் யுத்தம் வேண்டாம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
தமிழக சட்டசபையில் நேரம் முதலமைச்சர் கருணாநிதி இலங்கை பிரச்னை தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து பேசியதாவது:-
நேற்றைக்கு முன்தினம் சட்டசபையில் நடைபெற்ற ஒரு விவாதம் குறித்து ம.தி.மு.க.வினுடைய சட்டமன்றக் கட்சித்தலைவரும் எனது நீண்டகால அருமை நண்பருமான கண்ணப்பன் பேசினார். அவருடைய கட்சி தலைவரை (வைகோ) பற்றி தவறான செய்திகளைச் சொன்னதாக அவருடைய தலைவர் குறிப்பிட்டதை இங்கே சொன்னார்.
ஒருவேளை வயதான காரணத்தால் தேதிகள் தவறியிருக்கலாம், ஆனால் சேதிகள் தவறவில்லை. தேதியும் தவறவில்லை. கோபால்சாமி (வைகோ) திடீரென்று இலங்கைக்கு கடல்வழியாக ‘மர்ம பயணம்’ ஒன்றை மேற்கொண்டார். அதனை மர்மப் பயணம் என்று சொல்வதிலே எந்தவிதமான தவறும் இல்லை. ஏனென்றால், யாருக்கும் சொல்லாமல், யாருக்கும் தெரிவிக்காமல் மேற்கொண்ட பயணம் அது.
ஆனால் ஒரு நல்ல எண்ணத்தோடு தான் அந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார். நான் அன்றொரு வார்த்தை, இன்றொரு வார்த்தை என்று பேசமாட்டேன். அன்றைக்கு என்ன சொன்னேனோ அதைத் தான் இப்போதும் சொல்கிறேன். அந்தப் பயணம் அவரைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல குறிக்கோளோடு மேற்கொண்ட பயணம்.
ஆனால் அந்தப் பயணம் பற்றி இங்கே இந்த அவையில் நான் குறிப்பிட்ட பிறகு, அவர் செய்துள்ள விமர்சனம்தான் என்னை மிகவும் புண்படுத்துகிறது. இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், போர் நிறுத்தத்தை இந்தியா அறிவிக்க வேண்டுமென்றும், 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, தி.மு.க. மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டை, தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சரானவுடன் கருணாநிதி அடியோடு மாற்றிக் கொண்டு விட்டார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போர் நிறுத்தம் கேட்கவேண்டுமென அப்போது தமிழகத்திலே இருந்த விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளிடம் கருணாநிதி வற்புறுத்தினார். இந்த சூழ்நிலையில் அதிர்ச்சியடைந்த நான் இலங்கையிலே உள்ள எதார்த்த நிலையை தமிழர்கள் படும் துயரத்தை நேரில் கண்டறிவதற்காக உயிருக்கு ஆபத்தான பயங்கரம் சூழ்ந்த பயணத்தை மேற்கொண்டு வன்னிகாடுகளுக்குச் சென்றேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது அவருடைய நேற்றைய அறிக்கை.
ஆனால் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்ட போது, அவர் வன்னி காடுகளுக்குச் செல்வதற்காக சொன்ன காரணம் எனக்கு எழுதிய கடிதத்தில் உள்ளது. பிப்ரவரி மாதம் 5-ந் தேதி எனக்கு அவர் எழுதிய அந்தக் கடிதம் 24-ந் தேதி எனக்குக் கிடைத்தது. அப்போதே நான் சொன்ன விளக்கம் முரசொலியில் வந்தது. அதை சில பேர் நம்ப மாட்டார்கள்.
அதனால் தினத்தந்தியில் வெளிவந்த பேட்டியை கூறுகிறேன். அவர் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கடிதத்தை கொடுத்து, எனக்கு அனுப்பினார். இலங்கையில் இருந்து திரும்பி வந்த பிறகு, அண்ணா அறிவாலயத்திலே நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில், `நான் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை அவரிடம் சில நாட்கள் கழித்துக் கொடுங்கள் என்று சொன்னேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் முரசொலி பத்திரிகையில் வெளி வந்திருக்கின்றது. தினத்தந்தி பத்திரிகையிலும் வெளி வந்திருக்கின்றது.
அவர் அங்கு போகும்போது சொன்ன காரணம் என்ன? இப்போது சொல்கின்ற காரணம் என்ன? 'ஈழம் செல்கிறேன்' என்ற தலைப்பில் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி இரவு 10 மணிக்கு கோபால்சாமி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதை படித்தால் புரியும்.
கடிதத்தில், 'எனது உயிரினும் மேலான சக்தியாய், இமைப் பொழுதும் நெஞ்சில் நீங்காமல் என்னை இயக்கி வரும் தலைவர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் பாதங்களில் இந்த மடலை சமர்ப்பிக்கிறேன். தமிழகத்தில் வரலாறு இதுவரை கண்டிராத மகத்தான அத்தியாயத்தைப் படைத்து விட்டீர்கள். தரணியெங்கும் வாழும் தமிழர்கள் களிப்போடும், பெருமிதத்தோடும், நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னர் ஈழத் தமிழர்களுக்கு தங்களால் விடிவும் விமோசனமும் பிறக்கும் என்ற நிறைந்த நம்பிக்கையோடு உலகமெங்கும் வாழும் தன்மான உணர்வுள்ள தமிழர்கள் ஏக்கத்தோடும், தவிப்போடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழப் போர்க்களத்தில் பிரபாகரன் உறுதியான நிலை ஒன்றை எடுத்துக் கொண்டு அதிலேயே அவர் வலுவாக ஊன்றி நிற்கிறார். அந்தகாரணத்துக்கு இடையே மின்னிடும் ஒரே ஒளி ரேகையாக உங்களை நம்பி இருப்பதாக மரண பயங்கரத்தின் பிடியிலிருந்து எழுதினார். காரணம் இடமறிந்து, மாற்றார் வலி அறிந்து தன் வலிவையும் கணித்து, விநகம் அமைப்பதே சாலவும் சிறந்தது என்ற தங்களின் உணர்வுகளை அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டிய சூழல் என் ஈழப் பயணத்திற்கு காரணமாக இருந்தது'' என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
அந்த நேரத்திலே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நான் சொன்னதை பிரபாகரனிடம் நேரடியாக விளக்குவதற்காகத்தான், அவரைக் காணச் செல்கிறேன் என்று அந்தக் கடிதத்திலே வைகோ குறிப்பிட்டுள்ளார். அப்படி ஒரு காரணத்தை அன்று சொன்ன வைகோ, இன்றைக்கு என்ன சொல்கிறார் என்பதை முதலில் கூறினேன். இதிலிருந்து ஜமுக்காளத்தில் வடிகட்டப்பட்டது எது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
நான் சகோதர யுத்தம் கூடாதென்று சொல்லிக் கொண்டிருப்பவன். எல்.டி.டி.ஈ., டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈராஸ் என்று இப்படி பல குழுக்கள் இலங்கையில் உருவாகின. அவை ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. அப்போது, சகோதர யுத்தம் கூடாதென்ற முழக்கத்தை நானும், பேராசிரியரும், மற்றும் பல தமிழ் இயக்கத்திலே உள்ள ஆர்வலரும் சொன்னோம். அதை நடைமுறைப்படுத்துவதற்காக மாநாடுகளும் நடத்தியிருக்கிறோம். 'டெசோ'' மாநாடு மதுரையில் நடத்தியதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.
எனவே சகோதர யுத்தம் கூடாது, சகோதர யுத்தத்தினால்தான் இலங்கை தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை வலியுறுத்தி இருக்கிறோம். நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடுவதில் ஒன்றும் குறைந்து போனவர்கள் அல்ல. இதே அவையில் இருந்து எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்து விட்டுப் போனவர்கள்தான் நானும், பேராசிரியரும்.
எனவே இலங்கைப் பிரச்சினையில் எங்களுக்கு உணர்வு மயமான எண்ணம் என்றைக்கும் உண்டு. அந்த நிலையிலே வைகோ அப்பொழுது சென்றது சரியல்ல என்று நாங்கள் கருத்து வெளியிட்டது உண்டு. அந்த செய்தி தினத்தந்தியிலேயே வந்திருக்கின்றது. ``வை.கோபால்சாமி, எம்.பி., இலங்கை சென்றிருப்பதற்கும், தலைமைக் கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் கலைஞரிடமோ, என்னிடமோ கலந்து பேசி அனுமதிபெறவில்லை.' என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இலங்கையில் இருந்து வைகோ திரும்பி வந்தவுடன், கழகத் தலைவர் கலைஞருக்குத் தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் ஈழத்துக்கு பிரபாகரனைச் சந்திப்பதற்குச் சென்றேன். என் நோக்கத்தில் தவறில்லை. என்றாலும், கழகத்தின் செயல் முறைக்கு அது ஏற்றதல்ல என்ற வகையில் அது தவறு தான்'' என்று அளித்த பேட்டி தினத்தந்தியில் வந்திருக்கிறது.
சனிக்கிழமை இரவு சென்னை திரும்பினேன். இன்று காலை தலைவர் கலைஞரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டேன். தி.மு.க. தொண்டர்களில் ஒருவனாகிய என்னை என்றுமே தாய்ப்பாசத்தோடு அரவணைத்து வருகின்ற தலைவர், என் பிழையைப் பொறுத்து, மன்னித்து ஏற்றுக் கொண்டார். அவர் என்னிடம் ஏன் இப்படி ஆர்வத்தோடு விளையாடுகிறாய்? ஆர்வம் வெறியாகமாறக் கூடாது, கட்சிக் கட்டுப்பாட்டை மறந்து விடக்கூடாது என்று கூறினார். ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தலைவர் கலைஞர் உள்ளார்'' இவ்வாறு கோபால்சாமி கூறினார் என்று தினத்தந்தியில் செய்தி வெளிவந்திருக்கிறது.
இதை கண்ணப்பன் நம்புவார் என்று கருதுகிறேன். இந்த ஏட்டினைத் தரத் தேவையில்லை, தராமலே வாங்கிப் படித்துப் பார்த்துக் கொள்வார் என்று தெரியும். இப்போது சண்டை போடுவதற்கு நாம்தானா மைதானத்தில் நிற்க வேண்டும்? சண்டை யாரோடு போட்டுக் கொண்டிருக்கிறோம்? சிங்கள வெறியரோடு, சிங்கள ஆதிக்கத்தோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழர்களைக் காப்பாற்ற சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழர்களைக் காப்பாற்றும் போது யார் காப்பாற்றுவது என்பதிலே வேண்டுமானால் போட்டியிருக்கலாம். அதை விட்டுவிட்டு, நீ காப்பாற்றாதே, நான்தான் காப்பாற்றுவேன் என்று காப்பாற்ற வருகிற நபரை கழுத்தைப் பிடித்துத் தள்ளுவது நல்லதல்ல. நமக்குள்ளே நாம் சண்டை போட்டுக் கொண்டால், `சகோதர யுத்தத்தை நடத்தாதீர்' என்று அவர்களுக்குச் சொல்ல நமக்கு எந்தத் தகுதியும் இல்லாமல் போய் விடும்.
எனவே தான் என்னுடைய உரைக்குப் பிறகு, அதன் அடிப்படையிலே வெளியிட்டுள்ள கருத்துகள், பேசப்படுகின்ற விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அது யார் பேசினாலும் அவர்தான் பேசுவார் என்று யாரையும் குறிப்பிட மாட்டேன். யாரும் பேச மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். பேசினாலும் நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை.
ஏனென்றால், அத்தனை அடியும், உதையும், அத்தனை வலியும் எனக்கே உரியதாகட்டும், அது ஈழத்திலே இருக்கின்ற தமிழனுக்கு வேண்டவே வேண்டாம் என்பதற்காக நான் அவைகளைப் பொறுத்துக் கொள்கிறேன் என்ற அளவோடு என்னுடைய விளக்கத்தை நான் நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
2 Comments:
நன்றி
//‘மர்ம பயணம்’ ஒன்றை மேற்கொண்டார். அதனை மர்மப் பயணம் என்று சொல்வதிலே எந்தவிதமான தவறும் இல்லை.//
இப்படி சட்டவிரோதமாக செல்லவது சரியா?
Post a Comment
<< Home