Saturday, May 26, 2007

கலைஞர் - திருமா - என் மனம் கவர்ந்த தலைவர்கள்

வாசிங்டன் மே 27 2007

என்னுடைய இரண்டாவது முறை நட்சத்திர பதிவு இன்றுடன் முடிவு அடைகிறது. இந்த தருணத்தில் என் மனம் கவர்ந்த, பாதித்த என் இரு அரசியல் தலைவர்களை பற்றி பகிர்ந்து கொள்வது என் விருப்பம்.

முதலில்

தமிழ் இனத்தின் கடுமையான உழைப்பாளி, தமிழ் மொழிக்கு தன்னை அர்பணித்து, திராவிட கலாச்சாரத்தை தந்தை பெரியாருக்கு பிறகு, அண்ணாவிற்கு பிறகு ஓர் நீண்ட காலம் தமிழ் மக்களை தமிழின்பால் இணைத்துக் கொண்டு இருப்பவரும், தன் வாழ் நாளில் தான் சந்தித்தை மகிழ்ச்சிகளை விட, கடும் போராட்டங்களையும், துயரங்களையும், துன்பங்களையும் கடந்து வருபவர், இந்த தளராத 86 வயதிலும் இன்னமும் தமிழ் இனத்திற்கு பாடுபடும் ஒரே தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திரு மு கருணாநிதி.

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

ஆயிரம் கருத்து வேறு பாடுகள், குறைகள் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள். வருகிற சூன் மாதம் 3ந் தேதி அவருக்கு பிறந்த நாள். அவர் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இயற்கை தாய் அவருக்கு நல்ல உடல் மற்றும் மன நலத்தை தரட்டும்....

Free Image Hosting at www.ImageShack.us

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....!!!


அடுத்த தலைவன்

ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் பட்ட, தாழ்த்தப் பட்ட, அடித் தள மக்களுக்கு போராடும் மற்றொரு தலைவன், காலம் எப்பொழுதும் ஓர் அறிய தலைவனை மக்களுக்கு இனம் காட்டும், அப்படிப் பட்ட தலைவனே அண்ணன் தொல். திருமாவளவன். காலம் மக்களுக்கு பாடுபடுகின்ற தலைவனை அடையாளம் காட்டத்தான் செய்யும்.

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />


"இந்துத்துவத்தை வேர் அறுப்போம், இழந்த முகத்தை மீட்டு எடுப்போம்" என்பது திருமாவின் கொள்கை. இதன் முழுமையான பிண்ணனி எனக்கு பிடித்து இருக்கிறது. அண்ணனின் "தமிழ் பாதுகாப்பு இயக்கம்" என்னை மேலும் கவர்ந்தது. சாதி ஒழிப்பிற்கும், தமிழ் தேசியத்திற்கும் போராடும் அண்ணன் தொல் திருமா அரசியல் உலகில் மேலும் மேலும் முன்னேறி ஒடுக்கப் பட்ட மக்களுக்கு மேலும் மேலும் ஓர் நல் வழியை காண்பிப்பார் என்று முழுமையாக நம்புகிறேன்....

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />


கடந்த ஓரு வாரம் என்னுடைய பதிவை படித்து பாராட்டிய, படித்து ரசித்த அனைத்து தமிழ் வலைப்பூ மக்களுக்கும் என்
மனதார நன்றிகள் பல...

மீண்டும் வருவேன்....

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, May 25, 2007

தமிழ் மறைகள் - நம் தாய் மொழியில் விழாக்கள்...

வாசிங்டன். மே 26 2007

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் நாக இளங்கோவன் இதனை எழுதி இருந்தார். இதை படித்தவுடன் மனம் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மொழி புரியாத சமஸ்கிருத்தில் திருமணம், காது குத்துதல், பிறந்த நாள், புதுமனை புகுவிழா,
இறப்பு, புதுக் கடைக்கு பூஜை போடுதல், எந்த ஓரு நம் வீட்டு விழாவிற்கும் நாம் பிறரை நம்பி அவர்களுக்கும் முழுக்க புரியுமா என்று நமக்கு தெரியவில்லை, நமக்கும் மொழிப் புரியாமல் நாம் தவித்த தவிப்பு இருக்கிறதே, அதற்கு நாக இளங்கோவன் செய்ததைப் போல் நாம் அனைவரும் பின் பற்றினால் நம் மொழிக்கும் பெருமை, நமக்கும் நாம் என்ன செய்கிறோம் என்று தெரியும். நம் மொழி வளர இதுப் போல் தமிழர்கள் பின் பற்றினால் நமக்கும் மகிழ்ச்சி....


வாழ்க தமிழ் ! வளர்க்க அதன் புகழ்!!!

************************************************************************************** தமிழ் மறைகள்

தமிழ் மறைகள் கொண்டு, இல்லத்தில், கோவிலில் விழாக்கள் செய்வது பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கேட்டிருக்கிறோம். ஆயினும் இது தமிழ் நாடானதால் தமிழில் பரவலாக தமிழ் முறையில் வழிபாடுகள் மற்றும் விழாக்கள் நடைபெறுவது குறைவு அல்லது இல்லை எனலாம்.

சமீபத்தில் எங்கள் புதிய இல்லம் புகு விழா ஒன்று அமையும் வாய்ப்பு அமைந்தது. இல்லத்தை விட, அவ்விழாவைத் தமிழ் முறையில் தமிழ் மறைகளைக் கொண்டு செய்ய வேண்டும் என்று முனைப்புடன் இருந்தோம்.

குழந்தை பிறப்பு முதல் மனித வாழ்வு முழுக்க எல்லா நிகழ்வுகளையும் தமிழ் முறையில் தமிழ் மறைகள் கொண்டு செய்ய முடியும் என்பதை எங்கள் இல்ல விழா நடந்த போது உணர்ந்தோம்.

தமிழ் வழியில், யாரை வைத்துச் செய்வது என்று வினவியபோது பேராசிரியர் மறைமலை அய்யா எனக்குத் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்து பேருதவி செய்தார். வேள்விச் சதுரர் சத்தியவேல் முருகனார் என்ற மூத்த சிவனடியாரும், அவரின் சீடர்களும் இத்தமிழ்ப் பணியைத் தமிழகமெங்கும் செய்து வருகின்றனர்.

அவரைத் தொடர்பு கொண்டபோது இந்த மாதம் முழுக்க வேலை இருப்பதால் "என் சீடர் சிவப்பிரகாசத்தை வைத்துச் செய்யுங்கள்" என்று சொல்லிவிட, நானும் சரி சீடராக இருப்பதால் 50, 55 அகவையுடையவராக இருப்பார் என்று எண்ண, வந்த சிவப் பிரகாசம் என்ற அந்த சிவனடியாரோ 73 அகவையுடைய சிவ நெறியாளர். அவருக்குத் துணையாக வந்த அடியாரோ 50க்கும் மேல் அகவையுடையவர்.

இருவரும் முதல் நாளே என் இல்லத்துக்கு வந்து மிகுந்த பொறுப்புடனும், நெறியுடனும் மறுநாளைக்குத் தேவையான வற்றை நள்ளிரவு வரை கவனமாக ஏற்பாடு செய்து விட்டு மூன்று மணிநேரம் ஓய்வெடுத்தனர் இரவில்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் இருந்து தேவாரத்தையும், திருவாசகத்தையும் அவற்றிற்கே உரிய இயல்பான இசைநயத்தோடு இருவரும் பாடப் பாட வீடு முழுக்க தமிழால் நனைந்தது. ஓதுவார் என்றால் ஏதோ பாட்டுப் பாடுவோர் என்ற என் எண்ணம் அடியோடு மறைந்தது.

பாடல்களை அவர்கள் நாவிலிருந்து பாடவில்லை போலும். வந்து பாய்ந்த தேன் தமிழ் எல்லாம் அவ்வடியார்களின் நாபிக் கமலங்களில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். புகை மிகாத வேள்வி, நவகோள் வழிபாடு, திண்ணிய மனம் பெற வழிபாடு (வடமொழியில் சங்கல்பம் எனப்படுமாம்), திருமகள் வழிபாடு, பால் காய்ச்சுதல் போன்ற அனைத்தையும் அடுக்கடுக்கான விளக்கங்கள், திருக்குறளில் இருந்து மேற்கோள்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துச் சொல்லி எடுத்துச் சொல்லி பாடல்களைப் பாடிய விதம் அனைவரையும் அமைதியிலும், வியப்பிலும் ஆழ்த்தியது.

பால் காய்ச்ச அடுப்பைப் பற்ற வைக்கும் போது திருவருட்பாவில் இருந்து அருட்பெருஞ்சோதியை அழைத்துப் பாடிய பாடல் அனைவரையும் உணர்வு வயப் படுத்தியது.

இரண்டு, இரண்டரை மணி நேரம் அவர்கள் பாடிய பாடல்கள், அளித்த விளக்கங்கள் என்னை மெய் மறக்கச் செய்தன; திருவருட்பா பாடியபோது என் கண்கள் பனித்தன;

தமிழும் ஆன்மீகமும் எங்கள் இல்லத்தை நிறைத்திருக்க, வந்திருந்த அனைவரும் ஆகா, இதுவல்லவா மறை, முறை; இத்தனைக் காலம் எந்த விழாவிலும் என்ன சொல்கிறார்கள் என்று தெரியாமலே அல்லவா இருந்தோம் இத்தனை இனிமையானதா இது என்று வியந்து போயினர். வந்திருந்த தமிழ்ச் சிவனடியார்களோ ஏதோ எங்கள் இல்லத்தை சிறந்தோங்கச் செய்வதே அவர்களின் வாழ்க்கை இலக்கு என்றது போல அவர்கள் காட்டிய கனிவும், பொருள் பொதிந்த விளக்கங்களும், காட்டிய கட்டுப்பாடும் அவர்களின் நேர்மையைக் காட்டின.

இப்படிப் பட்ட பெரியோர்கள், செந்தமிழால் இல்லம் துலக்கி விடும் விழா முதற்கொண்டு திருமணம், காதுகுத்து, பூப்பு, பிறந்த நாள் விழா என்று அனைத்து விழாக்களுக்கும் விதிகளையும், தக்க தமிழ் மறைகளையும் வைத்துள்ளனர். நல்விழாக்கள் மட்டுமல்ல நீத்தார் கடன் போன்றவற்றையும் செய்கிறார்கள்.

கடந்த வருடம் என் நண்பர் ஒருவருக்கு நானும் பேரா.மறைமலை அவர்களும் இத்தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆயினும் அவ்விழாவில் என்னால் கலந்து கொள்ள வியலவில்லை. இம்முறை நாங்களே செய்த போது அதன் பயனை முழுவதும் பெற்றதாக உணர்ந்தோம்.

முழுக்க முழுக்கத் தமிழ் முறைகளில் விழாக்கள் நடத்தும் நல்லோர் திரளை அறிந்து கொண்டதும் அவர்களை வைத்து எங்கள் இல்ல விழாவை நடத்தியதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியும் மன நிறைவும் ஆகும். உலகெங்கும் இவர்களின் ஊழியம் படர்ந்து தமிழ் நிறைய வேண்டும் என்பதே என் இறைவணக்கம்.

"யாம் பெற்ற இன்பம் இவ்வையம் பெறல் வேண்டும்!"

தொடர்புகள் விவரம்:

1. தமிழ் வேள்விச் சதுரர் திரு.சத்தியவேல் முருகனார், பி.ஈ, எம்.ஏ
தொலைபேசி எண் +91 44 2253 1545

2. திரு.சிவப்பிரகாசம்
தொலைபேசி எண் +91 44 2245 2691

மனதார நன்றி பல : நாக.இளங்கோவன், சென்னை

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, May 24, 2007

நான் ரசித்த மகா கவிஞன் - கண்ண தாசன்

வாழ்க்கையில் எத்தனையோ திரைப் பட பாடல்களை கேட்கிறோம் அவற்றுள் சில அப்படியேமனதில் தங்கி விடும், பல மறந்து விடும். அப்படி என் மனதில் என்றென்றும் நீக்கமற நிறைந்தஇருப்பவர் காலம் சென்ற கவிஞர் கண்ணதாசன். இவரின் எத்தனை எத்தனை பாடலகள் என்மனதை பாதித்து, ரசித்து, அசைப் போட்டு அப்படியே மனதில் ரீங்காரம் ஈட்டு கொண்டுகிறதுதெரியுமா? காதல் பாடல் ஆகட்டும் அல்லது தத்துவ பாடல் ஆகட்டும் கண்ணதாசனுக்கு ஈடு இணை இல்லை என்பது தாழ்மையான கருத்து. அடுக்கு அடுக்காக என்னால் எத்தனையோ பாடல்களை கோடிட்டு காண்பிக்க முடியும். என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று இருக்கும் ஓருசிலப் பாடல்களை பார்க்கலாமா?

அவள் ஓரு தொடர்கதை படத்தில் காலம் சென்ற நடிகர் ஜெய் கணேஷ் வாசைத்து பாடிய பாடல்"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு" இந்த கண்ணதாசன் வரிகளை ஜேசுதாஸ் பாட கேட்க எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். தமிழகத்தில் இருக்கும் பொழுது ஜேசுதாஸ் பாடி இதனை நேரில் கேட்க வேண்டுமே என்று ஏங்கியது உண்டு. அந்த பொன்னான வாய்ப்பும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாந்தில் உள்ள ஓர் பல்கலை கழகத்தில் 1500 அமர்ந்து இருக்க கூடிய சபையில் ஜேசுதாஸ் "தெய்வம் தந்த வீடு" பாடலை தமிழில் ஆரம்பித்து அப்படியே தெலுங்கில் தாவி மீண்டும் தமிழில் முடித்தாரே, ஆஹா என்ன வென்று சொல்வேன், எப்படி சொல்வேன்? அதை கேட்டு பார்த்து ரசிக்க வேண்டு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

இதோ அந்த பாடல் :

தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு!
இந்த ஊரு என்ன, சொந்த வீடு என்ன ஞான பெண்ணே!
இந்த ஊரு என்ன, சொந்த வீடு என்ன ஞான பெண்ணே!
வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன! வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன! (தெய்வம் தந்த....)


நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா?..........
இல்லை என் பிள்ளை என்னை கேட்டு பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி.........
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி!
ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன? அடியே நீ என்ன? ஞான பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (தெய்வம் தந்த....)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி, போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டகாரன் இதுதான் என் கட்சி!
கொண்டது என்ன.....கொடுப்பது என்ன?
இதில்தாய் என்ன? மணந்த தாரம் என்ன? ஞான பெண்ணே!வாழ்வின் பொருள் என்ன? நீ வந்த கதை என்ன?


தெளிவாக தெரிந்தாலே சிந்தாந்தம்,
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணை தோண்டி கண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன், இதுதான் என் கட்சி!உண்மை என்ன? பொய்மை என்ன? இதில்
தேன் என்ன? கடிக்கும் தேள் என்ன? ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன? நீ வந்த கதை என்ன? (தெய்வம் தந்த....)

இந்த பாடலில் என் மனதை மிகவும் கவர்ந்த வரிகள் நிறைய உள்ளன.
"காட்டுக்கேது தோட்டகாரன் இதுதான் என் கட்சி!" சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கு இதைவிட எளிதான வரியை எப்படி சொல்ல முடியும்...

"என்னை தோண்டி ஞானம் கண்டேன், இதுதான் என் கட்சி!"உன்னையே நீ உணர வேண்டும் என்பதை எவ்வளவு எளிமையாக சொல்லி இருக்கிறான் இந்த தத்துவ கவிஞன்...

தத்துவத்திலே இந்த கவிஞன் அடைந்த உயரம் எவ்வளவோ?!
இன்னொரு பாட்டிலே,

ஆட்டிவித்தால் யார் ஒருவன்.....
"கடல் அளவே இருந்தாலும் மயங்க மாட்டேன், அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன்" என்று சொன்னாரே, தன் வாழ்க்கையை அப்படியே இந்த வரிகளில் வாழ்ந்து இருக்கிறார் கண்ணதாசன்...

"போனால் போகட்டும் போடா" என்ற பாடலை சொல்வதா? "சட்டிச் சுட்டதடா" என்ற பாடலை சொல்வதா?
"ஓர் கோப்பையிலே என் குடியிருப்பை" சொல்வதா?
"பொன்னை விரும்பும் பூமியிலே" சொல்வதா?

"பாஞ்சாலி உன்னிடத்தில் கீதை கேட்டாள், நான் இருக்கும் நிலையில் உன்னிடன் என்ன கேட்பேன்?

"இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்....." இதை விட இன்னோரு வரி கண்ணதாசனால் எழுத முடியுமா? என்று நான் வியந்தது உண்டு.

"நான் படைப்பதினால் நான் இறைவன் என்றார் கண்ணதாசன்"

காலத்தை வென்ற கண்ணதாசனின் வரிகள் என்னெற்றும் நிலைத்து இருக்கும்....

அதிக மன அழுத்தம் இருக்கும் பொழுது கண்ணதாசன் பாடல்கள் எவ்வளவு ஆறுதல் தெரியுமா?

மீண்டும் ஓரு காலக்கட்டத்தில் இன்னும் பலப் பாடல்களை மீட்டு எடுப்போம்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, May 23, 2007

தாய்த் தமிழ் பள்ளிகள்...

வாசிங்டன் மே 2007

இந்த பதிவை படித்துவிட்டு நீங்கள் தமிழகம் போகும் பொழுது சென்று வந்தால் அதுவே இக் கட்டுரைக்கு வெற்றி...


ஆங்கில மோகத்தையும் மேற்கத்திய கலாசாரத்தையும் நோக்கி வெகு வேகமாக இன்று நகர்ந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் இனம். 'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்பது போய், 'தமிழ் இனி வேகமாகச் சாகும்' என்ற நிலை வந்து விடுமோ என்று நாம் நினைக்கும் முன், அந்த வேகத்தை சற்றே இழுத்துப் பிடித்து தமிழ் இனத்தை சிந்திக்க வைத்திருக்கிறது இப்பொழுது ஆங்காங்கே தமிழ் நாட்டில் முளைத்துக் கொண்டிருக்கும் 'தாய்த் தமிழ் பள்ளிகள்'.

முக்கியமாக, வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கவனத்தை தாய்த் தமிழ் பள்ளிகள் வெகுவாக ஈர்த்திருக்கின்றன. இப்பள்ளிகளைப்பற்றி கேள்விப்பட்டவர்கள், தமிழ் நாடு செல்லும் போது நேரில் சென்று அந்தப் பள்ளிகளை பார்க்கிறார்கள். அந்த பள்ளிகளின் நோக்கம், செயல்படும் விதம், அங்கே வேலை செய்பவர்களின் ஈடுபாடு இவையெல்லாம் எதிர்காலத்தில் தமிழ் சீரும் சிறப்புமாக வாழும் என்ற நம்பிக்கையை தமிழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

நியூ ஜெர்சியில் வசிக்கும் குழந்தைகள் நல மருத்துவர் சுந்தரம் அவர்கள் தாய் தமிழ்ப் பள்ளியைப் பற்றி முன்பு எதுவும் அறிந்திருக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு நடந்த தமிழ்ச் சங்கப் பேரவை விழாவின் போது, தாய்த் தமிழ் பள்ளியைப் பற்றிய உரையைக் கேட்ட பிறகும், விழா மலரில் வெளியாகியிருந்த கட்டுரையப் படித்த பிறகும் தாய்த் தமிழ் பள்ளியை நேரில் பார்க்கவெண்டும் என்ற ஆவல் அவருக்கு எழுந்தது. சென்ற ஆண்டு அவரது சொந்த ஊரான திருப்பூரில் இருக்கும் தாய்த் தமிழ் பள்ளியில் இரண்டு மணி நெரம் செலவிட திட்டமிட்டு அங்கே சென்றார். அங்கு சென்றபின் அவர் செலவிட்ட நேரமோ இரண்டு நாட்கள்! அந்த பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று குழந்தைகள் பாடம் கற்கும் விதத்தை பார்த்து வியந்தார். அங்கிருக்கும் ஆசிரியர்களிடம் பேசினார். பள்ளி நிகழ்ச்சிகளையும், தலைமை ஆசிரியருடன் அவர் நடத்திய கலந்துரையாடலையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களை தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு உதவுமாறு ஊக்குவித்தும் வருகிறார்.


தாய்த் தமிழ் பள்ளிகள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியே இருக்கின்றன. குடிசைகளிலும், மண் தரைகளிலும் தான் வகுப்புகள் நடக்கின்றன. அங்கே பணி புரியும் ஆசிரியர்களுக்கு அதிக பட்சம் 800 அல்லது 1000 ரூபாய்கள் மட்டுமே மாதச் சம்பளம் கிடைக்கிறது. மற்ற பள்ளிகளில் வேலை செய்தால் 2000 ரூபாய்களுக்கு மேல் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். எனினும் அவர்கள் தமிழ் மேல் உள்ள பற்றினால் தாய் தமிழ் பள்ளிகளில் மிகுந்த ஈடுபாடுடன் வெலை செய்கிறார்கள். தாய்த் தமிழ் பள்ளிகளில் எல்லா பாடங்களும் முழுக்க முழுக்க தமிழிலேயே கற்று கொடுக்கப்படுகிறது. தாய் மொழியில் கல்வி பயின்றால், அது குழைந்தைகளுக்கு சுலபமாக மனதில் பதியும் என்பதே இப்பள்ளிகளின் அடிப்படை நம்பிக்கை.

திருப்பூர் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழைந்தைகள் படிக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் மூன்றாம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக கற்றுகொடுக்கப்படுகிறது. பாடங்களுடன் சேர்த்து அன்பு, பண்பு, வீரம், மரியாதை ஆகியவையும் கற்றுகொடுக்கப்படுகிறது.

அரசாங்க பள்ளிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தாய்த் தமிழ் பள்ளி மாணவர்கள் பொது அறிவில் பல மடங்கு முன் நிலையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம், கல்வி கற்பிக்கப் படும் விதம். தாய் தமிழ் பள்ளியின் கல்வித் திட்டம், மிகுந்த கவனத்துடன் தீட்டப்படுள்ளது. தேவையற்ற செய்திகள், கருத்துக்கள் மாணவர்களை சென்றடையக்கூடாது என்பதில் ஆசிரியர்கள் திடமாக இருக்கிறார்கள். அதற்குப் பல உதாரணங்களை சொல்லலாம்.

திருப்பூர் பள்ளி வகுப்பறைகளில் 'மெல்லத் தமிழ் இனி வாழும்' என்று பலகையில் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் அங்கே மாட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தில் 12 எண்களுக்கு பதில் "அ" வில் தொடங்கி 12 தமிழ் எழுத்துக்களும் உள்ளன. என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை! "வணக்கம் அய்யா", "வெற்றி நிச்சயம்", "மீண்டும் சந்திப்போம்" - இது போல மாணவர்கள் தூய தமிழ் பேசுகிறார்கள். மருத்துவர் சுந்தரம் அவர்கள் கையை
கட்டிகொண்டு நின்று கொண்டிருந்த போது, ஒரு குழந்தை அவரிடம் வந்து "அய்யா நீங்கள் ஏன் கையை கட்டிகொண்டு நிற்கிறீர்கள்? அப்படி நின்றால் நீங்கள் 'அடிமை' என்று அர்த்தம். கைகளை கட்டாதீர்கள்" என்று சொல்லியதை கேட்டு தான் பிரமித்து போய்விட்டதாகச் அவர் சொன்னார்.

ஒவ்வொரு பயிற்சியும் குழந்தைகளுக்கு பிடித்த வடிவத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. உதாரணமாக "இந்த பழம் புளிக்கும்" என்ற கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு நரி திராட்சை தோட்டத்தில் உயரத்தில் இருக்கும் திராட்சையை பறித்து தின்பதற்காக முயற்சித்து முடியாமல் போனதும், "சீ..இந்த பழம் புளிக்கும்' என்று சொல்லிச் சென்றுவிடும்.ஒரு காரியத்தில் தோல்வி ஏற்பட்டால் அதை கைவிட்டுவிடவேண்டும் என்பது ஒரு தவறான செய்தி. இது குழந்தைகளுக்கு தேவை இல்லை. எனவே அந்த கதையை மாற்றி அந்த நரி திராட்சை பழத்தை எட்டி பறிக்க முடியாததால், தன் நண்பனான மற்றொரு நரியை அழைத்து வந்து, அதன் முதுகில் ஏறி திராட்சையை பறித்தது என்று சொல்லிகொடுக்கிறார்கள். இது போலவே "Rain rain go away. Come again another day" என்ற பாடலை நம் குழந்தைகள் பல வருடமாக படித்து வருகிறார்கள். ஆனால் இந்த பாடல் நம் சூழலுக்கு ஏற்றதா? கட்டாயம் இல்லை.


தமிழ் நாட்டிற்கு மழை அவசியம் தேவை. மழை வேண்டும் என்று எத்தனை பேர் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள்? அப்படி இருக்கும் போது நம் குழந்தகள் எல்லாம் "மழையே மழையே போய்விடு" என்று பாடினால் அது முரண்பாடாக உள்ளதே! எனவே இந்தப் பாடலையும் மாற்றி "மழையே மழையே வா வா. மண்ணை ஈரமாக்க வா வா" என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். மற்றுமொரு வியப்பான செய்தி - எப்பொழுது விடுப்பு விடுவார்கள் வீட்டுக்கு செல்லலாம் என்று பள்ளி மாணவர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் தாய்த் தமிழ் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு விடுப்பு வேண்டாம் என்று
சொல்கிறார்களாம்!. இப்படி பல சிறந்த உதாரணங்களை சொல்லிகொண்டே போகலாம்.

ஆரம்பத்தில் பெற்றோர்கள் தாய்த் தமிழ் பள்ளிகளில் தம் குழந்தைகளை சேர்க்கத் தயங்கினார்கள். ஆங்கிலக் கல்வி தான் கெளரவமானது என்ற தவறான கருத்து தமிழ் நாட்டில் இருப்பது தெரிந்தது தானே!. போகப்போக தாய்த் தமிழ் பள்ளிகளில் படிக்கும் குழந்தகளின் அறிவு வளர்ச்சியைப் பார்த்ததும் பெற்றோர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.


1995 ஆம் ஆண்டு 25 குழைந்தகளுடன் தொடங்கப்பட்ட திரூப்பூர் பள்ளியில்இன்று 560 குழந்தைகள் படிக்கிறார்கள். பெற்றோர்களின் அங்கீகாரம் கிடைத்துவிட்டாலும், அரசாங்கத்தின் முழு அங்கீகாரம் இன்னும் இந்தப் பள்ளிக்கு கிடைக்கவில்லை. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் செவ்வனே வளர்க்கும் கருவியாக தாய் தமிழ் பள்ளிகள் செயல்படுவதால், இந்த பள்ளிகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் தம்மால் இயன்ற பொருளாதார, மனித நேய மற்றும் கல்வி உதவிகளைச் செய்யவேண்டும் என்று மருத்துவர் சுந்தரம் வலியுறுத்துகிறார்.

தாய் தமிழ் பள்ளிகளுக்கு உதவ ஒரு அமைப்பு வட அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பெயர் "INTERNATIONAL EDUCATIONAL FOUNDATION INC". இதன் செயற் குழு உறுப்பினர்கள் வட அமெரிக்காவின் வடகிழக்கு, மத்திய அட்லாண்டிக், தென் கிழக்கு, மத்திய மேற்கு, மேற்கு கடற்கரை, ஆகிய பகுதிகளைப் பிரதிபலிக்கிறார்கள். இந்த அமைப்புக்கு அமெரிக்க வரி எண் (Federal tax id) வழங்கப்பட்டுள்ளது. அமைப்பிற்கு வரும் உதவி தொகைகளுக்கு வரி விலக்கு வாங்குவதற்கும் IRS அனுமதி கிடைத்துவிட்டது. அமைப்பின் கோட்பாடுகள் தீர்மானிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அமைப்பின் வருடாந்திர உறுப்பினர் கட்டணம் 10 வெள்ளிகள். வட அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்களிடம் மாதம் 10 அல்லது 20 வெள்ளிகள்(வரி விலக்கு உண்டு) பெற்று தாய் தமிழ் பள்ளிகளுக்கு உதவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் இருக்கும் தமிழர்கள், அந்த பகுதியின் ஒருங்கிணைப்பாளர் மூலம் தங்கள் உதவிகளை செய்யலாம்.


திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி போலவே காரைக்கால் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கும் நான் சென்று வந்தேன். அது பற்றி 3 மாதங்கள் முன்பு எழுதி இருந்தேன். அது இங்கே...

இந்த கட்டுரையை 2 ஆண்டுகளுக்கு முன்பே திண்ணையில் எழுதி இருந்தேன். திண்ணை திரு ராசாராம் முதல் கட்டுரையாக முதல் பக்கத்தில் போட்டு இருந்தார். அவருக்கு என் நன்றிகள் பல. மருத்துவர் சுந்தரம் அய்யாவிற்கும் எனது நன்றிகள் பல. இன்று திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி "வளர்ந்து" இருப்பதற்கு அவரும் ஓரு காரணம்...


மேலும் விவரங்களுக்கு kulvee@yahoogroups.com என்ற முகவரிக்கு மின் அஞசல் அனுப்பவும். வாசகர்கள் தங்கள் பொருளாதார உதவிகளை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

International Educational Foundation, Inc.
105 Ronaldsby Drive
Cary, North Carolina 27511 - 6536

தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் தேவை

திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி

காரைக்கால் தாய்த்தமிழ் பள்ளி

திண்ணையில்


"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"


நன்றி

மயிலாடுதுறை சிவா











Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, May 22, 2007

கங்கை கொண்ட சோழப் புரம் மற்றும் திருவள்ளூவர் சிலை - கன்னியாகுமரி

வாசிங்டன் மே 23 2007

மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழகம் சென்ற பொழுது நண்பர்களோடு இரண்டு மறக்க முடியாத இடங்களுக்கு சென்று வந்தேன். ஒன்று எப்பொழுதும் செல்லும் இடம், மற்றொன்று கிட்டதட்ட 10 ஆண்டுகளாக மிகவும் பார்க்க ஆசைப் பட்ட இடம்.

முதலாவது கங்கை கொண்ட சோழப் புரம். தஞ்சை மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் கோவில்களில் இதுவும் ஒன்று, ஆனால் பிரபலம் இல்லாமல் உள்ள கோவில் என்பது மனதிற்கு வருத்தமான செய்தி. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே இதுவும் இருக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை சோழப் பரம்பரையை சேர்ந்த ராஜா ராஜன் தந்தை கட்டியப் பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் ஆலயம்) விட மகன் ஆகிய ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழப் புரமே தனி அழகு வாய்ந்தது என்றால் அது மிகை அல்ல.

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />


மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம் வழியாகவும் செல்ல அல்லது ஆடுதுறை வழியாகவும் செல்ல வழி உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கிட்டதட்ட 75 கீ.மீ தான் இருக்கும். ஆனால் குத்தாலத்திற்கு பிறகு சாலைகள் தரமானதாக இல்லை. கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் இடதுப் பக்கம் இந்த பிரமாண்டமான, அழகான, அதிகம் பக்தர்கள் காணப் படாத ஒர் அழகான ஆலயம்தான் இந்த கங்கை கொண்ட சோழப் புரம். தஞ்சை பெரிய கோவில் ஓர் நகரத்தின் உள்ளே இருப்பதாலும், அருகே தஞ்சையின் பேருந்து நிலையம் இருப்பதாலும், சற்று பிரபலமான கோவிலாக உள்ள காரணத்தால் பக்தர்களும், பார்வையாளர்களும் அதிகம் தென் படுகிறார்கள். ஆனால் கங்கை கொண்ட சோழப் புரம் அப்படி அல்ல, நகரத்தின் உள்ளே இல்லாததாலும், ஊருக்கு எல்லையில் எங்கோ உள்ளதாலும் இந்த கோவில் பிரபலம் இல்லாமலும், அதிக வருமானம் இல்லாமலும் காட்சி அளிக்கிறது.

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

இப்படி ஓர் சிவ ஸ்தலம், அதுவும் மிக பிரமாண்டத்துடன் காட்சி அளிக்கும் ஓர் ஆலயம் சென்னையிலோ, மதுரையிலோ, டெல்லியிலோ இருந்து இருந்தால் நிச்சயம் மேலும் மேலும் பிரபலம் அடைந்து அதிக பக்தர்களின் எண்ணிக்கையை தொட்டு இருக்கும். தஞ்சைப் பெரிய கோவிலைப் போலவே இருபுறமும் மிக அழகான புல்தரை பரந்து விரிந்து காணப்பட்டு இருக்கும். கங்கை கொண்ட சோழப் புரத்திற்கு என சோழர் காலத்து தல புராணம் நிறைய உள்ளது. தமிழகம் செல்லும் பொழுது தஞ்சை அல்லது நாகை மாவட்டம் சென்றால் அவசியம் பார்க்க வேண்டிய ஊர். புகைப் படம் எடுக்க அருமையான இடமும் கூட. இதோ என் புகைப் பட கருவியில் படமாக்கிய சில படங்கள் உங்கள் பார்வைக்கும்...

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />


அடுத்து நான் நீண்ட நாட்களாக ஆசைப் பட்ட இடம், நமது தமிழின் பாரம்பரிய இலக்கியத்தின் முன்னோடியான திருக்குறளை தமிழுக்கு தந்த திருவள்ளுவர் சிலையை. கன்னியாகுமரியின் அழுகுக்கு அழுகு சேர்க்கிறது இந்த சிலை. "தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா" என்ற
வாக்கிற்கு ஏற்ப நம் திருவள்ளூவர் சிலை பிரமாண்டமாய் 133 அடி உயரத்தோடு காட்சி அளிக்கிறது. கன்னியகுமரி கடல் அலைகளின் நடுவே இந்த சிலையை பார்க்கும் பொழுது தெல்லாம் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது.

Free Image Hosting at www.ImageShack.us

கலைஞருக்கு இலக்கியத்தின் மீது காதல் உள்ளது என்பது
எல்லோரும் அறிந்த விசயம், ஆனால் உலக வரலாற்றில் இலக்கிய படைத்த ஓர் ஆசான் திருவள்ளூவருக்கு சிலை வைத்து தமிழன் பெருமையை உலகு அறிய செய்து, குமரி முனைக்கு பெருமை சேர்த்தவர் நம் கலைஞர். இதனையும் எனது புகைப்பட கருவியில் சிலவற்றை தட்டினேன். இதுவும் உங்கள் பார்வைக்கு...

Free Image Hosting at www.ImageShack.us

Free Image Hosting at www.ImageShack.us

Free Image Hosting at www.ImageShack.us

Free Image Hosting at www.ImageShack.us

Free Image Hosting at www.ImageShack.us

அடுத்த முறை தமிழகம் செல்லும் பொழுது அவசியம் போய் வாருங்கள்...

நன்றி

மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, May 21, 2007

அமெரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் ஒபாமா...

நாம் வாழுகின்ற சமுதாயத்தில் அரசியல் தவிர்க்க முடியாத ஒன்று. அதிலும் குறிப்பாக அமெரிக்க அரசியல் உலகம் முழுவதும் உற்று நோக்கபடும் விசயம். காலம் எப்பொழுதும் புதுப் புது மனிதர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

2004 ம் ஆண்டு சூலை மாதம், Boston மாநகரில் Massachussets மாநிலத்தில், ஜனநாயக கட்சி மாநாட்டில்அப்பொழுது அமெரிக்க தேர்தலில் போட்டியிட்ட John Kerryக்கு ஆதரவாக முழங்கிய ஓர் இளம் புயல்தான் Barack Obama. அவரின் சீரிய பேச்சு, தெளிவான நடை, வாதங்களை எடுத்துவைத்த விதம், மடைதிறந்த ஆற்றல் பேச்சு இவை அனைத்தும் அவர் யார் என்று அரசியல் பார்வையாளர்கள் மற்றும்சாதரண மக்களை உற்று நோக்க வைத்தது. அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை Washington Post " A RisingStar from the Democratic Party" என்று முதல் பக்கத்திலே போட்டு அவரை அரசியல் உலகுக்கு அறிமுகப் படுத்தியது.

Obama யார்? கறுப்பு இனத்தை சார்ந்த Kenya நாட்டில் இருந்த வந்த Barack என்பவருக்கும், Kansas ஐ சேர்ந்த வெள்ளை நிறப் பெண் Ann என்பவருக்கும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி, 1961 ஆம் ஆண்டு பிறந்தார்Obama. உலக நாடுகளில் பிரபலமாக பேசப் படும் Harvard பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். Chicago வில் உள்ள ஓர் சிறிய நகரத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்த பொழுது, சிறிய அளவில் மக்களுக்கு உதவுவதைப் போல, பரந்தப் பட்ட மக்களுக்கு உதவ முடிவு எடுத்து சட்டம் பயின்றார். அது மட்டும் அல்ல சட்டதிட்டங்களை அங்குள்ள கல்லூரிகளில் பாடமும் நடத்தினார்.

Harvard பல்கலைகழகத்தில் உள்ள Review என்ற மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து இருக்கிறார். இது அமெரிக்காவில் மிகவும் பெரிய விசயம். அந்த Review இதழுக்கு ஆசிரியராக இருந்த முதல் கருப்பர் இனத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். Harvard Board Review Editor in Cheif என்பது எல்லோரும் பிரமித்து பார்க்க கூடிய ஓர் செயல். இப்படிப் பட்ட Obama சிகாகோ செனட்டராகவும் மக்களால் தேர்ந்தடுக்கப் பட்டார். America வின் ஐந்தாவது கருப்பர் இன செனட்டர் ஒபாமா ஆவார். அமெரிக்க அரசியலில் ஓர் கறுப்பர் செனட்டர் ஆக வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.


Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

இப்படிப் பட்ட ஒபாமா, 2008 அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட தயாராகி கொண்டு வருகிறார். அமெரிக்கா முழுவதும் அவர் செல்லுகின்ற இடங்கள் எல்லாம் மக்கள் கூட்டம். அவரின் மிக சாதுர்யமான பேச்சுக்கும், வாதத்திற்கும், மனதில் உள்ளதை அப்படியே பேசுவதற்கும் மக்கள் அலை மோதுகிறார்கள் என்றால் அது மிகை அல்ல.

உலக நாடுகளில் முதலாவதாக விளங்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் ஆண்டு (2008) அதி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனில் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக ஓர் கறுப்பு இனத்தை சேர்ந்தவர் அதிபர் தேர்தலில் போட்டி இடுகிறார். அடுத்த ஆண்டில் இவருக்கு வயது 47 ஆகப் போகிறது. சமுதாய மாற்றத்தை முன் எடுத்து செல்ல விரும்புவர். கறுப்பு இன மக்களின் கனவு நாயகன். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். கல்லூரி இளைஞர்கள் மத்தியில் இவரின் பேச்சுக்கு ஏக மரியாதை.

ஒபாமா பற்றி அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஒபாமாவிற்கு இன்னமும் முழு அனுபவம் போதாது. இன்னும் சில ஆண்டுகள் செனட்டராக இன்னமும் போதிய அரசாங்க அனுபவத்தை சேகரிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். இவர் என்னதான் கறுப்பர் இனத்தவராக இருந்தாலும் முழுக்க முழுக்க கறுப்பு இன மக்களை ஆதரிப்பார் என்று நம்பிக்கை பரவலாக காணப்படவில்லை. வெள்ளைக் கார மக்களை திருப்தி படுத்த ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளைக்கார மக்களுக்கு ஆதரவாக இருந்துவிடுவார் என்ற பேச்சும் உள்ளது. International Affiars and Policies என்பதில் இவருக்கு ஓர் தெளிவான நீண்ட அனுபவம் இல்லை என்பது கூட சிலரின் கூற்று.

ஆனால் அமெரிக்க தேர்தலில் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஓர் தலைவர் வருவது மிக அபூர்வம், அந்த வாய்ப்பு இப்பொழுது வந்துள்ளது. அதனை விட்டு விட கூடாது என்கிறார்கள் பலர். வெள்ளைகார மற்றும் கறுப்பர் இன மக்களிடம் பரவலாக செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அடிப்படையில் Obama ஓர் கடின உழைப்பாளி, மிகச் சிறந்த பேச்சாளர், புதிய மாற்றத்தை விரும்புபவர், எதிரியை கூட மயக்கும் அளவிற்கு பேசக் கூடியவர், பிறரின் கருத்தை பொறுமையாக கேட்டு கொள்பவர், கறுப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரம், மிகப் பெரிய மாற்றத்தை, புதிய எண்ண அலைகளை ஏற்படுத்த கூடியவர் என்ற பரவலான கருத்து உள்ளது அமெரிக்க மக்களிடம்.

அமெரிக்கா நிற வெறிக் கொண்ட நாடு அல்ல. அடிமைகள் வாழும் பிரதேசம் அல்ல. கறுப்பு இன மக்களுக்கு சம வாய்ப்பும், சுதந்திரமும் கொண்ட ஓர் நாடு என்றாலும், கறுப்பு இனத்தை சேர்ந்த ஓர் அரசியல் தலைவன் அமெரிக்க அதிபராக வர முடியுமா? என்பது சதாரண மக்களின் அடிப்படை கேள்வி... Hollywood நடிகர் Denzil Washington னின் தந்தையாக வரும் ஓர் நடிகர் சொல்லும் ஓர் கூற்று,

This country is legally united....but Emotionaly segregated.....
என்று சொல்வார், அது எந்த அளவிற்கு உண்மை என்பது கூடிய சீக்கரம் தெரிந்து விடும்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, May 20, 2007

For Good - இந்தியா (தமிழகம்) செல்லுதல்...

வாசிங்டன். மே 2007

அமெரிக்கா வந்து கிட்டதட்ட 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. கடந்த வந்த பாதையில் எத்தனை எத்தனைபுதிய அனுபவங்கள்? எதனை எப்படி சொல்வது...

சராசரி இளைஞனாக தமிழகத்தில் இளம் கலை, முதுகலை, முதுகலை டிப்ளோமா படித்து தமிழகத்தில்சிறிதுகாலம் வேலைப் பார்த்துவிட்டு, எல்லோரையும் போல எனக்கும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஓர்உத்வேகம், ஆசை, கனவு, லட்சியம் இருந்தது உண்மை. ஆனால் என் கனவு முழுக்க என் சக நண்பர்கள்போல Saudi, Dubai, Oman, Muscat, Singapore, Malasia, Bankok, Baharin, Qatar இப்படிதான் ஆசைப்பட்டேன். கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை அமெரிக்கா வருவேன் என்று.

இப்படிப் பட்ட நான் அமெரிக்கா வந்து, ஆங்கில மொழி சரளமாக பேசமுடியாமல், வெள்ளைகாரர்களின்ஆங்கிலத்தை துல்லியமாக புரிந்துக் கொள்ள முடியாமல் கடினப் பட்ட காலங்கள் போய், கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தக்க வைத்தக் கொள்ள நீண்ட நாட்கள் பிடித்தது. இப்படி காலங்கள் போய்க் கொண்டு இருக்க, மெதுவாக நல்ல தமிழ் நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டு விட்டு இங்கே வந்த காலங்களில் தமிழ் நண்பர்களோடு பழகுவதும், பேசுவதும் ஓர் எல்லையில்லா ஆனந்தம் என்றால் மிகை அல்ல.இப்படி பட்ட காலக் கட்டங்களில் தமிழ்ச் சங்கம் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. என் அமெரிக்கா வாழ்வில் என்னைமுழுக்க முழுக்க புரட்டி போட்ட விசயங்களில் தமிழ்ச் சங்கமும் ஒன்று! எத்தனை எத்தனை விதவிதமான அனுபவங்கள். மிக அன்பான, அருமையான, சமுதாய சிந்தனை உள்ள, உண்மையான தமிழ் ஆர்வம் மிக்க, மொழி உணர்வு உள்ள குடும்ப நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். அனைத்து நல்லது கெட்டதுகளிலும் கலந்துகொள்ளவும், நமது சொந்த வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை, மகிழ்ச்சிகளை பகிர்ந்துக் கொள்ளவும் இந்த குடும்ப நண்பர்கள் ஒன்றன கலந்தார்கள். புதுமனை புகுவிழா, பிறந்தநாள் விழா, திருமணம், வளை காப்பு, குழந்தைப் பிறத்தல், இன்ப சுற்றுலா செல்லுதல், சேர்ந்து அடிக்கடி திரைப்படம் பார்த்தல் மற்றும் அனைத்து விதமான விழாக்களில் எனது நண்பர்கள் அனைவரையும் பார்ப்பதும், அரட்டை அடிப்பதும் இப்படி பல வார விடுமுறைகளும் கழிந்தன என்று நினைத்துப் பார்க்கும் பொழுது மனம் எல்லை இல்லா பூரிப்பு அடைகிறது.


எல்லோருக்கும் வாழ்க்கை தரம், குடும்ப சூழ்நிலை எல்லாம் ஓரே மாதரியாக இருப்பது இல்லை. ஓவ்வொருக்குவித விதமான குடும்ப சூழ்நிலை. எனக்கு கிடைத்த நண்பர்களில் சில குடும்ப நண்பர்கள் அமெரிக்க வாழ்க்கைமுடிந்து மீண்டும் நம் தாய்நாட்டிற்கு செல்ல காலம் கனிந்து வந்தது. என் அமெரிக்கா வாழ்க்கையில்என்னோடு பல வருடங்கள் பழகிய சில குடும்ப நண்பர்கள் மீண்டும் தமிழகத்திற்கேசென்று விட்டனர். எல்லோரும் ஆர்வமாக வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என சிலரும், சம்பாரிக்க வேண்டும்என்று பலரும் வந்த காலங்கள் போக மீண்டும் நம் தாய் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கஅவர்கள் என்னென்ன மனப் போரட்டங்களை அடைய வேண்டி இருந்தது என்பதை கண்கூட பார்த்து இருக்குகிறேன்.

மீண்டும் நம் தாய் நாடு சென்று அங்கு மீண்டும் ஓர் தரமான வாழ்க்கை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கையில் மிகுந்த மனத் துணிவும், மனம் இனம் கொள்ளா பயமும் அடைவதை தவிர்க்க முடியவில்லை.

என் நண்பர் ஓருவர் அவருக்கு கிடைக்க வேண்டிய புதிய இல்லம் கிடைப்பதற்கு சற்று காலம் தமாதம் ஆன காலத்தால்வாடகை வீடு சென்னையில் பார்க்க ஆரம்பித்தார். அவர் சொன்ன மிக அதிர்ச்சியான செய்தி பெரும்பாலும் எல்லாவீட்டு சொந்தகாரர்களும் கேட்ட மிக முக்கியமான கேள்வி "நீங்கள் என்ன சாதி" என்பது. மற்றோரு அதிர்ச்சியான செய்தி இரண்டு படுக்கை அறை கொண்ட சிறிய வீடு ரூபாய் 20,000 முதல் 25,000 வரை வாடகைமற்றும் 2 லட்சம் வரை முன்பண வைப்பு தொகை!!!

அமெரிக்காவில் பிறந்து கிட்டதட்ட 10 அல்லது 12 ஆண்டுகள் வளர்ந்த மகள் மற்றும் மகனை அங்குள்ள எந்த பள்ளியில் சேர்ப்பதுஅல்லது எப்படி மிகப் பிரபலமான (டிஏவி, பத்மா சேஷாத்திரி, வித்யா மந்திர், இப்படி பல...) பள்ளியில் சேர்ப்பது என்பதில்தொடங்குகிறது இவர்கள் மனப் போராட்டம். சென்னையிலோ, கோவையிலோ, அல்லது பெங்களூரிலோ நல்ல தரமான பள்ளியில் சேர்ப்பது என்பது மிகப் பெரிய விசயம் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள். பள்ளி சேர்க்கை கிடைக்காவிடில் என்ன பண்ணுவது?

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளில் 90 சதவீதம் கள்ளம் கபடம் இல்லாமல் வளர்ந்து இருக்கிறார்கள். ஓர் சுத்தமான, அசுத்தம் இல்லாத ஓர் சூழ்நிலையில் வாழ்ந்து பழக்க பட்டவர்கள் நமது ஊருக்கு சென்றால் எப்படி எல்லாம்கடினப் படுவார்கள் என்று நினைத்து வருத்த படுகிறார்கள்...

அமெரிக்காவில் 10 அல்லது 15 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு மீண்டும் நம் தாய்நாட்டிற்கு சென்று ஓர் புதுவாழ்க்கையை தொடங்கினாலும் நமக்கு முன்பு பழக்கமான உறவினர்கள், நண்பர்களின் எண்ண அலைகளோடு ஒத்துப் போக முடியவில்லையே ஏன்?

ஓரளவு நிரந்தரமான வேலையில் இருக்கின்ற பொழுது இங்குள்ள வேலையைவிட்டு விட்டு, மீண்டும் அங்கு சென்று வேலைக்கு செல்வதா அல்லது தொழில் தொடங்குவதா என்ற மிகப் பெரிய கேள்வி நம்முன்னே உள்ளது. என்னதான் ஓரளவு சேமித்துஇருந்தாலும் இந்த பணம் போதுமானதா என்று ஓர் தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. திரும்பி ஊருக்கு செல்ல காலத்தை முன் வைப்பதா? அல்லது பணத்தை முன் வைப்பதா?

மீண்டும் நம் தாய் நாட்டிற்கு செல்லவேண்டும்மென்று கிட்டதட்ட 75 சதவீதம் ஆண்கள் ஆசைப் படும் பொழுது, ஏன் பெண்கள் மனமார தயாராக இல்லை?! மாமியார், நாத்தனார், உறவினர்கள் தொல்லை இல்லை என்று பெண்கள் நினைப்பதில் உண்மையா அல்லது சுயநலமா?

மீண்டும் தாய் நாட்டிற்கு செல்லப் பிரியப் படும் பொழுது ஏன் பிறந்த கிராமத்திற்கே மீண்டும் சென்று ஓர் புதிய வாழ்க்கைதொடங்க நம்மில் பலர் தயாராக இல்லை?! அதற்கு ஓரே காரணம் நம் பிள்ளைகளின் படிப்பிற்காக மீண்டும் சென்னை அல்லது ஓர் பெரிய நகரத்திலியே குடிபோகும் படி வந்துவிடுகிறதே?! நாம் அந்த சிறிய டவுனிலோ அல்லது கிராமத்தில்தானே பள்ளி இறுதி படிப்புவரை படிக்க நேரிட்டது?! ஆனால் நம் குழந்தைகளை நம்மால் அங்கு சேர்க்க ஏன் மனம் வரவில்லையே!! ஆரோக்கியமாக பார்த்து பார்த்து வளர்ந்த நம் கண்களுக்கு நம் பெற்றோரின் வயோதிக தடுமாற்றத்தில் மீட்க மீண்டும் அவர்களுக்கு எப்படி பணிவிடை செய்வது? காலத்தின் பிடியில் இருந்து எப்படி நம்மை மன பதட்டம்இல்லாமல் விடுவித்து கொள்வது?

என்னதான் காலங்கள் மாற மாற சிந்தனைகளும் மாறினாலும், வெளிநாடு சென்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவிட்ட பிறகு ஏன் இப்படி மனித மனம் மாறிவிட்டது? எந்தவித எதிர்ப்பார்பும் இல்லாமல் பயம் இல்லாமல் எப்படி நாம் பிறந்த வளர்ந்த படித்த பூமிக்கு மீண்டும் செல்வது? வெளிநாடு சென்று நம்மை பொருளாதார வளப்படுத்துக் கொள்ள ஆசைப்பட்ட நாம் மீண்டும் தாய் நாட்டிற்கு செல்வதற்கு மிகுந்த மனப் போராட்டம் ஏற்படுவது ஏன்? தடுப்பது எது?

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நட்சத்திர பதிவாளர் ஆக்கிய தமிழ் மணத்திற்கு நன்றிகள் பல...இன்னும் 7 நாட்களுக்குள் நிறைய பேசுவோம்.....

நன்றி
மயிலாடுதுறை சிவா....







Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, May 03, 2007

அமைச்சர் தங்கம் தென்னரசு - பாராட்டுகள்!!!

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பாராட்டுகள் பல...


18 நாள் கோடைகால பயிற்சி தொடக்கம்
செயல்வழி கற்றல் முறையில் கிராம மாணவர்கள் வேகம்
அமைச்சர் தகவல்

சென்னை, மே 3: ÔÔசெயல்வழி கற்றல் முறையில், நகரங்களில் உள்ள மாணவர்களைவிட கிராம மாணவர்களே வேகமாகவும், சிறப்பாகவும் கற்கின்றனர்ÕÕ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்கள், தமிழை தடையில்லாமல் வாசித்து, பிழையில்லாமல் எழுதவும், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படை கணக்குகளை தவறில்லாமல் செய்யவும், 18 நாள் கோடை கால பயிற்சி திட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

செயல்வழி கற்றல் மூலம் பாடங்களை கற்கும்போது, மாணவர்களுக்கு இனிமையாக இருக்கும். வகுப்பறைச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். செயல்வழி கற்றல் முறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளை ஆய்வு செய்ததில், நகரங்களில் உள்ள மாணவர்களைவிட கிராம மாணவர்களே வேகமாகவும், சிறப்பாகவும் கற்கின்றனர். இது இன்ப அதிர்ச்சி.

பயிற்சிக்கு பிறகு மாணவர்கள் நல்ல பலன் பெறுவார்கள். 12 லட்சம் மாணவர்கள் இதில் பயன்பெறு வார்கள். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனர் விஜயக்குமார், பள்ளிக் கல்வித் துறை செயலர் குற்றாலிங்கம், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி : தினகரன்.

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, May 01, 2007

இயக்குனர் சேரனுக்கு மனந்திறந்த மடல்....ஓர் ரசிகனாக....

வாசிங்டன் 2007

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய இயக்குனர் சேரன் அவர்களுக்கு,


ஓர் சராசரி ரசிகனாக உங்களுக்கு ஓர் மனந்திறந்த மடலை எழுத ஆசைப் படுகிறேன்.


தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அடுத்த பாரதிராசா எனப் பேசப் பட்டவரும், தமிழ்த் திரைப் படத்தில் நல்ல பல சமுதாய கருத்துகளை இளைஞர்கள் கவரும் வண்ணம் மிக யதார்த்தமாக சொல்லி வருபவரும், கடைக் கோடி தமிழனும் ஓர் தரமான திரைப் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கத் தூண்டுபவருமான உங்களுக்கு தற்பொழுதைய படைப்பான "மாயக் கண்ணாடி" ஓர் சறுக்கலை அல்லது ஓர் சிறிய தோல்வியை உங்களுக்கு கொடுத்து இருக்கலாம். அதற்கு முன் தாங்கள் கடந்த வந்த பாதையை நாம் சற்று பின்னோக்கி பார்க்கலாமா?

கடுமையான போராட்டங்களுக்கு பிறகு, நீங்கள் முதன் முதலாய் திரைப் படம் எடுக்க ஆரம்பித்துவீட்டீர்கள்...!

பொற்காலம் : உங்களது படைப்புகளில் இந்தப் படம் ஓர் அற்புதமான படைப்பு என்றால் மிகையில்லை. சாரசரி அண்ணன் தன் ஊனமான தங்கைக்கு திருமணம் செய்ய பாடுபடுவதை கண் முன்னேநிறுத்தி இருந்தீர்கள், உடல் ஊனத்தை விட மன ஊனமே தவறு என்று மிக அழகாக வெண் திரையில்படம் பிடித்து காண்பித்து இருந்தீர்கள். கதையின் முடிவில் கதாநாயகன் ஓரு ஊனமான பெண்ணைத்திருமணம் செய்து கொண்டதாக காட்டி தமிழ் ரசிகர்களை ஓர் மாறுபட்ட தளத்தில் சிந்திக்க வைத்தீர்கள் என்றால் அது மிகை அல்ல. இந்த படத்தை ரஜினி பார்த்துவிட்டு நான் அழுதேன் எனவும்அவருடைய 100வது நாள் பட விழாவில் உங்களுக்கு "தங்க சங்கலி" பரிசு அளித்தார் என்பதும்அனைவரும் அறிந்த விசயம். பாராட்டுகள் பல.

பாரதி கண்ணம்மா: இந்த படமும் ஓர் அருமையான படம். தேவர் வீட்டு பெண் தாழ்த்தப்பட்ட பையனைத் திருமணம் செய்துக் கொண்டால் என்னென்ன சமுதாய சிக்கல்கள் வரும் என்பதைஓரு அருமையான காதல் கதை மூலம் சமுதாய கண்ணோட்டத்தின் பின் புலத்தோடு சொல்லி வெற்றி அடைந்தீர்கள். "இந்த பூமியில் நிறைவேறிய காதலை விட நிறைவேறாத காதலே அதிகம்"என்று பாரதி ராசா ஓர் விழாவில் சொன்னதைப் போல இந்த படம் நிறைவேறாத காதலைகதாநாயகியின் தற்கொலை மூலம் காண்பித்து காண்போரை கண்ணீர் கொள்ள செய்தீர்கள்.

தேசிய கீதம் : இது உங்களுக்கு ஓர் வெற்றி படமாக இல்லை எனலாம், ஆனால் நம் சமுதாயம்நல்லப் பல தலைவர்களைக் கொண்டு உருவாக்கப் பட்டது, அந்த சமுதாயத்தை மீண்டும் நல்லஅரசியல் தலைவர்களோடு கொண்டு செல்லப் பட வேண்டும் இளைஞர்களின் துணையோடு என்பதைசொல்ல நினைத்தப் படம். நிச்சயம் இது வெற்றி படம் அல்ல. அதே சமயம் மிக அறுவையான படமும் அல்ல.

வெற்றிக் கொடி கட்டு : மிகப் பெரிய வெற்றிப் படமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தரமானசமுதாய சிந்தனை உள்ள படம். இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தில் எப்படி தவறான தரகர்கள் மூலம்ஏமாந்து விடுகிறார்கள் என்பதை சிந்தனையை தூண்டும் விதமாக வடிவமைத்து இருந்தீர்கள். இந்த நற்செயலுக்காக குடிஅரசு தலைவரின் விருதுப் பெற்று படம் ஆயிற்று. இந்த பரிசு உங்களை நிச்சயம்மிகப் பெரிய உந்துதலாக இருந்து இருக்கும், இதுப் போல் மேலும் நல்ல தரமான படங்களைத் தரஉங்களுக்கு தூண்டு கோலாக இருந்து இருக்கும்.

பாண்டவர் பூமி : இதுவும் ஓர் தரமான குடும்ப சித்திரம். கிராம வாழ்க்கையை விட்டு விட்டு பிழைப்புத்தேடி எல்லோரும் நகர வாழ்க்கைக்கு சென்றவிட்டதன் தவற்றை மிக அழகாக, தான் வாழ்ந்த கிராமத்திலேயேஓர் அழகான வீடு கட்ட ஓர் குடும்பம் மீண்டும் அதே கிராமத்திற்கு வருவதை ஓர் கவிதைப் போல் வடிவமைத்துஇருப்பீர்கள். வீட்டை கொஞ்சமாக செதுக்குவதைப் போல கதையும் நல்ல குடும்ப சூழலில் சொல்லி இருப்பீர்கள்.இது ஓர் அருமையான படமும் கூட.

ஆட்டோகிராப் : தமிழ் திரைப் படத்தை மாறுப்பட்ட பார்வையில் புதிய களத்தில் புதிய பரிமாணத்தோடுஓர் இளைஞனின் கடந்த கால வாழ்க்கையில் கடந்த வந்த பெண்களைப் பற்றி மிக அழகாக அருமையாக மிக யாதர்த்தமாக சொல்லி அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த படம் என்றால் அது மிகை அல்ல. பலவெளிநாட்டு விருதுகளை குவித்தப் படம். ஓர் அழகான கவிதை. இந்த படத்தில் நீங்கள் கதாநாயகனாக நடித்து, இயக்கம் மற்றும் நடிப்பு இரண்டிலும் வெற்றி பெற்றீர்கள். மொத்ததில் தமிழ்த் திரை உலகத்தை உங்களை அண்ணாந்து பார்க்க வைத்தீர்கள்.

தவமாய் தவமிருந்து : தமிழ்த் திரை உலகம் எப்பொழுதும் தாயின், மனைவியின் அருமை பெருமைகளைச் சொல்லிகொண்டு இருந்தக் காலத்தில் தந்தையின் உணர்ச்சிகளை, கனவுகளை, லட்சியங்களை மகனின் பார்வையில் திரையில்செதுக்கி இருந்தீர்கள். இதுவும் தமிழ் திரைப் பட வரலாற்றில் ஓர் மாறுபட்ட சித்திரம். தந்தையாக நடித்து இருந்தராஜ்கிரண் வாழ்ந்து இருந்தார். எல்லோராலும் பேசப் பட்ட படம். இதிலும் நீங்கள் கதாநாயகனாக நடித்து இருந்தீர்கள்.

இப்படி நீங்கள் கடந்து வந்த பாதையில் ஓரே ஓரு படம் தவிர மற்ற எல்லா படங்களும் வேறு வேறு கதை களங்களைஎடுத்து குடியரசு விருது வரை உயர்ந்த வரலாற்றை தமிழ்த் திரை உலகம் மறக்காது. ஓர் சராசரி ரசினாக நான் பெருமைஅடைகிறேன். மாற்று சினிமாவை கொடுக்க, சமுதாய சிந்தனைகளை எடுக்க, நம் இளைஞர்களின் கலை தாகத்திற்குஓர் வழிகாட்டியாக, அடுத்த பாரதிராசாவாக வெற்றி என்னும் ஏணிப் படிகளில் ஏறிக் கொண்டு இருந்த பொழுதுதான், இப்பொழுதுப் பேசப் படுகின்ற "மாயக் கண்ணாடி" படம். இது தோல்வி படம் என்றும், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திற்கு ஏகப் பட்ட நட்டம் என்றும், நம் பழைய சேரன் ஏங்கே? என்றும் ஊடகங்கள் கவலையோடு இருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

உங்களது பேட்டி நக்கீரனில் விடியோவில் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதில் நீங்கள் உங்களின் தோல்விகளை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த ஓர் ஆண்டு உழைப்பு நீங்கள் எதிர்பார்த்த வெற்றி அடைய வில்லை என்றால் எவ்வளவு மனம் வேதனைப் படும் என்பது ஓர் சாரசரி ரசினாக புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள்?பெருந்தன்மையோடு "மாயா கண்ணாடி" மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு எளிமையாக சொல்லப் படவில்லை, அது மக்களால் முழு மனத்தோடு அதனை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை நீங்கள் இந்த ஒரு வாரத்திற்குள் உணரவில்லையே என்றுதான் மனம் வருத்தப் படுகிறது.

ஆனால் நீங்கள் உங்களது கதையை ரசிகர்கள் புரிந்துக் கொள்ளவில்லை என்று சொல்லுகிறீர்கள். இதுவரை நீங்கள் இயக்கிய படத்தை ரசித்த அதே ரசிகன்தான் இதனை புரிந்துக் கொள்ளவில்லை என்கிறீர்களா? நான் யாருக்கு ஏதை சொல்ல நினைத்தோனே அதை அவர்கள் புரிந்து கொண்டால் போதும் என்கிறீர்கள்!!!ஒரு தடவை இந்த படத்தை பார்த்தா உங்கள் கருத்து புரியாது என்கிறீர்கள்!!! அப்ப மீண்டும் மீண்டும் இதனை பார்க்க வேண்டுமா?!எல்லாவற்றிற்கும் மேலாக நான் எதை நினைத்து எடுத்தேனோ அதை அப்படியே சொல்லும் இளைஞனுக்குஒரு லட்சம் பரிசு என்று சொல்லுகிறீர்கள்!!! இது சினிமாவை ஓட வைக்க யுக்தி அல்ல என்றும் சொல்லுகிறீர்கள்!உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் இளைஞனுக்கு "உதவி இயக்குனர்" வாய்ப்பு என்கிறீர்கள்!!! குலகல்வியை நீங்கள் ஆதரிக்கீறீர்கள் என்ற குற்றசாட்டை கூட ஓரு கலைரசிகனாக அதனை நான் ஏற்று கொள்ளவில்லை!!!சேரன் உங்களுக்கு என்னாவாயிற்று?!

பல தரமான வெற்றி படங்களை கொடுத்த உங்களுக்கு ஓர் சிறிய தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லையா? உங்களை கலர் அடித்த முடியோடு பார்க்க மக்கள் தயாராக இல்லை என்பதை புரிந்துக் கொள்கிறீர்களா? உங்களால் மீண்டும் தரமான மற்றோரு படத்தை தர முடியும் என்றும் இன்னமும் என்னை போல் சாரசரி ரசிகனுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த தோல்வி உங்களுக்கு ஓர் மன மாற்றத்தை, ஓர் பாடத்தை, ஓர் அனுபவத்தை கொடுத்து, உங்களை அடுத்து ஓர் வெற்றிக்கு தயார் படுத்துகிறது என்று வைத்து கொள்ளலாமே?! ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து இரண்டு படங்களும் உங்கள் நடிப்பு நன்றாக இருந்திதற்கு காரணம் அதன் கேரக்டர் அப்படி பட்டது. ஆகையால் அது எடுப்பட்டது. இந்த திரைத் துறைக்கு வருவதற்கு முன்பு நடிக்க வரவில்லை நீங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்களே கூட எனக்கு நடிப்பை விட இயக்கமே ரொம்ப பிடிக்கிறது என்று முன்பே சொல்லி உள்ளீர்கள். பெருந்தன்மையோடு இந்த சிறிய தோல்வியை அல்லது சறுக்கலை ஏற்றுக் கொண்டு மற்றொரு ஒரு உன்னத படைப்பை நிச்சயம் உங்களால் தர முடியும் அதுவரை சராசரி ரசிகனின் விமர்சனத்தை வெறுக்க வேண்டாமே?

தமிழ்த் திரை உலகம் பல ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறது, அதில் எத்தனை பேரை இந்த தமிழ்ச் சமூகம் இன்னமும் நினைவில் வைத்து இருக்கிறது?

இதில் வரும் நல்ல / கெட்ட பின்னூட்டத்துடன் சூலை மாதம் அமெரிக்கா வரும் சேரனுக்கு இந்த கடிதம் மேலும் சுருக்கியோ அல்லது சிலக் கருத்துகள் சேர்த்தோ நேரில் கொடுக்கப் படும்....

நன்றி

மயிலாடுதுறை சிவா...





Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது