Friday, February 24, 2006

தொல் திருமா பேட்டி: நன்றி சினிமா எக்ஸ்பிரஸ்

நன்றி தினமணி / சினிமா எக்ஸ்பிரஸ்

அரசியல் மற்றும் சினிமா சம்பந்தமாக திருமா பேட்டி எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. இதோ உங்கள் பார்வைக்கும்...

சினிமாவிலிருந்து விஜயகாந்த், கார்த்திக், செந்தில், விஜயகுமார், முரளி என பலர் அரசியலுக்கு சென்று கொண்டிருக்க, அரசியலிலிருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான தொல். திருமாவளவன். நடிகராகிவிட்ட அவரை "சினிமா எக்ஸ்பிரஸ்' வாழ்த்தி வரவேற்கிறது. நடிகர் தொல். திருமாவளவன் நமக்களித்த ஸ்பெஷல் பேட்டி இனி...

நீங்கள் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏன்ன?

நண்பர்களின் வற்புறுத்தலால் திரையுலகில் ஈடுபட வேண்டும் என்ற வாய்ப்பு கிடைத்தது. நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது என்பதைவிட திரை ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற விருப்பம்தான் அடிப்படைக் காரணம்.

"அன்புத்தோழி'ங்கிற வார்த்தையைக் கேட்டவுடன் மனதில் என்ன தோன்றியது?

பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற திரைப்படம் என்று நான் அதைக் கருதினேன். பெண் உரிமை, பெண் விடுதலை ஆகியவற்றில் தீவிர ஈடுபாடுள்ள இயக்கம் விடுதலை சிறுத்தைகள் இயக்கம். ஆகவே ஒரு பெண் தொடர்பான கதைப் பின்னணியைக் கொண்ட படம் என்பதால் இது எனக்கொரு ஈர்ப்பைத் தந்தது.

நீங்களும் துப்பாக்கி தூக்க ஆரம்பித்து விட்டீர்களே?

படத்தில் அந்த மாதிரி காட்சிகள் உண்டு என்று சொன்ன உடனேதான் நடிக்கவே ஒப்புக் கொண்டேன். என்னுடைய இளமைக்கால கனவுகள் அந்த மாதிரியெல்லாம் இருந்தது. ஆனால் அதற்கான களமும், வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டது.

ஆகவே அந்த மாதிரியான ஒரு பாத்திரத்தை தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துகிற வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கிடைக்கிறது எனும்போது ஒரு தமிழ் தேசிய அரசியலை பரப்புகிறதுக்கு பயன்படும் என்று நம்பி அதை ஒப்புக் கொண்டேன்.

அதே நேரத்தில் ஐயோ இது கட்டைத் துப்பாக்கியாக இருக்கிறதே என்ற வருத்தம்தான் மனதில் ஏற்பட்டது. இது போலித்தனமாக இருக்கிறதே, கட்டைத் துப்பாக்கியை கையில் ஏந்தி நிற்கிறோமே என்ற வருத்தம் அப்போது இருந்தாலும்கூட இது ஒரு மாதிரி வடிவம்தானே என்று நினைத்துக் கொண்டேன்.
கேமரா முன்பு முதன்முதலா நிற்கும்போது பயம் ஏற்பட்டதா?

திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற தேடல் இருந்திருந்தால் எனக்கு அது பிரமையையும், அச்சத்தையும் உருவாக்கியிருக்கும். எனக்கு அப்படியொரு எண்ணமோ, கனவோ இருந்ததில்லை. ஆகவே எனக்கு அது அச்சத்தைத் தருவதற்கான நிலைமையை உருவாக்கவில்லை.

அரசியலில், ஏராளமான கேமராக்களின் வெளிச்சத்துக்கு முன்னால் பல ஆண்டுகளாக நான் நின்று கொண்டிருக்கிற காரணத்தினால் அதன் முன்னால் நிற்பதற்கு எனக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை.

ஆனாலும் அறிமுகமில்லாத, அனுபவமில்லாத ஒரு துறையில் காலடி எடுத்து வைக்கிறோமே அதை சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற ஒரு பதட்டம் லேசாக ஏற்பட்டது உண்மைதான்.

இயக்குனர், தயாரிப்பாளர், உடன் பணியாற்றிய குழுவினர் கொடுத்த ஊக்கத்தால் ஓரளவிற்கு அவர்கள் திருப்திபடக்கூடிய அளவிற்கு என்னுடைய பங்களிப்பை நான் செய்திருக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.


"அன்புத்தோழி'யில என்ன கேரக்டர் பண்ணுகிறீர்கள்?

இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பிறகே என்னுடைய பாத்திரம் இடம் பெறுகிறது. ஈழத்திலிருந்து கணவனை இழந்த பெண் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுகிறார். இங்கே இசை உலகில் சாதிக்கத் துடிக்கும் ஓர் இளைஞனை ஊக்கப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். அவரும் அத்துறையில் வளர்ச்சியடைகிறார். நிறைவாக அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.

அந்த நேரத்தில் அந்தப் பெண் சொல்கிற பின்னணிக் கதையில் கதாநாயகனாக ஒரு தமிழ்ப் போராளி எனும் பாத்திரத்தில் நான் பங்கேற்கிறேன். அந்தப் பெண் ஈழத்திலே இருந்தபோது, அவளை திருமணம் செய்துகொண்ட தமிழ்ப் போராளி பாத்திரம்தான் எனக்கு.

அதில் நான் தமிழ் இளைஞர்களை இன, மொழி உணர்வூட்டி, இன விடுதலைக்காக போராடக்கூடிய, போராட்டத்தை வழி நடத்துவேன். அவர் போர்க்களத்தில் சிக்கிக் கொள்வதினால் அந்தப் பெண் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள இங்கே வருகிறார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி?

வரவேற்கிறோம். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் திரைப்படத்தின் மூலமாக கிடைக்கின்ற புகழும், விளம்பரமும் மட்டுமே மூலதனமா பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிற எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.

மக்களிடம் இப்போது அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்த மக்கள் வேறு, இப்போது இருக்கிற மக்கள் வேறு. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்குத்தான் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவில் சொல்வதெல்லாம் வாழ்க்கையிலும் நடக்கும் என்று ஒரு காலத்தில நம்பிக் கொண்ருந்தார்கள். அது ஒரு பொழுதுபோக்கு. அதற்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்று கருதும் மனநிலை இப்போது வளர்ந்திருக்கிறது.

பொதுவாகவே திரைப்பட உலகம் வேறு, அரசியல் உலகம் வேறு. ஆனால் இரண்டுக்குமிடையில் வலுவான உறவுப் பாலம் இருக்கிறது.

நடிகர்கள் அரசியலுக்கு வந்து ஜெயித்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் சினிமாவில் ஜெயிக்க முடியுமா?

திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வர விரும்புகிறவர்கள் முற்றிலும் சினிமா தொடர்பை அறுத்துவிட்டுத்தான் வர முடியும். அரசியல் உலகத்திலிருந்து, திரைப்பட உலகிற்குப் போகும்போது முற்றிலும் அரசியல் உலகத்தை அறுத்துக்கொண்டு போக முடியாது.

அரசியல் களத்தில் இருப்பவர்கள் திரைப்படத்தை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் திரைப்பட உலகத்திலிருப்பவர்கள் அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது.

அதனால் அரசியல் உலகத்திற்கு வரக்கூடிய திரை பிரமுகர்கள், தங்களுடைய புகழையும், விளம்பரத்தையும் பயன்படுத்திக்கொண்டு முற்றிலுமாகப் பாடுபடும்போது வெற்றி பெற முடியும்.

ஆனால் அரசியல் உலகத்திலிருப்பவர்கள் திரைப்பட உலகில் அதே மாதிரியான வெற்றியை சாதிக்க முடியும் என்று சொல்ல முடியாது.

காரணம் அரசியலுக்கு மேலானது அல்ல திரைப்படம். அது அரசியலுக்கு பயன்படக்கூடிய ஒரு கருவி. அவ்வளவுதான்.

திரைப்படங்களின் மீது ஒரு கண்காணிப்பு தேவை என்று சொல்லியிருக்கிறீர்களே?

திரைப்படங்களில் இதுதான் இருக்க வேண்டும், இது இருக்கக்கூடாது என்கிற எந்தக் கட்டுப்பாடும் விதிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கில்லை. ஆனால் திரைப்படம் என்பது ஒரு வலிமையான ஊடகம். அதில் சொல்லப்படுகிற செய்திகள் மக்களிடம் வெகு வேகமாகச் சென்றடைகிறது. ஆழமாகவும் அது பதிவாகி விடுகிறது.

ஆகவே இன பாரம்பரியத்தை சீர்குலைக்கக்கூடிய காட்சிகளோ, வசனங்களோ அதில் இடம் பெறக்கூடாது. அது எதிர்கால தலைமுறையைப் பாதிக்கும் என்றுதான் அஞ்சுகிறோம். மற்றபடி இன்னென்ன காட்சிகள்தான் இடம் பெற வேண்டும். வசனங்கள் இடம்பெற வேண்டும் என்று நாம் அதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. அந்த எண்ணமும் எனக்கில்லை.

ஐரோப்பிய நாடுகளில் இருக்கிற பண்பாட்டுக்கும் இந்தியாவில், தமிழகத்தில் நிலவுகிற பண்பாட்டிற்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. தமிழக சூழலில் கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய எந்த தளத்திலும் வளர்ச்சியடைய முடியாத ஒரு பெரும் மக்கள் தொகை, ஐரோப்பிய கலாச்சாரத்தின் மூலம் சீர்கேடான பாதைக்குப் போய்விடக்கூடாது என்ற அச்சத்தால்தான் திரைப்படங்களிலே ஒரு கண்காணிப்பு தேவை என்று நாங்கள் சொல்கிறோம்.

தமிழர்களுடைய பாரம்பரியமான பண்பாட்டு நிகழ்வுகள் அதில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அதே சமயம் தமிழர்களின் வாழ்வியலை மட்டுமே காட்டப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. உலக நாடுகளில் வாழுகின்ற பல்வேறு வகை மாந்தர் இனத்தின் மரபுகளையும், வாழ்க்கை முறைகளையும் தமிழர்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஆகவே, அப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் இடம் பெறலாம்.

ஆனால் தமிழர்களின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் வகையிலான எந்த பண்பாட்டு காட்சிகளும், மரபுகளும் இடம் பெறக்கூடாது என்று நாங்கள் எச்சரிக்கிறோம் அவ்வளவுதான்!

ஷூட்டிங்கில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றை சொல்லுங்களேன்?

புஷ்பா கார்டன் என்ற தோட்டத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, திடீரென்று என்னை சண்டைக் காட்சியில் இறக்கிவிட்டார்கள். அதில் நடிக்கவேண்டும் என்றதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. நான் விளையாட்டிற்குக்கூட இதுவரை யாருடனும் சண்டை போட்டதில்லை. என்னைப் போய் சண்டை போடச் சொல்கிறீர்களே என்று நான் தயங்கினேன்.
"சொல்வதுபோல் செய்யுங்கள். அது போதும்' என்றார்கள். அதன்படி நடிக்கும்போது முரட்டு இளைஞர்களைத் தாக்குவது போன்று ஒரு காட்சி. ஒரே காட்சியை திரும்பத் திரும்ப இரண்டு, மூன்று முறை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒவ்வொரு முறையும் அந்த இளைஞர்களை நிஜமாகவே நான் அடித்துவிட்டேன். பிறகு அவர்களிடத்திலே நான் வருத்தம் தெரிவித்தேன். ஸôரி.... தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்னேன்.

அடுத்து, அந்தரத்தில் பறந்து சண்டை போடுவது போன்று ஒரு காட்சி. அதற்கு டூப் போட்டு நடிக்க வைக்க அவர்கள் விரும்பியபோது, இல்லை நானே அதை செய்து பார்ப்பேன் என்று சொன்னேன். ஏனென்றால் திரைப்படத்தில் அந்தக் காட்சிகள் வரும்போது இதெல்லாம் எப்படி எடுக்கிறார்கள். நம்ப முடியாத காட்சிகளாக இருக்கிறதே என்று எனக்குள் தோன்றுவதுண்டு.
அதனால் நேரடியாகவே இத்தகைய அனுபவங்களைப் பெறவேண்டும் என்பதற்காக நானே நடிக்கிறேன் என்று சொன்னேன். அப்போது என் இடுப்பில் கயிறைக் கட்டி, அதை மரக்கிளையிலே மாட்டி, இழுத்து வைத்திருந்தனர். எனக்கு பாதிப்பு ஏதாவது நேர்ந்துவிடும் என்று மற்றவர்கள் அஞ்சினார்கள். நான் துணிந்து, இறங்கி செய்தேன். எனக்கு அது ஒரு விசித்திரமான, சுவையான அனுபவமாக இருந்தது.
அப்போதுகூட, காற்றில் பறந்து சென்று ஒரு முரட்டு இளைஞனை உதைப்பது போன்ற காட்சியில், நிஜமாகவே அவரை உதைத்துவிட்டேன். (ரசித்து... சிரித்தார்).

யாரை ரோல் மாடலாக நினைத்து நடித்தீர்கள்?

அண்மையில் ஒரு பத்திரிகையில், நான் விஜயகாந்தைப் பார்த்து அவரை மாதிரி மேக்கப் போடுகிறேன், நடிக்கிறேன்கிற மாதிரி எழுதியிருந்தாங்க. உண்மையிலேயே நான் அவர் நடிச்ச ரெண்டே ரெண்டு படங்களைத்தான் பார்த்திருக்கிறேன். "அம்மன்கோயில் கிழக்காலே', "கேப்டன் பிரபாகரன்'. அவருடைய வேறு எந்தப் படத்தையும் நான் பார்த்ததில்லை. என் மனசுக்குள் யாரும் ரோல் மாடலாக வரவில்லை. இயக்குனர் என்ன சொன்னாரோ அதை செய்வதில்தான் என் கவனம் இருந்தது.

அதிகமாக படங்கள் பார்ப்பதில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. சின்ன பிள்ளையாக இருக்கும் போதிலிருந்து இப்போதுவரை நான் நாற்பது, ஐம்பது படங்களுக்குள்தான் பார்த்திருப்பேன். அதில் பத்து, பதினைந்து படங்கள் சிவாஜி படங்கள்தான். எனக்குப் பிடித்த நடிகர் என்றால் அவரைத்தான் சொல்ல முடியும்.
இப்ப புதுசா வந்திருக்கிற நடிகர்- நடிகைகளின் பெயரே எனக்குத் தெரியாது.

தேர்தல் சூழ்நிலையில்கூட ஷூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்க முடிகிறதா?

என்னால் அரசியலுக்கு நேரம் ஒதுக்கக்கூடிய அளவிற்கு திரைப்படத் துறைக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. ஆனாலும் சிரமத்திற்கு இடையில் அதற்கும் நாள் ஒதுக்கி ஏற்றுக் கொண்ட பொறுப்பை, கடமையை நிறைவேற்றி வருகிறேன்.

அரசியல்வாதிகள் சினிமாவை விமர்சிப்பது, விளம்பரம் தேடிக்
கொள்ளத்தான் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

விளம்பரம்.. விளம்பரம் மட்டுமே என்று குறியாக இருப்பவர்களின் கூற்று அது. திரைப்படத்தைவிட வலிமையான விளம்பரக்களம் அரசியல். இங்கு எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவும் திரைப்படத்தில் எதிரொலிக்கும் அவ்வளவுதான்.
அதனால் திரைப்படத்தை எதிர்த்துதான் விளம்பரம் தேடிக்கணும் என்ற அவசியம் கிடையாது. அப்படியென்றால் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கே வந்திருக்க வேண்டியதில்லையே? நிலையான விளம்பரம் திரைப்படத்திலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகிறதே?
அப்படியில்லை! திரைப்படத்தைவிட வலிமையானது அரசியல் களம் என்பதினால்தான் அந்தத் துறையை சார்ந்தவர்கள் எல்லாம் அதை விட்டுவிட்டு இங்கே வருகிறார்கள்.

சொந்தப் படம் எடுக்கிற ஐடியா இருக்கிறதா?

(ஐயோ... அப்பா... என்றவர்) அந்தளவுக்கெல்லாம் எங்களுக்கு வலிமையில்லை. கற்பனையிலும் சிந்திச்சுப் பார்த்ததில்லை. நண்பர்கள் கேட்டுக் கொண்டதினால்தான் இதற்கே ஒப்புக்கொண்டேன். இயக்கம், தயாரிப்பு, வினியோகம் இம்மூன்றும் மிகப் பெரிய துறைகள். அதற்கு முதலீடு செய்கிற வாய்ப்பு எங்களுக்கு எந்த சூழ்நிலையிலும் இல்லை.

நடிகர் சங்கத்தில், நீங்கள் தலைவராக ஆவதற்குத்தான் நடிக்க
வந்திருக்கிறீர்கள் என்கிறார்களே?

அதெல்லாம் ஊடகத் துறையைச் சார்ந்தவர்களின் விருப்பமாகத்தான் இருக்கிறது. எனக்கு அதில் ஒன்றும் ஈடுபாடிலில்லை. (சிரித்தார்). எத்தனையோ பாரம்பரியமிக்க நடிகர்கள் இருக்கிறார்கள். திரைப்படத் துறையின் தொழிலாளர்களின் பிரச்னையை நன்கு அறிந்த மூத்தவர்கள் பலர் இந்தத் துறையில் இருக்கிறார்கள்.
அந்தத் தகுதிக்குரியவர்கள் ஏராளமானோர் இருக்கும்போது, நான் அதில் வர ஆசைப்படுவதென்பது திடீர்ன்னு சினிமா உலகத்திலிருந்து வர்ற ஒருத்தர் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆக ஆசைப்படுறது எப்படியோ அப்படித்தான் நானும் திடீர்ன்னு திரையுலகத்திற்குப் போய் நடிகர் சங்கத்திற்குத் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுவது!

தொடர்ந்து நடிக்கும் எண்ணமிருக்கிறதா?

அப்படி ஒரு எண்ணமில்லை. ஆனால் மொழி, இனம் தொடர்பான ஏதாவது கதை கருக்கள் அமைந்து, நான் ஏதாவது பாத்திரங்கள் ஏற்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அதை நான் தவிர்க்கமாட்டேன்.

ஆனாலும் திரையுலகத்தில் ஏதாவது ஒரு ஈடுபாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். கதை எழுதவோ, பாடல் எழுதவோ, தொடர்ந்து ஈடுபடுவது எனது அரசியல் பணிக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நான் கருதுகிறேன்'' என்று சொன்ன திருமாவளவனிடம் வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.
சந்திப்பு - பாரதி எம். ராஜா

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, February 06, 2006

இந்திய தூதரகம் - வாசிங்டன்

பிப்ரவரி 05 2006

இந்த மாதம் என்னுடைய கடவு சீட்டு (Passport) காலாவதி ஆவதால், அதனை புதுப்பிக்க வாசிங்டன்னில் உள்ள Massachusetts Avenue சென்றேன். இந்த தூதரகத்தில் நண்பர்கள் பலரை நான் இறக்கி விட்டு இருக்கிறேன், ஆனால் நான் செல்லுவது இதுவே முதல் முறை.

வாசிங்டன்னில் உள்ள Massachusetts Avenue- வில் தூதரகங்கள் பல உள்ளன. Bahamas, Pakistan, Australia, Oman, Japan இப்படி பல தூதரகங்கள் உள்ளன. சாலையின் இருபுறமும் தூதரகங்கள் மிக அழகாக நல்ல அந்த நாட்டின் கட்டிட கலையோடு காட்சி அளிக்கும். நமது இந்திய தூதரகம் மிக சதாரணமாக காட்சி அளித்தது. அருகில் உள்ள மற்றோரு சாலையில் காரை நிறுத்திவிட்டு ஆவலோடு உள்ளே செல்ல ஆசைப்பட்டேன். அலுவலகத்தின் முன்புறம் எல்லோருக்கும் போகவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

அதன் அருகே விசா மற்றும் கடவுசீட்டுபுதுபித்தல் கிழே(Basement) என்று போட்டு இருந்தது. அந்த அலுவலகத்திற்குள் சென்றேன். மிகச் சிறிய அறை. சுமார் 50 முதல் 60 பேர்கள் அமரலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காணப்படுகிற அதே வகையான நாற்காலிகள் (சேர்கள்). நான் அமெரிக்காவில் அதனைப் பார்ப்பது அதுவே முதல் முறை. மிக சாதரணமாக காட்சி அளிக்கப்பட்ட அந்த அறையில் தரை விரிப்புகள் நிறைய அழுக்காக காட்சி அளித்தது. சிறிய கண்ணாடி மூடப்பட்ட ஓர் சிறிய அறையில் இரண்டு இந்திய அதிகாரிகள். இருவரும் பெண்கள். ஒருவருக்கு வயது 55 இருக்கலாம், மற்றவருக்கு வயது 35 இருக்கலாம். இருவரும் ஹிந்தி பேசினார்கள். சிறிய அறை காரணமாக நீங்கள் அதிகாரிகளிடம் பேசுவதை அனைவரும் நன்றாக கேட்க முடியும். அருகே Bathroom (Rest Room)அது ஆணுக்கும் பெண்ணிற்கும் ஒன்றுதான் என்பதை மக்கள் மாறி மாறி போவதை கண்டு தெரிந்துகொண்டேன். நமது மக்கள் உள்ளே போய் திரும்பி வரும் பொழும் கதவை மடாரென்று சாத்துவதை பார்க்க முடியும்.

காலை நம்முடைய கோப்புகளை கொடுத்துவிட்டு மாலை சென்று நமது விசா அல்லது கடவுசீட்டு, கோப்புகளை பெற்று கொள்ளலாம். அந்தெந்த பணிக்கு தகுந்தாற்போல் சீட்டு (Ticket)நீலம், பச்சை, சிவப்பு என்று கொடுக்கிறார்கள். மாலை வேளைகளில் அவர்கள் அந்தெந்த நிறத்தை மற்றும் நமது எண்ணை கூப்பிடுவார்கள். ஓர் வயதான அம்மா மாறி கிட்டே சென்றவுடன், "No I called only Red Tickets" என்று சத்தமாக சொன்னவுடன் அந்த அம்மா ஓர் குற்ற உணர்வோடு வந்து அமைதியாக நாற்காலியில் அமர்ந்தார்கள். மற்றோரு African American பெண்மணி விசாவை வாங்கி பார்த்துவிட்டுநான் 6 மாதம் கேட்டு இருந்தேன், 4 மாதங்கள்தான் கொடுத்து உள்ளார்கள் என்றும், 4 புகைப்படங்கள்கொடுத்தேன் விசாவில் புகைப்படம் இல்லயே என்றும் வருத்தப் பட்டு கொண்டு இருந்தார்கள். அதனை அவர்களிடன் கேட்டால் என்னை சத்தமாக திட்டுவார்களா? என்று என்னிடம் கேட்ட பொழுது "இந்தியகலாசாரத்தின் பெருமை கருதி" வருத்தப் பட்டேன்.

நிறைய பஞ்ஜாப்பி மக்களை பார்க்க முடிந்தது. அவர்கள் நிறையப் பேர் அமெரிக்க குடியுரிமை வாங்கிவிட்டு இந்தியா செல்ல விசா வாங்க வந்தவர்கள் போலும். எல்லோரும் கடவுசீட்டை ஆர்வமாக வாங்கி இந்திய விசாவை பார்த்து கொண்டார்கள். ஓர் வட இந்திய பெண்மணி Palm with Cell Phone ஐ எப்படி இந்தியாவில் உபயோகப் படுத்த முடியும் என்பதை சத்தமாக மற்றோரு நபருடன் கத்தி கத்தி பேசிக் கொண்டு இருந்தது, மற்றோரு நபரும் ஏதோ C++ Coding போல அதனை கேள்வி கேட்டு குடைந்து கொண்டு இருந்தார். மொத்ததில் இந்தியா தூதரகத்தில் நம் இந்திய கலாச்சாரத்தை பார்க்க முடிந்தது.

எல்லாம் முடிந்து பாகிஸ்தான் தூதரகம் அருகே Belmont சாலையின் உட்புறம் காரை எடுக்க சென்றபொழுது இருபுறமும் அழகான குடியிருப்புகள் இருப்பதை பார்க்க முடிந்தது. ஓர் வயதான பாட்டி தன்னுடைய Benz காரை வீட்டின் உள்ளே எடுத்து செல்ல, அந்த பாட்டியின் கணவர் Lexusல் வெளிய சென்று கொண்டு இருந்தார். 4 மைல் தொலைவில் அமெரிக்க பாராளுமன்றம், 3 மைல் தொலைவில் அமெரிக்க வெள்ளைமாளிகை, 1 மைல் தொலைவில் பல தூதரங்கள், வாசிங்டன் போக்குவரத்தின் பரபரப்பு இல்லாமல் இந்த அழகான வீட்டின் அந்த பாட்டி ஓவ்வோருப் படியாக வீட்டின் உள்ளே செல்லுவதை ஏக்கத்தோடு பார்த்து நடையே கட்டினேன்.

நன்றி

மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது