நடிகர் பிரகாஷ் ராஜ்...
நம் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ அரசியலும், திரைப் படமும் ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டன. நல்ல ஆரோக்கியமான அரசியலை விரும்புவதை போல, நல்லத் திரைப் படத்தையும், நல்ல திரைப் பட நடிகரையும் மக்கள் ரசித்து ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். அதுமட்டும் அல்ல காலமும் நல்ல திரைப் பட நடிகனை அடையாளம் காட்டும். இதற்கு முக்கிய காரணம் திரைப் படத்தின் இயக்குனரும் கூட. அந்த வகையில் நான் பார்த்து மிக மிக ரசிக்கும் ஓர் நல்ல குணச் சித்திர மற்றும் வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ். பாலசந்தர் பள்ளியில் பயின்றவர்.
சின்னத் திரையில் வந்த பாலசந்தரின் "கையளவு மனசு" ஆரம்பித்து, "டூயட்டில்" தன் திரைவாழ்க்கையை தொடங்கி இன்று நல்ல நடிகன் என்று தன்னை நன்கு உயர்த்திக் கொண்டார்.
"ஆசையில்" இரண்டாவது பாதியில் அஜீத்தை ஓரம் கட்டி தன் வில்லன் கதாப் பாத்திரத்தில் ஓர் கலக்கு கலக்குவார். அதுமட்டும் அல்ல மணிரத்தினத்தின் "உயிரே" படத்தில் ஒர் சிபிஐ அதிகாரிக்கு கம்பீரமாக பிண்ணனி குரல் கொடுத்து இருப்பதை நன்கு கவனித்தால் அவரின் உச்சரிப்பு நன்கு புலப் படும். அவருக்கு தாய் மொழி கன்னடமாக இருந்தாலும் அவரின் தமிழுக்கு ஒர் கவர்ச்சி இருக்கதான் செய்கிறது. அதனை பார்த்துதான் மணிரத்தினம் அவர்கள் தன்னுடைய "இருவர்" படத்தில் கலைஞர் கருணாநிதி பாத்திரத்தை பிரதிபலிக்க கூடிய காதபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் தேர்வு செய்தார் போலும். அந்த படம் வெற்றி படமாக இல்லாமல் போய் இருக்கலாம், ஆனால் பிரகாஷ் ராஜ் தன்னுடைய நடிப்பால் வசன உச்சரிப்பால் தான் தேர்ந்த நடிகனுக்கு உரிய அத்தனை குணங்களும் உள்ளன என்பதை அழுகுப் பட நடித்து இருப்பார். கோபத்தையும், மகிழ்ச்சியும், ஆற்றாமையும் அவர் தன்னுடைய கண்களாலும், உடல் மொழியாலும் காண்பித்து இருப்பார்.
தன்னுடைய நடிப்பு ஆற்றலால் இருமுறை தேசிய விருது வாங்கி இருப்பது அவருடைய நடிப்பிற்கு கிடைக்கும் மரியாதை மற்றும் சான்று. தற்பொழுதைய புது வரவான கில்லியில் கூட செல்லம் என்று சொல்வது ஓர் அழுகுதான்.
நடிகர் பிரகாஷ் ராஜ் நான் பாராட்ட காரணம் கடந்த சூலை 9 தேதி திரைப் பட இயக்குனர் பாலசந்தரின் 75வது பிறந்தத் தினத்தை மிக எளிமையாக கொண்டாடி அவரை மீண்டும் இயக்குவதற்கு அழைத்து இருக்கிறார். பிரகாஷ் ராஜ் "குரு பக்தி" எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அதுமட்டும் அல்ல நல்லத் திறமையான நல்ல புதுமுக இயக்குனர்களை அறிமுகப் படுத்துவதும், நல்ல பல இளைஞர்களை அறிமுகப் படுத்துவதும் பாராட்டதக்கது.
பிரகாஷ் ராஜ் நன்கு நடித்து மேலும் வளரட்டும், நல்ல பல இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும் ஆதரவு கொடுப்பதற்கும் மனதாரப் பாராட்டுகள்.
நன்றி..
மயிலாடுதுறை சிவா...
8 Comments:
பிரகாஷ் ராஜின் பன்மொழி ஆளுமை, நல்ல நடிப்பு போன்றவை பிடித்தது போல பிடித்த இன்னொரு விடயம், அவர் புது இளைஞர்களை ஊக்குவிப்பது. அது மட்டுமில்லாமல் தான் தமிழ்ப்படங்களில் உழைத்து எடுத்த பணத்தை தமிழர்களுக்காகவே முதலீடு செய்வது....(பல பிற நடிகர்களைப் போல தமிழகத்தில் உழைத்து எடுத்த பணத்தை வேறு மாநிலங்களில் முதலீடு செய்யாமல்... :-(.
// பிற நடிகர்களைப் போல தமிழகத்தில் உழைத்து எடுத்த பணத்தை வேறு மாநிலங்களில் முதலீடு செய்யாமல்... :-( //
அமெரிக்காவில் உழைத்து எடுத்த பணத்தை கொண்டு இந்தியாவில் செய்த முதலீட்டையெல்லாம் நினைத்து குற்ற உணர்ச்சி மேலிட வைத்துவிட்டீர்களே டிசே.தமிழன்
எனக்குப் பிடித்த குணசித்திர நடிகர்கள் நாசர் மற்றும் பிரகாஷ்ராஜ் (இருவருக்கும் மூக்குக் கூட ஒற்றுமைதான்).
தங்கர் பச்சான் இயக்குவதாயிருந்த அவரது நாவலான 'ஒன்பது ரூபா நோட்டு' படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக இருந்தது. (முதன்மைக் கதாநாயகன் சத்தியராஜ்)நல்லவொரு படம் கிடைக்குமென எதிர்பார்த்திருந்த நேரத்தில் அது கைவிடப்பட்டது. (வாயிருக்கும் வரை தங்கரால் இனி ஒழுங்காக படம் பண்ண முடியாதென்பது என் கருத்து).
பிரகாஷ்ராஜ் மேலும் நடித்துத் தன் திறமையை வெளிப்படுத்த ஆசிகள்.
//வாயிருக்கும் வரை தங்கரால் இனி ஒழுங்காக படம் பண்ண முடியாதென்பது என் கருத்து)//
அது!!
பிரகாஷ் ராஜ் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த நடிகன். அவரின் தயாரிப்பில் உருவான "நாம்" பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும், காதல், ஹீரோயிசம் பேசும் தமிழ் சினிமாவிலிருந்து விலகி, வேறொரு தளத்தினை தொட்ட படம்.
தங்கர்பச்சான் ஒரு காமெடி. அழகி, சொல்ல மறந்த கதைக்கு தேவைப்பட்ட நாஞ்சில் நாடனை தள்ளிவைத்து விட்டு, தானே படம் பண்ணுகிறேன் பேர்வழி என்று எடுத்த படம் "தென்றல்" ஒரு மகா சொதப்பல். கருத்தினை தெளிவாக சொல்ல இயலாத, ஆனால் நல்ல விதயம் நினைக்கின்ற பல கோடி சனங்களில் தங்கரும் ஒருவர்.
பிரகாஷ் ராஜ் ஒரு அருமையான நடிகர். படத்தில் சம்பாதித்ததை நல்ல தமிழ்ப் படத்தை எடுத்து படங்களை எடுக்கிறவர்.
மேலும் நல்ல தமிழ்ப் புத்தகங்களைப் படித்த மொழி ஆளுமை உடையவர். உண்மையிலே தமிழ்ப் பற்றுடையவர். அவர் மேல் எனக்கும் மதிப்பு உண்டு.
பிரகாஷ் ராஜ் எங்களுக்கும் பிடித்தமான நடிகர்.
நல்ல பதிவு!
என்றும் அன்புடன்,
துளசி.
பாராட்ட சரியான நடிகரைத் தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். சமீபத்தில் கில்லி பார்த்த என் கணவர், "பிரகாஷ் ராஜிற்காகவே பார்க்கலாம்" என்றார். அவர் personal lifeல் நடந்த சோகம் (5 வயது மகனை இழந்தது) அவரை பார்க்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வந்து என்னை வேதனையில் ஆழ்த்தும்.
தமிழை மதித்து என்றும் நடக்கும் நன்றியுள்ள கலைஞர்களாக நான் மதிக்கும் இருவர். பிரகாஷ் ராஜ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
Post a Comment
<< Home