Wednesday, July 08, 2009

தமிழ் விழா 2009 - Dr Ellyn Shander


சூலை 3, 2009.

இந்த விழாவில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் ஒருவர் மருத்துவர் Ellyn Shander. அடிப்படையில் இவர் ஒரு அமெரிக்க பெண் மருத்துவர். ஆனால் இவர் பணி நேரம் போக முழுக்க முழுக்க ஈழ தமிழர்களின் விடுதலைக்காக தன்னை அர்பணித்து கொண்டவர். இவர் ஒரு கள சமூக போராளி!

இவரின் பேச்சு உங்களை சிந்திக்க தூண்டும். இவரின் பேச்சு உங்களை தூங்க விடமால் செய்யும். ஆனால் இவர் ஒன்றும் பெரிய பேச்சாளர் அல்ல. இவரின் அனுபவம் நமக்கு நல்ல செய்திகளை தருகிறது. இவர் கிளி நொச்சி சென்று தமிழ் மக்களுக்கு சேவை செய்து இருக்கிறார். அது சம்மந்தமாக அங்கு தமிழர்கள் படும் துன்பங்களை, அவலங்களை பொறுமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம், மனதில் படும் வண்ணம் தன் கருத்துகளை வெளி படுத்துகிறார்.

ஈழ மக்கள் படும் துயரத்திற்கு சிங்கள ராணுவமும், சிங்கள அரசும் எப்படி பொறுப்பு என்பதை கணனி மூலம் வெண் திரையில் காண்பித்தார். நம் ஈழத்து உறவுகள் கம்பி வேலிக்குள் பெரிய மைதானத்தில் படும் துன்பங்களை சுட்டிக்காட்டி அவர்களின் இன மீட்பு போராட்டத்திற்கு நம் ஆதரவு ஏன் தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். ஒட்டு மொத்த அவையும் அமைதியாக அவரின் பேச்சை உள்வாங்கி கொண்டது.

ஈழ மக்கள் வாழுகின்ற நிலம் நமது நிலம், நமது மண், நமது சொத்து - அதனை மீட்டுடெடுப்பது நம் கனவு மட்டும் அல்ல, நமது உயர்ந்த லட்சியம் என்றார். உலக நாடுகளில் தனி நாடு கேட்டு பிரிந்து தனி நாடாக சில நாடுகள் இன்று இருப்பதற்கு காரணம், அவர்களின் தொடர் போராட்டம்தான், அது போல் நாமும் தொடர்ந்து போராட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்.

நமது இன பிரச்சினையை, நமது மொழிப் பிரச்சினையை, நமது பண்பாட்டை, நமது உரிமை மீட்டு எடுப்பை நம் இளைய தலைமுறைக்கு நாம் எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமை என்றார். நாளைய இளைஞர்கள் தான் நம் விடுதலையை மீட்டு எடுக்கப் போகும் வீரர்கள் என்றார்.

மிக நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகுதான் யூதர்கள் நாசிகளிடம் இருந்து அவர்கள் நாட்டை மீட்டு எடுத்தார்கள் அதைப் போல யூதர்களை கொன்ற ஹிட்லரைப் போல ராஜ்பக்சேவும் நம் தமிழர்களை கொன்ற வரலாற்றில் இடம் பெறுவான் என்றார்.

கடந்த மாதம் நடந்து முடிந்த இனப் போரில் நாம் தோற்றது போல ஒரு வடிவம் கிடைத்து இருக்கலாம், ஆனால் நமது எண்ணங்களும், நமது லட்சியங்களும் இந்த தோல்வியினால் பாதிக்காது. காரணம் நமது கொள்கை இதைவிட பெரிது என்றார். நம் மண்ணை நமது ஆக்கி கொள்ள நாம் கொள்கை பிடிப்புடன் தொடர்ந்து போராட வேண்டும் என்றார். இதுப் போல பல தோல்விகளை பல இயக்கங்கள் கண்டு அவற்றில் இருந்து மீண்டு வந்திருக்கின்றன என்றார்.

தொடர்ந்து பேசிக் கொண்டு வருகையில் மொத்த கூட்டமும் அமைதியாக அவரின் பேச்சை கேட்டு கொண்டிருக்க, அடுத்து பெரிய வெண் திரையில் "வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்" (Next Year in Tamil Eelam) என்று சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் எழுந்து நின்று உணர்சி பெருமிதத்தோடு திரும்பி சொன்ன பொழுது ஆஹா அதனை என்னைவென்று சொல்வேன் எப்படி சொல்வேன்?!

ஒரு சராசரி தமிழனாக எல்லோருக்கும் இல்லாத உணர்ச்சி, ஒரு வெள்ளைக் கார பெண் மருத்துவருக்கு இருப்பதைப் பார்த்து பலர் நெகிழ்ந்தனர். ஈழத்திற்கு சென்று அங்கு மருத்துவ பணிவிடைகள் செய்து விட்டு முழு நேர பணியாக தன் உணர்வின் மூலம், தன் பேச்சின் மூலம், தன் அனுபவத்தின் மூலம் ஈழத்திற்கு குரல் கொடுக்கும் இந்த உன்னதப் பெண்மணிக்கு, இந்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையில் மேடை அமைத்து கொடுத்து அவரை பேச வைத்து ஒரு வரலாற்று மைல் கல்லை ஏற்படுத்தி விட்டார் பேரவைத் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா. இந்த அமைப்பு இன்னும் இதுப் போல பலரை அறிமுகப் படுத்தி இருக்கிறது, அறிமுக படுத்த வேண்டும்!

இதுப் போல பேச்சுகள் வருடம் ஒருமுறை கேட்டால் போதும், நம் உணர்வுகளை பட்டை தீட்டி கொள்ள ஏதுவாக இருக்கும். அதுவும் அவர் பொறுமையாக எளிமையான அழுகு ஆங்கிலத்தில்,

We will never be Silenced! And
We will never stop Fighting for Justice!

You will never kill the collective Tamil spirit!
We will Re Build Tamil Eelam!!!

We will not be defeated!
We have GOD on our side!!!

என்று சொல்ல சொல்ல அந்த வெள்ளைக்கார மருத்துவ பெண்மணியை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் தொடர்ந்து கை தட்டி கொண்டே இருந்தனர் அவையில் இருந்த தமிழர்கள்!!!

சென்ற ஆண்டு புளோரிடாவில் பேரவை விழாவில் தன்னுடைய அருமையான நடனம் மூலம் தமிழ் உணர்வை ஊட்டிய அன்பு சகோதிரி நர்த்தகி நடராஜ் ஏனோ நினைவிற்கு வந்தார். நடனத்தின் இறுதியில் "இனம் காக்க மொழி காப்போம், மொழி காக்க கை கோர்போம்" என்று அவர் நடனம் ஆடி முடித்த பொழுது அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று கிட்டதட்ட 5 நிமிடங்கள் கைதட்டி கொண்டே இருந்தார்கள். அதைப் போல மருத்துவர் Ellyn Shanders பேசி முடித்த பொழுது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி கொண்டிருந்தார்கள். தமிழ் உணர்வையும், தமிழ் மக்கள் விடுதலைக்கு நாம் தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியத்தை அவர் பேசியதை கண்டு மனம் எண்ணில் அடங்கா உணர்ச்சிகளோடு இருந்த பொழுது,

அடுத்த பேச வந்த வைரமுத்துவை ஆர்வத்துடன் எதிர்பார்த்து நொந்து நூலான கதையை நாளை எழுதுகிறேன்.....

நன்றிகள் பல எனது தமிழ்ச் சங்க பேரவைக்கு....

தோழமையுடன்

மயிலாடுதுறை சிவா....


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger Thamizhan said...

அம்மையாருக்கு உள்ள உணர்ச்சியில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட சராசரித் தமிழனுக்கு இல்லையே என்பதுதான் வேதனை.அவரின் உறவினர் யூத்ர்களாக ஹிட்லரின் கேம்பில் இருந்தவர்கள்.இன்று முகாம்களில் ஆடு மாடுகளாக அடைக்கப் பட்டவ்ர்கள் தமிழ் உடன் பிறப்புக்கள் என்பது அவர் சொன்னபோது நன்றாக உறைத்திருக்கும்.
அவரும்,இன்னும் பல வெளிநாட்டவரும் படும் வேதனை,உலகிற்கு எடுத்துச் சொல்லப் படும் பாடு,அவர்களுடன் சேர்ந்தாவது உழைப்போம் வாருங்கள்.
பிச்சைக்காரர்களே இல்லாமல் வாழ்ந்த ஈழத்தில் இன்று அனைவரும் ஒரு வேளை சோற்றிற்காகத் தட்டேந்தும் கொடுமை,அதை உடைப்போம் வாருங்கள்,கை கொடுங்கள்.

Wednesday, July 08, 2009 9:55:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி தமிழன்

பேச்சும் ஒரு வேள்வி
பேச்சும் ஒரு தவம்
பேச்சும் ஒரு போராட்ட வழிதான்

நிச்சயம் நம் தமிழர்களுக்கு ஒரு நல்வாழ்வு கிடைக்கட்டும்

நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

மயிலாடுதுறை சிவா...

Thursday, July 09, 2009 4:12:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது