Thursday, May 19, 2005

எழுச்சித் தலைவன் தொல். திருமா...


சின்ன வயதில் இருந்தே மனம் அரசியலில் மிகுந்த ஈடுபாடு மற்றும் ஆர்வம். அது மட்டும் அல்ல, சமுதாய மாற்றத்தை, சமுதாய எழுச்சியை, சமுதாய விழிப்புணர்வை அரசியலால் மட்டுமே செய்ய மற்றும் மாற்ற முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

சிறிய வயதில் பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் பற்றி நிறைய கேள்விப் பட்டு இருக்கிறேன். அறிஞர் அண்ணாப் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறேன். கலைஞர் கருணாநிதியைப் பார்த்து வருகிறோம். அவருக்கு அடுத்த அந்த பேச்சாற்றல், மக்கள் நன்கு அறிந்த வைகோவைப் பற்றி எல்லோரும் பார்த்து வருகிறோம். இப்படிப் பட்ட திராவிட மக்கள் தலைவருக்குப் பிறகு, காலம் மீண்டும் ஓர் தலைவனை, வேறு ஓருத் தளத்தில் அத்தி பூத்தாற்ப் போல் ஓர் தலைவனை தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு போராடும் ஒர் கறுப்பு வைரம், அம்பேத்கார் வழித் தோன்றல் அண்ணன் தொல்.திருமா பார்த்து வியந்து இருக்கிறேன். அதனை தங்களோடு பகிர்ந்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

Image Hosted by Your Image Link

மக்கள் அரசியல்வாதிகளைப் பற்றி சதாரணமாக விமர்சிக்கும், ஒர் சராசரி அரசியல்வாதி அல்ல அண்ணன் திருமா. அவருடைய எழுச்சி மிக்க பேச்சு, அவரது உரைவீச்சு எனது சிந்தனைகளை புரட்டிப்போட்டது. என் மனதில் பல கேள்விகளை எழுப்பிவிட்டது. தலித் தலைவர் என்றே எனக்கு அறிமுகம் ஆனாலும் அவரது எழுச்சிமிக்க இந்த பேச்சு, அவரை முற்றிலும் புதிய நபராக எனக்கு காட்டியிருக்கிறது.

தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகள் என்ன என்பதை தெளிவாக புரிந்துக் கொண்டவர், தன்னலம் கருத்தாமல் தன் வாழ்க்கையை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அர்பணித்துகொண்டவர், ஓயாத உழைப்பாளி, அஞ்சா நெஞ்சத்துடன் அநீதிகளைத் தட்டிகேட்ப்பவர், தன்னுடைய சிந்தனையிலும், நோக்கத்திலும் மிகத்தெளிவாக இருப்பவர். எளிமையாகவும் அமைதியாகவும் காணப்படுகிற இவரின் பின்னால் இன்று தமிழ் நாட்டில் மிகப்பெரிய எழுச்சி மிக்க இளைஞர் படை திரண்டு நிற்கிறது.

"தமிழ் தேசியத்தையும் சாதி ஒழிப்பையும்" தன் இரு கண்களாக கருதி இவர் செயலாற்றி வருகிறார். “தற்பொழுது தமிழ் பாதுகாப்பு இயக்கம்” என்று வைத்து தமிழ்நாட்டில் உள்ள போலித்தனமான ஆங்கில மோகத்தை போக்க போராடி வருகிறார். அதற்கு ஐய்யா நெடுமாறன், ஐய்யா இராமதாசு, திரு சேதுராமன் அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பது மனத்தாரப் பாராட்டத் தக்கது.

Image Hosted by Your Image Link

அமெரிக்கா, பிரான்சு, இலங்கை, ஆப்பிரிக்கா, லண்டன் இப்படிப் பல நாடுகள் சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை பேசி வருகிறார். புலம் பெயர்ந்த தமிழர்களை அடிக்கடிப் பாராட்டி பேசி வருகிறார். தமிழ் நாட்டில் ஆங்கில ஆதிக்கத்தால் தமிழ் அழிந்துகொண்டிருக்கும்போது, வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் இவ்வளவு ஆர்வத்துடன், தமிழ் உணர்வுடன் சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பதைப்பார்த்து மிகவும் பாராட்டினார்.

நமது சமுதாயம் சாதி மத உணர்வுகளுக்கு அடிமையாகி அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாம் பிறக்கும் போதே சாதியும் மதமும் நம் மீது திணிக்கப்பட்டு, அதன் பிடியிலேயே நாம் வளர்ந்து வருகிறோம். நம் நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை அலசிப்பார்த்தால், அவற்றில் பெரும்பான்மையானவை சாதி மதங்களினால் வேர் முளைத்தவைகளாகத்தான் இருக்கும். நாம் சாதியையும் மதத்தையும் துறந்தால் அன்றி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

சாதி மதம் இல்லாமல் எப்படி வாழ்வது? அவை இல்லையென்றால் நமக்கு ஏது அடையாளம்? என்ற கேள்விகள் எழும். அதற்கு திருமாவின் பதில் - பேசுகிற மொழி ஒன்றை மட்டுமே அடையாளமாகக்கொண்டு இயற்க்கையுடன் இயைந்து, எந்த மதச் சாயலும் இல்லாமல் நம்மால் வாழமுடியும். நமது தாய்மொழி தமிழ். தமிழன் என்கிற அடையாளமே சாகும் வரை போதும் என்கிறார். இது நமக்கு முற்றிலும் ஒரு புதுமையான கருத்து. இது சாத்தியம் என்பதை நிலை நாட்ட நாம் தமிழ் பெயர்களை ஏற்க வேண்டும் என்கிறார். இதைச் சொல்வதோடு மட்டும் நிறுத்தாமல், தமிழ் பெயர் ஏற்பு விழாக்களை நடத்தி, தனது இயக்கத் தோழர்களுக்கு தமிழ் பெயர்கள் சூட்டினார். தனது குடும்பத்தினரின் பெயர்களையும் தமிழ் பெயர்களாக மாற்றினார். இதைப்பார்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகமெங்கும் இந்த தமிழ் பெயர் ஏற்பு விழாக்களுக்கு வந்து தமது பெயர்களை மாற்றிக்கொள்கின்றனர். இதனால் அவர்கள் தங்கள் மேல் திணிக்கப்பட்ட சாதி, மதங்களில் இருந்து விடுதலை பெறுகின்றனர். இது சந்தேகமேயில்லாமல் ஒரு மகத்தான சாதனை.

சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும் இன்னும் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பரிபூரண சமுதாய அந்தஸ்த்து மற்றும் ஏற்றத்தாழ்வு இல்லாத நடைமுறை வாழ்க்கை கிடைப்பதற்க்காக சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் மேற்கொண்ட போராட்டத்தை இன்று திருமா தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். இதற்காக திருமா தனது பெரும்பான்மையான நேரத்தை தாழ்த்தப்பட்ட மக்களுடன் செலவு செய்கிறார். நடு நிசியில் உறங்கும் போது கூட இயக்கதோழர்கள் அவரை எழுப்பி 'பக்கத்து ஊரில் குடிசையை எரித்து விட்டார்கள்', 'ஒருவரை மரத்தில் கட்டி அடித்துவிட்டார்கள்' ‘தலித் பெண்கள் கற்பழிக்க பட்டார்கள்” போன்ற செய்திகளை சொல்லுவார்களாம். இவரும் உடனே அந்த இடத்துக்குச்சென்று பிரச்சினைக்கு தீர்வு காண முனைவார். அம்மக்களுக்கு நேரும் கொடுமைகளைப்பற்றி அவர் சொன்னது, மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எல்லா அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்தமாக 'தமிழர்களை முன்னேற்றுவோம்' என்று பேசுகிறார்களே, மலத்தை திணித்த தமிழனும், மலத்தை தின்ற தமிழனும் எப்படி ஒன்றாவான்? சிறு நீர் கழித்த தமிழனும், சிறு நீர் குடித்த தமிழனும் எப்படி ஒன்றாவான்? என்று திருமா தங்கப்பட்டார். அவரோடு சேர்ந்து எனது மனமும் தங்கப்பட்டது. இந்த ஒடுக்கப்பட்டவர்கள் தமது முனேற்றத்திற்க்காக அவர்களே எத்தனை நாள் போராடிக்கொண்டிருப்பார்கள்? மற்றவர்களின் ஆதரவும் அவர்களுக்கு கிடத்தாலே ஒழிய, இவர்களது போராட்டம் வெற்றி பெற மிக நீண்ட காலம் ஆகும்.

"எங்கு ஒரு தவறை கண்டாலும் அதை செய்பவர் எவராயிருந்தாலும் அதனால் பாதிப்புக்கு ஆளாகிறவர் தமக்கு தெரியாதவராக இருந்தாலும் அந்த தவற்றைக் கண்டு கொதித்து எழுகின்ற பண்பே சமூக பொது மனசாட்சியாகும். கறுப்பின மக்கள் துன்பப்படும் போது, ஒடுக்கப்பட்டபோது அதற்கான போராட்டங்களில் தம்மையும் ஈடுபடுத்திக்கொண்ட வெள்ளையர்கள் சிறந்த உதாரணம் வார்கள்"(டாக்டர் அம்பேத்கர்). எனவே ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்க்கான போராட்டத்திற்க்கு உலகேங்கும் வாழும் தமிழர்கள் திரண்டு தங்கள் ஆதரவைத் தரவேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் என்ற ஒரு இனமே நமது சமுதாயத்தில் இருக்கக்கூடாது.

கறுப்பு இன மக்களுக்கு போராடிய நெல்சன் மண்டேலா, அமெரிக்க கறுப்பின மக்களுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்த மார்டின் லூதர் கிங், இந்திய தலித் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு போராடிய அம்பேத்கார், இவர்களுடைய போரட்டங்களை உள்வாங்கி அண்ணன் திருமாவும் களத்தில் தன்னை அற்பணித்துக் கொண்டது பாராட்டப்பட வேண்டிய விசயம்.

Image Hosted by Your Image Link

"எவன் ஒருவன் எவ்வித பயமுமின்றி, எந்த சார்புமின்றி தன்னுடைய மக்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று துணிந்து சொல்கிறானோ - அவனையே நான் தலைவனாகக் கருதுவேன்..." என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருக்கிறார். இதற்குத் திருமா மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

ஆபத்துகள் நிறைந்த சாதி வெறிக்காட்டில் துணிவோடும், தன்னம்பிக்கையோடும் தலித் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்க்கும் பாதை அமைக்கப் போ¡ராடும் இவரைப்போல ஒரு தலைவர் கிடைப்பதற்க்கு தலித் மக்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அவர்களது ஒளிமயமான எதிர் காலம் என் கண்களில் தெரிகிறது.

"சாதி மதம் தொலைத்த
சமநிலை வாழ்வு நிலைத்த
தமிழ் அறம் தழைத்த
தமிழர் இனமாய்
தமிழர் நிலமாய்
தலை நிமிர்வோம்! தலை நிமிர்வோம்!"

நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...






Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

21 Comments:

Blogger ROSAVASANTH said...

சிவா, இந்த கட்டுரைக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!

Thursday, May 19, 2005 11:11:00 PM  
Blogger ஜோ/Joe said...

சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நல்ல பதிவு..பாராட்டுக்கள்.!

Thursday, May 19, 2005 11:40:00 PM  
Blogger முகமூடி said...

டாக்டர். கிருஷ்ணசாமி அவர்களின் கவனத்திற்கு - //தலித் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்க்கும் பாதை அமைக்கப் போராடும் இவரைப்போல ஒரு தலைவர் கிடைப்பதற்க்கு தலித் மக்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.//

Friday, May 20, 2005 12:05:00 AM  
Blogger ~Nandalala~ said...

சிவா,
திருமாவளவன் குறித்து காழ்ப்புணர்ச்சிகளே வெளிப்பட்டுவரும் நேரத்தில், இது மிக முக்கியமான பதிவு. எனது நன்றிகள்.
நந்தலாலா

முகமூடி, பேஷ் பேஷ், நடத்துங்கோ.

Friday, May 20, 2005 1:29:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

//ஆபத்துகள் நிறைந்த சாதி வெறிக்காட்டில் துணிவோடும், தன்னம்பிக்கையோடும் தலித் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்க்கும் பாதை அமைக்கப் போ¡ராடும் இவரைப்போல ஒரு தலைவர் கிடைப்பதற்க்கு தலித் மக்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும்//

மிகச்சரியான ஒரு கருத்து, இதற்குமுன் இருந்த தலித் தலைவர்களை பார்க்கும் போது திருமாவின் அர்பணிப்பு உணர்வும், இயக்கத்திற்காக சுயநலமின்றி உழைப்பதும் போற்றத்தக்கது,
திருமா அரசியலுக்கு வரும்முன் ஒரு இலக்கியவாதியாக இருந்துள்ளார், அவருக்கு தமிழ் மீது தனியாத பற்றுண்டு, திருமாவின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பே அவர் தடயவியல் துறையில் பணியாற்றிய போதே அவரது சில எழுத்துக்களை படித்துள்ளேன்.

அனைத்திற்கும் மேலாக திமுக வோடு கூட்டணி முறிந்த போது அவர் ராஜினாமா செய்தது அவர் மீதான மதிப்பை பன் மடங்கு அதிகரிக்க செய்தது (அவர் ராஜினாமா செய்திருக்கத்தேவையில்லை, விடுதலை சிறுத்தை அமைப்பினால் தான் திமுக வட மாவட்டங்களில் சில இடங்களில் வெற்றிபெற்றது, அதுவும் இதுவரை தமிழகத்திலேயே ஆக குறைந்த 34 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கடலூர் தொகுதியில், விசி அமைப்பில்லையென்றால் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது, அவர்களைல்லாம் ராஜினாமா செய்யவில்லை)

திருமாவைப்பற்றி ஒரு பதிவு எழுதிக்கொண்டிருந்தேன் நீங்கள் முந்திக்கொண்டீர் :-)

Friday, May 20, 2005 1:36:00 AM  
Blogger Kannan said...

//மலத்தை திணித்த தமிழனும், மலத்தை தின்ற தமிழனும் எப்படி ஒன்றாவான்? சிறு நீர் கழித்த தமிழனும், சிறு நீர் குடித்த தமிழனும் எப்படி ஒன்றாவான்? //

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?"

ஹ்ம்ம்ம்...இன்னும் ரொம்ப தூரம் போகவேண்டும் போல...

திருமாவளவனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Friday, May 20, 2005 2:09:00 AM  
Blogger Magus said...

சிவா,

வணக்கம்! நல்ல பதிவுக்கு என் பாராட்டுக்கள்!!
திருமாவிடம் எனக்கு பிடித்தது - எளிமை, தெளிவு, துணிவு, பேச்சு,பகட்டின்மை, நட்பு.
தொடரட்டும் அவர் பணி!

நன்றி,
குமரன்.

Friday, May 20, 2005 8:14:00 AM  
Blogger நற்கீரன் said...

நல்ல தகவல்கள், கருத்துக்கள் தாங்கிய பதிப்பு. அவருடய "அடங்க மறு" புத்தகம் இங்கு கிடைக்குமோ தெரியவில்லை, அனால் படிக்க ஆவல். (அதன் ஆங்கில மொழிபதிப்பும் வந்திருக்கின்றது.)

Friday, May 20, 2005 9:14:00 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

சிவா - திரு. திருமாவளவன் பற்றி சேறு வாரி இரைக்கும் சில பதிவாளர்கள் மத்தியில், உங்கள் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி அவரது பெருமையை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

தலித்தல்லாத சாதியினர் மத்தியிலும் தலித்துப் பிரச்சினைகளை, உரிமைகளை ஆணித்தரமாகவும், அதே நேரத்தில் சாதிப்பிளவுகளை வன்முறையாக மாற்றாமல் சொல்லி வருபவர் திருமாவளவன். அதற்காகத் தமிழ் மொழிப்பற்றைப் பயன்படுத்தினால் போகட்டுமே. இராமதாசும் முன்பு போல தவறுகள் நடந்து விடாதபடி நாணயமாக அதைப் பயன் படுத்தி சாதிய ஒடுக்குமுறை ஒழிய முயல வேண்டும். தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் இன்னொரு சாதியான தேவர்கள் மத்தியிலும் இராமதாஸ், திருமா போன்று பார்ப்பனியத்தையும், சாதியத்தையும் புரிந்து கொண்டு எதிர்க்கும் சக்தியுள்ள ஒரு தலைவர் வர வேண்டும். திரு. சேதுராமன் அப்படிப் ப்ட்டவரா எனத்தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், தேவர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவராகத் தோன்றவில்லை. இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் பார்ப்பனிய-வேளாள சக்திகள் முனைப்பாக சிண்டு முடியும் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும்.

நேரம் அதிகமின்மையால், சாதியைப் பற்றியும், தலித்து இலக்கியங்களைப் பற்றியும், தோழர் திருமாவளவன் பற்றியும் நான் முன்பொரு முறை அருள் செல்வன் பதிவில் பின்னூட்டமிட்டதை இங்கு திருப்பிப் பதிகிறேன்.

//சாதியை பற்றிய என் அனுபவங்களின் மற்றும் புரிதலின் அடிப்படையில், கற்றவர்களையும், அறிவுஜீவிகளையும் விட சாதிய அடையாளங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் அதிகம் படிப்பறிவில்லாத மக்களை அதிகம் மதிக்கிறேன். ஏனெனில் பின்னவர்களுக்கு வேடமோ அல்லது பிம்பமோ தேவையில்லை. ஆனால் முன்னவர்களுக்கு பிம்பம் மிக அவசியம்.

நான் உண்மையிலேயே சாதியின் மேல் நம்பிக்கையில்லாதவன் எனில், என் சாதியினரை திட்டுகிறார்களே என்ற கவலை கூட இருக்கக் கூடாது. ஏன் என்னையே நான் துறந்த சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, "நீ குறிப்பிட்ட அந்த சாதி புத்தியைக் காண்பித்து விட்டாயே" என்று குறிப்பிட்டால் கூட அதை சாதாரண திட்டுதலாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது நீ முட்டாள் என்று என்னை ஒருவன் திட்டினால் நான் என்ன செய்வேன்?. நான் முட்டாள் இல்லை என்று உள்ளபடியே கருதினால் அதற்கான எதிர் விவாதத்தை அளிக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட அந்த விசயத்தில் நான் உண்மையிலேயே முட்டாள்தான் என்றால் ஏதாவது சொல்லி மழுப்பி விட்டாவது பிறகு போய் தெளிந்து கொள்ளும் வழியைத் தேட வேண்டும். அதே போல் எனக்கு எந்த சாதிப்புத்தியும் இல்லை என்று மறுத்துப் பேச வேண்டும். அல்லது நான் சாதியை துறந்து விட்டாலும் என்னிடம் சாதிப் புத்தியிருக்கவும் வாய்ப்புண்டு. அப்படியெணில் அந்த சாதிப் புத்தியைக் களைவதற்கான உண்மையான முயற்சி எடுக்க வேண்டும். அதை விட்டு நான் ஒப்பாரி வைத்தால் எனக்கு உள்ள படியே சாதி மேல் நம்பிக்கை உள்ளது என்று தான் கருத வேண்டும்.

எனக்கு சிறு வயதில் சாதி மேல் நம்பிக்கை இருந்தது. கல்லூரி சென்ற பிறகு பெரியாரிய நூல்களை படித்த பொழுது நம்பிக்கை குறைந்தது. ஆனாலும் சாதிய அடையாளம் இருந்தது. மார்க்ஸிய நூல்களைப் படிக்க ஆரம்பித்த பின் சாதியின் அடிப்படை புரிய ஆரம்பித்த பொழுதும் கூட சாதிய அடையாளம் என்னை விட்டுப் போகவில்லை. தலித்து இயக்க நூல்களையும், இலக்கியங்களையும் படித்த பொழுது தான் அந்த அடையாளத்தை துறக்க ஆரம்பித்தேன் எனலாம். ஆனாலும் பல தலைமுறைகளின் வழி வந்த எத்தனையோ சாதியக் குணங்கள் இன்னும் என்னுள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்று தான் நினைக்கிறேன். அவை ஒவ்வொன்றும் தலித்திய எழுத்துக்களைப் படிக்கும் பொழுதுதான் கரைந்து கொண்டிருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன் தோழர் திருமாவளவன் அமெரிக்கா வந்த பொழுது பல மணி நேரங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது அவர் ஒரு கேள்வி கேட்டார், தலித்து குடும்பங்களில் இந்தியாவின் அனைத்து தலைவர்கள் பெயரையும் குழந்தைகளுக்கு வைக்கின்றனர். ஆனால் தலித்தல்லாதவர்கள் ஒருவராவது தலித்து தலைவர் பெயரை வைதது உண்டா என்று கேட்டார். சவாலாகக் கேட்கிறேன் என்றார். எனது சாதியக் குணத்துக்கு ஏன் அது வரை இது உரைக்கவில்லை என்றுதான் பட்டது? அவர் என்னிடம் தட்டியெழுப்பிய சிந்தனைகள் பல. அது போல்தான் எழுத்தாளர்கள் சிவகாமியிடமும், இரவிக்குமாரிடமும் பேசும் பொழுது என்னுடைய சாதியக் குணங்கள் கரைந்து போயிருக்கின்றன. இன்னமும் எத்தனை என்னுள் ஒழிந்திருக்கின்றன என்று எனக்கே தெரியாது.

திராவிட இயக்க சிந்தனையாளர்களும், மார்க்ஸிய சிந்தனையாளர்களும் இன்று தலித்து இயக்கங்களையும், திருமா வளவனையும் சாதிய இயக்கங்களாகச் சித்தரிக்கும் பொழுதுதான் ஏனோ கொதித்துப் போய் விடுகிறென். தேர்தல் அரசியலில் இன்று திருமா பல குட்டிக்கரணங்கள் அடிக்க வேண்டியிருந்தாலும், தலித்துப் பிரச்சினைகள் அரசியல் அரங்கத்தில் முன்னுக்கு வரக் காரணமாகியிருக்கிறார். திராவிட இயக்கத்தை கலைஞர் குடும்பம் இன்று குழி தோண்டிப் புதைப்பது கூட இயற்கையாக நிகழ்கிறது என்றே நினைக்க்றேன். பார்ப்பனர் அல்லாத மேல் சாதி, மற்றும் நடுத்தர சாதிகள் திராவிட இயக்கத்தின் எழுச்சியால் பயனுற்று இப்பொழுது பார்ப்பனர்களாகிக் கொண்டிருக்கின்றனர். வரலாற்றின் அடுத்த கட்டம் மிகப் பிற்படுத்தப் பட்டவர்களும், தலித்துக்களும் பா.ம.க. மற்றும் தலித்தியக்கங்களின் எழுச்சியில் மேலுக்கு வரும் இந்தக் காலம். இந்த இரண்டு பிரிவினரும் சமூக மற்றும் பொருளாதார தளங்களில் ஒரே இடத்தில் இயங்க வேண்டிய கட்டாயத்தால் போட்டியும், பூசலும் சாத்தியம். அதைப் பெரிது படுத்தும் பணியில் பார்ப்பனிய, திராவிட இயக்கங்கள் ஈடுபட்டுள்ளன. அதையும் மீறி, திருமாவும், இராமதாஸும், சேதுராமனும் வெற்றி பெற்றால் நல்லது.

பிற்பட்டவர்களும், தலித்துகளும் மேலே வந்தபின் சாதி இந்துக்களைப் போல், பார்ப்பனிய வாழ்க்கைக் கூறுகளை (கல்யாணம் போன்ற சடங்குகள் தொடங்கி) ஏற்றுக் கொள்வார்கள். கடைசியில் அனைவரையும் (பார்ப்பனர்கள் உள்பட) பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். அதன் முக்கிய தேவையாக இருக்கப் போவது, பகுத்தறிவும், பெண் விடுதலையும். மிகக் கடினமான பணியும் இதுதான். ஏனெனில் படித்தவர்கள் பாசாங்கு செய்வதால் விடுதலை செய்வது மிகக் கடினம்.

படித்தவர்கள் மற்றும் உலகத்தின் மற்ற சமூகங்களைப் பற்றி அறிந்தவர்கள் சாதி என்ற கற்பனையான (மொழி, இனம் போலன்றி) அடையாளத்தை இன்னும் துறக்காமல் இருக்கிறார்கள் அல்லது பிம்பத்திற்காக அடக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் அசோகமித்திரன். இவர்களெல்லாம் புனைப் பெயரில் எழுதி விட்டு அது யாரென்றே தெரியாமல் வெளியே வேறு பெயரில் நடந்து கொண்டால் நல்லது (திண்ணை எழுத்தாளர்கள் போல:-). இவர்கள் மட்டுமல்லாமல் இவ்வளவு நாட்கள் மற்ற சாதியினர் அரசியலில் செலுத்தி வந்த அதிகாரத்தை விமர்சனம் செய்யாமல் இன்று தலித்து இயக்கங்களை சாதிக் கட்சிகள் என்று அழைக்கும் ஜெயகாந்தன்கள் கூட சாதிய அடையாளத்தைப் போற்றிப் பாதுகாத்து வருபவர்கள்தான்.
//

நன்றி - சொ. சங்கரபாண்டி

Friday, May 20, 2005 11:45:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

எமது வலைப் பதிவிற்கு வந்து படித்து அதற்கு பின்னோட்டம் இட்ட
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

சகோதரர் சங்கரபாண்டி சிறந்த சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளர்,
என்னுடையப் பதிவில் பெரிய பின்னூட்டம் இட்டதை நான் மிக பெருமையாக கருதுகிறேன். நன்றி அவர்க்கும் உரித்தாகுக.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Friday, May 20, 2005 12:26:00 PM  
Blogger Mookku Sundar said...

சிவா,

சாதிக்கட்சிகள் ஆரம்பித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் பதவி/அதிகாரம் பெறத்துடிக்கும் எல்லாரயும் எனக்குப் பிடிக்காது - அது ராமதாஸ், சேதுராமன், ஏ.சி.சண்முகம், பங்காரு நாயுடு என்று யாராக இருந்தாலும் சரி.

ஆனால் தலித்துகள் மத்தியில் இருந்த, அவர்களை முழுக்க முழுக்க பிரதிநிதிப்படுத்த என ஒரு அரசியல் தலைவர் தேவை. கிருஷ்ணசாமியிடமும், மற்றவர்களிடமும் இல்லாத ஒரு விழிப்பும், முனைப்பும் திருமாவளவனிடம் இருப்பதை நான் உணர்கிறேன். ஆனால் அதற்காக அவர் மேற்கொள்கிற வழிமுறைகளும், சேர்கின்ற இடங்களும் எனக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. தலித் முன்னேற்றம் பற்றியும், இன்னமும் கிராமங்களில் தொடரும் ஆதிக்க ஜாதி தொந்தரவுகளையும், அவர்கள் தொடர்ந்து கலிவிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றியும், கிடைக்கும் பதவியயும், அதிகாரங்களையும் கையில் வைத்துக் கொண்டு அம் மக்களை இன்னமும் எப்படி மேலே கொண்டு வரலாம் என்பது பற்றியும் பேசினாலே போதும். அதை விடுத்து ராமதாஸ் பொன்ற அக்மார்க் அரசியல்வாதிகளிடமும், சினிமா சுவரொட்டிகளில் தமிழை தேடிக்கொண்டும் இருந்தால், குறுகிய காலத்துக்கு வெளிச்சம் கிடைக்கும். அதனால் அந்த சமூகத்துக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ராமதாஸிடம் போய் நின்றால் அந்தாள் தலித் சக்தியை நன்றாக உபயோகப்படுத்திக் கொண்டு காலை வாரி விடுவார். அவ்வளவுதான். அவரிடம் பழகும் வாய்ப்பு பெற்ற உங்களைப் போன்றவர்கள் இதை சொல்ல வேண்டும். ராமதாசை நம்புவதற்கு அம்மாவையோ/ தாத்தாவையோ, ஈவிகேஎஸ்ஸையோ நம்பலாம்.

Friday, May 20, 2005 3:15:00 PM  
Blogger Balaji-Paari said...

சிவா,
இக்கட்டுரைக்கு நன்றிகள்.

Friday, May 20, 2005 4:31:00 PM  
Blogger சுந்தரவடிவேல் said...

திருமா தமிழர்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதையும், மாற்றுச் சதி மடங்களில் எந்தளவுக்குப் பீதியைக் கிளப்புகிறவர் என்பதையும் உங்களுக்கு விழுந்திருக்கிற (-) வாக்குக்களை வைத்தே கணிக்க முடிகிறது. இந்தப் பதிவுக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி.

Friday, May 20, 2005 4:38:00 PM  
Blogger முகமூடி said...

This comment has been removed by a blog administrator.

Friday, May 20, 2005 5:02:00 PM  
Blogger Thangamani said...

நல்ல பதிவு. திருமாவின் கட்டுரைகள், புத்தகங்களை முன்வைத்து ஒரு பகுதியை எழுதியிருந்தால் இன்னும் காத்திரமாக இருந்திருக்கும். தலித்-மிகவும் பிற்படுத்தப்ப்பட்ட சக்திகளின் இணைப்பை விரும்பாத, அதை தமது கேலிப்பார்வையால் மறைத்துக்கொண்டு நடுநிலையாளர்களும், சாதி வெறுப்பாளார்களாகவும் பலர் வேடமிடும் காலகட்டத்தில் எழுதப்பட்டதால் தேவையான பதிவு!


நன்றிகள்!

Friday, May 20, 2005 5:16:00 PM  
Blogger முகமூடி said...

சுந்தரவடிவேல்:: இங்க விழற (-) மார்க்கெல்லாம் வச்சி "முக்கியமானவர், பீதின்னு" - தமிழக அரசியல் மாதிரி - தப்பு கணக்கு போடாதீங்க. ஒன்னுமேயில்லாதத பத்தி சொல்ற தேசிகனோட லொஸ்கு , அரசியல் கலப்பே இல்லாத முகமூடியோட விமானப்பயண தமிழ்் வழிகாட்டி இதுக்கெல்லாம் விழுந்திறுக்கற (-) ஒட்டுக்கு என்ன அர்த்தம் சொல்வீங்க....
அ) கருத்தாவது வெங்காயமாவது, எனக்கு எழுதற ஆளோட கருத்து வேறுபாடு குத்துறா - ந்னு குத்துறாங்க அல்லது
ஆ) பொழுது போவல சரி 4 பேருக்கு - ஒட்டு போடுவோம்.. அப்படின்னு ஜாலியா இருக்காங்க... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....

Friday, May 20, 2005 6:04:00 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

//சகோதரர் சங்கரபாண்டி @@$#$&&*^*&&&*^*^%^$^$$//

சிவா, சகோதரரோடு நிறுத்தியிருக்கலாம். மற்ற பட்டங்களுக்கெல்லாம் இன்னும் தகுதி வரவில்லை. நண்பர்கள் ஒருவரையொருவர் அரசியல்வாதிகள் போல் பொது இடத்தில் முதுகைச் சொறிந்து கொள்ளக் கூடாது :-) அப்புறம் இங்கு திரும்பவும் வரக் கூச்சமாகி விடும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Friday, May 20, 2005 9:20:00 PM  
Blogger சுட்டிப் பையன் said...

தென் மாவட்டங்களில் சாதி வெறியைக் கடைப் பிடிக்கும் சமூகத்துடன் மென்மையாகவும், வட மாவட்டங்களில் தலித்களுக்கு இணையான வறுமையுடன் வாழும் பிற்படுத்தப் பட்ட சமூகத்துடன் விரோதப் போக்குடனும் சிறுத்தைகள் செயல்படுவது ஏன்?

Saturday, May 21, 2005 7:56:00 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

பதிவுக்கு நன்றி சிவா.திருமாவினுடைய அடங்க மறு நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Saturday, May 21, 2005 8:36:00 PM  
Blogger குழலி / Kuzhali said...

//தென் மாவட்டங்களில் சாதி வெறியைக் கடைப் பிடிக்கும் சமூகத்துடன் மென்மையாகவும், வட மாவட்டங்களில் தலித்களுக்கு இணையான வறுமையுடன் வாழும் பிற்படுத்தப் பட்ட சமூகத்துடன் விரோதப் போக்குடனும் சிறுத்தைகள் செயல்படுவது ஏன்?//

சுட்டிப்பையன் அவர்களே விசி அமைப்பு வட மாவட்டங்களில்தான் பலம் வாய்ந்த அமைப்பு தென் மாவட்டங்களிளில் அல்ல,அதுவுமின்றி வறுமையிலிருக்கும் இரு சமுதாயமும் தற்போதுதான் சச்சரவின்றியுள்ளனர்(இதற்கு தொல்.திருமா மற்றும் மருத்துவர் இராமதாசுவின் தொடர்முயற்ச்சியே காரணம்), இது இன்னும் ஒற்றுமையாக என்ற நிலைக்கு வர சற்றுகாலம் பிடிக்கும் அதுவரை பழயவிடயங்களை குத்தி கிளறாமல் சற்று பொறுமையாக இருக்கவேண்டும், இரண்டு சமுதாயமமும் எங்கே ஒன்று சேர்ந்துவிடுவார்களோ என்ற பயத்திலே பல கட்சிகள் உள்ளன, அதை முறியடிக்க வேண்டும். விசி அமைப்பிலே வன்னிய இனத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுள்ளதும் (கடந்த பாராளுமன்ற தேர்தலின் பாண்டி தொகுதி வேட்பாளர் வன்னியர்), கடந்த தேர்தலிலே சிதம்பரம் தொகுதியில் வன்னிய கிராமங்களில் திருமாவிற்கு கிடைத்த வரவேற்பும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன, இரு சமுதாயங்களுக்கிடையே அரசாங்கம் கொளுத்திய தீ அணைந்து அமைதி நிலவும் நேரத்தில் யாருடைய சதிக்குமும் பலியாகமல் இருப்பது மிக மிக முக்கியமான விடயம்.

Sunday, May 22, 2005 12:05:00 PM  
Blogger ஜெ. ராம்கி said...

ஓரே ஒரு சந்தேகம். எங்க ஊர்ப்பக்கம் ( சிவாவுக்கு தெரியாதா என்ன?) செருப்பு போட்டுக்கிட்டு வயல் வரப்புல நடந்தா அவ்ளோதான்!

ஒரு தலித்தை செருப்பு போட்டுக்கிட்டு நடக்கக்கூடாதுன்னு சொல்றான்னு மட்டையடி அடிச்சுடாதீங்க! ஹி..ஹி..!

Tuesday, May 24, 2005 4:14:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது