Wednesday, January 21, 2009

அமெரிக்க வரலாற்றில் நான்...




சனவரி 20, 2009 ஒட்டு மொத்த அமெரிக்காவும் ஏன் உலகமும் எதிர்பார்த்தபடி அமெரிக்க அதிபராக பாராக் ஓபாமா பதவி ஏற்ற நாள். கடந்த ஒரு வாரமாக நானும் எப்படி இந்த விழாவில் கலந்து கொள்வது என்று ஓரே மனப் போராட்டத்தில் இருந்தேன். மார்டின் லூதரின் கனவு நனவாகும் அந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் நான் கலந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம்.

கிட்டதட்ட 50 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று அனைத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு கொண்டு சொன்னா பொழுதும் அதில் ஒருவனாக நானும் இருக்க துடித்தேன். ஆனால் இந்த ஆசைக்கு பலவிதமான எதிர்ப்புகள். நண்பர்கள் பலர் கடுமையான பனியாகஇருக்கும், அந்த கூட்டத்தில் செல்லவே முடியாது, முதல் நாள் இரவே சென்றுவிட வேண்டும், விடியற்காலை 2 மணிக்கு அங்கு செல்லவேண்டும் என்று ஆள் ஆளுக்கு ஒன்றை சொன்னார்கள். மனைவி வேறு நீங்கள் நல்ல படியாக போய் விட்டு திரும்பி வந்து விடுவீர்கள் தானே என்று கவலைப் பட்டார்?!

இப்படிப் பட்ட பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்த நாளும் வந்தது. காலை 8 மணிக்கு என் வீட்டு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் மனைவி என்னை வேறு வழியில்லாமல் இறக்கி விட்டாள். வெர்ஜினியாவில் இருந்து வாசிங்டன் செல்லும் ஆரஞ்சு பாதை ரயில்கள் புறப்படும் முதல் நிலையம் வியன்னா. அமெரிக்கா வந்து இறங்கிய நாட்களில் நிலையத்தில் இருந்து வேலைக்கு சென்று இருக்கிறேன். அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழாவிற்காக இங்கு காலை 4 மணி முதல் ரயில்கள் ஓடத் தொடங்கிவிட்டன. நான் அந்த ரயில் நிலையத்தை அடையும் பொழுது காலை 8 மணி, காலை 4 மணி முதல் 8 மணிவரை கிட்டதட்ட3 லட்சம் பேர்கள் இந்த ரயில் நிலையத்தில் இருந்து வாசிங்டன் சென்று இருக்கிறார்கள்! இந்த குறுகிய 4 மணி நேரத்திற்குள் இத்தனை பயணிகள் இதுவரை பயணித்தது இல்லை என்று வானொலியில் சொல்ல கேட்டேன். மனம் ஓரே படபடப்பாகவும், சற்று பயமாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் ரயில் நிலையத்துக்குள் சென்றேன், வெளியே கடுமையான குளிர், ஆனால் உள்ளே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்!

என்னிடம் ஏற்கனவே ரயிலில் செல்ல பயணசீட்டு இருந்தாலும், இன்று பயண சீட்டு வாங்கினால் அதில் ஓபாமா புகைப் படம் இருக்கும். எனவே அதற்கான வரிசையில் சென்று அந்த பயண சீட்டை வாங்கினேன். முதல் மகிழ்ச்சி ஆரம்பித்தது. ரயிலில் செல்ல ஏராளமான மக்கள் கூட்டம், அதனை ஒழுங்கு படுத்த எங்கும் உதவியாளார்கள் மஞ்சள் உடையில். ஒருவழியாக ரயிலில் ஏறிவிட்டேன்! ரயில் முழுக்க ஓரே மக்கள் வெள்ளம்! வாசிங்டனில் எங்கு எப்படி இறங்க போகிறேன் ஒன்றுமே புரியவில்லை! நடப்பது நடக்கட்டும் என்று ரயிலில் மக்கள் வெள்ளத்தோடு பயணம் தொடர்ந்தது.

அடுத்தடுத்து வந்த ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது, ஆனால் அவர்களால் எங்களது ரயிலில் ஏற முடியவில்லை! வாசிங்டன் அருகே ஓபாமா பதவி ஏற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அருகில் உள்ளே சில ரயில் நிலையங்கள் பாதுகாப்பு கருதி அன்று மட்டும் மூடப்பட்டு இருந்தன. நான் அமெரிக்காவின் பிரபலமான உலகபோரில் இறந்த போன போர் வீரர்களை அடக்கம் செய்த இடமான ஆர்லிங்டன் சமாதியின் அருகே, முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி சதுக்கத்தின் அருகே உள்ளே ரயில் நிலையத்தில் இறங்கி, மெதுவாக நடக்க ஆரம்பித்தேன் விழா நடைப் பெறும் இடத்தை நோக்கி!

15 நிமிட நடைக்கு பின்பு அடுத்து நான் அடைந்த மற்றொரு வரலாற்று முக்கிய இடம், அபிரகாம் லிங்கன் நினைவகம். கோடை காலங்களில் நான் பல முறை நண்பர்களோடும், உறவினர்களோடும் சென்று அங்குள்ள லிங்கன் சிலையை பார்த்து பார்த்து ரசித்து இருக்கிறேன்! இன்று அதனை பார்க்கையில் எங்கும் மக்கள் வெள்ளம்! எப்படி சொல்வேன் அந்த ஆனந்தத்தை, எங்கு பார்த்தாலும், திரும்பினாலும் மக்கள் மக்கள். தமது நாட்டிற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற இத்தனை ஆர்வம் காட்டும் அமெரிக்க மக்களை மனதார பாராட்டதான் வேண்டும்.

மீண்டும் 15 நிமிட நடையில் வரலாற்று சிறப்புமிக்க இரண்டாம் உலகப் போரின் நினைவகத்தை வந்து அடைந்தேன். இந்த இடத்தில் இருந்து முப்பதே நிமிட நடை தொலைவில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு அமெரிக்காவின் 44வது அதிபராக முதல் கறுப்பின தலைவராக ஒபாமா பதவி ஏற்றுக் கொள்ள போகிறார் என்று நினைக்கையில் மனம் மிகுந்த பிரமிப்பும், ஆச்சர்யமும் அடைந்தது!

இந்த மக்கள் வெள்ளத்தில் நானும் ஒருவனாக இருந்ததில் ஒருவித பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்! நான் இருந்த இடம் இரண்டாம் உலகப் போரின் நினைவகம், என் கண் முன்னே வாசிங்டன் நினைவகம், என் பின்னால் லிங்கன் நினைவகம். இங்கு நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன், இந்த நினைவகம் முன்பு பரவியுள்ள புல்தரையில் அமர்ந்து இருக்கிறேன். நீர் ஓடையை பார்த்து ரசித்து இருக்கிறேன், ஆனால் இன்று எங்கு திரும்பினும் மக்கள் தலைகளே! எங்கும் லட்சகணக்கான மக்கள்! என் கண் முன்னே மிகப் பெரிய வெள்ளைத் திரையில் அமெரிக்க அதிபர் பதவி ஏற்கும் நிகழ்ச்சிகள் நேரிடையாக ஒளி/ஒலி அலையில் தெரிந்தன. இந்த இடம் நாம் எல்லாவற்றையும் இருந்து பார்க்க ஏற்ற இடம் என்பதால் அங்கேயே நின்று கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரசிக்க ஆரம்பித்தேன்.

அமெரிக்க நாட்டின் முன்னாள் தலைவர்கள், துணை தலைவர்கள், நீதிபதிகள் என எல்லோரும் வரிசையாக வர ஆரம்பித்தார்கள். முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் வரும் பொழுது எண்ணற்ற விசில்கள், கைதட்டல்கள், ஓரே ஆரவாரங்கள்! இன்னமும் மக்கள் மத்தியில் கிளிண்டனுக்கு என்று ஓரு இடம் இருக்கதான் செய்கிறது! வரும் பொழுது அங்கு திரண்டு இருந்த லட்சகணக்கான மக்கள் "ஓபாமா ஓபாமா" என்று ஆர்பரித்ததில் ஒட்டு மொத்த வாசிங்டனும் அதிர்ந்தது!

