Wednesday, May 23, 2007

தாய்த் தமிழ் பள்ளிகள்...

வாசிங்டன் மே 2007

இந்த பதிவை படித்துவிட்டு நீங்கள் தமிழகம் போகும் பொழுது சென்று வந்தால் அதுவே இக் கட்டுரைக்கு வெற்றி...


ஆங்கில மோகத்தையும் மேற்கத்திய கலாசாரத்தையும் நோக்கி வெகு வேகமாக இன்று நகர்ந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் இனம். 'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்பது போய், 'தமிழ் இனி வேகமாகச் சாகும்' என்ற நிலை வந்து விடுமோ என்று நாம் நினைக்கும் முன், அந்த வேகத்தை சற்றே இழுத்துப் பிடித்து தமிழ் இனத்தை சிந்திக்க வைத்திருக்கிறது இப்பொழுது ஆங்காங்கே தமிழ் நாட்டில் முளைத்துக் கொண்டிருக்கும் 'தாய்த் தமிழ் பள்ளிகள்'.

முக்கியமாக, வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கவனத்தை தாய்த் தமிழ் பள்ளிகள் வெகுவாக ஈர்த்திருக்கின்றன. இப்பள்ளிகளைப்பற்றி கேள்விப்பட்டவர்கள், தமிழ் நாடு செல்லும் போது நேரில் சென்று அந்தப் பள்ளிகளை பார்க்கிறார்கள். அந்த பள்ளிகளின் நோக்கம், செயல்படும் விதம், அங்கே வேலை செய்பவர்களின் ஈடுபாடு இவையெல்லாம் எதிர்காலத்தில் தமிழ் சீரும் சிறப்புமாக வாழும் என்ற நம்பிக்கையை தமிழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

நியூ ஜெர்சியில் வசிக்கும் குழந்தைகள் நல மருத்துவர் சுந்தரம் அவர்கள் தாய் தமிழ்ப் பள்ளியைப் பற்றி முன்பு எதுவும் அறிந்திருக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு நடந்த தமிழ்ச் சங்கப் பேரவை விழாவின் போது, தாய்த் தமிழ் பள்ளியைப் பற்றிய உரையைக் கேட்ட பிறகும், விழா மலரில் வெளியாகியிருந்த கட்டுரையப் படித்த பிறகும் தாய்த் தமிழ் பள்ளியை நேரில் பார்க்கவெண்டும் என்ற ஆவல் அவருக்கு எழுந்தது. சென்ற ஆண்டு அவரது சொந்த ஊரான திருப்பூரில் இருக்கும் தாய்த் தமிழ் பள்ளியில் இரண்டு மணி நெரம் செலவிட திட்டமிட்டு அங்கே சென்றார். அங்கு சென்றபின் அவர் செலவிட்ட நேரமோ இரண்டு நாட்கள்! அந்த பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று குழந்தைகள் பாடம் கற்கும் விதத்தை பார்த்து வியந்தார். அங்கிருக்கும் ஆசிரியர்களிடம் பேசினார். பள்ளி நிகழ்ச்சிகளையும், தலைமை ஆசிரியருடன் அவர் நடத்திய கலந்துரையாடலையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களை தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு உதவுமாறு ஊக்குவித்தும் வருகிறார்.


தாய்த் தமிழ் பள்ளிகள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியே இருக்கின்றன. குடிசைகளிலும், மண் தரைகளிலும் தான் வகுப்புகள் நடக்கின்றன. அங்கே பணி புரியும் ஆசிரியர்களுக்கு அதிக பட்சம் 800 அல்லது 1000 ரூபாய்கள் மட்டுமே மாதச் சம்பளம் கிடைக்கிறது. மற்ற பள்ளிகளில் வேலை செய்தால் 2000 ரூபாய்களுக்கு மேல் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். எனினும் அவர்கள் தமிழ் மேல் உள்ள பற்றினால் தாய் தமிழ் பள்ளிகளில் மிகுந்த ஈடுபாடுடன் வெலை செய்கிறார்கள். தாய்த் தமிழ் பள்ளிகளில் எல்லா பாடங்களும் முழுக்க முழுக்க தமிழிலேயே கற்று கொடுக்கப்படுகிறது. தாய் மொழியில் கல்வி பயின்றால், அது குழைந்தைகளுக்கு சுலபமாக மனதில் பதியும் என்பதே இப்பள்ளிகளின் அடிப்படை நம்பிக்கை.

திருப்பூர் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழைந்தைகள் படிக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் மூன்றாம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக கற்றுகொடுக்கப்படுகிறது. பாடங்களுடன் சேர்த்து அன்பு, பண்பு, வீரம், மரியாதை ஆகியவையும் கற்றுகொடுக்கப்படுகிறது.

அரசாங்க பள்ளிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தாய்த் தமிழ் பள்ளி மாணவர்கள் பொது அறிவில் பல மடங்கு முன் நிலையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம், கல்வி கற்பிக்கப் படும் விதம். தாய் தமிழ் பள்ளியின் கல்வித் திட்டம், மிகுந்த கவனத்துடன் தீட்டப்படுள்ளது. தேவையற்ற செய்திகள், கருத்துக்கள் மாணவர்களை சென்றடையக்கூடாது என்பதில் ஆசிரியர்கள் திடமாக இருக்கிறார்கள். அதற்குப் பல உதாரணங்களை சொல்லலாம்.

திருப்பூர் பள்ளி வகுப்பறைகளில் 'மெல்லத் தமிழ் இனி வாழும்' என்று பலகையில் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் அங்கே மாட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தில் 12 எண்களுக்கு பதில் "அ" வில் தொடங்கி 12 தமிழ் எழுத்துக்களும் உள்ளன. என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை! "வணக்கம் அய்யா", "வெற்றி நிச்சயம்", "மீண்டும் சந்திப்போம்" - இது போல மாணவர்கள் தூய தமிழ் பேசுகிறார்கள். மருத்துவர் சுந்தரம் அவர்கள் கையை
கட்டிகொண்டு நின்று கொண்டிருந்த போது, ஒரு குழந்தை அவரிடம் வந்து "அய்யா நீங்கள் ஏன் கையை கட்டிகொண்டு நிற்கிறீர்கள்? அப்படி நின்றால் நீங்கள் 'அடிமை' என்று அர்த்தம். கைகளை கட்டாதீர்கள்" என்று சொல்லியதை கேட்டு தான் பிரமித்து போய்விட்டதாகச் அவர் சொன்னார்.

ஒவ்வொரு பயிற்சியும் குழந்தைகளுக்கு பிடித்த வடிவத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. உதாரணமாக "இந்த பழம் புளிக்கும்" என்ற கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு நரி திராட்சை தோட்டத்தில் உயரத்தில் இருக்கும் திராட்சையை பறித்து தின்பதற்காக முயற்சித்து முடியாமல் போனதும், "சீ..இந்த பழம் புளிக்கும்' என்று சொல்லிச் சென்றுவிடும்.ஒரு காரியத்தில் தோல்வி ஏற்பட்டால் அதை கைவிட்டுவிடவேண்டும் என்பது ஒரு தவறான செய்தி. இது குழந்தைகளுக்கு தேவை இல்லை. எனவே அந்த கதையை மாற்றி அந்த நரி திராட்சை பழத்தை எட்டி பறிக்க முடியாததால், தன் நண்பனான மற்றொரு நரியை அழைத்து வந்து, அதன் முதுகில் ஏறி திராட்சையை பறித்தது என்று சொல்லிகொடுக்கிறார்கள். இது போலவே "Rain rain go away. Come again another day" என்ற பாடலை நம் குழந்தைகள் பல வருடமாக படித்து வருகிறார்கள். ஆனால் இந்த பாடல் நம் சூழலுக்கு ஏற்றதா? கட்டாயம் இல்லை.


தமிழ் நாட்டிற்கு மழை அவசியம் தேவை. மழை வேண்டும் என்று எத்தனை பேர் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள்? அப்படி இருக்கும் போது நம் குழந்தகள் எல்லாம் "மழையே மழையே போய்விடு" என்று பாடினால் அது முரண்பாடாக உள்ளதே! எனவே இந்தப் பாடலையும் மாற்றி "மழையே மழையே வா வா. மண்ணை ஈரமாக்க வா வா" என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். மற்றுமொரு வியப்பான செய்தி - எப்பொழுது விடுப்பு விடுவார்கள் வீட்டுக்கு செல்லலாம் என்று பள்ளி மாணவர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் தாய்த் தமிழ் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு விடுப்பு வேண்டாம் என்று
சொல்கிறார்களாம்!. இப்படி பல சிறந்த உதாரணங்களை சொல்லிகொண்டே போகலாம்.

ஆரம்பத்தில் பெற்றோர்கள் தாய்த் தமிழ் பள்ளிகளில் தம் குழந்தைகளை சேர்க்கத் தயங்கினார்கள். ஆங்கிலக் கல்வி தான் கெளரவமானது என்ற தவறான கருத்து தமிழ் நாட்டில் இருப்பது தெரிந்தது தானே!. போகப்போக தாய்த் தமிழ் பள்ளிகளில் படிக்கும் குழந்தகளின் அறிவு வளர்ச்சியைப் பார்த்ததும் பெற்றோர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.


1995 ஆம் ஆண்டு 25 குழைந்தகளுடன் தொடங்கப்பட்ட திரூப்பூர் பள்ளியில்இன்று 560 குழந்தைகள் படிக்கிறார்கள். பெற்றோர்களின் அங்கீகாரம் கிடைத்துவிட்டாலும், அரசாங்கத்தின் முழு அங்கீகாரம் இன்னும் இந்தப் பள்ளிக்கு கிடைக்கவில்லை. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் செவ்வனே வளர்க்கும் கருவியாக தாய் தமிழ் பள்ளிகள் செயல்படுவதால், இந்த பள்ளிகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் தம்மால் இயன்ற பொருளாதார, மனித நேய மற்றும் கல்வி உதவிகளைச் செய்யவேண்டும் என்று மருத்துவர் சுந்தரம் வலியுறுத்துகிறார்.

தாய் தமிழ் பள்ளிகளுக்கு உதவ ஒரு அமைப்பு வட அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பெயர் "INTERNATIONAL EDUCATIONAL FOUNDATION INC". இதன் செயற் குழு உறுப்பினர்கள் வட அமெரிக்காவின் வடகிழக்கு, மத்திய அட்லாண்டிக், தென் கிழக்கு, மத்திய மேற்கு, மேற்கு கடற்கரை, ஆகிய பகுதிகளைப் பிரதிபலிக்கிறார்கள். இந்த அமைப்புக்கு அமெரிக்க வரி எண் (Federal tax id) வழங்கப்பட்டுள்ளது. அமைப்பிற்கு வரும் உதவி தொகைகளுக்கு வரி விலக்கு வாங்குவதற்கும் IRS அனுமதி கிடைத்துவிட்டது. அமைப்பின் கோட்பாடுகள் தீர்மானிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அமைப்பின் வருடாந்திர உறுப்பினர் கட்டணம் 10 வெள்ளிகள். வட அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்களிடம் மாதம் 10 அல்லது 20 வெள்ளிகள்(வரி விலக்கு உண்டு) பெற்று தாய் தமிழ் பள்ளிகளுக்கு உதவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் இருக்கும் தமிழர்கள், அந்த பகுதியின் ஒருங்கிணைப்பாளர் மூலம் தங்கள் உதவிகளை செய்யலாம்.


திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி போலவே காரைக்கால் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கும் நான் சென்று வந்தேன். அது பற்றி 3 மாதங்கள் முன்பு எழுதி இருந்தேன். அது இங்கே...

இந்த கட்டுரையை 2 ஆண்டுகளுக்கு முன்பே திண்ணையில் எழுதி இருந்தேன். திண்ணை திரு ராசாராம் முதல் கட்டுரையாக முதல் பக்கத்தில் போட்டு இருந்தார். அவருக்கு என் நன்றிகள் பல. மருத்துவர் சுந்தரம் அய்யாவிற்கும் எனது நன்றிகள் பல. இன்று திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி "வளர்ந்து" இருப்பதற்கு அவரும் ஓரு காரணம்...


மேலும் விவரங்களுக்கு kulvee@yahoogroups.com என்ற முகவரிக்கு மின் அஞசல் அனுப்பவும். வாசகர்கள் தங்கள் பொருளாதார உதவிகளை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

International Educational Foundation, Inc.
105 Ronaldsby Drive
Cary, North Carolina 27511 - 6536

தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் தேவை

திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி

காரைக்கால் தாய்த்தமிழ் பள்ளி

திண்ணையில்


"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"


நன்றி

மயிலாடுதுறை சிவா











Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

14 Comments:

Blogger கண்மணி/kanmani said...

தமிழ்நாட்டில் இருந்து கொண்டே தெரியாமல் இருக்கிறோம் இப்படியொரு பள்ளி பற்றி.செய்திக்கு நன்றி சிவா.
ஆனால் தமிழ்நாட்டில் தூய தமிழ் பேசினால் கேவலம்.ஏதோ வேற்று கிரகத்துவாசியைப் போல் பார்ப்பார்கள்.

Wednesday, May 23, 2007 10:57:00 PM  
Blogger Yuvraj Sampath said...

அன்பு சிவா
இந்த பள்ளியினை தொடங்கியதில் நண்பர் தியாகு, டிடொனி முத்துசாமி, பா மா கா சக்திவேல் போன்றோறுக்கும் பெரிய பங்கு உண்டு...பொருளாளர் ஆக எனக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு...ஆனால் காலத்தின் கட்டாயம் இப்போது நாங்கள் எல்லாம் வெளியே தமிழ் வாழ....வாழ்க தமிழ்...வெல்க தமிழ்..யுவராஜ் சம்பத்..

Thursday, May 24, 2007 1:06:00 AM  
Blogger Raji said...

Good info.
first time to ur blog through Abiappa's...
En ooru paeru irukkaenu vandhaen..
Superaa manikoondunu paeru vachu,adhukku superaa explanationum kooduthurukeenga...

Thursday, May 24, 2007 3:45:00 AM  
Blogger நாகு (Nagu) said...

காரைக்கால் பள்ளியைப் பற்றி அந்த பள்ளியை நடத்துபவரின் நண்பர்(நண்பி) மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பள்ளிகள் நன்றாக நடப்பது அறிந்து மகிழ்ச்சி.

Thursday, May 24, 2007 6:19:00 AM  
Blogger SathyaPriyan said...

அருமையான பதிவு சிவா. பல புதிய தகவல்கள். அந்த பள்ளி அமைய உழைத்த/உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள் பல.

ஒரு + குத்தி விட்டேன்.

Thursday, May 24, 2007 6:30:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

கண்மணி

யார் எப்படி நினைத்தாலும் தமிழர்களிடே தமிழிலியே பேசுவோம்.

சம்பத்

தங்கள் சேவைக்கு என் மனதார பாராட்டுகள் பல. உங்கள் மின் அஞ்சல் அனுப்புங்களேன். நிச்சயம் தொடர்பில் இருப்போம்...

ராஜி

வருகைக்கு நன்றி

மயிலாடுதுறை சிவா...

Thursday, May 24, 2007 7:06:00 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் தேவை
திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி
காரைக்கால் தாய்த்தமிழ் பள்ளி
திண்ணையில்

Thursday, May 24, 2007 8:30:00 AM  
Blogger Unknown said...

நலிந்த நிலையில் இருக்கும் தாய்தமிழ் பள்ளி ஒன்றின் விவரம் இது சிவா. இதற்கு எப்படியாவது உதவி செய்திட நண்பர்கள் முன்வந்தால் மகிழ்ச்சி.

http://holyox.blogspot.com/2007/02/239.html

Thursday, May 24, 2007 2:09:00 PM  
Blogger குருத்து said...

நிலவுகிற அரசு, தன் மக்களுக்கு கல்வி கொடுக்கக் கூடிய பொறுப்பிலிருந்து, கழன்றுக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், தாய்த்தமிழ் பள்ளிகள் தனியாக தொடங்குவது, இன்னுமொரு, தனியார் பள்ளி தொடங்குவது போலத்தான்.

அரசை மீண்டும், மீண்டும் தமிழ் வழி கல்வியை அமுல்படுத்த கோர வேண்டும். தனியார்மயக் கல்வியை தடை செய்ய போராட வேண்டும். இது தான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.

மேலும், திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளியைப் பொறுத்தவரை, சில ஆண்டுகளுக்கு முன், அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

ஆர்ப்பாட்டமாய் பள்ளி துவங்கிய குழு, சில வருடங்களிலேயே பலர் ஒதுங்கிவிட, 'புலி வாலை பிடித்த கதையாகி விட்டது மதிப்பிற்குரிய தங்கராசு அவர்களுக்கு.

பள்ளிக்கு கடுமையான நிதி நெருக்கடி. பெரும்பாலும் தொழிலாளர்களுடைய குழந்தைகளாய் இருப்பதால், பள்ளிக்கட்டணம் வசூலிக்க முடியாத நிலை.

உண்மையில் அவருடைய நிலை மிக கொடுமையான நிலை. அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவி உடனடியாக செய்ய வேண்டிய கட்டாய நிலை. ஆனால், அவரால் இயலவில்லை.

இடைக்காலத்தில், நான் தொடர்பு கொள்ளவில்லை. இருப்பினும், பெரிய மாற்றங்கள் வந்திருக்க
வாய்ப்பில்லை.

Thursday, May 24, 2007 10:25:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சத்ய ப்ரியன், சுடலை மாடன், சாக்ரடீஸ், செல்வன் தங்கள் ஆலோசனைக்கும், வருகைக்கும் நன்றி...

மயிலாடுதுறை சிவா...

Friday, May 25, 2007 6:46:00 AM  
Blogger Unknown said...

தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கெல்லாம் தாயாக விளங்கிக்கொண்டிருக்கிற தோழர். தியாகு வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிற அம்பத்தூர் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கும் தாங்கள் சென்று வந்திருக்கலாமே. எனினும், வாழ்த்துகள்.

-க.இளஞ்செழியன்

Friday, May 25, 2007 8:16:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

இளஞ்செழியன்

அவசியம் சென்று வருகிறேன். தோழர் தியாகுவைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.

தகவலுக்கு நன்றிகள் பல.

மயிலாடுதுறை சிவா...

Friday, May 25, 2007 8:53:00 PM  
Anonymous Anonymous said...

/// யார் எப்படி நினைத்தாலும் தமிழர்களிடே தமிழிலியே பேசுவோம். ///

மிக நன்றாகச் சொன்னீர்கள் சிவா. தமிழ்ல் பேசினால், 'வந்துட்டான்யா புலவர்' என்று நண்பர்கள் கேலி செய்வார்களோ என்பதற்காகவே தமிழில் பேச மறுப்பவர்கள் உண்டு. அந்தக் கேலியைப் பொருட்படுத்தாம்ல் தொடர்ந்து தமிழில் நீங்கள் உரையாடினால் நண்பர்களையும் த்மிழில் உரையாட வைத்த பெருமை உங்களைச் சேரும். இது என் அனுபவ ரீதியான உண்மை.

நல்ல பதிவு

அன்புடன்
ஆசிப் மீரான்

Friday, May 25, 2007 9:11:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி ஆசிப் மிரான்

தமிழ்நாட்டில் தமிழ்ர்களுடன் தமிழில் பேசுவது ஓர் ஆனந்தம் தானே...

முடிந்தால் "இலக்கணம்" திரைப் படம் பாருங்களேன்...

மயிலாடுதுறை சிவா....

Tuesday, May 29, 2007 7:27:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது