Monday, October 16, 2006

தீபாவளி மேளா - இந்திய தூதரகம்.

வாசிங்டன். அக்டோபர் 15 2006

நேற்று மாலை இந்திய தூதரகத்தில் தீபாவளி மேளா கொண்டாடப் பட்டது. இரண்டு வாரம் முன்பு அழைப்பிதழ் அனுப்பி இருந்தார்கள். என் நண்பர்கள் சிலர் வருடா வருடம் நடக்கும் இந்த விழா நன்றாக இருக்கும் என்றார்கள்.
சரி எப்பொழுதும் தமிழ்ச் சங்கவிழாக்கள், பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா, இலக்கியகூட்டம் இப்படி போய் போய் சில சமயம் அலுப்பு தட்டிய பொழுது இந்த விழா அழைப்பிதழ்வந்தது. சரி போய் வரலாம் என்று நேற்று மாலை கிளம்பினேன். அந்த அழைப்பிதழிலில் என்ன உடை, என்ன நேரம், காரை எங்கு நிறுத்துவது எனப் பல முன்னரே சொல்லி இருந்தார்கள்.

மாலை 6.30 மணிக்கு துவக்கம் என்று போட்டு இருந்தது. மாலை 6 மணிக்கு வாசிங்டன்நகர பகுதியில் உள்ள மாசூசெட்டஸ் அவென்யுவில் இந்திய தூதரகம் அலுவகம் உள்ளது.அதற்கு நேர உள்ள மிகச்சிறிய பூங்காவில் அண்ணல் காந்தி அடிகள் சிலை இருந்தது. அதனைஓர் புகைப் படம் எடுத்துவிட்டு, விழா அறைக்குள் சென்றேன்.

விழாவிற்கு வரும் பொழுது விழா அழைப்பிதழ், அடையாள அட்டை (நல்லவேலை ரேசன் கார்டுகேட்க வில்லை) கொண்டு வர சொல்லி இருந்தார்கள். எனது நண்பர்கள் சிலர் என்னோடு வரஆசைப் பட்டார்கள், ஆனால் விழா அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே வரலாம் என்று கண்டிப்பாகமின் அஞ்சலில் சொன்ன காரணத்தால் நான் மட்டும் செல்ல நேரிட்டது. அங்கு சென்றால் வழக்கம்போல் கும்பலாக எல்லோரும் உள்ளே சென்று கொண்டு இருந்தார்கள். என் நண்பர்களை நினைத்துமனம் மிக வருத்தப் பட்டது.

வரவேற்பு அறையில் ராசீவ் காந்தி படம், மன் மோகன் சிங், அப்துல் கலாம் படம் மாட்டி இருந்தது.அங்குதான் அனைவரும் கும்பலாக நின்று கொண்டு இருந்தார்கள். கிட்டதட்ட 100 பேர்கள் இருக்கலாம்.நம் இந்திய மக்கள் எல்லோரும் பனராஸ், காஞ்சி புரம் பட்டு புடவைகளிலும், காட்டன் புடவைகளிலும், பளபள சுடிதார்களிலும் ஜொலித்தார்கள் என்றால் மிகை ஆகாது. எல்லோருமே கிட்டதட்ட 45 வயது முதல்65 வயது வரை இருந்தனர். ஆண்கள் பலர் ஜீப்பாகளிலும், கோட் சூட்டும், சிங் மக்கள் நீண்டஅழகான கறுப்பு நிறத்தில் தலைப் பாகையும் அணிந்து இருந்தார்கள். மருந்துக்கு கூட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் (?) காணப் படவில்லை. எல்லோரும் ஹாய், ஹேப்பி தீபாவளி என்று சொல்லி கொண்டுஇருந்தார்கள்.

இந்திய தூதுவர் திரு சென் ஆங்கிலத்தில் 5 நிமிடம் வரவேற்றும் தீபாவளிக்கு வாழ்த்தியும் பேசினார். சின்மாயானந்தா ஆசிரமத்தில் இருந்து சாமியார் ஒருவர் தீபாவளி என்றால் என்ன? என்றும் வந்த எல்லோரையும் வாழ்த்தியும் பேசினார். அந்த சாமியாரிடம் எல்லோரும் பவ்யமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். சாமியாருக்கு அருகில் சூப்பராக இரு பெண்கள் இருந்தார்கள். அவர்களிடம் இரண்டு நிமிடம் கடலை போட்டேன். விழா முழுக்க 90% சதவீதம் ஹிந்தியுலேயே நடந்தது. சொற்பமாய் ஆங்கிலம் இருந்தது.

முக்கியமான கொடுமை என்னவென்றால் மொத்த விழா இரண்டு மணி நேரமும் நின்று கொண்டே பார்க்க வேண்டும். மொத்தமாய் ஓர் 10 சேர்கள் போடப்பட்டு இருந்த்து, அதில் வயதான தாத்தா பாட்டிகள் அமர்ந்து இருந்தார்கள், அதை விட கொடுமை வடக்கு இந்திய பெண்கள் இரண்டு மூன்று பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். அவர்களுக்கு ஓர் சிறிய மேடைக் கூட இல்லை. நடைபாதையில் அருகே, மாடிபடி ஏறும் படிக்கு கீழே பெண்கள் ஆடியது மனதிற்கு மிகுந்த வருத்ததை அளித்தது. என்ன கொடுமை இது?

விழாவிம் சிறப்பம்சம் 11 வயது நேபாள சிறுமி "கதக்" ஆடினாள். நடனம் மிக அருமை. மொத்த கூட்டமும் மெய் மறந்து ரசித்தது. என்னவென்று சொல்வது?கடந்த 7 ஆண்டுகளாக பரத நாட்டியம் பார்த்து பார்த்து போராடித்த என் கண்களுக்கு "கதக்" மிக அருமையாகவும், அவள் சுழன்று சுழன்று ஆடியது பார்ப்போர் கண்களுக்கு விருந்து அளித்தது. என்னடா இந்த 2 மணி நேரமும் சொதப்பலாக ஆகிவிட்டதே என்ற நினைத்த பொழுது இந்த பெண்ணின் நடனம் ஓர் புத்துணர்வை தந்தது. அந்த பெண்ணைப் பார்த்து வாழ்த்தி அவள் குரு யார் என்ற வினவிய பொழுது, அவளின் தந்தை என்ற பொழுது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உணவு மிக அருமை. இனிப்பு ஜிலேபியும், ஜாமூனும் சூப்பர். அசைவம் இல்லாதது சற்று மனதிற்கு வருத்தமாக இருந்தது.

மொத்தத்தில் இந்திய தூதரகத்தில் நடந்த விழா மிக சாதரணமாக இருந்தது. அந்த சிறுமி நடனமும், உணவு நன்றாக இருந்த காரணத்தால் மனதை தேற்றிக் கொண்டு அமைதியாக எஸ்கேப் ஆனேன்.

பரப்பரப்பான வாசிங்டன் மாசூசெட்டஸ் அவென்யூவில் சில்லென்று காற்றில், மிதமான குளிரில் சற்று தூரம் நடந்து வந்தது மனம் சற்று லேசானது. அடுத்த நாள் திங்கள் என்ற பொழுது ஏதோ ஓன்று மனதை அழுத்தியது.

"எவனோ ஒருவன் வாசிக்கிறான், நான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்..." என்ற பாடலை மனதில் ஓடவிட்டு வீட்டிற்கு சென்றேன்.

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, October 12, 2006

Roman Holiday (1953) - திரைப்படம் - ஓர் பார்வை

வார இறுதியில் Roman Holiday என்ற ஆங்கிலத் திரைப் படத்தை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. Hollywoodன் முண்ணனி நட்சத்திரங்கள் ஆன Gregory Peck ம், Audrey Hepburn னும் நடித்த ஓர் காவியம் என்றே சொல்லலாம். விகடனில் வார வாரம் டாப் 10 என்ற பகுதியில் இயக்குனர் ராதா மோகன் இந்த படத்தைப் பற்றி சொல்லி இருந்தார்.

Free Image Hosting at www.ImageShack.us

கதையின் கதாநாயகி (ஆன்) மிகப் பெரிய சாம்ராஜ்ய்த்தின் இளவரசி அல்லது மகாராணி என்றே சொல்லலாம்.ஓரு இளவரசியாக தினம் தினம் பல அரசாங்க தொடர்பு உடையவர்களை சந்திப்பது, பிரபல தொழில்அதிபர்களை சந்திப்பது, காலை முதல் இரவு படுக்க போகும் வரை மணிக்கு மணி என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகள் எல்லாம் அவளை ஓர் கட்டுபாடான அதே சமயத்தில் ஓர் இயந்திர வாழ்க்கைப் போல இருப்பதை அவள் வெறுக்கிறாள். அந்த படத்தை பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது, ஓர் இளவரசிக்கு எப்படிபட்ட ஓர் செயற்கை வாழ்க்கை இருக்கிறது என்று. கொஞ்சம்கூட பொறுந்தாத உடை அணிவது, எல்லோரையும் செயற்கையாக வாழ்த்துவது, சாதரண உடை அணிந்து கூட தூங்க முடியவில்லை என்பதை திரையின் ஆரம்ப காட்சிகளிலே இயக்குனர் மிக அழகாக காண்பிக்கிறார்.

இப்படிப் பட்ட ஓர் செயற்கையான வாழ்க்கையை அவள் ஒதுக்கி வைத்துவிட்டு ஓருநாள் இரவு வெளியே வரத் துணிகிறாள். அந்த அரண்மனைக்கு வரும் துப்புறவு வண்டியில் தப்பித்து நகரத்திற்கு செல்கிறாள். வெளியே மக்கள் சுதந்திரமாக இரவு உணவு விடுதியிலும், சாலை ஓர உணவகங்களில் நேரத்தை கழிப்பதை பார்த்து ரசிக்கிறாள் மற்றும் ஏங்குகிறாள். முடி திருத்தம் நிலையத்தில் தன்னுடைய முடியை நன்கு அழகாக அவளுக்கு பிடித்தமாதிரி திருத்திக் கொள்கிறாள். அப்படியே கலைத்துப்போய் சாலை ஓரத்தில் தூங்கியும் விடுகிறாள்.


அந்த வழியே வரும் கதாநாயகன் (ஜோ) அவளை பார்க்கிறான், அவள் தூக்கத்தில் அவள் அழகு ஆங்கிலத்தில்உளருவதும், ஆங்கில கவிஞர் ஷெல்லியின் கவிதைகளை சொல்வதை பார்த்துதும் அவனுக்கு புரிகிறதுஇவள் பெரிய எடுத்து பெண் என்பது, ஆனால் அவனுக்கு தெரியாது அவள் இளவரசி என்று.அவளை வாடகை காரில் அவள் போக வேண்டிய இடத்தில் அவளை இறக்கி விடலாம் என்றால் அவளோதூக்க கலக்கத்தில் இருப்பதாலும் வேறு வழி இல்லாத காரணத்தாலும் அவளை தன்னுடைய விடுதிக்கேஅழைத்துக் கொண்டு போய் தூங்க வைக்கிறான்.

கதாநாயகன் ஓர் அமெரிக்க செய்தி நிறுவன நிருபர். அடுத்த நாள் அவனுக்கு இதே இளவரசியுடன்பேட்டி எடுக்க வேண்டும். இந்த இளவரசி அரசாங்க மாளிகையில் இல்லாமல் ஓர் இரவு தப்பி விட்டதால்அவனுடைய பேட்டி எடுக்க முடியாமல் போய் விடுகிறது. அரசாங்க அறிவிப்பில் இளவரசியின் புகைப் படத்தை பார்த்து அதிசயப் பட்டு, ஆச்சர்ய பட்டு தன்னுடைய அறையில் இருப்பது இளவரசி என்றுதெரிந்தவுடன் அவளுடன் ஓர் நாள் இருந்து அவளைப் பற்றிய செய்திகளை சேகரிக்க ஓர் புகைப்படநிருபரையும் வாடகைக்கு அமர்த்துகிறான்.

ஓரே ஒரு நாள் ரோம் முழுக்க சுற்றுகிறார்கள் மூவரும். இளவரசி தன்னை மறந்து பொது மக்களோடுமக்களாக, இரவு விடுதியில் ஆடுவதும், அங்கு கலாட்டா நடப்பதும், அங்கு இருந்து அவர்கள் தப்பித்துமீண்டும் அவனது அறைக்கே வருகிறார்கள். அவள் சென்று உடை மாற்றிவிட்டு கிளம்ப வேண்டும் என்கிறாள்.அரசாங்க அறிவிப்பில் அவளின் உடல்நலம் சரி இல்லாத காரணத்தை மக்கள் கவனமாக கவனித்து வருவதாகசொல்லுகிறார்கள். இந்த நாள் அவளுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்கிறாள். அவளின் அரசாங்ககடமை அவளை அழைப்பதாக சொல்கிறாள். அவளும் அரசாங்க இல்லத்திற்கு செல்ல தயாராக இருக்கிறாள்.ஜோ ஏதோ சொல்ல வேண்டும் என நினைக்கிறான், ஆனால் அவள் எதையும் கேட்கவோ சொல்லவோ தயாராக இல்லை, அவனை இறுக கட்டிஅணைத்து ஏக்க பெறுமூச்சு விடுகிறாள்.

