Tuesday, May 10, 2005

நன்றி கெட்ட ஜெயகாந்தன்....நன்றி நெல்லை கண்ணன்!!!

நன்றி குமுதம் இதழுக்கு!!!

Image Hosted by Your Image Link

23.4.05 அன்று சென்னையில் சமஸ்கிருத சேவாசமிதியில் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது:

‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’

இதுகுறித்து ஜெயகாந்தனுக்கு நெல்லை கண்ணன் பகிரங்கக் கடிதம் எழுதுகிறார்.

அன்புள்ள அண்ணாச்சி,
வணக்கம்.

தமிழனாக, தமிழுக்காகவும், ஏழைகளுக்காகவும் வாழ்ந்து ஏழையாகவே மரணமடைந்த தோழர் ப. ஜீவானந்தம், தங்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ‘‘தமிழைப்படி; தவறில்லாமல் எழுதப்படி என்று கற்றுத்தந்த தமிழால், முழுமையாக இலக்கணம் கற்று ஒரு முழுமையான தமிழ்ப்புலவனுக்குரிய தகுதி பெற்றேன்’’ என்று நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்.

ஆனால் இன்றோ, ‘‘தமிழ் ஒன்றும் சொத்தல்ல. நான்தான் தமிழுக் குச் சொத்து’’ என்கிறீர்கள்.

எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?

அத்தனை தமிழறிவையும் உங்களுக்குத்தந்த தோழர் ஜீவாவின் வாழ்க்கை போன்றதா உங்கள் வாழ்க்கை?

அதனால்தான் ஏற்றத்தாழ்வுகளும் வர்ணபேதங்களும் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும் என்கிறீர்கள்!

உங்கள் பிரளயம் அம்மாசிக்கிழவனும், விழுதுகள் ஓங்கூர் சாமியாரும், ரிஷிமூலம் ராஜாராமனும், பாரீஸ§க்குப் போ சாரங்கனும், ஒருவீடு, ஒரு மனிதன் ஒரு உலகம் துரைக்கண்ணுப்பிள்ளையும், ஹென்றிப்பிள்ளையும், யாருக்காக அழுதான் ஜோசப்பும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியும் அக்னிப்பிரவேசமும், சிலநேரங்களில் சில மனிதர்கள் கங்காவும் சுமைதாங்கியும், அந்தரங்கம் புனிதமானது அக்ரஹாரத்துப்பூனையும், ஒருவீடு பூட்டிக்கிடக்கிறதும் படித்து மேடைகள் தோறும் அவைகுறித்துப் பேசி வருகின்ற என்னால் தாங்கமுடியவில்லை.

நான் ‘சாதி’ பேசறதா நினைக்கக்கூடாது. ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களில்’ நீங்கள் எழுதினீர்கள்’, எதிர்காலத்தில் என் பெயருக்குப் பின்னால் ஏதேனும் பட்டம் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டால் என் ஜாதிப்பெயரான ‘பிள்ளைமார்’ என்ற பட்டத்தையே போட்டுக்கொள்வேன்’ என்று.

அந்தப் பிள்ளைமார்களில் ஒருவரான மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளைதான்,

‘‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து

சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே’’ என்கின்றார்.

வடலூர் இராமலிங்கம் பிள்ளையிடம் ஒரு துறவி ‘சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகட்கும் தாய்’ என்றாராம். வள்ளலாரோ ‘ஆமாம் ஆமாம்’ என்று சொல்லி, ‘தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி’ என்றாராம்.

பிறமொழிகளைத் தூற்றுதல் கூடாது என்கின்ற தெளிவு எனக்கு உண்டு. ஆனால், எங்கேயும் வழக்கிலில்லாத மொழியன்றை தமிழைவிடச் சிறந்த மொழி என்று பேசுவதும், தமிழில் கலப்பின்றி பேசவேண்டும் _ எழுத வேண்டும் என்பவர்களை தங்களையே நக்கித்திரியும் நாய்கள் என்றும் சொல்லியிருக்கின்றீர்களே! ஆமாம். நாங்களெல்லாம் எங்கள் அன்னைத் தமிழுக்கு நன்றியுள்ள நாய்கள்தான்.

நீங்கள்..........?

தங்களின் ஞானத்தை பீடத்தில் அடகு வைத்துப் பெற்ற விருதிற்காகவா அன்னைத் தமிழைப் பழிப்பது? சாகித்ய அகாடமி விருது தந்த பொழுது ‘‘எனக்கு விருது தந்து சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது’’ என்று பேசிய அந்த ஜெயகாந்தனா?

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய கதையில், ஒருத்தி என்பதற்கு ஒருவள் என்று எழுதிய போது, இலக்கணத்தைப் படித்துவிட்டு, ‘‘இலக்கணத்தை மீறுங்கள். படிக்காமல் உடைக்காதீர்கள்’’ என்ற தாங்களா தமிழைப்பழிக்கின்றீர்கள்.

முன்பொருமுறை குமுதத்தில் ‘‘நான் முரண்பாடுகளில் மூட்டையாகிப்போனேன்’’ என்று எழுதினீர்கள்.

தங்களுக்கு வடமொழி நண்பர்கள் நிறைய உண்டு அறிவோம். அந்த வடமொழியும், வடமொழி நண்பர்களும் தங்களை வந்து சேர்ந்ததே _ அன்னைத் தமிழ் உங்களுக்கு அளித்த அளப்பரிய அறிவினாலும் எழுத்தாற்றலாலும்தான். இல்லையெனில் ஏது அந்த நட்பு?

நீங்களே எழுதியிருந்தீர்கள், ‘‘யாராவது வேண்டியவர்கள் உறவோ, நட்போ இறந்து போனால் அந்தச்சடலத்திற்கு மரியாதை செலுத்த வர வேண்டுமென்று அழைக்கக் கூடாது. ஏனென்றால் கம்பீரமான தோற்றத்தோடு பார்த்த அவர்களை பிணமாகப் பார்த்து அந்த உருவம் மனதில் பதிந்துவிடக் கூடாது’’ என்று.

எங்கள் நிலைமையைப் பாருங்கள். கம்பீரமாகப் பார்த்த உங்கள் உருவத்தை மறந்துபோக வேண்டிய சூழலை நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்.

பட்டினத்தார் சொல்வார் _ வயதானால் ‘‘செவி திமிர் வந்து, குழற மொழிந்து’’ என்று. திருநெல்வேலியில சாதாரணமா வயசானவங்க உளறுனா ‘‘போதங்கெட்டுப்போச்சு’’ம் பாங்க

உங்களுக்கு போதங்கெட்டுப்போச்சா?

உங்கள் தோழர் ஜீவாவும், ஞானத்தந்தை பாரதியும் நல்ல தமிழ் இருந்தும் வறுமையில்தான் செத்தார்கள்.

நீங்களோ வசதியாகி, வளமாகி, அதை வழங்கிய தமிழைப் பழிக்கின்றீர்கள்.

பொழச்சுப் போங்க அண்ணாச்சி!
அன்புடன்,
நெல்லை கண்ணன்...

தொகுப்பு : திருவேங்கிமலை சரவணன்
படங்கள் : ஆர். சண்முகம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

11 Comments:

Blogger சுந்தரவடிவேல் said...

ஏதோ, அன்றைக்கு நம்மால் முடிந்தது!
http://sundaravadivel.blogspot.com/2005/05/blog-post_03.html

Tuesday, May 10, 2005 7:05:00 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

ஜயகாந்தன் அசோகமித்திரனை நல்லவராகி விட்டார் போலிருக்கிறதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Tuesday, May 10, 2005 7:42:00 AM  
Blogger Muthu said...

விதி வலியது.. வேறென்ன சொல்வது ? :-(

Tuesday, May 10, 2005 8:29:00 AM  
Blogger SHIVAS said...

//வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்//

இதுக்கு என்ன சொல்லுவீங்க ஹரன்பிரசன்னா அவர்களே? வீட்டுக்கு அடிக்கிற வர்ணத்தை சொன்னார் என்றா?

Tuesday, May 10, 2005 10:49:00 AM  
Blogger கிஸோக்கண்ணன் said...

யாரையோ திருப்திப்படுத்த அல்லது யாரிடமோ (இன்னும்) எதிர்பார்த்து இப்படியெல்லாம் அவர் உளறிக் கொட்டுகின்றார் என்பதே எனது கணிப்பு.

வழமையாக என்ன நடக்கும் என்றால் பலர் ஆரம்பத்தில் பிழைவிடுவார்கள். பின்னர், ஆளும் வளர, அறிவும் வளர்ந்து, அனுபவம் வளர்ந்து எண்ணங்களும் வளரும். இங்கு...?

Tuesday, May 10, 2005 11:03:00 AM  
Blogger Sri Rangan said...

தமிழைப் பன்நெடுங்காலமாகப் பழிக்கின்றனர் பலர்,தாழ்த்திவைத்து-தள்ளிவைத்து, இறைவனைக்கூடத் தமிழால் பூஜிக்கத் தமிழர்களுக்குத் தடை.இப்படிக்கேவலப்படுத்தி,நிறுவனப் படுத்திய அரசியலைவிடவா ஜெயகாந்தன் செய்துபோட்டார்?அவரது நிலை அதுவானால் பரவாயில்லை.ஆனால் தமிழாற் தமிழர்கள், தமது ஆத்மீகத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அவலநிலையை ஏன் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்?எவரென்னபண்ணினாலும் தமிழை அவ்வளவு சீக்கரம் நூதனசாலைக்கு அனுப்பிவைக்க முடியாது.ஏனெனில் தமிழ்மொழி தன்னில் நிறைவான பண்புகளைக் கொண்டமொழி.கவலையை விட்டுக் காரியத்தில் இறங்குங்கள்.

Tuesday, May 10, 2005 1:25:00 PM  
Blogger துளசி கோபால் said...

விநாசகாலே விபரீத புத்தி!!!!!

Tuesday, May 10, 2005 2:12:00 PM  
Blogger Thangamani said...

இதில் நாய்க்கு பதில் சிங்கம் என்ரு போட்டுக்கொள்ளுங்கள் தௌவும் மிருகம் தான்; ஜெயகாந்தன் மன்னிப்பு கோரினான் என்று வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னாராம்.


அவருக்குள் இருந்த சாதீய மனப்பான்மை சாமியார்கள் (அதுவும் சங்கரமட) கைதுக்கு பிறகு வெடித்துச் சிதறுகிறது. எனக்கு இந்தக் கைதை கருணாநிதி செய்து இருந்தால் இன்னும் எப்படி உணர்ச்சி வசப்படுவார் என்று நினைத்துப்பார்க்கிறேன்!

Tuesday, May 10, 2005 2:21:00 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

குமுதம் இதழிலிருந்து எடுத்துப் போட்டதற்கு சிவாவுக்கு என் நன்றி. இல்லாவிடின் நான் இதைப் படித்திருக்க மாட்டேன். இதோடு சேர்த்து திசைகள் இதழில் கொடுக்கப் பட்டுள்ள இந்தத் துணுக்குச் செய்தியையும் படியுங்கள்.

ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியது என்னவோ ஜெயகாந்தனுக்குத்தான். காரணத்தைச் சுருக்கமாக இங்கு அளிக்கிறேன். முழு விவரத்துக்கு பின்னால் நான் அளித்துள்ள 'திண்ணை' இதழ் சுட்டிகளைப் படியுங்கள். 2003 ஆம் ஆண்டு இறுதியில் ஜெயகாந்தனின் அரசியல் பற்றி எனக்கும் திரு.பி.கே.சிவக்குமாருக்கும் இடையே திண்ணையில் ஒரு விவாதம் நடந்தது. அறிஞர் அண்ணாவைப் பற்றி இழிவாக அண்ணாவின் இரங்கல் கூட்டத்திலே ஜெயகாந்தன் பேசியதை திண்ணையில் சிவகுமார் மறு பதிப்பு செய்திருந்தார். கலைஞரைப் பாராட்டிய சில நவீன இலக்கியவாதிகளை விமர்சித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறியவற்றைத் தொடர்ந்து சிவக்குமார் பழைய ஜெயகாந்தன் பேச்சை மறுபதிப்பு செய்திருந்தார்.

ஜெயகாந்தனின் அரசியல் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் பல ஆண்டுகளாகக் கவனித்து வந்த நான் வாசிங்டனில் அவரை நேரில் சந்தித்து உரையாட முற்பட்டு (அவர் எந்த மாற்றுக் கருத்தையும் கேட்பதற்குக் கூட அனுமதிக்காத இறுக்கமான ஜனநாயக வாதி (!) என்பதையும் அன்று உணர்ந்தேன்) ஏமாந்த பொழுது அடைந்த புரிதலை திண்ணையில் வெளிப்படுத்தினேன். அப்பொழுது என்னுடைய கருத்துக்களில் சிவக்குமார் வன்மையாக மறுத்துக் கூறியவை இரண்டு. ஒன்று ஜெயகாந்தனின் சாதிய அடையாளம் பற்றியது. இரண்டாவது, ஜெயகாந்தன் ஜெயேந்திரரை ஆதரிக்கவில்லை மாறாக 'விமர்சித்திருப்பார்' என்றார். சிவக்குமாரின் இந்த இரண்டு நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்துள்ளார் அவருடைய தற்போதைய பிதற்றல்கள் மூலம். சிவக்குமார் தற்பொழுது என்ன நினைக்கிறார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

அவருக்கு ஞான பீட பரிசு அளிக்கப் பட்டதைப் பற்றி தங்கமணியின் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தேன். ஆனால் நான் கொண்டாடும் அந்த ஜெயகாந்தன் தற்பொழுது உயிருடன் இல்லை. மூக்கனின் பதிவில் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சாதி மதம் மற்றும் கஞ்சா போதையில் அவர் என்னென்னவோ பிதற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் செத்துப் போன பழைய ஜெயகாந்தனின் சாகா இலக்கியத்தை நான் கொண்டாடவே செய்கிறேன்.

கடைசியாக ஒன்று, என்னுடைய திண்ணை விமர்சனத்தில் குறிப்பிட்டது போல, பார்ப்பனரல்லாத உயர்சாதிகளான பிள்ளை, முதலி போன்ற சாதியினரின் சாதிப் பற்று சனாதனப் பார்ப்பனர்களை விட கொடியது. இரட்டை வேடம் அணிந்து திரியும் இந்த சாதிப் பற்று இது வரை சரியாக அடையாளம் கண்டு கொள்ளப்படவுமில்லை, முழுமையாக விமர்சிக்கப் படவுமில்லை. நேரம் வாய்க்கும் பொழுது இது பற்றி விரிவாக எழுத ஆசை.

திண்ணை விவாதச் சுட்டிகள் இங்கே:

திரு.அண்ணாதுரை மரணத்தின்போது ஜெயகாந்தன் பேசியது - மறுபதிப்பு பி.கே.சிவக்குமார்

ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது விமர்சனம் - சொ.சங்கரபாண்டி

பி.கே.சிவகுமாரின் முதல் பதில்

சங்கரபாண்டியின் இரண்டாம் கட்டுரை

ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப்பார்வை - பி.கே.சிவகுமார்

ஜெயகாந்தனின் அரசியல் முரண்பாடுகள் - சொ.சங்கரபாண்டி

ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும் - பி.கே.சிவகுமார்

நன்றி - சொ. சங்கரபாண்டி

Tuesday, May 10, 2005 3:19:00 PM  
Blogger முகமூடி said...

This comment has been removed by a blog administrator.

Wednesday, May 11, 2005 6:49:00 PM  
Blogger முகமூடி said...

ஜேகே அரசியல்வியாதிங்களை நாய்களோட ஒப்பிட்டதால நாய்ங்க எல்லாம் ரொம்ப வருத்ததுல இருக்கறதா கேள்வி... இப்போ நாய்க்கு பதிலா சிங்கத்தோட ஒப்பிட்டதால் நாய்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் சிங்கங்களை இப்படி கேவலப்படுத்தி இருக்க வேண்டாம் ஜேகே - முகமூடி

Wednesday, May 11, 2005 6:50:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது