ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பா.ம.க.-வின் பங்கும் இருக்கும்..!
நன்றி : விகடன்
''ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பா.ம.க.-வின் பங்கும் இருக்கும்..!''
''வன்னியர் சங்கம் என்று எண்பதுகளில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சாதிய இயக்கம் பத்து வருடங்களுக்குள் ளாகப் 'பாட்டாளி மக்கள் கட்சி' என்று பரிணாம வளர்ச்சி பெற்றது. கட்சி ஆரம்பித்த நோக்கம் நிறை வேறிவிட்டதா?''
''முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வன்னியர் சங்கம் வேறு, பாட்டாளி மக்கள் கட்சி வேறு. வன்னியர் சங்கம் 1980-களில் துவக்கப்பட்ட போது, அந்த இன மக்களுடைய சமூக விடுதலைக்காக அது போராடியது. 1987-ல் தொடர் சாலை மறியல் நடத்தி, தங்கள் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீட்டு நியாயம் கிடைக்க வெகுண்டெழுந்தது. ஆனால், அந்த வன்னியர் சங்கமே பின்னர் கட்சியாக மாறிவிடவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்குச் சமூக விடுதலை பெற்றுத் தருவது! இவர்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பதும் அரசியல் அதிகாரம் பெறுவதும்தான் குறிக்கோள்.''
''தேர்தலுக்கு பா.ம.க. எவ்வளவு தூரம் தயாராகி இருக்கிறது?''
''இந்த ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கும் மேலான மக்கள் போராட்டங்களில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். காவிரி பிரச்னை, கர்நாடகத் தமிழர்கள் பிரச்னை, இடஒதுக்கீடு, பஸ் கட்டண உயர்வு, தடா எதிர்ப்பு, உர விலையேற்ற எதிர்ப்பு, இலவச மின்சாரத்தை ரத்து செய்ததை எதிர்த்து என வகை வகையான போராட்டங்கள்! இவையனைத்தும் மக்கள் நலனுக்காகச் செய்யப்பட்டவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தேர்தலையட்டி நான் தொடர்ந்து தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதால் மக்களின் எண்ண ஓட் டம் புரிகிறது. மக்கள் நலனுக்காகத் தேர்தலைச் சந்திக்க பா.ம.க. முழுவீச்சில் தயாராக இருப்பது போலவே, மக்களும் எங்களை ஆதரிக்க அதே வேகத்தில் தயாராக இருக்கிறார்கள்.''
''நீங்கள் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவீர்கள் என்று சொல்லப்படுகிறதே?''
''தி.மு.க. எங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் என்னைச் சந்தித்துப் பேசினார். பேச்சு வார்த்தைகள் சுமுகமாக நடந்தன. நல்ல முடிவு ஏற்படும் என்றே தோன்றுகிறது. இது பற்றிய திட்டவட்டமான அறிவிப்பை சென்னையில் மார்ச் 16-ந் தேதி நடைபெற இருக்கும் எங்கள் கட்சியின் இரண்டாவது அரசியல் மாநாட்டில் வெளியிடுவோம்.''
''இப்படி நாள் கடத்துவதன் மூலம் நீங்கள் தொகுதிப் பங்கீட்டில் அதிக இடம் கிடைக்கவும், ஆட்சியில் பங்கு கேட்டும் தி.மு.க-வோடு 'பார்கெய்ன்' செய்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?''
''இன்னமும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்களே துவங்கவில்லை. அதில் எந்தப் பிரச்னையும் வராது.. கூட்டணி அமைய அது எந்த விதத்திலும் முட்டுக்கட்டையும் இல்லை. ஆட்சியில் பங்கு என்பதைப் பொறுத்த வரையில், நாங்கள் கூட்டணி ஆட்சி என்றே முதலில் சொல்லிக்கொண்டிருந்தோம். கலை ஞர் அதற்கு உடன்படவில்லை. 'தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு தனித்தே ஆட்சி அமைக்கும். எனினும், பா.ம.க-வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும்!' என்று நேரிலும் பத்திரிகைகளிலும் சொல்லி வருகிறார் கலைஞர். அதனால் நாங்கள் கூட்டணி ஆட்சி பேச்சை வலியுறுத்தவில்லை. தவிர, அமைச்சரவையில் இடம் பெறுவதா இல்லையா என்பது பற்றியும் பிற்பாடு எங்கள் தலைமைக் குழுவே பேசி முடி வெடுக்கும்.''
''எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்படிப் பரவலாகப் பிரிந்திருப்பதால், இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்குதானே லாபம்?''
''ஒருக்காலும் இல்லை. எத்தனைக் கூட்டணிகள் ஏற்பட்டாலும், எந்தெந்தக் கட்சிகள் எந்தெந்தக் கூட்டணியில் இருக்கின்றன எனும் இறுதி நிலை ஏற்படாவிட்டாலும் கூட, இன்று தமிழ்நாட்டில் உள்ள யதார்த்த நிலை என்னவெனில், 'ஜெயலலிதா எதிர்ப்பு அலை'தான்! மக்கள் மத்தியில் பலமாக வீசுகின்ற இந்த அலையால் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. தேர்தல் நெருங்க நெருங்க, அவரை வீழ்த்துகிற ஒரு பலமான அணி நிச்சயம் உருவாகும். அந்த அணிக்குப் பாட்டாளி மக்கள் கட்சி பக்கத் துணையாக நிற்கும். ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கும் இருக்கும்.''
''நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையா?.. சத்தியம் இன்னமும் அப்படியே அமலில் இருக்கிறதா?''
''கட்டாயம்! 1980-ல் வன்னியர் சங்கம் துவக்கப்பட்டபோதே நான் மூன்று சத்தியங்கள் செய்தேன். அதாவது, எந்தச் சுற்றுப்பயணம் மேற் கொண்டாலும், அது என் சொந்தச் செலவில்தான்! எந்தக் காலகட்டத் திலும் நான் கட்சியிலோ சங்கத்திலோ எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டேன்! எந்தத் தேர்தலிலும் நான் நிற்கமாட் டேன்! இன்னொரு உப சத்தியம், என் வாரிசுகளோ, குடும்பமோ இந்த இயக்கத்தினுள் என்றைக்கும் வர மாட்டார்கள் என்பது. இவை என் இறுதி மூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்.''
''உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை என்ன சொல்லும்?''
''முதலில் சுற்றுப்புறச்சூழல்; நிலம், நீர், வானம் என்று எதிலும் மாசுபடாத நிலையை உருவாக்க வேண்டும்.
இரண்டாவது கட்டாயக் கல்வி; அதிலும் தரமான கல்வி. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்றிருக்கக்கூடாது. எல்லாம் பொதுவான கல்வியாக இருக்கவேண்டும்.
மூன்றாவது தமிழ்; எல்லாவற்றிலும் ஆட்சி மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். மழலையர் பள்ளி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை எல்லாம் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும். தாய் மொழியில் கல்வி கற்பதுதான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குச் சரியாக இருக்கும் என்பது உலக வல்லுநர்களின் கூற்று.
நான்காவது இட ஒதுக்கீடு; புது விதமான ஃபார்முலாவை நாங்கள் வைத்திருக்கிறோம். இதனால் எல்லா வித மக்களுக்கும் நியாயம் கிடைக்கும். அனைவரையும் எங்கள் ஃபார்முலா திருப்திப்படுத்தும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்!'' - எஸ்.சுபா
நன்றி விகடன்
0 Comments:
Post a Comment
<< Home