Free Image Hosting at www.ImageShack.us

அவன் அவளை சென்று அரசாங்க மாளிகை முன்பு இறக்கி விடுவதற்கு முன்னால் இருவரும் பேசி கொள்வதுபடத்திற்கு மேலும் மேலும் உயிர் ஊட்டுகிறது. "இப்பொழுது உன்னை விட்டு நான் பிரியப் போகிறேன், நான்அந்த பக்கம் போனவுடன் நீ என்னை திரும்பி பார்க்க கூடாது, காரிலேயே அமர்ந்து கொள் என்கிறாள். உன்னிடம் இருந்து எப்படி பிரியப் போகிறேன் என்று தெரியவில்லை, என்னால் எப்படி வார்த்தைகளால் சொல்வது என்று தெரியவில்லை என்று சொல்கிறாள். ஜோ பரவாயில்லை நீ எதுவும் சொல்லவேண்டாம்என்கிறான். இருவரும் இறுக கட்டிஅணைத்து கொள்கிறார்கள், முத்தமிட்டு கொள்கிறார்கள். இருவரும்கலங்குகிறார்கள். அவள் காரின் கதவை திறந்து கொண்டு நடந்து சென்று விடுகிறாள், அவளை அவன்அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

அடுத்த நாள் இளவரசி அரசாங்க கட்டிடத்தில் அனைத்து நிருபர்களையும் சந்திக்கிறாள். ஜோவும் அந்தபுகைப்படகாரனும் அங்கு வந்து இருக்கிறார்கள். அவனைப் பார்த்து கண்ணலேயே பேசுகிறாள். ஓரு நிருபர் உங்களுக்கு எந்த ஊர் பிடிக்கும் என்றதற்கு எல்லா ஊரும் என்ற சம்பிராதயமாக சொல்லமால் "ரோம்" என்கிறாள். புகைப் படங்கள் எடுக்க படுகின்றன. வழக்கத்துக்கு மாறாக இளவரசி இறங்கி வந்து எல்லோருக்கும் கை கொடுக்கிறாள். ஜோவுக்கும் கை கொடுக்கிறாள். மிக்க நன்றி என்கிறாள். மீண்டும் படி ஏறி அவனை ஓர் ஆழமானபார்வை பார்த்து விட்டு அந்த பெரிய மாளிகையின் உள்ளே அவள் அழைத்து செல்லப் படுகிறாள்.

எல்லோரும் சென்றுவிட்டு பிறகு அவன் அமைதியாக அவள் சென்ற இடத்தையே பார்த்து கொண்டு நடந்துமெதுவாக வருகிறான். அந்த அரசாங்க மிக பெரிய மாளிகையை ஓர் முறை திரும்பி பார்க்கிறான் படம்அப்படியே முடிந்துவிடுகிறது. இந்த பூமியில் நிறைவேறின காதலைவிட நிறைவேறாத காதலே அதிகம் என்று எப்பொழுதோ இயக்குனர் சிகரம் திரு பாரதிராசா சொன்னதாக நினைவு.

இந்த படம் ஓர் வரலாற்று காவியம், மிக சிறந்த காதல் கதை, நாயகி முதல் படத்திலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்றவர். இந்தப் படம் கிட்டதட்ட 10 ஆஸ்கார் விருதுகளுக்குபரிந்துரைக்கப் பட்டு 3 பரிசுகளை(சிறந்த திரைக் கதை, கறுப்பு வெள்ளைகான உடை, சிறந்த கதாநாயகி)தட்டி சென்றப் படம். Hollywood ன் மிகப் பிரபலமான இயக்குனர் William Wyler இந்தத் திரைப் படத்தை இயக்கி உள்ளார்.

ஓய்வு இருந்தால் பாருங்களேன். நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமும் கூட.

நன்றி

மயிலாடுதுறை சிவா...




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, October 02, 2006

பாட்டி, தாத்தாவிற்கு சமர்பணம்.

ரொம்ப நாளாகவே தாத்தா பாட்டியைப் பற்றி ஓர் பதிவு போட வேண்டும் ஓர் ஆசை.

இந்த பதிவு ஓவ்வோரு பேரனுக்கும் பேத்திக்கும் பிரதி உபகாரம் எதிர் பாரமால் உதவிசெய்யும் தாத்தா பாட்டிக்கு சமர்பணம்.

இது ஓர் உண்மை சம்பவம்....

நான் அமெரிக்கா வந்து கிட்டதட்ட 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலப் போக்கில்நிறைய தமிழ் குடும்பங்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ் நாட்டில் இருந்துவந்து இங்கு வந்து படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ வந்து இருக்கும்பலருக்கு இங்குள்ள தமிழ் நண்பர்கள் பலரே நமது குடும்பங்கள், உறவினர்கள், சகோதர சகோதிரிகள். காலப் போக்கில் நமது குடும்பத்தில் அக்கறையோடு பழகும்நண்பர்கள் நிச்சயம் கிடைக்கும். அந்த குடும்ப நண்பர்களோடு கொஞ்ச கொஞ்சமாகநமது குடும்ப விசயங்கள், பொருளாதார சூழ்நிலைகள், பங்காளி சண்டைகள், எதிர்கால திட்டங்கள் இப்படி பலவற்றை பேச நமக்கு சந்தர்பம் கிடைக்கும், அதுவேமிகப் பெரிய ஆறுதலும் கூட. பல சமயங்களில் அரசியல் கருத்து வேறுபாடுகள்,கருத்து மோதல்களும் ஏற்படும். பிறகு மீண்டும் அவர்களோடு நாம் சில அல்லது பலவற்றை பேச ஆரம்பித்து விடுவோம். நமக்கும் அவர்களை விட்டால் வேறு வழியில்லை, அவர்களுக்கும் நம்மைவிட்டால் வேறு வழியில்லை கதைதான்.

இப்பொழுது கதைக்கு வருகிறேன்...

எனக்கு ஓர் குடும்ப நண்பர் இருக்கிறார். அவர் வேதியில் துறையில் முனைவர் பட்டம்பெற்றவர். கோவை அருகில் உள்ள கோத்தகிரி சொந்த ஊர். காலப் போக்கில் அவரும்அமெரிக்கா வந்து விட, கணணித் துறையில் நன்கு படித்து, கடின உழைப்போடு நல்லவேலையில் இருகிறார். அவருக்கு குடும்ப பாசம் மிக அதிகம். அவருக்கு அப்படிதானாஅல்லது "படுகா இனத்தை" சேர்ந்த அனைவரும் அப்படியா என்ற சந்தேகம் எப்பொழுதும் உண்டு.

அவருக்கு இரண்டு அண்ணன் ஓரு தம்பி ஓர் தங்கை. எல்லோரும் திருமணம் ஆகி நல்ல நிலைமையில் உள்ளவர்கள். ஓர் அண்ணன் மருத்துவர், அண்ணியும் மருத்துவர். அண்ணன்சென்னையில் படித்துவிட்டு அங்கேயே பிரபல மருத்துவரிடமும், பிரபல மருத்துவ மனையிலும்வேலைப் பார்த்துவிட்டு 6 ஆண்டுகளுக்கு முன்பு பகாமாஸ் என்ற தீவிற்கு வேலைக்கு வந்துவிட்டனர். அண்ணிக்கும் அதே மருத்துவ மனையில் வேலை. மிக பரபரப்பான சென்னையில்இருந்துவிட்டு பகாமாஸ் வந்து இருந்தது மிக பெரிய ஆறுதலாகவும் நல்ல வேலையில்இருப்பதாலும் அமைதியாக வாழ்க்கையை தொடர ஆரம்பித்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எல்லோர் வாழ்க்கையிலும் வர கூடிய பிரச்சினை தலை எடுத்தது.அதாவது அவர்கள் பையன் 10 வகுப்பில் இருந்து 11 வகுப்பு செல்ல ஆரம்பித்த காலம். மிக நன்றாக படிக்க கூடிய ஆர்வம் உள்ள மாணவன் அவர்களது மகன். இவர்களுக்கு தன்னுடையமகனை எப்படியாவது மருத்துவ படிப்பு கிடைத்து விடாதா என்ற ஏக்கம், மிக நியாயமான கனவும் கூட.

இவர்களோ பணி நிமித்தம் காரணமாக பகாமாஸில். மகனோ கோவையில். என்ன செய்வது? தாயுக்கும் தந்தைக்கும் மகனை அருகில் இருந்து நன்கு கவனித்து கொண்டு அவனை எதிர்காலகனவுகளில் அவனை முறையான பாதையில் செலுத்த வேண்டும் என்ற மனப் போராட்டம்.

இங்குதான் நம் கதாநாயகி, பாட்டியும் கதாநாயகர் தாத்தாவும் முன் வந்தார்கள் இவர்கள்பிரச்சினையை அவர்கள் முடித்து வைக்க. இந்த பாட்டி தாத்தா அம்மாவிம் அப்பா அம்மா.

பேரன் ராசிபுரத்தில் உள்ள பிரபல பள்ளியில் 11 வகுப்பை தொடர்ந்தான். தாத்தாவிற்கு வயது கிட்டதட்ட63 வயது இருக்கலாம். பிரபல மருத்துவர். கோத்தகிரியில் உள்ள தன்னுடைய மருத்துவ சேவையை விட்டுவிட்டு, ராசி புரத்தில் தாத்தாவும் பாட்டியும் பேரனும் ஓர் நல்ல வீடு எடுத்து தங்கினார்கள். பாட்டியின்வேலை அவனை வேளா வேலைக்கு நல்ல சத்தான உணவை ஆக்கி தருவது, நேரத்திற்கு தூங்க வைப்பது. தாத்தா அவனுக்கு நல்ல ஆலோசனைகளையும், தன்னம்பிக்கையும் தருவது. தாத்தா பகல் பொழுதில் அங்குள்ள பலருக்கு மருத்துவ சேவையை தொடர்ந்தார்.

இரண்டு ஆண்டு காலம் உருண்டு ஓடிற்று. தேர்வுகள் வந்தன. பேரன் நன்கு அனைத்து தேர்வுகளையும்எழுதினான். மதிப் பெண்கள் வந்தன. 95% மதிப் பெண்கள் எடுத்து இருந்தான். நுழைவு தேர்விலும்94% எடுத்து இருந்தான். நிறைய மதிப் பெண் எடுத்து இருந்தும், சென்ற ஆண்டுகால மதிப் பெண்களை ஓப்பிட்டு பார்த்ததில் அவனுக்கு மருத்துவம் கிடைக்குமா கிடைக்காதா என்று கவுன்சலிங் வரை காத்து இருக்கவேண்டும் என்ற கட்டாயம்.

பாகமாஸில் இருந்து அப்பாவும் அம்மாவும் கடந்த காலங்களில் சம்பாரித்த பணத்தோடு கோவை சென்றார்கள். கவுன்சிலிங் நாள் வந்தது. மகனுக்கு கோவை மருத்துவ கல்லூரியிலேயே மருத்துவ மேற்படிப்பிற்கு இடம் கிடைத்தது. பெற்றோருக்கு அளவில்லா ஆனந்தம்.

அவனுடைய இந்த வெற்றிக்கு யார் காரணம்? பாட்டி - தாத்தா அல்லாவா? கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தங்களுடைய வாழக்கையை பேரனுக்கு அர்பணித்தை பார்க்கும் பொழது தாத்தா - பாட்டி என்று சொல்லுக்கு எவ்வளவு பெரிய மரியாதையை சேர்த்து வைத்துள்ளார்கள். இப்படியும் ஓர் தாத்தாவா? எனக்கு மாபெரும் ஆச்சர்யம்? காரணம் அவர் ஓர் மருத்துவர். தனக்கென்ற ஓர் வாழ்க்கை உள்ளவர். மகளின் பையனுக்காக இரண்டு ஆண்டு காலம் வெளியூரில் தங்கி பேரனை மருத்துவர் ஆக்கிவிட்டாரே என்று நினைக்கும் பொழுது மனம் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகிறது.

இந்த தாத்தா பாட்டி மட்டும் அல்ல, அமெரிக்காவில் / வெளிநாட்டில் உள்ள மகளுக்கோ மகனுக்கோ குழந்தை பிறந்தவுடன் இங்குவந்து கிட்டதட்ட 6 மாதம் முதல் 12 மாதம் வரை இருக்கும் பல தாத்தா பாட்டிகளை நினைக்கும் பொழுதும் மனம் மகிழ்ச்சி அடையதான் செய்கிறது.

இயற்கை தாய் தாத்தா பாட்டிக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரட்டும்....

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது