Thursday, July 15, 2010

செம்மொழி மாநாடு - மேலும் சில உங்கள் பார்வைக்கு


வாசிங்டன் சூலை 2010

செம்மொழி மாநாடு - மேலும் சில உங்கள் பார்வைக்குமாநாட்டில் தினமும் மதிய உணவு மிக மிக அருமை. எடுத்துகாட்டாக உணவு வகைகளில் இனிப்பில் பால் பாயசம், சேமியா பாயசம், அவல் பாயசம், இனிப்பு போளி, கந்தரப்பம், சங்கரை பொங்கல் மற்றும் அசைவ உணவில் சிக்கன் குருமா, மட்டன் குருமா, மீன் வறுவலும் இருந்தது. அதேப் போல் சைவ உணவில் நெய், பருப்பில் ஆரம்பித்து எல்லா வகையான உணவுகளும் இருந்தன. இப்படி தரமான உணவை எல்லோரும் ரசித்து சாப்பிடனர், அனைவரும் இதனை மனதார பாராட்டினார்கள்.

தினமும் “உணவகத்திற்கு” மத்திய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும், குறிப்பாக உணவு அமைச்சர் வேலு வந்து ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். உணவு அமைச்சரை பார்த்து நேரில் வாழ்த்துகளை தெரிவித்தேன்.

மாநாட்டின் பாதுகாப்பிற்கு ஏராளமான காவல்துறை நபர்களை பார்க்க முடிந்தது. அவர்கள் கிட்டதட்ட பத்து நாட்களுக்கும் மேலாக மாநாட்டிற்கு உதவி வருகிறார்கள். அவர்களும் இந்த ஆய்வரங்க உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். இவற்றில் நிறைய இளைஞர்களை பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் வயது 23, 24 இருக்கும், இவர்கள் (எஸ்.ஐ) சப் இன்ஸ்பெக்டர் ஆக கிட்டதட்ட 20 வருடங்கள் ஆகுமாம்! இவர்களுக்கு தங்குவதற்கு திருமண மண்டபங்களை ஒதுக்கி இருக்கிறார்கள். மூன்று வேளையும் உணவு பொட்டலம்தான்! இவர்களுக்கு தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் இன்னும் வசதி செய்து கொடுத்து இருக்கலாம் என்று சிலர் வருத்தம் தெரிவித்தார்கள்.

மாநாட்டில் பேச வந்தவர்களுக்கும், கட்டுரையாளார்களுக்கும் முதல் நாளே “அடையாள அட்டை” தர முடியவில்லை! இதனால் வெளி நாட்டில் வந்து இருந்த சிலர் மிக மிக வருத்தப் பட்டார்கள். இவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் படி ஆகிவிட்டது.
அதேப் போல் வந்து இவர்களுக்கு மாநாட்டு மலரும், ஆய்வரங்க மலரும், விழாவின் இலச்சினை (லோகோ) பொருத்திய பட்டயம் வாங்குவதற்கும் சில சிக்கல் இருந்தன.

மாநாட்டிற்கு கட்டு அடங்காத கூட்டம் காரணமாகவும், தமிழ் நாட்டில் பல்வேறு துறை முக்கிய நபர்களுக்கு அரங்கில் முறையாக அமர இடம் கிடைக்கவில்லை. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு மட்டும் நல்ல இடத்தில் அமர இடம் கிடைத்துவிட்டது. ஆனால் அந்த இடத்திற்கு செல்வதற்கு பல இடங்களில் காவல்துறை அதிகாரிகளிடம் “அடையாள அட்டை மற்றும், விழா அழைப்பிதழை” காண்பிக்க வேண்டி இருந்தது.

விழாவை சுதா சேஷய்யா தொகுத்து வழங்கினார். ஐந்து நாட்களும் அவர்களே தொகுத்து வழங்கினார்கள், வேறு சிலருக்கும் வாய்ப்புகள் கொடுத்து இருக்கலாம்!

குஷ்பு பட்டிமன்றத்தில் ”சின்னத்திரை” சார்பாக பேசுவதாக இருந்தாம்! நல்லவேளை இல்லை!

மத்திய அமைச்சர் ராசா மிக மிக சுறுசுறுப்பாக இருந்தார். கவியரங்கத்தில் போட்டு தள்ளிய பல நபர்களை அமைச்சர் பொன்முடியும், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் சீட்டு கொடுத்தும், அவர்கள் பேசி முடிப்பதாக இல்லை!

பொது அரங்கத்தில் ”கருத்தரங்களில்” மற்றும் “கவியரங்கத்தில்” பேசிய வெகு சிலரை தவிர நிறைய நபர்கள் முழுக்க முழுக்க சிபாரிசில் வந்தார்கள் என்று பேசிக் கொண்டார்கள். குறிப்பாக வைரமுத்து “கவியரங்கில்” யார் பேசுவார்கள் என்பதை முடிவு செய்தார் என்றார்கள்.

விழா ஒருநாளில் காலை திருப்பாவை சகோதரிகளின் நாதஸ்வரம் மிக மிக அருமையாக இருந்தது.

திரைப் பட நடிகர்களுக்கு நல்ல இடங்களை கொடுக்கவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு இருந்தது. பாக்யராஜ், பூர்ணிமா, வடிவேல், தியாகராஜன், பிரசாந்த், பிரகாஷ்ராஜ், விஜய்குமார் மற்றும் பிரபு இவர்கள் மாநாட்டில் தலையை காட்டினார்கள், ஆனால் எல்லா நாட்களும் வந்தார்களா? என்று தெரியவில்லை.

செம்மொழி மாநாடு நடக்கும் பொழுதே, இணைய மாநாடும் நடந்தது. நிறைய நண்பர்களை பார்க்க வேண்டும் என்று இருந்தேன், பார்க்க முடியமால் போய்விட்டது.

ஐந்து நாட்கள் கழித்து சென்னை புறப்படும் பொழுது மீண்டும் இப்படி ஒரு மாநாடு எப்படி எங்கு நடக்கும் என்று ஏக்கமாக இருந்தது. அவனாசி சாலையில் சென்னை நோக்கி பயணிக்கையில், சாலையின் இருபுறமும் மக்கள் சாரை சாரையாக கோவை நோக்கி திரும்பி கொண்டிருந்தார்கள். எண்ணற்ற மக்களை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும், மீண்டும் ஊர் செல்ல வேண்டுமே என்ற வருத்தமும் கலந்து இருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே என் மொழி பிறந்தது என்பதும், உலகின் மிகுந்த பழமையான மொழி என் தாய் மொழி என்பதும், என் தாய் மொழி செம்மொழி இன்னும் காணவேண்டிய வெற்றிகள் பல உள்ளன என்பதை மனது அசைப் போட்டு கொண்டே, மீண்டும் மற்றோரு செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று நம்பிக்கையில் சென்னை சென்று வாசிங்டன் செல்ல ஆயுத்தமானேன்!

வாழ்க என் தாய் மொழி! வளர்க அதன் புகழ்!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 13, 2010

செம்மொழி மாநாட்டில் நானும்...


வாசிங்டன் ஜூலை 2010


கடந்த 10 தினங்களாக தமிழ் செம்மொழி மாநாட்டைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்


இதற்கு முன் நான் உலகத் தமிழ் மாநாடு பார்த்தது இல்லை. இந்த செம்மொழி மாநாடு பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக திட்ட மிட்டு, வாசிங்டன்னில் இருந்து கோவை வந்தடைந்தேன். இந்த மாநாட்டில் நானும் ஒரு கட்டுரையாளன்!!!


கோவை மாநகரம் முழுக்க ஓரே விழா கோலம். மாநாட்டிற்கு ஒரு நாள் முன்பு வந்தது கோவையை நகர் வலம் வருவதற்காகதான். கோவை முழுக்க எங்கும் காவல்துறை அதிகாரிகள். வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு கோவையை பற்றி நிறைய தெரியவில்லை. பொது மக்களை ஒழுங்கு படுத்தவே இவர்கள் அழைக்கப் பட்டு இருக்கிறார்கள்.விழா முதல் நாள் செவ்வாய் மாலை மாநாட்டு பந்தலை மற்றும் உணவகத்தை பார்வை இட என் அமெரிக்காவாழ் தமிழ் நண்பர்களோடு சென்றோம். மாநாடு பந்தலுக்கு முன் கார் செல்ல அனுமதி இல்லை. மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். எங்கும் மக்கள் கூட்டம்! பொதுமக்கள், கொஞ்சம் கொஞ்சம் கட்சி காரர்கள் என்று பார்க்க முடிந்தது. பொதுமக்கள் உணவிற்காக உணவகம் மிக பிரமாண்டமாய் காட்சி அளித்தது. அனைத்து உணவக அரங்குகள் எளிய இனிமையான தமிழில் காட்சி அளித்தது.
தமிழ் மாநாடு பந்தலை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதியில்லை. மாநாட்டிற்கு முதல் நாளே ஆயிரக் கணக்கான மக்கள் உள்ளே வந்தவண்ணம் இருந்தார்கள்.


எல்லோரும் எதிர்பார்த்தபடி உலகத் தமிழ் மாநாடு புதன் காலை மிகச் சரியாக தொடங்கியது. போகும் வழியில் போக்குவரத்தில் மாட்டிக் கொண்டேன். இத்தனைக்கும் எனக்கு விஜபி அனுமதி கார் சீட்டு இருந்தும் காரை மாநாடு நடக்கும் இடத்திற்கு கொண்ட செல்ல முடியவில்லை. இந்தியாவின் குடியரசு தலைவர், மாநில ஆளுநர், முதல் அமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள் சென்றதால் மிக கடுமையான போக்குவரத்தில் மாட்டி கொண்டேன்.


விழா முதல் நாள் என்பதாலும், கடுமையான மக்கள் கூட்டம் இருந்ததாலும் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு என்று நல்ல இடத்தை காவல்துறை அதிகாரிகளால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் எனக்கும் என் தந்தைக்கும் நல்ல இடம் கிடைத்தது.


தினமும் பொது அரங்கில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும்.


ஆய்வரங்கங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை அனைத்து கட்டுரைகளும் வாசிக்கப் படும். இதில் முக்கியமான தலைப்புகள், மற்றும் முக்கியமான நபர்கள் பேசும் இடங்களில் கூட்டம் மிக மிக அதிகமாக இருந்தது.


முதல்நாள் ”கோவூர் கிழார்” என்ற அரங்கில் முனைவர் இறையன்பு “திருவள்ளூவரும் சேக்ஸ்பியரும்” பற்றி ஒரு கட்டுரை சமர்பித்து பேசினார். மிக அருமையான தலைப்பு. நிறைய திருக்குறளை சேக்ஸ்பியரோடு ஓப்பிட்டு பேசினார். அரங்கு நிறைந்த கூட்டம்.


தமிழ் பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் “நாட்டார் கலைகள்” பற்றி பேசினார். ”உயிர்மை” மனுஸ்ய புத்திரனின் பேச்சும், கனிமொழி பேச்சும் கேட்கமுடியாமல் போய்விட்டது.


கவியரங்கில் வைரமுத்து, மரபின் மைந்தன் முத்தையா, கவிஞர் பழனி பாரதி அருமையாக இருந்தது. குறிப்பாக கவிஞர் பழனி பாரதி கவிதைகள் மிக மிக அருமை!


பட்டிமன்றத்தில் திண்டுக்கல் லியோனி பட்டையை கிளப்பினார் என்றால் அது மிகையல்ல. என்னதான் அறிவு பூர்வமாக பேசினாலும், மக்களை சிரிக்க வைக்கும் பேச்சுதான் எடுபடுகிறது. கலைஞர் முதல் கடைக் கோடி தமிழர்கள் அனைவரும் வயிறு வலிக்க சிரித்தார்கள்.


இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா “இந்த மாநாட்டில் நான் பேசுவது என் வாழ்நாள் பாக்கியம் என்றார்”


நக்கீரன் கோபால் “அச்சுத்துறை சார்பாக” இன்னும் வலுவான கருத்தை எடுத்து வைத்து இருக்கலாம். எஸ் வி சேகர் பேசியது ஒன்றுமே புரியவில்லை!


இறுதிநாள் கருத்தரங்கில் அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகளான “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” மூலம் “தமிழனின் பண்பாட்டை” மிக அருமையாக பேசினார். பார்வையாளர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளை தட்டி எழுப்பினார் என்றால் அது மிகையல்ல.


வழக்குரைஞர் அருள்மொழி “போரை புறம் தள்ளி” என்ற தலைப்பில் பேசிய பேச்சும் மிக அருமையாக இருந்தாக நண்பர்கள் சொன்னார்கள்.

பேராசிரியர் ப்ர்வீன் சுல்தானா “உண்பது நாழி, உடுப்பது இரண்டே” என்ற தலைப்பில் நன்றாக பேசினார். ஆனால் அவரிடம் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்து விட்டேன்.


நிறைய நிகழ்ச்சிகள், ஏராளமான கூட்டம் காரணமாக நிறைய நண்பர்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.


விழா விருந்தினர்களை கவனிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை பயன் படுத்தினார்கள். நிறைய முனைவர் பட்டம் பெறும் ஆய்வு மாணவர்களை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது.


தமிழ்நாட்டில் இருந்து கட்சி சார்பில்லாமல் நிறைய தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்களை பார்த்தேன்.


செம்மொழி மாநாட்டில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், எங்கும் திரும்பினாலும் மக்கள் கூட்டம். வரலாறு காணத வெற்றி! ஏராளமான பொது மக்கள் “தமிழ் மொழி” மீது பற்றின் காரணமாகவும், மாநாடு எப்படி நடக்கிறது என்றும், அங்கு யார் யார் என்ன பேசுகிறார் என்று கேட்பதற்காக சாலையின் இரு ஓரங்களில் ஏராளமான பொது மக்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டார்கள்.


இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி தனித் தனி பதிவாக இட வேண்டும். கோவையில் செவ்வாய் முதல் ஆரம்பித்து ஞாயிறு வரை தங்குவதற்கு அருமையான நட்சித்திர விடுதியும், தினமும் மூன்று வேளைகள் மிக அருமையான உணவுகளும், காலை மற்றும் மாலை போக வர அருமையான பேருந்துகளும், என்னை கவனித்து கொள்ள ஒரு காவல் அதிகாரி மற்றும் ஒரு ஆசிரியரும் கவனித்து கொண்டதை எப்படி சொல்வேன்! வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.


செம்மொழி மாநாடு – வரலாறு காணத வெற்றி! மொழியின் பெயரால் லட்ச கணக்கான மக்களை “கலைஞர்” ஒருவரால் தான் கூட்ட முடியும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்த மாநாட்டில் நானும் கலந்து கொண்டதை மிக மிக பெருமையாக கருதுகிறேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது