முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை...
சென்னை, நவ. 28:முதல்வர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கவிதை வருமாறு:
மாபெரும் திராவிட இயக்கத் தலைவன் என்பதை மறந்து விடுகிறேன், சிறிது நேரம்! மாண்புமிகு முதலமைச்சர் பதவியையும் துறந்து விடுகிறேன்: இதை எழுதுவது குற்றமென்றால்-எழுதாமல் என்னால் எப்படி இருக்க முடியும்?
விழுதாக வந்தவன் விவேகியாகத் தோன்றியவன்:
பழுதான சொல் ஒன்றும் பகர்ந்திடாத பண்பாளன்- மாறன்!
தொழுதேத்தும் பெரியார், அண்ணா, ராஜாஜி போற்றிய மதிவாணன்!
தோஹா மாநாட்டில் அவன் தொலைநோக்குப் பார்வைதனை
தொல்புவி பாராட்டத் தொடங்கியதை இன்னும் நிறுத்தவில்லை!
என் மடியில் வளர்ந்த பிள்ளை மனத்தில் நிலைத்த கிள்ளை! மாறன்! மாறன்!அந்த வீரனுக்கு இணையாக வருவாய் என்று தான் விழலுக்கு நீர் இறைத்தேன் - வீணாகக் கெட்டொழிந்தாய்- விசுவாசம், அன்பு, நட்பு, நன்றியெல்லாம் வீசை என்ன விலை எனக் கேட்டுத் தாழ்ந்து விட்டாய்!
‘‘மாநிலங்களவை ஆசான்” என்று மாபெரும் அவைதனிலே மாலையிட்டு நீ வணங்கியதெல்லாம் மாய் மாலந்தானா?
மாறனுக்கு ஏன் சிலையென்று மமதையுடன் கேட்கின்றாய்- உன் மண்டையோட்டுக்குள் நன்றியை வைத்துப் படைக்கவில்லையா இயற்கை?
மனப்பாடம் பண்ணி நீ மன்றத்தில் பேசியதெல்லாம் மாறன்
எழுதிக் கொடுத்ததென்று மாநிலங்களவைத் தூண்கள் கூடச் சொல்லுமே!மறந்து போயிற்றா:
மாறனின் கால் பிடித்து, கை பிடித்து, கண்ணீர் வடித்து மாநிலங்களவைக்குச் சென்ற பழைய கதையெல்லாம்? என்ன தகுதி மாறனுக்கு சிலை எழுப்ப என்றா கேட்கின்றாய்?
‘‘மாறன் என்றால் சாமான்யமா?‘‘ எனக் கேட்டாரே அண்ணா - அந்த ஒவ்வொரு எழுத்தும் சொல்லுமப்பா: அவன் பெருமை!
இடத்துக்கு இடம் தவ்விப் பாய்ந்திடும் தவளைக் குணம் உனக்கு:
அவனோ தங்கக் குணம் படைத்தவன் -அதனால் இப்போது கூட உன்னை மன்னித்து விடுவான்
அவன் உனக்கு மாநிலங்களவை ஆசான் அல்லவா? அதனால்!
நன்றி : தினகரன்
மயிலாடுதுறை சிவா...
5 Comments:
'இயற்கை மனப்பாடம்' என்று ஆரம்பிக்கும் வரியிலிருந்து 'இயற்கை'யை பிரித்து மேல் வரியோடு சேருங்கள்.
நன்றி சுல்தான்.
சரி செய்து விட்டேன்.
மயிலாடுதுறை சிவா...
---அந்த வீரனுக்கு இணையாக வருவாய் என்று தான் விழலுக்கு நீர் இறைத்தேன் ---
யாரை சொல்கிறார்? வைகோ??
---விசுவாசம், அன்பு, நட்பு, நன்றியெல்லாம் வீசை என்ன விலை எனக் கேட்டு---
சம்பளம் கொடுக்கும் நிறுவனத்திடம் வேலைக்கேற்ற ஊதியம் கொடுக்கும் வரை 'விசுவாசம்' காட்டலாம். கொள்கை, கருத்து, எண்ண பேதம் ஏற்பட்டாலும் அடங்கிப் போவதற்கு பெயர்தான் விசுவாசமா?
நட்பு குறித்து வள்ளுவர் சொன்ன 'நகுதற் பொருட்டன்று நட்பு...' போன்ற சிந்தனைகளும் எழுகிறது.
---மனப்பாடம் பண்ணி நீ மன்றத்தில் பேசியதெல்லாம் மாறன் எழுதிக் கொடுத்ததென்று மாநிலங்களவை---
இதற்கு ஆதாரம் உண்டா? அவதூறு எழுதுவதற்காக ம-ன்னாவுக்கு மானா என்று ரைமிங் போட்டிருப்பது போல் படுகிறது.
---மாறனின் கால் பிடித்து, கை பிடித்து, கண்ணீர் வடித்து---
நேற்று என்னிடம் வேலை பார்த்தவன், நாளை தனியாக தொழிற்சாலை அமைத்தால், பொறாமைப்படுவதா? இழிவாகத் தூற்ற்வதா?
---என் மடியில் வளர்ந்த பிள்ளை மனத்தில் நிலைத்த கிள்ளை!---
இதுதானே உண்மையான காரணம்?
பாலா
தங்கள் வருகைக்கு நன்றி.
கலைஞர் வைகோ தான் சொல்கிறார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆயிரம் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு "வைகோ" வின் வளர்ச்சிக்கு கலைஞர் ஓர் ஏணியாக இருந்தார் என்பதை வைகோவால் மறுக்க முடியுமா?
ஈழ மக்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் பல தலைவர்களில் வைகோவும் ஓருவர் என்பதை தவிர,
வைகோவிடம் இருந்து பின்பற்ற அல்லது ரசிக்க அல்லது அரசியல் விசயங்கள் எதுவும் இல்லை என்பது
என் தாழ்மையான கருத்து.
மயிலாடுதுறை சிவா...
கலைஞர் ஒரு இமயம்... உண்மையில் அவருடைய சகிப்புத் தன்மை, பாராட்ட வேண்டியது..
நாகரீகமான அரசியலை தமிழக மக்களுக்கு வழங்க... ஆனால் புரியாத ஜெ-ன்மங்கள் சிலரால் அரசியல் நாற்றமடிக்கின்றது...
வைகோ, மற்றும் இராமதாஸ் இவர்களெல்லாம் ஒட்டுண்ணிகள்.
நன்றி
Post a Comment
<< Home