மொழிப் பாடங்களில் நிறைய மதிப்பெண் எடுத்து என்ன பலன்?
இன்று தமிழகத்தில் பனிரெண்டாவது தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. வழக்கம் போல் பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள். பாராட்டுகள்!!!
நம் தாய் மொழி தமிழில் சத்யா(196), ரம்யா(195) - நாமக்கல், மோனிஷா (195) - ராசிபுரம், தமிழகத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!!!
அதுமட்டும் அல்ல ஆங்கிலம், உருது, பிரெஞ்சு, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஜெர்மனி மற்றும் சமஸ்கிருத்ததிலும் எண்ணற்ற மாணவர்கள் 198 முதல் 185 வரை மதிப்பெண்கள் எடுத்து கலக்கி உள்ளார்கள். அனைவரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
+1, +2 இரண்டு வருடம் கடினப் பட்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் 200க்கு 196 மதிப்பெண்கள் எடுப்பது சதாரண விசயம் அல்ல. அப்படி எடுத்த மதிப்பெண்கள் பின்னர் பயன் படாமல் போவதுதான் வேதனையிலும் வேதனை.
இப்படி மதிப்பெண்கள் எடுத்ததிற்கு சில பாராட்டுகளும் சில பரிசுகளும் மட்டும் கிடைக்கும், ஆனால் எதிர் காலத்திற்கு?
BE/MBBS/AGRI/DENTAL/ போன்ற Professional படிப்புகளில் மொழிப் பாடத்தின் மதிப்பெண்கள் தேவை படாது என்பது சோகத்திலும் சோகம். மேலை நாடுகளில் விளையாட்டு மற்றும் நீச்சல் பாடத்தை கூட மேற்படிப்பிற்கு கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.
கணிதத்தில் 200/200 எந்தளவு கடினமோ அதைவிட மொழிப் பாடத்தில் 196, 195 எடுப்பது மகா கடினம். சின்ன சந்திப் பிழை, இலக்கணப் பிழை உட்பட ஆசிரியர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். அதைவிட கொடுமை இதனாலேயே பள்ளிகளில் மொழி ஆசிரியர்களுக்கும் மதிப்பு இருப்பது இல்லை.
மொழிப் பாடத்தில் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் நிச்சயம் மற்றப் பாடங்களிலும் நிறைய மதிப்பெண்கள் எடுத்து Professional படிப்புகளுக்கு சென்று விடுவார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவராக, பொறியாளராக போவதாக பேட்டி கொடுக்கிறார்கள். அவர்களைச் சொல்லி எந்த தவறும் இல்லை. ஆனால் மொழிப் பாடங்கள் ஆன இளங்கலை (BA) தமிழ், ஆங்கிலம் யாரும் சேருவதும் இல்லை. வேறு ஏதாவது பாடங்கள் (Bsc, Physics, Chemistry, Mathematics) கிடைக்காமல் தமிழிலும், ஆங்கிலத்திலும் சேர்வார்கள்.
மேலை நாடுகளில் எல்லா படிப்பிற்கும் நல்ல ஆர்வத்தோடு சேர்கிறார்கள், படிக்கிறார்கள், வேலையைத் தேடிக் கொள்கிறார்கள்.
மொழிப் பாடத்தை கட்டாய பாடமாக பக்கத்து மாநிலங்கள்(கேரளா, ஆந்திரா, கர்நாடகா) போல ஆக்க கழக அரசுகள் தவறி விட்டன. மொழிப் பாடத்திலும் நிறைய மதிப்பெண்கள் எடுப்பவர்கள் நுழைவுத் தேர்வுக்கு அனுமதித்தால் எண்ணற்ற கிராமத்து மாணவர்கள் முன்னேற இது ஓர் நல்ல வாய்ப்பாக இருந்து இருக்கும்.
ஆனால் பத்தாவது மற்றும் பனிரெண்டாவது மாநிலத்தில் முதல் மாணவனாக வருவதற்கு "தமிழை" முதல் பாடமாக எடுத்து படிப்பவர்களுக்கு பரிசு தருவது ஓர் ஆறுதலான விசயம்.
நமது கல்வித் திட்டத்தில் உள்ள குறையா?
அல்லது நமது சமூக கட்டமைப்பில் உள்ள தவறா? அல்லது மிக அதிகமாக உள்ள மக்கள் தொகையா? அல்லது பொருளாதார ரீதியாக நாம் படும் சிரமங்களா? போட்டி நிறைந்த உலகில் மொழிப் பாடத்தை எடுத்து படித்து வெற்றி பெற முடியாதா?
எப்படி பெற்றோரின் மனநிலையை,
நம் சமுதாயத்தின் மனநிலையை, மொழிப் பாடம் எடுத்துப் படிக்கும் மாணவனின் மனநிலையை
ஊக்கப் படுத்தி உலக அரங்கில் வலம் வர செய்வது?
நன்றி...
மயிலாடுதுறை சிவா...
0 Comments:
Post a Comment
<< Home