அமெரிக்க வரலாற்றில், மார்டின் லூதர் கிங்கின் கனவு நிறை வேறியது என்று ஒரு கிறுஸ்துவ பாதிரியார் சொன்னதும் மக்கள் பலத்த கைஒலி மூலம் அதனை ஆமோதித்தார்கள். ஒபாமா பதவி ஏற்றவுடன் குழுமி இருந்த மக்கள் குதுகாலித்தார்கள்! பலத்த கைத்தட்டல்! பலத்த ஆராவாரம்! அவரின் பேச்சை கேட்க அனைவரும் அமைதி காத்தனர்! அமெரிக்கா பிறநாடுகளுக்கு முன்னோடியாக விளங்கும் என்றதும், இங்கு அனைவரும் சமம் என்றதும், நம்முன்னே கடமைகள் பல காத்து இருக்கிறது என்று சொன்னதும், நமக்கு பொறுப்புணர்ச்சி அதிகம் தேவை என்றதும் மக்கள் தொடர்ந்து தங்களது மகிழ்ச்சியை கைதட்டல் மூலமும், அமெரிக்க கொடியை அசைத்தும் வெளிபடுத்தினார்கள்!

ஓபாமா பதவி ஏற்ற நாளில் இப்படி எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டத்தை நான் கடந்த வந்த பாதையில் பார்த்தது இல்லை! அதுவும் உலக பிரசித்த பெற்ற வாசிங்டன் நகரில் எல்லா நினைவகம் முன்பும் மக்கள் வெள்ளம் போலகாட்சி அளித்தது மனம் எல்லையில்லா மகிழ்வுற்றது.

ஓபாமாவின் பதவி ஏற்ற தருணம் ஓவ்வொரு கறுப்பின மக்களும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது பெரிய விசயம் அல்ல.நமது நாட்டின் பொருளாதாரத்தை, நம் நாட்டின் கட்டமைப்பை, நம் நாட்டிற்கு ஒரு பெரிய மாற்றம் தேவை என்று எண்ணற்ற ஏராளமான வெள்ளைகாரர்கள் ஓட்டு போட்டு அவருடைய பதவி ஏற்ப விழாவிற்கும் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டார்களே அதுதான் பாராட்ட பட வேண்டிய விசயம்! அதுதான் உலக வரலாற்றில் பெருமைபட கூடியவிசயமும் கூட!


இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியமோ!

இது அமெரிக்காவில் மட்டுமே நடக்கும் வரலாறு சம்பவம்!

நான் ரசித்த மக்கள் ஆரவாரத்தை, ஓபாமாவின் பதவி ஏற்கும் விழாவில் கலந்துக் கொண்டதை, லட்சகணக்கான மக்களில் நானும் ஒருவனாக ரசித்ததை, உலக சரித்தரத்தில் நானும் ஓர் பங்காய் இருந்ததில் என் மனம் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தாலும், அதனை இன்னும் சுவைப் பட, நான் அடைந்த மகிழ்ச்சியை அப்படியே காட்சிகளாய் உங்கள் கண்முன்னே என் எழுத்தின் மூலம் விவரிக்க சமர்பிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன்


மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger அரசூரான் said...

ம்...உங்களுக்கு என்ன ரயில் பயணம் செய்து கண்டு ரசிச்சிட்டீங்க...சபாஷ்.

http://arasooraan.blogspot.com/2009/01/blog-post_19.html

Saturday, January 24, 2009 4:38:00 PM  
Blogger Charan Char said...

மாயவரம் சிவா,
ஒபாமா பதவியேற்றதை இங்கு இந்தியாவில் கூட பல தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன. பலரும் இந்தியாவின் அதிபரே பதவியேற்றதை போல வியப்பாக பார்த்து பேசிக்கொண்டிருந்தனர். அவர் கருப்பினத்தவர் என்பதே அவர் பிரபலமானதற்கு காரணமென நினைக்கிறேன்.

பிரபு சந்தர்

Sunday, January 25, 2009 5:54:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது