தமிழ் மறைகள் - நம் தாய் மொழியில் விழாக்கள்...
வாசிங்டன். மே 26 2007
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் நாக இளங்கோவன் இதனை எழுதி இருந்தார். இதை படித்தவுடன் மனம் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மொழி புரியாத சமஸ்கிருத்தில் திருமணம், காது குத்துதல், பிறந்த நாள், புதுமனை புகுவிழா,
இறப்பு, புதுக் கடைக்கு பூஜை போடுதல், எந்த ஓரு நம் வீட்டு விழாவிற்கும் நாம் பிறரை நம்பி அவர்களுக்கும் முழுக்க புரியுமா என்று நமக்கு தெரியவில்லை, நமக்கும் மொழிப் புரியாமல் நாம் தவித்த தவிப்பு இருக்கிறதே, அதற்கு நாக இளங்கோவன் செய்ததைப் போல் நாம் அனைவரும் பின் பற்றினால் நம் மொழிக்கும் பெருமை, நமக்கும் நாம் என்ன செய்கிறோம் என்று தெரியும். நம் மொழி வளர இதுப் போல் தமிழர்கள் பின் பற்றினால் நமக்கும் மகிழ்ச்சி....
வாழ்க தமிழ் ! வளர்க்க அதன் புகழ்!!!
************************************************************************************** தமிழ் மறைகள்
தமிழ் மறைகள் கொண்டு, இல்லத்தில், கோவிலில் விழாக்கள் செய்வது பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கேட்டிருக்கிறோம். ஆயினும் இது தமிழ் நாடானதால் தமிழில் பரவலாக தமிழ் முறையில் வழிபாடுகள் மற்றும் விழாக்கள் நடைபெறுவது குறைவு அல்லது இல்லை எனலாம்.
சமீபத்தில் எங்கள் புதிய இல்லம் புகு விழா ஒன்று அமையும் வாய்ப்பு அமைந்தது. இல்லத்தை விட, அவ்விழாவைத் தமிழ் முறையில் தமிழ் மறைகளைக் கொண்டு செய்ய வேண்டும் என்று முனைப்புடன் இருந்தோம்.
குழந்தை பிறப்பு முதல் மனித வாழ்வு முழுக்க எல்லா நிகழ்வுகளையும் தமிழ் முறையில் தமிழ் மறைகள் கொண்டு செய்ய முடியும் என்பதை எங்கள் இல்ல விழா நடந்த போது உணர்ந்தோம்.
தமிழ் வழியில், யாரை வைத்துச் செய்வது என்று வினவியபோது பேராசிரியர் மறைமலை அய்யா எனக்குத் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்து பேருதவி செய்தார். வேள்விச் சதுரர் சத்தியவேல் முருகனார் என்ற மூத்த சிவனடியாரும், அவரின் சீடர்களும் இத்தமிழ்ப் பணியைத் தமிழகமெங்கும் செய்து வருகின்றனர்.
அவரைத் தொடர்பு கொண்டபோது இந்த மாதம் முழுக்க வேலை இருப்பதால் "என் சீடர் சிவப்பிரகாசத்தை வைத்துச் செய்யுங்கள்" என்று சொல்லிவிட, நானும் சரி சீடராக இருப்பதால் 50, 55 அகவையுடையவராக இருப்பார் என்று எண்ண, வந்த சிவப் பிரகாசம் என்ற அந்த சிவனடியாரோ 73 அகவையுடைய சிவ நெறியாளர். அவருக்குத் துணையாக வந்த அடியாரோ 50க்கும் மேல் அகவையுடையவர்.
இருவரும் முதல் நாளே என் இல்லத்துக்கு வந்து மிகுந்த பொறுப்புடனும், நெறியுடனும் மறுநாளைக்குத் தேவையான வற்றை நள்ளிரவு வரை கவனமாக ஏற்பாடு செய்து விட்டு மூன்று மணிநேரம் ஓய்வெடுத்தனர் இரவில்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் இருந்து தேவாரத்தையும், திருவாசகத்தையும் அவற்றிற்கே உரிய இயல்பான இசைநயத்தோடு இருவரும் பாடப் பாட வீடு முழுக்க தமிழால் நனைந்தது. ஓதுவார் என்றால் ஏதோ பாட்டுப் பாடுவோர் என்ற என் எண்ணம் அடியோடு மறைந்தது.
பாடல்களை அவர்கள் நாவிலிருந்து பாடவில்லை போலும். வந்து பாய்ந்த தேன் தமிழ் எல்லாம் அவ்வடியார்களின் நாபிக் கமலங்களில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். புகை மிகாத வேள்வி, நவகோள் வழிபாடு, திண்ணிய மனம் பெற வழிபாடு (வடமொழியில் சங்கல்பம் எனப்படுமாம்), திருமகள் வழிபாடு, பால் காய்ச்சுதல் போன்ற அனைத்தையும் அடுக்கடுக்கான விளக்கங்கள், திருக்குறளில் இருந்து மேற்கோள்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துச் சொல்லி எடுத்துச் சொல்லி பாடல்களைப் பாடிய விதம் அனைவரையும் அமைதியிலும், வியப்பிலும் ஆழ்த்தியது.
பால் காய்ச்ச அடுப்பைப் பற்ற வைக்கும் போது திருவருட்பாவில் இருந்து அருட்பெருஞ்சோதியை அழைத்துப் பாடிய பாடல் அனைவரையும் உணர்வு வயப் படுத்தியது.
இரண்டு, இரண்டரை மணி நேரம் அவர்கள் பாடிய பாடல்கள், அளித்த விளக்கங்கள் என்னை மெய் மறக்கச் செய்தன; திருவருட்பா பாடியபோது என் கண்கள் பனித்தன;
தமிழும் ஆன்மீகமும் எங்கள் இல்லத்தை நிறைத்திருக்க, வந்திருந்த அனைவரும் ஆகா, இதுவல்லவா மறை, முறை; இத்தனைக் காலம் எந்த விழாவிலும் என்ன சொல்கிறார்கள் என்று தெரியாமலே அல்லவா இருந்தோம் இத்தனை இனிமையானதா இது என்று வியந்து போயினர். வந்திருந்த தமிழ்ச் சிவனடியார்களோ ஏதோ எங்கள் இல்லத்தை சிறந்தோங்கச் செய்வதே அவர்களின் வாழ்க்கை இலக்கு என்றது போல அவர்கள் காட்டிய கனிவும், பொருள் பொதிந்த விளக்கங்களும், காட்டிய கட்டுப்பாடும் அவர்களின் நேர்மையைக் காட்டின.
இப்படிப் பட்ட பெரியோர்கள், செந்தமிழால் இல்லம் துலக்கி விடும் விழா முதற்கொண்டு திருமணம், காதுகுத்து, பூப்பு, பிறந்த நாள் விழா என்று அனைத்து விழாக்களுக்கும் விதிகளையும், தக்க தமிழ் மறைகளையும் வைத்துள்ளனர். நல்விழாக்கள் மட்டுமல்ல நீத்தார் கடன் போன்றவற்றையும் செய்கிறார்கள்.
கடந்த வருடம் என் நண்பர் ஒருவருக்கு நானும் பேரா.மறைமலை அவர்களும் இத்தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆயினும் அவ்விழாவில் என்னால் கலந்து கொள்ள வியலவில்லை. இம்முறை நாங்களே செய்த போது அதன் பயனை முழுவதும் பெற்றதாக உணர்ந்தோம்.
முழுக்க முழுக்கத் தமிழ் முறைகளில் விழாக்கள் நடத்தும் நல்லோர் திரளை அறிந்து கொண்டதும் அவர்களை வைத்து எங்கள் இல்ல விழாவை நடத்தியதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியும் மன நிறைவும் ஆகும். உலகெங்கும் இவர்களின் ஊழியம் படர்ந்து தமிழ் நிறைய வேண்டும் என்பதே என் இறைவணக்கம்.
"யாம் பெற்ற இன்பம் இவ்வையம் பெறல் வேண்டும்!"
தொடர்புகள் விவரம்:
1. தமிழ் வேள்விச் சதுரர் திரு.சத்தியவேல் முருகனார், பி.ஈ, எம்.ஏ
தொலைபேசி எண் +91 44 2253 1545
2. திரு.சிவப்பிரகாசம்
தொலைபேசி எண் +91 44 2245 2691
மனதார நன்றி பல : நாக.இளங்கோவன், சென்னை
நன்றி
மயிலாடுதுறை சிவா...
8 Comments:
நன்றி சிவா!
நண்பர் நாக. இளங்கோவனின் இல்ல விழாவை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு.
இணையத்தில் செயல்படும் தனித்தமிழ் ஆர்வலர்களில் நாக. இளங்கோவன் மிக முக்கியமானவர்.
சாத்தான்குள்த்தான்
படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் நிறைய தொடர வேண்டும்.
மிக அருமை. அந்த இல்லச் சூழல் எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கையிலேயே மனம் உவக்கிறது. இல்லத்தில் இருப்போர் அனைவருமே நன்கு புரிந்து கொண்டு இந்த நன்னிகழ்ச்சியில் பங்கு பெற இது போல் தாய்மொழியில் நிகழ்த்தப் பெறும் வழிபாடுகளே வழி வகுக்கும். அனைவரும் இறை சிந்தனையிலும் நற்சிந்தனைகளிலும் இப்படி ஈடுபட்டாலே போதும்; அந்த இல்லம் நன்கு துலங்கும். அங்கு இறைவன் அருளும் நன்கு சூழும். அது தானே இது போன்ற விழாக்களின் முக்கிய நோக்கம்.
நல்ல விசயம் பகிர்ந்தமைக்கு நன்றி
//இசைநயத்தோடு இருவரும் பாடப் பாட வீடு முழுக்க தமிழால் நனைந்தது. ஓதுவார் என்றால் ஏதோ பாட்டுப் பாடுவோர் என்ற என் எண்ணம் அடியோடு மறைந்தது//
மிக அருமையான பதிவு சிவா!
நாக இளங்கோவனுக்கும் நன்றி!
ஓதுவதும், ஒதுவதில் ஒழுகுவதும் இதைச் செய்வபவர்களின் தலையாய கடமை.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
"ஓதுவார்" தமை நன்னெறிக்கு உய்ப்பது...
இப்படி ஓதி, இல்லத்தை நன்னெறிக்கு உய்ப்பது என்பது மிகவும் சிறப்பான ஒன்று!
எங்கள் அத்தைப் பையன் திருமணத்தின் போது, இதே போல் தமிழ் மறைகள் ஓதி தான், விழா நடந்தது! அப்போது, பாரதியின் பாடல்களும் இடம் பெற்றன. அதில் இருந்த சற்று புரியாத தூய தமிழ்ச் சொற்களுக்குக் கூட விளக்கம் சொல்லி, விழாவை நிறைவேற்றிக் கொடுத்தனர்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஏட்டிக்குப் போட்டி எல்லாம் அறவே இருக்காது! நோக்கம்: உணர்ந்து வழிபடல் மட்டுமே!
எனக்குத் தெரிந்த வரை, ஓங்கி உலகளந்த பாசுரம் சொல்லி,
"நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்" என்று உரே வாழ்த்தும் போது, மணமக்கள் பெரியோர் காலில் வணங்கி ஆசி பெறுவார்கள்!
பிரபந்த பாடல்கள் பாடாமல் எங்கள் இல்லத் திருமணங்கள் நிறைவுறாது...ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு ஆழ்வாரும் வந்து தீந்தமிழ்ச் சொல்லால், மனை மங்கலம் பற்றிச் சொல்வது போல இருக்கும்!
அரங்கனின் அரவணைச் சேவைக்கே தமிழில் ஓதும் போது,
அவனை வணங்கும் இல்லங்களில் மட்டும் இவை வராது இருக்கலாமோ?
நட்சத்திரம் அருமையாக மிளிர்கிறது. தொடர்ந்து புதிய பயனுள்ள தகவல்களைத் தருகிறீர்கள். மிக்க நன்றி.
ஆசிப், ராகவன், குமரன், சரண், ரவி மற்றும் குலவு தங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.
மயிலாடுதுறை சிவா...
பல நாள்கள்/ ஆண்டுகள் கடந்தும்
நினவில் கொண்டிருந்து இக்கட்டுரையை எடுத்துப் போட்டது
எண்ணி மகிழ்ந்தேன் நண்பர் சிவா.
தமிழ்நெறிகள் மிக உயர்ந்தன.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Post a Comment
<< Home