Thursday, April 09, 2009

ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பா.ம.க.-வின் பங்கும் இருக்கும்..!

நன்றி : விகடன்

''ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பா.ம.க.-வின் பங்கும் இருக்கும்..!''

''வன்னியர் சங்கம் என்று எண்பதுகளில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சாதிய இயக்கம் பத்து வருடங்களுக்குள் ளாகப் 'பாட்டாளி மக்கள் கட்சி' என்று பரிணாம வளர்ச்சி பெற்றது. கட்சி ஆரம்பித்த நோக்கம் நிறை வேறிவிட்டதா?''
''முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வன்னியர் சங்கம் வேறு, பாட்டாளி மக்கள் கட்சி வேறு. வன்னியர் சங்கம் 1980-களில் துவக்கப்பட்ட போது, அந்த இன மக்களுடைய சமூக விடுதலைக்காக அது போராடியது. 1987-ல் தொடர் சாலை மறியல் நடத்தி, தங்கள் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீட்டு நியாயம் கிடைக்க வெகுண்டெழுந்தது. ஆனால், அந்த வன்னியர் சங்கமே பின்னர் கட்சியாக மாறிவிடவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்குச் சமூக விடுதலை பெற்றுத் தருவது! இவர்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பதும் அரசியல் அதிகாரம் பெறுவதும்தான் குறிக்கோள்.''


''தேர்தலுக்கு பா.ம.க. எவ்வளவு தூரம் தயாராகி இருக்கிறது?''

''இந்த ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கும் மேலான மக்கள் போராட்டங்களில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். காவிரி பிரச்னை, கர்நாடகத் தமிழர்கள் பிரச்னை, இடஒதுக்கீடு, பஸ் கட்டண உயர்வு, தடா எதிர்ப்பு, உர விலையேற்ற எதிர்ப்பு, இலவச மின்சாரத்தை ரத்து செய்ததை எதிர்த்து என வகை வகையான போராட்டங்கள்! இவையனைத்தும் மக்கள் நலனுக்காகச் செய்யப்பட்டவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தேர்தலையட்டி நான் தொடர்ந்து தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதால் மக்களின் எண்ண ஓட் டம் புரிகிறது. மக்கள் நலனுக்காகத் தேர்தலைச் சந்திக்க பா.ம.க. முழுவீச்சில் தயாராக இருப்பது போலவே, மக்களும் எங்களை ஆதரிக்க அதே வேகத்தில் தயாராக இருக்கிறார்கள்.''

''நீங்கள் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவீர்கள் என்று சொல்லப்படுகிறதே?''

''தி.மு.க. எங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் என்னைச் சந்தித்துப் பேசினார். பேச்சு வார்த்தைகள் சுமுகமாக நடந்தன. நல்ல முடிவு ஏற்படும் என்றே தோன்றுகிறது. இது பற்றிய திட்டவட்டமான அறிவிப்பை சென்னையில் மார்ச் 16-ந் தேதி நடைபெற இருக்கும் எங்கள் கட்சியின் இரண்டாவது அரசியல் மாநாட்டில் வெளியிடுவோம்.''

''இப்படி நாள் கடத்துவதன் மூலம் நீங்கள் தொகுதிப் பங்கீட்டில் அதிக இடம் கிடைக்கவும், ஆட்சியில் பங்கு கேட்டும் தி.மு.க-வோடு 'பார்கெய்ன்' செய்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?''

''இன்னமும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்களே துவங்கவில்லை. அதில் எந்தப் பிரச்னையும் வராது.. கூட்டணி அமைய அது எந்த விதத்திலும் முட்டுக்கட்டையும் இல்லை. ஆட்சியில் பங்கு என்பதைப் பொறுத்த வரையில், நாங்கள் கூட்டணி ஆட்சி என்றே முதலில் சொல்லிக்கொண்டிருந்தோம். கலை ஞர் அதற்கு உடன்படவில்லை. 'தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு தனித்தே ஆட்சி அமைக்கும். எனினும், பா.ம.க-வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும்!' என்று நேரிலும் பத்திரிகைகளிலும் சொல்லி வருகிறார் கலைஞர். அதனால் நாங்கள் கூட்டணி ஆட்சி பேச்சை வலியுறுத்தவில்லை. தவிர, அமைச்சரவையில் இடம் பெறுவதா இல்லையா என்பது பற்றியும் பிற்பாடு எங்கள் தலைமைக் குழுவே பேசி முடி வெடுக்கும்.''

''எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்படிப் பரவலாகப் பிரிந்திருப்பதால், இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்குதானே லாபம்?''

''ஒருக்காலும் இல்லை. எத்தனைக் கூட்டணிகள் ஏற்பட்டாலும், எந்தெந்தக் கட்சிகள் எந்தெந்தக் கூட்டணியில் இருக்கின்றன எனும் இறுதி நிலை ஏற்படாவிட்டாலும் கூட, இன்று தமிழ்நாட்டில் உள்ள யதார்த்த நிலை என்னவெனில், 'ஜெயலலிதா எதிர்ப்பு அலை'தான்! மக்கள் மத்தியில் பலமாக வீசுகின்ற இந்த அலையால் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. தேர்தல் நெருங்க நெருங்க, அவரை வீழ்த்துகிற ஒரு பலமான அணி நிச்சயம் உருவாகும். அந்த அணிக்குப் பாட்டாளி மக்கள் கட்சி பக்கத் துணையாக நிற்கும். ஜெயலலிதாவின் வீழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கும் இருக்கும்.''

''நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையா?.. சத்தியம் இன்னமும் அப்படியே அமலில் இருக்கிறதா?''

''கட்டாயம்! 1980-ல் வன்னியர் சங்கம் துவக்கப்பட்டபோதே நான் மூன்று சத்தியங்கள் செய்தேன். அதாவது, எந்தச் சுற்றுப்பயணம் மேற் கொண்டாலும், அது என் சொந்தச் செலவில்தான்! எந்தக் காலகட்டத் திலும் நான் கட்சியிலோ சங்கத்திலோ எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டேன்! எந்தத் தேர்தலிலும் நான் நிற்கமாட் டேன்! இன்னொரு உப சத்தியம், என் வாரிசுகளோ, குடும்பமோ இந்த இயக்கத்தினுள் என்றைக்கும் வர மாட்டார்கள் என்பது. இவை என் இறுதி மூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்.''

''உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை என்ன சொல்லும்?''

''முதலில் சுற்றுப்புறச்சூழல்; நிலம், நீர், வானம் என்று எதிலும் மாசுபடாத நிலையை உருவாக்க வேண்டும்.

இரண்டாவது கட்டாயக் கல்வி; அதிலும் தரமான கல்வி. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்றிருக்கக்கூடாது. எல்லாம் பொதுவான கல்வியாக இருக்கவேண்டும்.

மூன்றாவது தமிழ்; எல்லாவற்றிலும் ஆட்சி மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். மழலையர் பள்ளி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை எல்லாம் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும். தாய் மொழியில் கல்வி கற்பதுதான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குச் சரியாக இருக்கும் என்பது உலக வல்லுநர்களின் கூற்று.

நான்காவது இட ஒதுக்கீடு; புது விதமான ஃபார்முலாவை நாங்கள் வைத்திருக்கிறோம். இதனால் எல்லா வித மக்களுக்கும் நியாயம் கிடைக்கும். அனைவரையும் எங்கள் ஃபார்முலா திருப்திப்படுத்தும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்!'' - எஸ்.சுபா

நன்றி விகடன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, April 01, 2009

வைகோவிற்கு இது தேவையா?


வாசிங்டன் ஏப்ரல் 2009

திமுகவில் வைகோ இருந்த பொழுது கழகத்தின் போர் வாள், கழகத்தின் போர் படை தளபதி என்றுஅன்பாக கலைஞரால் வளர்க்க பெற்று, தென் மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்குடன் திமுகவில் வளர்ந்து வந்த தலைவராக வைகோ அடையாளம் காட்டப் பட்டு வந்த பொழுதும் -

தனது நிகரற்ற பேச்சாற்றாலால் திமுக தொண்டர்களிடம் கலைஞருக்கு பிறகு ஒரு தலைவனாக உருவெடுத்த வந்த பொழுதும் -

கலைஞரை போல இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கியத்தை மேடைகளில் பேசியபொழுதும் -

உலக வரலாற்றில் சற்று கவனம் செலுத்தி, "எந்த நாடு எல்லாம் அடிமை பட்டு கிடக்கிறதோ அந்த நாடு எல்லாம் எனக்கு தாய் நாடு" என்று சொல்லிய சேகுவாரா பற்றியும், மனிதகுல விடுதலைக்கு போராடிய தலைவர்களை இளைஞர்களுக்கு மேடைகளில் அடையாளம் காட்டிய பொழுதும் -

எல்லாவற்றிக்கும் மேலாக தொப்புள் கொடி உறவுள்ள நம் ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து சலைக்காமால் குமரி முதல் டெல்லிவரை பேசிக் கொண்டும் வந்த தலைவர் வைகோவை பார்த்தும் கேட்டும் ரசித்த ஒரு சராசரி தமிழ் ஆர்வலன் நான்!

ஈழ தமிழர் பிரச்சினையை கடுமையாக ஆதரிக்க, நேற்றும் இன்றும் நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதற்காக தமிழன துரோகி ஜெயலலிதா உங்களை போடாவில் இட்ட பொழுது மனம் வெதும்பி வருத்தப்பட்ட கோடான கோடி ஜீவன்களில் நானும் ஒருவன்!

முன்னாள் மத்திய அமைச்சர் திரு கண்ணப்பன் மூலம் உங்களுக்கு "உலக வரலாற்றை மாற்றிய பேச்சுகள்" அடங்கிய புத்தகத்தை வாசிங்டன் வாழ் தமிழர்களிடம் கையெழுத்து வாங்கி அந்த புத்தகத்தை உங்களுக்கு சிறை சாலைக்கு அனுப்பி வைத்தோம், அதனை நீங்கள் போடோவில் இருந்து வெளியே வந்தவுடன் சிகோகா மாநகரில் உங்களை வரவேற்று பேசிய பொழுது அந்த புத்தகதை பற்றி மறக்காமல் குறிப்பீட்டீர்களே! அதனை நன்றியோடு நினைத்து பார்த்து உங்களை பிரமிப்பாக பார்த்த நான் -

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, சில அரசியல் சூழ்நிலை காரணமாக என்னைப் போல சராசரி ரசிகன் எதிர்பாராத வகையில் தமிழ் இனத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் ஜெயலலிதாவிடம் நீங்கள் கூட்டு வைத்த பொழுது மனம் அடைந்த வேதனைக்கு அளவேயில்லை!

தமிழகம் முழுக்க மேடைகள் தோறும் கலைஞரைப் பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் விமர்சித்து கடந்த 5 ஆண்டுகளாக ஜெயலலிதாவை ஆதரித்து பேசியதான் விளைவு இன்று உங்களுக்கு 3 அல்லது 4 பாராளுமன்ற தொகுதிகள்!? இதை விட கேவலம் என்ன வேண்டும் உங்களுக்கு?! உங்களுடைய நீண்ட அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த வெகுமதி இதுதானா?!

5 ஆண்டு கால பாரளுமன்ற முடியும் வரை தன் மகனை அமைச்சர் பதவியை அனுபவிக்க வைத்துவிட்டு கடைசி நிமிடத்தில் வெளியே வந்து, கடந்த 25 ஆண்டுகளாக சாதி அரசியல் செய்யும் இராமதாஸ¤க்கு 8 இடங்கள், ஆனால் உங்களுக்கு?! 3 அல்லது 4!!!

உங்களுக்கு வயது கிட்டதட்ட 62 வயது ஆகிவிட்டது! உங்களால் இனிமேல் தமிழகத்தில் வலுவான எதிர் கட்சி என்று நிரூபிக்க முடியாது! உங்களுக்கு 2010 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா மொத்தம் 15 சீட்டுகள் ஒதுக்கினால் அதிகம்! ஆனால் இராமதாஸ¤க்கு 30 தொகுதிகள் ஒதுக்கும்! அந்த அவமானத்தையும் நீங்கள் தாங்கி கொள்ள தயாராக இருப்பீர்களா? அதற்குள் அனைத்து மதிமுக தலைவர்கள் கலைஞரிடம் சென்று விடுவதை உங்களால் தடுக்க முடியுமா?

போதும் நீங்கள் பட்ட அவமானங்கள், கடினங்கள், போராட்டங்கள், தோல்விகள்! தயவு கூர்ந்து ஜெயலலிதாவிடம் இருந்து வெளியே வந்து விடுங்கள்! இதைவிட நல்ல தருணம் எதுவும் கிடையாது!

கலைஞரிடம் வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்டுவிட்டு தாய் கழகத்தில் நீங்கள் மீண்டும் இணைத்து கொள்ளலாம்! அல்லது வாழ்நாள் வரை ஈழ மக்களின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரலாம்!

இல்லை நீங்கள் ஜெயலலிதாவிடம் இருந்து மேலும் மேலும் அவமானங்களை சேர்க்க தயாராக இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?!

மிகுந்த மனம் வருத்ததுடன்

மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது