ரவிக்குமார்- அகதிகள் முகாம்-நன்றி விகடன்
வலைப்பூ நண்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க ஆனந்த விகடனின் கட்டுரை உங்கள் சிந்தனைக்கு....
அகதிகள் முகாமின் உண்மை நிலை, ஓர் மாறுப்பட்ட பார்வை...
ரவிகுமாருக்கும், ஆனந்த விகடனுக்கும் மனப் பூர்வமான பாராட்டுகள் பல....
நன்றி
மயிலாடுதுறை சிவா...
==============================================
இந்த வார விருந்தினர் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர்
& விடுதலைச் சிறுத்தைகள்
'விடைகொடு எங்கள் நாடே! கடல் வாசல் தெளிக்கும் வீடே! பனைமரக் காடே, பறவைகள் கூடே,
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா? '
என்கிற ஏக்கம் வழிகிற வரிகளின் அர்த்தம் புரிந்து வருந்தாமல், அதன் இலக்கிய நயத்தை வியந்துகொண்டு இருக்கிறோம் தமிழர்களே!
வாழ்க்கையைத் தொலைத்து, வந்தேறிகளாக அவமானப் படுகிறவர்களின் மரணக் கூக்குரல் காற்றில் கலக்கிறது ஊமைப் பேரோசையாக! மேற்கத்திய இசை அலறும் கொண்டாட்டங்களிலும், பெருங்குரலெடுத்து இரையும் இயந்திரங்களின், வாகனங்களின் பரபரப்பிலும், அகதிகளின் அவல விசும்பல்களையும் அழுகைச் சத்தத்தையும் காதுகொடுத்துக் கேட்க யாருக்கு இதயம் இருக்கிறது?
இரக்கம், கருணை, மனிதநேயம் போன்றவையெல்லாம் கவிதை எழுதுவதற்கும், அடுக்குமொழியில் பேசுவதற்கும் மட்டுமே என ஒதுக்கிவைத்துவிட்டோம். நடிகைகளின் தற்கொலை களுக்கு என்ன காரணம் என்று ஆராய நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால், 'நடுக் கடலில் படகு கவிழ்ந்து இலங்கை அகதிகள் சாவு' என்கிற துயரம் பற்றி நினைக்க யாருக்கும் நேரம் இல்லையா?
சமீபத்தில், ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று கடலில் மூழ்கியது. தாம் பிறந்த மண்ணை விட்டு, வாழ்ந்த வீட்டைத் துறந்து, உடைமைகள் மறந்து தமிழ்நாட்டுக்குப் பயணப்பட்ட ஒரு தந்தையின் முன் பிணமாகக் கிடக்கிறார்கள் அவரின் குழந்தை கள். எந்தச் சோகத்திலும் தோள் சாய்த்து ஆறுதல் சொல்கிற மனைவி மூச்சிழந்து சரிந்துகிடக்கிறாள். அழுவதற்குக் கண்ணீர்கூட மிச்சமில்லாமல் தேம்பு கிற அந்தத் தமிழனை ஏறெடுத்துப் பார்ப்பதற்கும் தமிழகத்துக்கு நேரம் இல்லையா?
பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தந்தால்தான் கள்ளத் தோணியில் ஏறி தமிழகம் வந்து அகதியாக முடியும். அதற்கு வசதியில்லாமல், அறுபது வயது மனைவி பிழைத்தால் போதுமென்று பணம் கட்டிய கணவனைப் பிரிய மனமின்றி, பாசப் போராட்டம் நடத்தியிருக்கிறார் ஒரு தமிழ்க் கிழவி. அந்த வயோதிக தம்பதியைக் குறைந்த பணத்தில் ஏற்றிக்கொண்ட ஒரு கள்ளத்தோணிக்கு இருக்கிற இரக்கமும் கருணையும், அகதி முகாமில் இருக்கிற சீருடை அணிந்த அதிகாரிகளுக்கு இருப்பதில்லையே, அது ஏன்?
சிங்களச் சிப்பாய்களின் பாலியல் தாக்குதல் களுக்குப் பயந்து அகதியாக வந்த தமிழ்ப் பெண் களின் மானம் விலை பேசப்பட்டால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர, அவர்களால் என்ன செய்ய முடியும்? அந்தக் \'கொலை\'களைப் பற்றி யார் விசாரிப்பது? 2000&ம் ஆண்டில் மானத்தோடு கூடிய மறுவாழ்வு கிடைக்கும் என்று நம்பி, தமிழகம் வந்த ஈழத் தமிழ் அகதிக் குடும்பம் ஒன்று விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டது. தாலாட்டு கேட்க வேண்டிய ஆறு மாதக் குழந்தை உட்பட, இறந்துபோனவர்களுக்கு ஒப்பாரி பாடக்கூட அந்தக் குடும்பத்தில் யாரும் மிச்சமில்லை.
'நாங்கள் அகதிகள், இந்தியாவும் எங்களைக் கைவிட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்கிறோம். எங்களின் இறுதி அடக்கச் செலவுக்கு இத்துடன் 3,000 ரூபாய் வைத்திருக்கிறோம்' என்று தீக்குளித்த நான்கு அகதிகள் எழுதிவைத்திருந்த கடிதத்தில் இருந்த எழுத்துக் களில் புரிந்தது நம் கருணை(!).
கடல் நடுவில் படகு மூழ்கி, எதிர் நீச்சலில் கரை ஒதுங்கி உயிர் காப்பாற்றிக் கொண்டவர்களை, அரசின் உத்தரவு கிடைக்கவில்லை என்று 'கண்டுகொள்ளாமல்' கடல் நடுவில் அலறவிட்ட போது, நம் தொப்புள் கொடி உறவில் ரத்தம் கசிந்தது.
பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்துதான் அகதிகள் பெரும் பாலும் இந்தியாவுக்கு வருகிறார் கள். வடக்குத் திசை அகதிகள் பெரும்பாலும் பஞ்சம் போக் கவே அகதிகளாக வருகிறார்கள். ஆனால், இலங்கைத் தமிழர்கள் தங்களின் வாழ்வைத் தொலைத்து விட்டு தமிழகத்தின் தொப்புள் கொடி உறவை நம்பி படகில் புறப்படுகிறார்கள். இலங்கைக் கப்பற்படையிடம் தப்பி, இந்திய கடலோரக் காவல் படையிடம் சிக்காமல் தமிழக எல்லைக்குள் உயிருடன் வந்தால்தான் \'அகதி\' என்கிற அந்தஸ்து கிடைக்கும். இல்லாமல் போனால் \'அநாதைப் பிணம், தீவிரவாதி, கடற்புலி\' என்று ஏதோவொரு பட்டத்தைச் சூட்டி, மரணத்தின் சுவடுகூட அழிக்கப்பட்டுவிடும்.
'அகதிகளின் மறுவாழ்வுக்கான சட்டபூர் வமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்\' என்கிற ஐ.நா&வின் 1967&ம் ஆண்டின் ஒப்பந்தத்திலும் இந்தியா ஏனோ கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந் தத்தை ஒப்புக்கொண்டால் உடன்படிக்கை களைச் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற அச்சத்தால் இன்று வரை அகதிகளின் மறுவாழ்வில் மௌனம் சாதிக் கிறோம். அந்தச் சட்டபூர்வ நிர்ப்பந்தம் இல்லாமல் போனதால், \'எங்கிருந்தோ வருபவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?\' என்று சுயநலத்தோடு நடந்துகொள்ள வசதியாக இருக்கிறது.
சின்னச் சின்ன நாடுகள்கூட அகதிகளின் அவலத்தைப் புரிந்துகொண்டு, அவர்களை விருந்தினர்களாக நடத்துகிறார்கள். டென் மார்க், நார்வே, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் என்ன வரலாற்றுத் தொடர்பு இருக்கிறது? ஆனாலும், அந்த நாடுகளுக்கு வாழ்வு தேடிப் போனவர்கள் மிகக் கண்ணியமாக நடத்தப்படு கிறார்கள். அரசியல் அதிகாரப் பகிர்வு வரை அவர்களுக்கு மனமுவந்து இடம் தருகின்றனர் \nஐ.நா. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட மக்கள். நார்வே நாடு, இலங்கைக்குச் சென்று அமைதிப் பேச்சு நடத்தக் காரணம், அங்கே அகதிகளாகப் போன தமிழர்கள் சர்வ வல்லமை படைத்தவர்களாக மாறியிருப்பதுதான்! நார்வேயில் ஓட்டுரிமை முதல் உயர் கல்வி வரை எவ்விதப் பாகுபாடுமில்லாமல் சுயமரியாதையோடு நடத்தப்படுகின்றனர் தமிழர்கள். ஆனால், இரண்டாயிரம் வருட ரத்தத் தொடர்பு இருக்கும் தமிழகத்திலோ, தமிழ் அகதிகளின் சுயமரியாதை கேலியாக்கப்படுகிறது. 'தமிழ்... தமிழ்\' என்று சொல்லி ஆட்சிக்கட்டிலில் ஏறியவர்கள் கூட இலங்கைத் தமிழ் அகதிகளை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. ஏனென்றால், அவர்களிடம் \'ஓட்டு வங்கி\' கிடையாது. அவர்களால் இந்தத் தலைவர்களுக்கு ஆகப் போவது எதுவும் இல்லை.
இலங்கையில் விடுதலைப் புலி களுக்கும் அரசுக்கும் நடைபெறும் போர் பற்றி யாருக்கும் எவ்விதமான மாற்றுக் கருத்துக்களும் இருக்கலாம். புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தபோது ஒரு காரணம் சொல்லத் தெரிந்தவர்களுக்கு, தடை விதிக்கும்போது ஒரு காரணம் கிடைக்காமலா போய்விடும்? ஆனால், இனவெறியின் உச்சபட்சக் கொடுமைகளுக்கு உள்ளாகும் அப்பாவிகளை மனித நேயத்தோடு அணுகவேண்டும் என்பதில் மனிதர்களுக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.
போரின் காரணத்தால் மின்சாரம் தெரியாத ஒரு தலைமுறை இலங்கையில் வாழ்ந்து வருகிறது. வாழ் வதற்குரிய எந்த அடிப்படை வசதி களும் இல்லாமல், ஒரு நாள் விடுதலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் இன்னும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அதிலெல்லாம் கருத்து கேட்டால், உஷாராக \'அது அடுத்த நாட்டு உள் விவகாரம்\' என்று ஒதுங்கிக்கொள்ளலாம். ஆனால், சகோதர உணர்வோடு, சுயமரியாதை யான வாழ்க்கை கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் தமிழகம் வருகிற அகதிகளை மனிதர்களாக நடத்தாமல் போனால், அது நம்பிக்கை மோசடிதானே!
100 கோடியைத் தாண்டிய மக்கள் வாழ்கிற ஒரு நாடு, 60 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிற தமிழ் அகதிகளுக்கு நல்வாழ்வை உறுதி செய்வது பெரிய காரியம் அல்ல. அதற்கு மனமில்லை என்பதுதான், இலங்கைத் தமிழ் அகதிகளின் அவலங்களுக்கு அடிப் படைக் காரணம். \n\nஅகதி முகாம்களில் கீற்றுக் கொட்டகை களில் கூட்டம் கூட்டமாக மந்தைகளைப் போல் அடைக்கப்படுகிறார்கள். மொத்த அகதிகளுக்கும் சேர்த்து நாம் செய்கிற செலவு 25 கோடிக்கும் குறைவுதான். இந்தியா முழுவதும் நடக்கிற அதிகார, அரசியல் கொள்ளைகளில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அகதிகளின் நல்வாழ்வுக்கு செலவு ஆகாது. ஒரு குடும்பத் தலைவருக்கு மாதம் 200 ரூபாய் உதவித் தொகையாக வழங்குகிறது அரசு. ஒரு மாதம் முழுக்க அந்த ரூபாயில் எப்படி வாழ முடியும் என்று சிந்திக்க யாருக்கும் அவகாசம் இல்லை. குழந்தைகளாக இருந்தால் 45 ரூபாய், 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 90 ரூபாய், பருவமடைந்தவர்களுக்கு 144 ரூபாய் என வயது அடிப்படையில் மாதந்திர உதவித் தொகை அளிக்கப்படுகிறது. சுத்திகரிக் கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீருக்கே பத்து ரூபாய் செலவழிக்க வேண்டிய காலகட்டத்தில், 45 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படிக் குழந்தைகளுக்குப் பால் புகட்ட முடியும்?
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் புரிந்துகொள்ளாத நாம்தான் விருந்தோம்பல் நாகரிகத்தின் தலைவர்கள் என்று இலக்கியங்களில் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக 103 முகாம்கள் இருக்கின்றன. இதில் இரண்டு சிறப்பு முகாம்கள். இலங்கை இனக் கலவரத்துக்குப் பிறகு இப்போது 50 ஆயிரம் பேருக்கு மேல் இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம்களில் அடைக் கப்பட்டுள்ளனர். குற்றம் செய்துவிட்டு சிறைக்குப் போகி றவர்களுக்குத் தருகிற மரியாதைகூட, அப்பாவிகளான அகதிகளுக்குக் காட்டப்படுவதில்லை. இத்தனை நாளுக்கொருமுறை கைதிகளை உறவினர்கள் பார்க்கலாம், அவர்கள் தங்குவதற்குக் குறிப்பிட்ட அளவு இட வசதி இருக்க வேண்டும் என்று விதிகள் இருக்கின்றன. ஆனால், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, சொந்தங்களை ஆளுக்கொரு திசையில் தொலைத்துவிட்டு, முகாம்களில் அடைபடுகிற அகதிகளுக்கு ஆறுதல் சொல்ல யார் இருக்கிறார்கள்? திறந்த வெளிச்சிறைகளாக அகதி முகாம்கள் மாற்றப்பட்டு, அவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது. எதிரிகளிடம்கூட சில நேரம் கண்ணி யமான வாழ்க்கை கிடைத்துவிடும்.
அடைக்கலம் புகுந்த இடத்தில்தான் அவமானங்களால் ஆடை உரிக்கப்படு கிறார்கள். பாதிக்கப்பட்டவன் தமிழன் என்பதற்காக இரங்காவிட்டாலும், மனிதன் என்றாவது அக்கறைகொள்ள வேண்டாமா? மத்திய அரசு தருகிற அகதிகளுக்கான நிதிகளைக்கூட சரிவரப் பெற்றுத் தர, மாறி மாறி வந்த தமிழக அரசுகள் தயக்கம் காட்டின. இன்றுகூட அந்த நிலைமை மாறவில்லை. தன் சகோதரர்களின் நல் வாழ்வுக்கு உறுதி அளிக்கும்படி அரசை நிர்ப்பந்தப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை அல்லவா? டயானா இறந்த துயரத்துக்கு அஞ்சலிக் கவிதைகள் எழுதும் நம் தமிழினப் படைப்பாளிகள், அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை நினைக்காமல் இருப்பதுதான் இன்னும் வேதனை. தங்களின் இரக்கத்துக்குச் சின்னதாக எதிர்ப்பு வந்தாலும், இரக்கப் படுவதைக்கூட நிறுத்திக்கொள்கிறார்கள் நம் கலைஞர்கள். \'எதுக்கு வம்பு?\' என்று கூச்சப்படாமல் பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பதில் தருவ தற்குக்கூட அச்சப்பட்டு மௌனமாக இருந்துவிடுகிறார்கள். ஆயுதங்களைவிட ஆபத்தானது அந்த மௌனம்! சுனாமி போன்ற பேரழிவுகள் மக்களின் வாழ்க்கை ஆதாரங்களை வாரிச் சுருட்டியபோது, தன்னிச்சையாக எழுந்த மனித நேய உணர்வு நமக்கு அகதிகளிடமும் வர வேண்டும். அடைக் கலமாக நம்மிடம் வருபவர்களை மனித நேயத்தோடு நடத்தினால்தான் நாமெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியானவர்கள் ஆவோம். தமிழர்களாக இருக்கிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் மனிதர்களாகவேனும் இருப்போம்!
இத்தனை நாளுக்கொருமுறை கைதிகளை உறவினர்கள் பார்க்கலாம், அவர்கள் தங்குவதற்குக் குறிப்பிட்ட அளவு இட வசதி இருக்க வேண்டும் என்று விதிகள் இருக்கின்றன. ஆனால், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, சொந்தங்களை ஆளுக்கொரு திசையில் தொலைத்துவிட்டு, முகாம்களில் அடைபடுகிற அகதிகளுக்கு ஆறுதல் சொல்ல யார் இருக்கிறார்கள்? திறந்த வெளிச்சிறைகளாக அகதி முகாம்கள் மாற்றப்பட்டு, அவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது. எதிரிகளிடம்கூட சில நேரம் கண்ணி யமான வாழ்க்கை கிடைத்துவிடும். அடைக்கலம் புகுந்த இடத்தில்தான் அவமானங்களால் ஆடை உரிக்கப்படு கிறார்கள். பாதிக்கப்பட்டவன் தமிழன் என்பதற்காக இரங்காவிட்டாலும், மனிதன் என்றாவது அக்கறைகொள்ள வேண்டாமா?
மத்திய அரசு தருகிற அகதிகளுக்கான நிதிகளைக்கூட சரிவரப் பெற்றுத் தர, மாறி மாறி வந்த தமிழக அரசுகள் தயக்கம் காட்டின. இன்றுகூட அந்த நிலைமை மாறவில்லை. தன் சகோதரர்களின் நல் வாழ்வுக்கு உறுதி அளிக்கும்படி அரசை நிர்ப்பந்தப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை அல்லவா? டயானா இறந்த துயரத்துக்கு அஞ்சலிக் கவிதைகள் எழுதும் நம் தமிழினப் படைப்பாளிகள், அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை நினைக்காமல் இருப்பதுதான் இன்னும் வேதனை. தங்களின் இரக்கத்துக்குச் சின்னதாக எதிர்ப்பு வந்தாலும், இரக்கப் படுவதைக்கூட நிறுத்திக்கொள்கிறார்கள் நம் கலைஞர்கள். 'எதுக்கு வம்பு?' என்று கூச்சப்படாமல் பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பதில் தருவ தற்குக்கூட அச்சப்பட்டு மௌனமாக இருந்துவிடுகிறார்கள். ஆயுதங்களைவிட ஆபத்தானது அந்த மௌனம்!
சுனாமி போன்ற பேரழிவுகள் மக்களின் வாழ்க்கை ஆதாரங்களை வாரிச் சுருட்டியபோது, தன்னிச்சையாக எழுந்த மனித நேய உணர்வு நமக்கு அகதிகளிடமும் வர வேண்டும். அடைக் கலமாக நம்மிடம் வருபவர்களை மனித நேயத்தோடு நடத்தினால்தான் நாமெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியானவர்கள் ஆவோம். தமிழர்களாக இருக்கிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் மனிதர்களாகவேனும் இருப்போம்!
10 Comments:
ஈழத்து அகதிகளின் நிலை இவ்வளவு மோசமா என்று அறிந்து துக்கம் தாளவில்லை. நானும் ஈழத் தமிழன் தான்.
போரினால் துக்கம்.
அலட்சியத்தால் துக்கம்.
பாரபட்சமின்றிய கொலை கற்பழிப்புகளால் துக்கம்.
உதவி கேட்டு ஓடிய தகப்பன் வீட்டிலும் இப்படியா? ஐயோ!!!
சிவா,
இங்கு எடுத்திட்டமைக்கு நன்றி.
நிறைய இடங்களில் திருப்பித்திருப்பி வருவதைக் கொஞ்சம் கவனியுங்கள்.
ஜெயபால், மதி நன்றி.
மதி தற்பொழுது சரி செய்து மாற்றியுள்ளேன்.
எப்படி அப்படி ஆனது என்று தெரியவில்லை.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
இலங்கை தமிழர்களுக்காக வருத்தப்படுவது கண்ணீர் விடுவது எல்லாம் சரி தான் ராஜிவ் காந்தி மரணத்திற்கு என்ன காரணம் கூறுவீர்கள்.அவரே தற்கொலை செய்து கொண்டார் என்றா? நார்வே எல்லாம் சமாதான உடன்படிக்கை செய்கிறது இந்தியா ஏன் வாளாவிருக்கிறது என சொல்கிறீர்கள்,நார்வே நாட்டு அதிபரை வெடி வைத்து கொல்லட்டும் புலிகள் அதன் பிறகு அவர்கள் இதே போல் இருக்கிறார்களா எனப்பார்ப்போம்!
வவ்வால்
பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். ராசீவ் மரணம் நிச்சயம் வருத்தப் பட வேண்டிய விசயம்.
அதே சமயத்தில் நமது தாய்யையும் கற்பழித்து, நமது சகோதிரியும் கற்பழித்த நபர்களுக்கு யார் பொறுப்பு?
இது இனப் போர், போரில் எல்லா பக்கமும் இழப்பு இருக்கலாம்.
ராசீவ் மரணத்தால் இறுதிவரை நம் தமிழர்களுக்கு
விடிவு ஏற்பட கூடாதா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
திரிப்பது திசை திருப்புவது இரண்டும் நான் செய்யவில்லை நீங்கள் தான் செம்மையாக செய்து வருகிறீர்கள்,நார்வே,டென்மார்க்கை பாருங்கள் இந்தியா கண் மூடி மெளணம் காக்கிறதே என ராஜிவ் காந்தி மரணம் என்பதே நிகழாதது போலவும் , அதனை எங்கேயும் சுட்டிக்காட்டாமல் இருட்டடிப்பு செய்து பதிவிட்டுள்ளீர்கள்.
ராஜிவ் மரணம் நிகழவில்லை எனில் இங்கே இன்னேரம் ஈழதமிழர்களுக்கான ஆதரவு அலை பெருகி இருக்கும். புலிகளே தங்களது தலையில் மண் அள்ளிப்போட்டுகொண்டார்கள்.
வைகோ,திருமாவளவன் போன்றோர் தனி இயக்கமாக இருக்கும் போது என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்,இதுவே அவர்களை முதல்வர்களாக உட்கார வைத்துப்பாருங்கள் ,அவர்கள் பேச்சு மாறிவிடும்.இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டு தான் செயல் பட முடியும் என பேசுவார்கள்!
ரஜீவ் மீதிருந்த நம்பிக்கை இந்திய புலிகள் சண்டையுடன் செத்துப்போச்சு.
சிவா,
பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
வெற்றி
நண்பர் மயிலாடுதுறை சிவா இங்கே பதிப்பித்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சார்ந்த ரவிக்குமாரின் "தமிழ் மண்ணே வணக்கம்" நம்மை மட்டுமல்ல... தமிழகத்தை ஆளும் கலைஞரையும் கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது....
தொடர்ந்து தமிழ் மண்ணே வணக்கம் படிக்கும் வழக்கம் கொண்டவர் டாக்டர் கலைஞர்.... சென்ற வியாழன் அன்று இதைப் படித்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ரவிக்குமாரை தொடர்புகொண்டு அவரது எழுத்தாற்றலைப் பாராட்டியதோடு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ரவிக்குமாரே அகதி முகாம்களுக்கு நேரடியாக விசிட் செய்து முதல்வருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி பணித்திருக்கிறார்....
இத்தகவலை விடுதலைச்சிறுத்தைகளின் மையக்கூட்டத்தில் (செயற்குழு போல) அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.... இதுகுறித்து விரைவில் ரிப்போர்ட் ஒன்றையும் ரவிக்குமாரும் அவரது சக வி.சி. சட்டமன்ற உறுப்பினரும் முதல்வருக்கு சமர்ப்பிப்பார்கள் எனவும் தெரிகிறது.....
எப்படியோ விடிவு கிடைத்தால் சரி......
இலங்கை அகதிகளுக்காக தமிழக அரசு தற்போது செய்துவரும் பணிகள் மற்றும் புள்ளிவிவரங்களில் சில கீழ்வருமாறு :
31.1.2005 தேதியின் படி சுமார் 52,000 அகதிகள் இருக்கிறார்கள்....
ஒரு குடும்பத்துக்கு செலவிடப்படுவது எப்படியென்றால்....
குடும்பத்தலைவருக்கு ரூ. 200/- மற்ற உறுப்பினர்களுக்கு ரூ. 144/- மேலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தை இருந்தால் ரூ. 90/- கூடுதல் குழந்தைக்கு ரூ. 45/- என கைச்செலவுக்காக வழங்கப்படுகிறது.....
மேலும் அகதி முகாம்களில் அரிசி கிலோ 57 பைசாவுக்கு அரசின் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலமாக வழங்கப்படுகிறது.... இதனால் அரசுக்கு 5 கோடியே 30 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு செலவாகிறது....
வருடத்திற்கு சுமார் 2 கோடி செலவில் துணிமணி வழங்கப்படுகிறது....
மேலும் வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வருடத்திற்கு இரு முறை வழங்கப்படுகிறது... அதற்காக ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் செலவாகிறது....
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முகாம்களில் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு இலவசமாக மருத்துவ
வசதி கிடைக்கிறது.....
கல்வியைப் பொறுத்தவரை நம் மாணவ மாணவிகளுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் அவர்களுக்கும் உண்டு....
அரசு அவர்களுக்கு அடிப்படை அத்தியாவசியத்துக்காக ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி வரை வழங்குகிறது....
வணக்கம் தோழர்களே, தமிழகத்தில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் முகாமின் உள்ளிருக்கும் அகதிகளில் நானும் ஒருவன்.எங்கள் இருப்பின் வலியை பதிவு செய்தமைக்கு தோழர் சிவா அவர்களுக்கும், அண்ணன் ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. மனத்தோடு வாழ்ந்து இன்று கையெந்தி நிற்கும் எங்கள் இயலாமையிலும் அரசியல் கலப்பது துன்பம் தருகிறது. இருந்தும் அந்தத் தோழருக்கும் நன்றி, இந்தியாவின் பார்வையில் ஈழத்தமிழர்கள் எல்லோருமே எதிரிகள், தீவிரவாதிகள் என்கின்ற வெளிப்படையான கருத்துக்கும் நன்றி. பதினெட்டு வருடங்களாய் பக்கத்தில் இருந்தும் பார்க்க வராதவர்கள், ஈழத்தமிழர்கள் எங்கள் உறவுகள் என்று பெருமையாக கதைக்கும்போது எங்களால் சிரிக்கமட்டும்தான் முடிகிறது.
Post a Comment
<< Home