Monday, May 16, 2005

தொலைந்த போன காலங்கள்...தொலைந்து போன நட்புகள்...

எதிர்கால நிஜம் தெரிந்தும், இப்படி ஓரளவு நல்ல வாழ்க்கை அமையும் என்று முன்பே தெரிந்தும் இருந்தால் பழைய வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் ஆற அமர அனுபவித்து இருக்கலாம்...ஹம்ம்...

தொலைந்த போன காலங்கள்தான் எவ்வளவு? எவ்வளவு? என்னத்த சொல்றது?


காவிரி ஆத்துல இன்னும் கொஞ்சம் பொறுமையா குளித்து இருக்கலாம், நல்ல நீச்சல் கற்று இருக்கலாம். நண்பர்களோடு வீட்டிற்கு தெரியமல் இன்னும் கொஞ்சம் சினிமா பார்த்து இருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரம் கிட்டி புல் ஆடி இருக்கலாம், நல்ல கபடி ஆடி உடம்ப திட படுத்தி இருக்கலாம். கோடை விடுமுறையில் மாலை வேளைகளில் நல்ல அழகு ஆழகான பட்டம் விட்டு இருக்கலாம். பத்தாவது படித்து முடித்துவிட்டு

பாலிடெக்னிக் சேர்ந்து தொழில் கல்வி கற்று இருக்கலாம்.

சிறு வயது முதல், திருமண வாழ்க்கை வரை வேக வேகமாய் ஏன் ஒடினோம்? எதற்கு ஓடினோம்? ஒன்றுமே புரியவில்லை!

எதிர்கால பயம் இல்லமல் கையில் ஓரு ரூபா இல்லாமல் எந்த கவலையும் இல்லாமல் மாலை வேளைகளில் கோயில்களில் “கலர் கலராய்” பார்த்த காலங்கள் மீண்டும் வருமா?

தேர் ஓடும் வீதியில், வருடம் இரு முறை தேர் இழுத்து அன்று முழுவதும் அதைப் பற்றியே பெருமையாய் பேசிக் கொண்டு இருந்த காலங்கள் மீண்டும் வருமா?

நண்பர்கள் திருமணத்திற்கு ஆளுக்கு 10 ரூபாய் போட்டு நல்ல பெரிய சுவர் கடிகாரம் வாங்கி கொடுத்து விட்டு, இரவில் விடிய விடிய சீட்டு ஆடிய காலங்கள் திரும்ப வருமா?

நண்பன் காதலுக்கு தூது போய், அவள் கொடுத்த கடிதத்தை நண்பனிடம் கொடுத்து விட்டு, நண்பன் மகிழ்ச்சியில் வாங்கி கொடுத்த கோழிப் பிரியாணியும், மட்டன் சால்னாவும்... என்னத்த சொல்ல, மீண்டும் வருமா அந்த காலம்?

பக்கத்துத் தெருவில் ஓர் தோழி கிடைத்து, பார்த்து நட்பு ஆகி, அது நட்பா அல்லது காதலில் போய்முடியுமா என்று நினைப்பதற்கு முன்பே அந்த பெண்ணிற்கு திருமணம் ஆன அந்த சோக நாட்களை நான் எப்படி சொல்ல?

சிறிய வயதில் அனுபவத்தோடு செல்லமாய் கண்டிக்க நல்ல ஓர் ஆள் இல்லாமல் போன காரணத்தினாலே, 16, 18 வயதில் நண்பர்களோடு ஜாதகம் பார்த்த போழுது லக்னத்தில் சுக்கிரன் இருக்கிறான், மனம் பொழுதுப் போக்கு நாட்டங்களில் அதிகம் இருக்கும் என்று அவன் சொல்ல, 5ந்தில் சந்திரன் இருக்கிறான் அதிரூப மனைவி வாய்ப்பாள் என்று மேலும் சொல்ல, கடல் கடந்து போவது இந்த ஜாதகத்தின் விதி என்று சொன்னதை கேட்டு 10 வருடங்கள் அதேயே நினைத்துக் கொண்டு இருக்க...

கல்லூரியில் படித்துக் கொண்டே, முடிந்தால் நமக்குப் பிடித்த பெண்ணை காதலித்துக் கொண்டே, எதிர்கால பயம் இல்லாம கழித்த காலம் மீண்டும் வருமா?

இப்படி கடந்து போன காலங்களை நினைத்து நினைத்து என்ன பலன்? இன்னும் கொஞ்சம் பொறுமையாய் வாழ்க்கையை நிதானமாக அனுபவித்து இருக்கலாமே என்று மனம் ஏங்குகிறது மற்றும் வருத்தப் படுகிறதே?


Image Hosted by Your Image Link


தொலைந்துப் போன நட்புகள் எத்தனை எத்தனை?

நம் மனித உறவுகளில் “நட்புக்கு” மட்டும் ஓர் தனி இடம், மரியாதை, அன்பு, பாசம் மற்றும் நேசம் எல்லாம்...

நம் வாழ்க்கையின் பாதையில் “நட்பின்” ஆழத்தை, உறவை, அந்த அருமையான தருணங்களை அணு அணுவாக அனுபவித்து இருப்போம். அப்படி பட்ட நட்புகள் இன்னமும் நம்மோடு இருக்கிறதா? அப்படி தொடர்ந்தால் வாழ்த்துகள்.

அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விசயத்தை,
சகோதர சகோதிரியிடம் பகிர்ந்து கொள்ளாத விசயத்தை,
உற்ற உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளாத விசயத்தை,
எப்படி எந்த தொப்புள் கொடி உறவில்லாத உறவான
“நட்பிடம்” பகிர்ந்துக் கொள்ள முடிகிறது?


தூய்மையான நட்பிடம் மதம் இல்லை, ஜாதி இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை, Ego இல்லை. எப்படி எத்தனை “இல்லைகள்”?

அப்படி நமக்கு வாய்த்த பல நட்புகள் இன்று எங்கே?
கால ஓட்டத்தில் அடித்துச் சென்ற நம் நண்பர்கள் எங்கே?

நட்பில்தான் எத்தனை வகை? எல்லாவற்றையும் எல்லோரிடமும் நம்மால் பேச முடியவில்லை? ஒவ்வொரு விசயத்திற்கும் வித விதமான நட்புகள்!!!

பள்ளிப் படிக்கும் பொழுது மேற்கொண்டு படிக்க, BE, MBBS, Agri யா? இப்படி படிப்பு சம்பந்தமாக பேசிய நட்பு,

கலைஞரா, ஜெயலலிதாவா என்று பாதி நேரம் அடித்து பேசிய அரசியல் நட்பு,

குஷ்பூவிற்கு பிறகு சினேகாதான் அழகு என்று வாதிட, இல்லை இல்லை திரிஷாதான் செம அழகு என்று வாதிட்ட சினிமா நட்பு,

ரியல் எஸ்டேட் நல்ல வியாபாரமாமே? இல்லை Automobiles நல்ல வியாபாரம் என பேசிய வியாபார நட்பு,

இப்படி எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக நல்ல ஊர்கதைப் பற்றி பேசிய பல நட்புகள் எத்தனை எத்தனை?

சிறு வயது முதல் பழகிய எழுத்தவீட்டு, பக்கத்து வீட்டு பெண்களின் நட்பு, காலப்போக்கில் அவர்களுக்கு திருமணம் ஆனவுடன் தொலைந்து போனதன் மாயம்தான் என்ன?

தற்பொழுது வெளிநாடுகளில் வாழும் பொழுது நம் மொழிப் பேசக் கூடிய பல நட்புகள் வந்தாலும் ஏன் அவர்களிடம் நம் தமிழகத்து நட்புப் போல அனைத்தையும் பேச முடியவில்லை? ஏன் உள்ளத்து அனைத்து உணர்வுகளையும் அப்படியே படம் புடித்து காண்பிக்க முடியவில்லை? பல சமயம் பட்டும் படாமலும் மட்டுமே பேச முடிகிறது?


என் பொருளாதாரப் பிரச்சனைகளை, என் மன அழுத்தத்தை, என் எதிர்கால லட்சியத்தை, என் ஆசைகளை, அந்தரங்க உணர்வுகளை, என் துன்பங்களை, என் மகிழ்ச்சிகளை, என் உறவின் பிரிவுகளை ஏன் அப்படியே பகிர்ந்து கொள்ள முடியவில்லை? ஏன்?

காதலிலே தோல்வி பற்றி பார்க்கிறோம், பேசுகிறோம், ஆனால் நாம் இழந்த ஆழமான நட்புகளைப் பற்றி பேசுவதும் இல்லை, அதனைப் பற்றி மனதிலேயே பூட்டி வைத்து வருத்தப் படுகிறோம்.

காலங்கள் மாற, மாற சூழ்நிலைகள் மாற மாற மனிதனும் மாறுவான், இது இயற்கையின் விதியாய் இருக்கலாம்..

ஆனால் நாம் தொலைத்த காலத்தை, நாம் தொலைத்த நட்பை எப்படி மீட்டு எடுப்பது?

நன்றி
மயிலாடுதுறை சிவா...




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

5 Comments:

Blogger Aruna Srinivasan said...

மறுபடி தேடிப்பிடித்து நட்பைத் தொடரலாமே? தேடுவது சிரமமல்ல. ஆனால் கடந்த காலத்தில் இருந்த அதே மன நிலை இருக்கும் என்று எதிர்பார்த்தீர்களானால் ஏமாற்றம்தான் மிஞ்சும். மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது என்ற நிலையில் அந்தந்தக் காலக்கட்டத்தை ஏற்றுக்கொண்டு நகர வேண்டியதுதான்.

Tuesday, May 17, 2005 12:53:00 AM  
Blogger ஜெ. ராம்கி said...

·பீலிங்ஸ் ஷோக்காத்தான் கீது. பட், நெஞ்சுல அஞ்சு டன் வெயிட் ஏறினமாதிரி கீதே.. ஏதாவது குஜால் மேட்டரை போடு வாத்யாரே!

Tuesday, May 17, 2005 3:39:00 AM  
Blogger கிவியன் said...

இப்படியே இந்த நிமிட்ட கோட்டவுட்டுட்டு அட போயிடுச்சே போயிடுச்சேன்னு சொல்லிக்குனு இருந்தா இப்படியே போய்சேந்துர வேண்டீதுதான். இந்த நொடிதான்ப்பு
முக்கியம் கோட்டவுட்டாறாத.

இப்போ வெளிநாட்ல வந்த பின்ன எல்லாரும் முன்ன மாதிரி இல்லேன்னா அவுங்க மட்டுமா மாறிட்டாங்க? உன்னோட நிலை என்ன? நீயுந்தா மாறிபூட்ட. செம்மா அடுத்தவன கொறசொல்லறதவுட்டுட்டு உன்னால எப்படி பழைய படிக்கே நட்பாயிருக்கமுடியும்னு பாரு

(அஹா, இப்படி அள்ளி விடரானேன்னு நினைக்கப்படாது, இந்த மாதிரி சான்ஸ் கிடைக்காதுபா, செம பதிவுல்ல உம்மோடது அதா மடை திறந்துக்கிச்சு.)

Tuesday, May 17, 2005 3:32:00 PM  
Blogger துளசி கோபால் said...

நல்லபதிவு சிவா.

ஹூம்.... ஒரே ஒரு ச்சான்ஸ் கிடைச்சா....
தொலஞ்ச நட்பு எப்படி இருக்குன்னாவது பார்க்கலாம்!

Tuesday, May 17, 2005 4:20:00 PM  
Blogger Chandravathanaa said...

நல்லபதிவு

Friday, May 20, 2005 4:41:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது