Monday, June 27, 2005

என்று அணையும் இந்த சா(தீ)யம் !!!

தாழ்த்த பட்ட மக்களுக்கு போராடும் எழுச்சி தலைவன் தொல். திருமா சிங்கப்பூர் பயணத்தை மிக சாதரணமாக நான் என் வலைப் பூவில் பதிய வைத்தேன். காரணம் சிங்கப்பூரில் உள்ள இளைஞர்கள் அவரிடம் ஓர் கலந்து உரையாடட்டுமே என்ற நல்ல எண்ணத்தில்.

அதில் ஓர் நண்பர் கூப்பிட்டு நீங்கள் திருமாவின் உதவியாளாரா? மற்றோருவர் நீங்கள் திருமாவின் விடுதலை சிறுத்தையை சார்ந்தவாரா? இன்னோரு நண்பர் உங்களுக்கு ஏன் இந்த வேலை என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு தெரிந்த செய்தியை வலைப் பூக்கள் மக்களிடம் பகிர்ந்துக் கொண்டது தவறா? பரவாயில்லை.

எல்லாவற்றிக்கும் முத்தாய்பாக நண்பர் ரஜினி ராம்கி சில கேள்விகளை முன் வைத்தார். அவற்றிக்கு நேரிடையான என் பதிலையும் என் சில கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்வது என் கடமை.

ராம்கியின் கேள்விகள்
வைகோ, இராமதாசு, திருமா உலகம் பூரா சுற்றி வந்து என்னதான் செய்கிறார்கள்?இவர்களை வரவேற்பது யார்? சொந்த காசில் வருகிறார்களா? சம்பந்தப் பட்ட நாடுகளில் தாழ்த்தப் பட்டவர் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்காவா? வெளி நாடுகளில் தமிழர்கள் பெரும்பாலனோர் மேல் ஆதிக்க சாதியனர்தான், திருமாவளவன் போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

என்னுடைய விளக்கம்
வைகோ, இராமதாசு இவர்கள் சில சமயம் சொந்த காசிலும், சில சமயம் தமிழ் அமைப்புகள் மூலமும் வருகிறார்கள். வைகோவின் மகள் சிகாகோவில் இருக்கிறார், அவரை பார்ப்பதற்கு அவர் தான் சொந்த காசில்தான் வருகிறார். ஒருமுறை வைகோவை அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்பு அழைத்துக் கொண்டது.

இராமதாசு அமெரிக்கா வந்தாரா என்று தெரியவில்லை. ஒரு முறை தமிழ் அமைப்பு அவரை அழைக்க முயற்சி செய்தது. அவர் அப்போழுதுதான் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்ததால் அவரால் வர முடியவில்லை.

எனக்கு தெரிந்து திருமா சொந்த காசில் வந்தது இல்லை. அமெரிக்கா, கனடா, லண்டன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் சார்பாகதான் அவர் அழைக்கப் பட்டார்.

என் மனதை பாதித்த கேள்வி, "வெளி நாடுகளில் தமிழர்கள் பெரும்பாலனோர் மேலாதிக்க சாதியனர்தான், திருமாவளவன் போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?"

அது எப்படி ராம்கி நீங்கள் அப்படி நினைக்கலாம்? இது தவறான சிந்தனை அல்லாவா? எனக்கு தெரிந்த பல தாழ்த்தபட்ட, பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்த பட்ட ஏராளமான நபர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் எண்ணற்ற பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வெளிநாடுகள் சென்று சமுதாயத்தில் அவர்களும் முன்னேறி நன்கு வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல அவர்கள் தன்னுடைய நண்பர்களுக்கும் உதவி செய்கிறார்கள் வெளிநாடு வருவதற்கும் மேற்கொண்டு படிப்பதற்கும். எனக்கு தெரிந்த மேல் சாதியனர் பலர் சுயநலமாக தான் தன் குடும்பம், தன் இனம் முக்கியம் என்று நடந்துக் கொள்வதை பார்த்து இருக்கிறேன்.

திருமாவளவன் போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
இந்த கேள்வியின் உண்மையான அர்த்தம் என்ன ராம்கி? திருமா என்றால் இளக்காராமா? திருமா தலித் என்பதால் மக்கள் அவர்களை மதிக்கிறார்களா? என்று தானே நீங்கள் கேட்கிறீர்கள்?


கிராமத்தில் ஜாதி வெறி பிடித்து அலைவோர், வீச்சரிவாளும் வேல் கம்பும் வைத்து நையப்புடைப்போர், மலம் தின்ன வைப்போர் மற்றும் அவர் சந்ததியினர் கூட படித்து, பட்டம் பெற்று, பலதரப்பட்ட மக்களோடு பழகிய பின் தங்களுடைய ஜாதி வெறியை , அதன் அசிங்கத்தை விட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் நம் மக்களில் ஒரு சிலர் என்னதான் படித்தாலும், எத்தனை இலக்கியப் பயின்றாலும், எத்தனை நாடுதான் போனாலும், தலித் மக்களை கீழானவர்களாக, கேவலப்பட்டவர்களாக பார்க்கும் இம் மாதிரி மனநிலை என்றுதான் மாறுமோ என காத்திருக்கிறேன்.

உண்மையை சொல்லப் போனால் திருமா போன்ற தலைவர்களுக்கு நல்ல மரியாதை வெளிநாட்டு வாழ் மத்தியில் இருக்கிறது. அதுவும் குறிப்பாக சாதி, மதம் பார்க்காத, படித்தவர்கள் மத்தியில், தமிழ் ஆர்வம் மிக்க, தமிழ் உணர்வாளர்களிடையே பெருத்த மரியாதையையும், பாசமும், அன்பும், நேசமும் திருமா மீது உள்ளது. நம்புங்கள்!

நீங்கள் சொல்லும் மேல் சாதியனர் பலர் இன்னமும், வெளிநாடுகள் வந்துவிட்ட பொழுதும் தன் சாதியை பலமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு உள்ளார்கள். (எடுத்து காட்டு - பிராமணர்கள், செட்டியார்கள், கவுண்டர்கள், நாடார்கள்). அதைவிட வெட்க கேடு இந்த சாதியை சார்ந்தவர்கள் சாதி அமைப்பு ரீதியாகவும் கூடுகிறார்கள் என்பது.

அதே போல் உயர் சாதியனர் பலரும் எஸ்வி சேகர், கிரேசி மோகன், மாதவன், பம்பாய் ஜெயஸ்ரீ, பம்பாய் சகோதிரிகள், ஹரிஹரன், உன்னி கிருஸ்ணன் இப்படிப் பட்ட மக்களுக்குதான் அதிக ஆர்வத்தை காட்டுகிறார்கள்.

நடப்பு என்னவெனில், அரசியல் ஆர்வமும், தமிழ் ஆர்வமும், இன உணர்வும் மிக்க பலரும் வைகோ, இராமதாசு, திருமா மீது நம்பிக்கை வைத்து உள்ளார்கள். அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அனால் எல்லாவற்றிக்கும் மேலாக ஈழ மக்கள் படும் வேதனைகளை, துயரங்களை, அவலங்களை மக்கள் இடையே பேசும், தமிழ் மொழிக்காக போராடும், மக்கள் பிரச்சினைக்காக போராடும் தலைவர்களை சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மனதார பாராட்டதான் செய்கிறார்கள். இப்படி பட்ட கருத்துகளோடு ஒத்து போகும் தலைவர்களை உணர்வு பூர்வமான தமிழ் அமைப்புகள் இந்த தலைவர்களை கூப்பிட்டு அவர்களை ஊக்கப் படுத்துகிறது, இனியும் இந்த ஊக்கம் தொடரும்.

நீங்கள் இப்படி கேட்டது போல அத்வானி, நரேந்திர மோடி, முரளி மனோகர் ஜோசி, இல.கணேசன், சேசன், சு.சுவாமி போன்றவர்கள் ஏன் வெளிநாடு செல்லுகிறார்கள் என்று கேட்டது உண்டா? யாரும் கேட்பதும் இல்லை. டாக்காவுக்கு போனாரே; சீனாவுக்கு போக வேண்டுமென்று மனுப்போட்டாரே, இருள்நீக்கி சுப்பிரமணியன், அவர்கள் எல்லாம் எதற்காகப் போகிறார்கள்?

பின் பின் ஏன் இவர்களுக்கு மட்டும் இந்த கேள்வி..?? கேட்பதானால் எல்லாரிடத்தும் கேளுங்கள். தலித் தோழர்களை விட்டு விடுவோம். அவர்களை அணைத்துக் கொள்வோம் வாருங்கள். அல்லது தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருப்போம். அவர்கள் சாதீயச்சுனாமியால் காயப்பட்டவர்கள். கை கொடுப்போம் வாருங்கள்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, June 23, 2005

தொல்.திருமா - சிங்கப்பூர் பயணம் (சூன் 24,25,26)

Image Hosted by Your Image Link

அண்ணன் தொல்.திருமாவிடம் கலைஞர் அறிக்கை சம்பந்தமாக பேசுவதற்கு கடந்த 3 நாட்களாக தொடர்புக் கொள்ள முயற்சித்து தற்பொழுது பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு சிங்கையில் உள்ளார்.

சிங்கை நண்பர்கள் பேசி, பார்த்து உங்கள் கேள்விகளை தொடுக்கலாம்.

வருகிற சூலை 1முதல் 5தேதி வரை கனடா-டொரோண்டோ திருமா வருகிறார் என்பது கூடுதல் செய்தி.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, June 06, 2005

தமிழகத்தில் பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுகள் ரத்து!:

நன்றி ! நன்றி! தட்ஸ் தமிழ்.காம்

அனைத்து கருத்து வேறுப் பாடுகளையும் சற்று ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு மனதார தமிழக முதல்வரைப் பாராட்டத்தான் தோன்றுகிறது. இந்த திட்டத்தால் நம் கிராமப் புற மாணவர்கள் பயன் அடைந்து அனைவரும் சமுதாயத்தில் படித்து முன்னேற இது ஓர் வளமான வாய்ப்பு.


தமிழகத்தில் பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுகள் ரத்து!:
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 'சீட்'!!ஜூன் 6, 2005

சென்னை:

தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டு முதல் (20052006) பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. பிளஸ்2 தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளது.

மேலும் பிளஸ் டூ இம்ப்ரூவ்மெண்ட் தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்:
பிஇ, எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான கல்லூரிகளில் இடங்கள் குறைவாக இருந்த நேரத்தில், ஏராளமான மாணவர்கள் அதில் சேர விண்ணப்பித்ததால் கடந்த 1984ம் ஆண்டில் நுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. அதே நேரத்தில் மருத்துவம், சட்டம் போன்ற படிப்புகளுக்கு இன்னும் கூடுதல் இடங்கள் தேவைப்படுகின்றன.

இந்த விஷயத்தில் அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இப்போதுள்ள பொது நுழைவுத் தேர்வு முறை பொற்றோருக்கும் மாணவர்களுக்கும் பெரும் மனச் சோர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நுழைவுத் தேர்வு முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளால் பாதிக்கப்பட்டு தொழில் படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்து வருகிறார்கள். பிளஸ் 2 படித்து முடித்தவுடனேயே தொழில் கல்லூரி நுழைவுத் தேர்வுக்காக தங்களை மிகக் கடுமையாக தயார் படுத்த வேண்டிய சூழல் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோருக்கும் மன உளைச்சலைத் தருகிறது.

அனைத்து மாணவர்களின் நலன் கருதியும், குறிப்பாக கிராமப் புற மாணவர்களின் நலன் கருதி இந்த நுழைவுத் தேர்வு முறையில் உடனடியாக மாற்றம் தேவை என உணர்கிறேன்.

இந்தக் கல்வி ஆண்டு முதலே (20052006) முதலே இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. அதன்படி பிளஸ்2 தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் இந்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கப்படுவார்கள். புதிதாகவும் மாணவ, மாணவிகள் விண்ணிப்பிக்கலாம். இதற்கான கால நிர்ணயம் விரைவில் அறிவிக்கப்படும்.

பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூலை மாத தொடக்கத்தில் கவுன்சிலிங் நடக்கும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் தொழில் கல்லூரிகளில் சேர தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த புதிய திட்டம் பிஇ, பிடெக், பி.ஆர்க் மற்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.பார்ம், விவசாயம், வெட்னரி சயின்ஸ், சட்டம் ஆகிய படிப்புகளுக்கு பொருந்தும்.
வெறும் பிளஸ் டூ மார்க் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். வேறு எந்த வகையிலும் நுழைவுத் தேர்வு முறை கிடையாது. அதிக மதிப்பெண்கள் பெற்று இந்தப் படிப்புகளில் சேர தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிங்கிள் வின்டோ முறையில் கலந்தாய்வு நடத்தி படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.
நுழைவுத் தேர்வு ரத்தாவதால், பிளஸ் டூவில் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு ரத்தாகிறது. இந்த ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.

இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

**************************************************************************

மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது