Thursday, April 07, 2011

ஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன?

ஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன?

மே 14 , 2011 இந்த வரலாற்று சிறப்பு மிக்க தமிழக தேர்தல் களம் பல சுவையான சம்பவங்களை உள் அடக்கியது. அதிமுகவின் தலைவி ஜெ ஏன் இந்த தேர்தலி தோல்வியுற்றார் என்ற காரணத்தை எழுத வேண்டும் என்று தோணியது. இவை அனைத்தும் பல பத்திரிக்கைகளில் படித்து இருந்தாலும், தொகுத்து என் பதிவில் இட விரும்பினேன்.

இந்த களத்தில் முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் கலைஞரை விரட்டி அடிக்க ஆசைப்பட்ட ஜெ, முதல் தவறாக தனது சக கூட்டணி தலைவர்களிடம் பேசாமல், தமிழக தொகுதிகளை அவர் விருப்பபடி பிரித்து கொடுக்காமல் 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என தன் இச்சையாக அறித்தது முதல் தவறு. இங்குதான் தமிழக தேர்தல் பரபரப்பின் ஆரம்ப கட்டம்!!!

அடுத்த மாபெரும் துரோகம், நம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழ மக்களை தொடர்ந்து எந்த சுயநலமும் இல்லாமல் ஆதரித்து வரும் அண்ணன் வைகோவை அதிமுக கூட்டணியில் இருந்து நாகரீகம் இல்லாமால் பிரிந்து, தூக்கி எறிந்தது. இங்குதான் ஜெவின் உண்மையான முகம் மீண்டும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரிய வந்தது. உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் அய்யோ வைகோவிற்கு இப்படி ஆயிற்றே என்று மிக மிக வருத்தப்பட்டார்கள். மதிமுக தொண்டர்கள் (முன்னாள் திமுக) நொந்து நூலாகி, ஜெவிற்கு பாடம் புகட்ட மீண்டும் திமுகவிற்கு தங்கள் வாக்குகளை தந்தார்கள். இந்த தேர்தலில் அவர்களின் வாக்கிற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது என்பதை தமிழக பார்வையாளர்களுக்கு உணர்த்தினார்கள்!!!

அடுத்த தவறு – கொங்கு முன்னேற்ற கூட்டணியை முறையாக பேசி அவர்கள் 6 இடங்கள் கொடுத்து இருந்தாலே அவர்கள் அதிமுக பக்கம் வந்து இருப்பார்கள். கடைசிவரை செங்கோட்டையன் அவர்களிடம் பேசி ஜெவை சந்திக்க விடவில்லை. அவர்களும் நொந்து நூலாகி போன நேரத்தில் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர், அமைச்சர் ஈரோடு முத்துசாமி கொங்கு குழுவை கலைஞரிடம் சேர்த்து ஒரு சீட்டு கூடுதலாக கொடுத்து திமுகவுடன் இணைய வைத்தார். இதுவும் அதிமுகவிற்கு எதிராக போய்விட்டது. முத்துசாமியும், சின்னசாமியும் கவுண்டர் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள். அவர்கள் அதிமுகவின் விசுவாசிகள், அவர்களை அதிமுக தலைமை மதிக்காமல் நடந்துக் கொண்டது. அவர்கள் இன்று திமுக பக்கம்!!! இதுப்போல அனிதா ராதாகிருஷ்ணனும் மற்றும் சேகர் பாபுவும் அடக்கம். இதனை விரிவாக எழுத ஆரம்பித்தால் இந்த பட்டியல் நீண்டு கொண்டு போகும்..!!!

அடுத்து தவறு, சரத் குமார் நாடார்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து “காமராசர்” பேரில் ஒரு அமைப்பு ஆரம்பித்தார். பிரிந்து கிடந்த பல நாடர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு வலுவான அமைப்பாக கூடி வந்த நேரம். அன்று மாலையே சரத் தனியாக சென்று ஜெவை பார்த்து வெறும் இரண்டு சீட் வாங்கி வந்த பொழுது “புது காமராசர் அமைப்பு” அன்று மாலையே சரத் குமாரை கட்சி விட்டு நீக்கியது! ஜெ சர்த்குமாரிடம் நீங்கள் அனைவரும் ஒன்றாக வரவும் என்று சொல்லி இன்னும் ஒன்று இரண்டு சேர்த்து கொடுத்து இருந்தால், ஒட்டு மொத்த நாடார் ஓட்டுகளும் அதிமுகவிற்கு கிடைத்து இருக்கும்!!! தற்பொழுது பல வலுவான நாடார் அமைப்புகள் திமுக பக்கம்!

வட மாவட்டங்களில் மிக மிக வலுவாக இருக்கும் அய்யா இராமதாசு மற்றும் அண்ணன் தொல் திருமாவளனும் மீண்டும் சேர, அய்யா இராம்தாசை நீதிமன்றத்திற்கு இழுத்து அவரை அவமான படுத்தி அவரை திமுக பக்கம் அனுப்பிய பெருமை ஜெ வை சாரும்!!! தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு போராடி வரும் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கும், மூவேந்தர் முன்னேற்ற முண்ணனிக்கு மேலும் சில சீட்டுகள் ஒதுக்கி இருக்கலாம். மற்றொரு மூவேந்தர் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தற்பொழுது திமுக பக்கம்! ஒரு காலத்தில் இவர் சசிகலாவின் தோஸ்து!!!

அடுத்த தவறு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருடனும் ஒரு புகைப் படம் எடுத்து, அவர்களோடு ஒற்றுமையாக மிகப் பெரும் பிரச்சார பொதுகூட்டம் சென்னையிலேயே தொடங்கி நல்ல ஆரம்பமாக இல்லாமல் சொதப்பியது!

மிகப் பெரும் தவறாக திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்தது! சென்ற தேர்தலில் திமுக இதுப் பொன்ற இலவசங்களை தரமுடியாது என்று சொல்லிவிட்டு, இந்த தேர்தலில் நானும் தருவேன் என்று சொதப்பியது!!!

அடுத்த தவறு, சொந்த சாதிப் பற்றின் காரணமாக “ஸ்ரீரங்கத்தில்” தேர்தலில் போட்டியிட்டது, அதற்கு காரணம் ஜோசியம் வேறு! சென்னை அதிமுக கோட்டை என்று கூறும் ஜெ “மயிலாப்பூரில்” நின்று இருக்கலாமே!!! மீண்டும் ஏதாவது கிராமத்தில் நின்று ஜெ சாதிக்கு அப்பாற்பட்டவர் என்று காண்பிக்க தவறிவிட்டார்!!!

கடைசியாக ஜெ பிரச்சாரத்தில் மிக மிக செயற்கையாக “திட்டங்கள் நடத்தி தரப் படும்”, திட்டங்கள் தொடங்கப் படும், பரசீலிக்க படும்” பேசியது. சுவையாக, மக்கள் மனதை கவரும் வண்ணம் எந்த கூட்டத்திலும் பேசாமல் இருந்தது! வழக்கம் போல் இந்த தேர்தலிலும் வேட்பாளர்களை தன் அருகே நிற்க விடாமல் அருகில் உள்ள வாகனத்தில் நிற்க வைத்துவிட்டு, ஜெ அவருடைய வாகனத்தில் ஒரு கூண்டுக்குள் இருந்து பிரச்சாரம் செய்தது!

மே 14 அன்று மாலை கலைஞர் மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார் என்று செய்தியை பார்த்தவுடன் இந்த பதிவை இடலாம் என்று இருந்தேன், ஆனால் என் சகோதரர் ஏன் எழுதவில்லை என்று கேட்டுக் கொண்டே இருப்பார், அதன் விளைவே இந்த பதிவு.

அப்பாடா தமிழக சட்டமன்ற தேர்தலை பற்றி நாமும் எழுதியாகிவிட்டது!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா..

குறிப்பு : மே ௧௬ஜெயலலிதா கொடநாடு புறப்பட்டு சென்றார், அவரை சமாதன படுத்த விஜய்காந்த், நல்ல கண்ணு, கிருஷ்ணசாமி, கொடுநாடு சென்று அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேச சென்றார்கள், ஜெ யாரையும் சந்திக்கவில்லை. அவர்கள் மாலை வரை அங்கேயே இருந்து மிகுந்த ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்கள்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, November 14, 2010

USTPAC - அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை ஆண்டு விழா...

தமிழரின் சிந்தனையும் செயல்பாடும்.


இன்று முக்கியத் தேவை தெளிவான சிந்தனையும் திட்டமிட்டச் செயல் பாடும்.

இதில் கொள்கை ஒரு முகமாகவே இருந்தாலும் சிந்தனைத் தெளிவு இல்லாமல்
பலமுகச் சிந்தனைக் கருத்துக்கள் உலவி வருகின்றன, ஐந்து விரல்கள் ஒன்றாக
இருக்க வேண்டியதில்லை,ஆனால் அவை ஒன்றாக மூடி இணையும் போது உள்ள ஆற்றல்
தனித்தனியே வருமா? ஒரு முறை நன்றாக விரல்களை மூடி, இருக்கமாக மூடிப்
பார்த்து விட்டு உருக்கமாகச் சிந்திப்போம்.

தமிழ் ஈழத்திலே மக்களின் துன்பங்கள்,வேதனைகள் நம்மை
வெட்கத்திற்கும்,சொல்ல முடியாத துன்பத்திற்கும் ஆளாகி விட்டுள்ளது.
ஒவ்வொருவரும் ஏதவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயல் பட வேண்டுமே
தவிர நம்மால் என்ன முடியும் என்று சோர்வடைவதிலோ, செய்பவர்களை அது
சரியில்லை,இது சரியில்லை என்று குறை பேசுவதிலோப் பயனில்லை.
தமிழ் மக்களை "பயங்கரவாதிகள்" என்ற ஒரு வார்த்தையை உலகெங்கும் ஊன்றி
விதைத்து உலகத்தையே தமிழினத்திற்கு எதிராகச் சிங்களப் பயங்கரவாதம்
ஏமாற்றி விட்டது.இது வரை நிகழாத ஒன்றாக அமெரிக்க,ருசியாவும், சீனாவும்
இந்தியாவும்,இசுரேலும் ஈரானும்,பாகிச்தானும் மற்ற நாடுகளும் சேர்ந்து
ஏராளமான உதவிகளைத் தனக்குச் செய்ய வைத்த சிங்கள சாணக்கியம் உலகை நன்கு
ஏமாற்றி விட்டது. ஆம்! நாம் ஏமாந்து விட்டோம். நமக்கு ஆதரவளித்த சில நல்ல
இதயங்களால் நமது மக்களைக் காப்பாற்ற முடிய வில்லை. இப்போதும் இலங்கை
அமர்ந்துள்ள இடத்தின் முக்கியத்துவத்தால் உலகம் அங்கே காலூன்றத்தான்
பார்க்கின்றதே தவிர உண்மையான மனித நேய்த்துடன் இனவாத அரசைக் கண்டிக்க முன
வரத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.இந்த நிலையிலே நமக்கு ஒரு
அடிப்படை சிந்தனைத் தெளிவு வேண்டும்.

அந்தந்த நாடு அதனதன் பொருளாதார மற்ற வளர்ச்சிகளுக்குத்தான் முக்கியம்
தருவார்களேயன்றித் தமிழருக்காக என்று அவர்களுக்கு வசதியில்லாத்தைச் செய்ய
முன் வரமாட்டார்கள். சீனாவின் ஆழமான,அழுத்தமான இலங்கைத் தழுவல் ஏனைய
நாடுகளைச் சிந்திக்க வைக்கும்,ஆனால் செயல் பாடுகள் அவரவர்
நலனுக்காகத்தான் ஏற்றபடி நடக்கும்.இந்தியா எந்தக் காரணத்தைக் கொண்டும்
தமிழீழம் அமைக்க உதவாது.தமிழ் நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள்
புது டில்லியின் கைப்பாவையாகத்தான் செயல் பட முடியும். தமிழகத்தின்
தனிப்பெருந் தலைவராக இருந்த எம்.ஜி,ஆராலேயே அன்று ராஜிவ் காந்தியின்
அடாவடித்தன சிறைவைப்பையோ, உடன் பாட்டின் கட்டாயக் கையெழுத்தையோ தடுக்க
முடியவில்லை என்பது மறக்க முடியாத உண்மை நிலை. வெறும் பேச்சினால் எதையும்
சாதித்துவிட முடியாது என்பது நாம் கண்டறிந்த உண்மை.

இன்றைய அரசியல் சூழ் நிலையில் நமது சிந்தனைத் தெளிவாக நாம் ஒத்துக் கொள்ள
வேண்டிய எண்ணங்கள் என்ன ?

உலக மக்களை நமது நிலையை நன்கு புரிந்து கொள்ள வைக்க வேண்டும்.தமிழர்கள்
"பயங்கரவாதிகள்" அல்லர். இலங்கை இனவாத அரசுதான் உண்மையானப்
"பயங்கரவாதிகள்" என்பது வெளியே வர வேண்டும். தமிழர்கள் இன அழிப்பில்
தங்கள் அனைத்து உடைமைகளையும்,உரிமைகளையும் இழந்து விட்டனர் என்பதைப்
புரிய வைக்க வேண்டும்.

நம்முடைய உள்ளக் கருத்துக்கள் உள்ளத்தின் அடியிலேயே உறங்காமல் இருக்கட்டும்.
உதட்டிலேயிருந்து வருவது உலக மக்களுக்காக இருக்கட்டும்.

இன்று நமது ஆக்கபூர்வமானச் செயல் பாடுகள் என்னவாக இருக்க முடியும் ?
ஆங்காங்கே உள்ள தமிழ்,தமிழர் அமைப்புக்களுக்கு நமது செயல் பாடுகள்
நன்றாகத் தெரிய வேண்டும்.நிலவும் குழப்பங்கள் தெளிவு படுத்தப் பட
வேண்டும். அமைப்புக்களில் பங்கேற்காத பலருக்கு நமது வீட்டு நிகழ்ச்சிகள்,
விழாக்களில் கலந்து கொள்ளும் போது நடப்பதை நேர்மையாக எடுத்துரைத்து
ஆதரவைக் கோர வேண்டும். இதில் பங்கேற்பதால் அவர்களுக்கு எந்த விளைவுகளும்
நேராது என்ற மனத்திடத்தை வலியுறுத்த வேண்டும்.நாம் செய்யும் அனைத்தும்
சட்ட திட்டங்களுக்கு நன்கு வரையறுக்கப்பட்டச் செயல்கள் ,இதனால் எந்தத்
தொந்தரவும் இல்லை என்பதை நன்கு எடுத்துரைக்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாகத் தமிழீழத்திலே வாழும் ஒரு குடும்பத்தையாவது
வாழவைக்க உதவி செய்ய வேண்டும்.அதற்கான தேர்ந்தெடுத்த அமைப்புக்களின்
பட்டியலை வெளியிட வேண்டும்.

உலக அளிவிலே இன்று உலகத் தமிழர் அமைப்பு (Global Tamil Forum), அதன்
அங்கங்கங்களாக அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்
படும் இயக்கங்கள் USTPAC, BTF,CTC,ATC etc.முன்னின்று செயல்
படுகின்றன. அடுத்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு. (Trans National
Government of Tamil Eelam ).இதன் செயல் பாடுகள் பலருக்கு இன்னும்
சரியாகப் புரியவில்லை. நாம் என்ன சாதித்துவிட முடியும் என்ற
அய்யப்பாட்டிலேயே தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்,
அப்படி நினைத்தால் இலங்கை அரசு ஏன் அதைப் பற்றிக் கவலைப் படுகின்றது?
என்பது தான்.நன்கு சிந்தித்துப் பல சட்ட வல்லுனர்களின் ஆலோசணையின் பேரிலே
அமைக்கப் பட்டதுதான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு.

ஆகவே இந்த இரண்டு அமைப்புக்களும் நன்கு உழைக்க அதன் அங்கங்கள் சரியாகத்
திட்டமிட்டுச் செயல் பட வேண்டும்.அப்போதுதான் நமது கருத்துக்கள் வெளி
உலகத்திற்கும்,முக்கிய அரசுகளுக்கும் சென்றடைய முடியும்.

இந்த அமைப்புக்களின் செயல் பாட்டிற்கு முக்கியத் தேவை நமது உழைப்பும்,
பொருளாதாரமும். பல துறை வல்லுனர்கள் இன்னும் ஒதுங்கியே இருப்பது ஏன்
என்று அவர்களிடமே நேரே பேசி அறிய வேண்டும், தங்கள் பெயர் வெளியே
வரவேண்டாம் என்று பல காரணங்களுக்காக நினைப்பவர்களின் எண்ணத்தை ஏற்று
மதித்து அவர்களின் உதவிகளை ஏற்றுக் கொள்ளும் வழி வகைகளில் செயல் பட
வேண்டும். தங்களின் அரிய உழைப்பை அல்லும் பகலுந்தந்து வருவோரை ஆதரித்து
அவர்களுக்கு நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்று ஒவ்வொரு தமிழரும் ஈடுபட
வேண்டும். வெறும் இணையத்தில் எழுதிவிட்டு நான் சாதனை படைத்து விட்டேன்,
என் கடமை இது தான் என்று எண்ணுவது நகைப்புகுறியது.நல்ல கருத்துக்களை,
நல்ல முறையில் சொல்லுங்கள். ஆனால் அதோடு உங்கள் கடமை முடிந்து விட்டதாக
எண்ணாதீர்கள்.

பொருளாதார உதவியின்றி எந்த அமைப்பும் செயல் பட முடியாது என்பதைச்
செயலில் காட்டுவோம்.

இலங்கப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் மெல்ல மெல்ல வெற்றி கண்டு
வருகிறது.நமது ஆதரவு உலகெங்கும் அந்தந்த நாட்டு மக்களை இணைத்துப்
போராடுவதில்தான் உள்ளது.

அமெரிக்க , கானாடா நண்பர்கள் நவம்பர் 20ஆம் நாள் நியூஜெர்சியில் கூடுவோம்.
இங்கிலாந்தில் டிசம்பர் 7 ஆம் நாள் வரவேற்பில் கலந்து கொள்வோம்.
மற்றும் ஆங்காங்கே கூட்டங்கள் ஏற்பாடு செய்வோம்.

சிறப்பாகச் செயல் படுவோம். வெற்றி நமதே என்ற உள்ளுணர்வோடு செயல் படுவோம்.


USTPAC உலகத் தமிழர் அமைப்பின் அமெரிக்க அங்கம். அதன் ஆண்டு விழா
நவம்பர் 20 ஆம் நாள் நியூஜெர்சியில் நடக்கவிருக்கின்றது.அனைத்து
நண்பர்களும் வர வேண்டுகின்றோம்.

நன்றி
அமெரிக்க த் தமிழ் அரசியல் செயலவை


USTPAC
http://www.ustpac.org/
அமெரிக்க த் தமிழ் அரசியல் செயலவை
index8_12.jpg

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, October 09, 2010

ராகுல் காந்தி - சமூகநீதி - இடஒதுக்கீடு - ஒரு பார்வை


நன்றி - விடுதலை இதழ்
ராகுல் காந்தி - ஒரு பார்வை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியின் செயல்பாடுகள் _ கூறிவரும் கருத்-துகள் பலவகைப்பட்டதாகும்.

இதுவரை அவர் கூறிவந்த கருத்துகள் எப்படி இருந்திருப்பினும், அண்மையில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள், அந்த இளைஞரைக் கொஞ்சம் அண்ணாந்து பார்க்கச் செய்துவிட்டன.

கருநாடக மாநிலம் பசுவனக்குடி கல்லூரி மாணவர்கள் மத்தியிலே அவர் தெரிவித்த கருத்துகள் - _ மாண-வர்களின் கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையே.

(டெக்கான் ஹெரால்டு _ 15.8.2010) இதுகுறித்து விளக்கமாகவே தெரி-விக்கிறது.
இந்திய மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று சமூகநீதி _ இடஒதுக்கீடு; இதுகுறித்து சூடான வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ளன.

எடுத்த எடுப்பிலேயே ஓர் உண்மையை வெடிகுண்டெனத் தூக்கிப்போட்டார். இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் பெரும்-பாலும் கிராமப்புறங்களில் இருந்து-வந்தவர்கள் அல்லர் என்றார்.

பயிற்றுவிக்கும் திசையில் வளர்ச்சி ஏற்பட செய்யப்பட வேண்டியது என்ன? என்ற வினாவை ராகுல் தொடுத்த நேரத்தில் ஒரு மாணவி எழுந்திருந்து, முதலில் ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீட்டைத் தடுத்து நிறுத்துங்கள்! என்று அக்னி துண்டை வீசினார். இடஒதுக்கீடு பேரால் தகுதி திறமை வாய்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; திறமை வாய்ந்த மாணவர்கள் விரக்தியடைந்துள்-ளனர்; என்றும் அவர் மேலும் கூறினார். மிகவும் அமைதியாக ராகுல் விடையளித்தார். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்-பட்டு வந்திருக்கின்றனர். தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்-களும் நாட்டில் எத்தனை விழுக்-காடு என்று உங்களுக்குத் தெரியுமா? கிட்டதட்ட அவர்கள் 70 விழுக்காடு ஆவார்கள்.

இந்த அரங்கத்துக்குள்ளே கூடியிருக்கும் உங்களில் எத்தனைப் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் _ பிற்படுத்தப்பட்டவர்கள்? கொஞ்சம் கைகளை உயர்த்துங்கள் என்று கேட்டார். தூக்கியவர்களின் எண்-ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்-தது. அடுத்து பொதுத் தொகுதியில் (Open Competition) போட்டியிடக் கூடியவர்கள் கைகளை உயர்த்-துங்கள் என்றார். பெரும்பாலோர் கைகளை உயர்த்தினர்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்-படுத்தி நறுக்கென்று தைப்பதுபோல மண்டையில் ஒரு அடி அடித்தார் ராகுல்காந்தி. இடஒதுக்கீடு தேவை-யின் அவசியத்தை நீங்கள் உயர்த்திய கரங்களே _ எண்ணிக்கைப் பலமே நிரூபித்துவிட்டன என்றார்.

இன்னொரு மாணவி எழுந்தார். ஜாதி வாரியாக இடஒதுக்கீடு அளிப்பதற்குப் பதிலாக தாழ்த்தப்-பட்டோர் மற்றும் பிற்படுத்தப்-பட்டோரை தகுதி உடையவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்யக் கூடாதா? என்று வினாவைத் தூக்கி எறிந்தார். அதற்கான செயல் முறைகள் மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன என்று பதில் அளித்தார்.

சமூகநீதி, இடஒதுக்கீடுப் பிரச்-சினையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய ஓர் இளைஞரின் கருத்து எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூகநீதிச் சிந்தனையாளர்களிடம் இருக்கவே செய்தது. அவர்களின் நெஞ்சில் எல்லாம் பால் வார்க்கும் வகையில் ராகுல் காந்தியின் கருத்து இருப்பது நன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் உயர்ஜாதியினர் சூழ்ந்த அரங்கில் அவர் கேள்விகளை எதிர் கொண்ட விதம் பெருமிதமாக இருக்கிறது. அந்த இடத்திலேயே உயர் ஜாதிக்காரர்கள் எப்படி எல்லாம் ஆதிக்கம் செலுத்து-கிறார்கள் என்பதை ஒரு சோதனை வைத்து நிரூபித்தது, அவரின் சமயோசித அறிவுக்கும் சான்று பத்திரமாகும். அவர்களையே சோதனைச் சாலையாக்கி கைகளை உயர்த்தச் செய்து நிரூபித்தது நல்லதோர் அணுகுமுறையாகும். ராகுல் காந்தி சொன்னது வெறும் குத்து மதிப்பான தகவல்கள் அல்ல; உண்மையான _ புள்ளி விவரங்கள் அதைத்தான் பேசுகின்றன.

1999_ 2000 ஆம் ஆண்டுக்கான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் (NSSO) என்ன கூறுகிறது?

2.24 லட்சம் பேர்களிடம் எடுக்கப்-பட்ட கணக்கெடுப்பு _ அது தொழில் நுட்பம் சாராத பட்டப் படிப்பு விவரம்:

பார்ப்பனர்கள் _ உயர்ஜாதியினர் 66 விழுக்காடு.
மருத்துவப் பட்டதாரிகளில் பார்ப்பனர்கள் 65 விழுக்காடு.
பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் பட்டதாரிகளில் பார்ப்பனர்-கள் 67 விழுக்காடு; விவசாயப் பட்டப் படிப்பில் பார்ப்பனர்கள் 62 விழுக்காடு.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் பல்கலைக் கழக மான்யக் குழுவைச் சேர்ந்தவர்கள் எடுத்த புள்ளி விவரம் கூறுவது என்ன?

டாக்டர் சத்தியோ தோராத் (இந்து ஏடு 7.12.2006) 1.51 லட்சம் பேர்களிடம் எடுக்கப்பட்ட புள்ளி விவரம்.
பொறியியல் பட்டதாரிகள் 1359இல் பார்ப்பனர்கள் 908;
பிற்படுத்தப்பட்டோர் 202.
535 டாக்டர்களில் பார்ப்பனர்கள் 350; பிற்படுத்தப்பட்டோர் 56.
தொழில் நுட்பம் சாராத பட்ட-தாரிகள் 17,501இல் பார்ப்பனர்கள் 11,529; பிற்படுத்தப்பட்டோர் 2402.
உயர்கல்வி பெறுவோர் விழுக்காடு; தாழ்த்தப்பட்டோர் 5 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் 7 சதவிகிதம்; உயர் ஜாதியினர் 20 சதவிகிதம்.

பெண்கள்
உயர்கல்வியில் தாழ்த்தப்பட்டோர் 3.93 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் 4.70 சதவிகிதம்; உயர் ஜாதியினர் 16 சதவிகிதம்.

இதுபோன்ற ஏராளமான புள்ளி விவரங்கள் உண்டு. உண்மைக்கு மாறாகப் பார்ப்பனர்கள் பம்மாத்து அடிப்பதை ராகுல் காந்தி புரிந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
அவரைச் சுற்றியுள்ளவர்கள் உயர் தட்டு மக்களாக இருந்தும், அந்தச் சங்கிலியை அறுத்துக் கொண்டு உண்மையின் பக்கம் கண்களைத் திருப்பி உரத்துக் கூறியதற்கு மீண்டும் பாராட்டுகள்.

இரண்டாவதாக, ராகுல்காந்தி தெரிவித்த கருத்து பகுத்தறிவுச் சிந்தனையில் பாராட்டத்தக்கதாகும்.

மத்தியப்பிரதேசம் போபாலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி குறிப்பிடத்தகுந்ததாகும்.
வருங்கால பிரதமர் நீங்கள்தானே என்கிற வகையில் வினாக்கள் எல்லாம் வித்தாரம் பேசின -_ அவற்றிற்-கெல்லாம் சற்று வழுக்கிய மாதிரியே பதில் அளித்தார். டாக்டர் மன்மோகன்சிங் சிறந்த பிரதமர்தான் என்று சான்றுப் பத்திரம் வழங்கினார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து நேரடியாக இன்னொரு கேள்வியை செய்தியாளர்கள் விடுத்தனர்.

நீங்கள் பிரதமராவது என்பது உங்கள் தலைவிதியாக இருந்தால்.. என்று இழுத்தனர்.
மண்டையில் அடிகொடுத்தது போல பதிலடி கிடைத்தது ராகுல்காந்தியிடமிருந்து.
தலைவிதி என்பது பழைமைவாதி களின் நம்பிக்கை. உண்மையில் கடின உழைப்பில்தான் எனக்கு மிக நம்பிக்கை; கடின உழைப்புக்கு எவ்வித மாற்றும் கிடையாது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினால் மட்டுமேதான் நம்மால் முன்னேற்றம் அடைய முடியும் என்று முத்தான பகுத்தறிவுச் சாட்டையடி கொடுத்து செய்தி-யாளர்களைத் திணற அடித்தார்.
இந்துப் பழைமைவாதிகளுக்கு சனாதனிகளுக்கு, சங்பரிவார்க் கும்பலுக்குச் சரியான சூட்டுக்கோலை இதன் மூலம் பழுக்கவே கொடுத்-துள்ளார்.

ராகுல் காந்தியின் நெற்றியில் சதா சிவப்புச் சின்னம் (குங்குமம்) பளிச்-சிடுகிறது.
ஏதோ ஒரு கட்டத்தில் அவரை இந்துத்துவா பக்கம் சாய்த்துவிடலாம் என்று வெற்றிலைப் பாக்கை போட்டுக் குதப்பிக் கொண்டு இருந்த வட்டாரத்துக்கு ராகுல்காந்தியின் இந்தப் பதில் அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

எல்லாம் அவாள் அவாள் தலை எழுத்து, கர்மபலன், விதியின் விளையாட்டு என்று கூறி வித்தாரம் பேசியவர்கள், ஓர் இளம் தலைவர் இப்படி பேசுகிறாரே -_ இவரை எதிர்கால இந்தியாவின் பிரதமர் என்கிறார்களே- _ அப்படியென்றால், நம் எதிர் காலத்தின் நம் கெதி பூச்சியம் என்று பூச்சியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலைக்காக ராகுல்காந்தியின் சமூகநீதி குரலுக்காக, விதியை மட்டை ரெண்டு கீற்றாகக் கிழித்துக் காட்டியதற்காக சமூகநீதியாளர்-களும், பகுத்தறிவாளர்களும் பாராட்-டுகிறோம் _ பல படப் பாராட்டு-கிறோம்.

முஸ்லிம்களின் சிமி இயக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஒப்பிட்-டுப் பேசி விட்டாராம் ராகுல்காந்தி _ அது எப்படிப் பேசலாம் என்று அத்திரி பாட்சா கொழுக்கட்டை என்று தாவிக் குதிக்கிறார்கள் பா.ஜ.க. _ சங்பரிவார் வட்டாரங்கள்.

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் சிமியுடன் ஆர்.எஸ்.எசை எப்படி ஒப்பிடலாம் என்று வினா தொடுக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவகூர்.
இதைப் படிக்கும்பொழுது வாயால்சிரிக்க முடியவேயில்லை.

மூன்றுமுறை தடை செய்யப்பட்ட ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இந்த யோக்கியதையில் தடை செய்யப்-பட்ட சிமி.யுடன் ஒப்பிடலாமா என்று ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகிறார் என்றால், அக்கட்சியின் பொது அறிவு எந்த மட்டத்தில் இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள லாமே!

ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பிற்போக்கு அமைப்பு என்று வெளிப்-படையாகச் சொன்னதற்காகவும் ஒருமுறை ராகுல்காந்தியைப் பாராட் டுவோம்.
கலி. பூங்குன்றன்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, September 17, 2010

வாழ்க பெரியார்! என்றும் வளர்க அவர் புகழ்!

வாழ்க பெரியார்! என்றும் வளர்க அவர் புகழ்!

செப் 17, 2010

எரிமலையாய் சுடுகடலாய் இயற்கைக் கூத்தாய்
எதிரிகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய்

இனஉணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
கொடுமைகளை தீர்த்துகட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதன்சு நகர சாக்ரடிசாய்

ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்..........


- முதல்வர் கலைஞர்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, September 09, 2010

வாசிங்டன்னில் தந்தை பெரியாரின் 132வது பிறந்தத் தின விழா.


வாசிங்டன்னில் தந்தை பெரியாரின் 132வது பிறந்தத் தின விழா
பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த தினம் ஒவ்வோரு ஆண்டும் வாசிங்டன் வட்டாரத்தில் எளிமையாக ஆனால் சிறப்பான பேச்சுகள், உரையாடல்கள் மூலம் நடைப் பெறும்.

அதைப் போலவே இந்த ஆண்டும் தந்தை பெரியாரின் 132வது பிறந்தத் தின விழா செப்டம்பர் மாதம் 18ந் தேதி சனிமாலை 5.30 மணி முதல் 9.30 மணிவரை, எலிகாட் சிட்டி நகரத்தில், மேரிலாந்தில். (Terra Maria Community Center, 3112 Josephine Walk, Ellicott City, MD) நடைபெற உள்ளது.

இந்த விழாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால் மிகச் சிறந்த பகுத்தறிவாதி, தத்துவ பேராசிரியர் Paul Kurtz பேச உள்ளார்.( http://en.wikipedia.org/wiki/Paul_Kurtz). இவரை ”மதச்சார்பற்ற மனிதாபிமான தந்தை” என்றும் சொல்வார்கள்.

அவரை தொடர்ந்து ”பகவத் கீதையின் உண்மைகள்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் Narla Venkateswara Rao பற்றியும் அவரின் இந்த புத்தகத்தை பற்றியும் மருத்துவர் சிந்தானந்தன் பேச உள்ளார். (http://en.wikipedia.org/wiki/Narla_Venkateswara_Rao) .
“அந்த கால தமிழ்ச் சமுதாயமும், மதசார்பற்ற மனிதாபிமானமும்” என்ற தலைப்பில் முனைவர் இர பிரபாகரன் பேச உள்ளார்.

விழாவிற்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் தன்னலமற்ற தமிழ் சமுதாயம் முன்னேற தொடர்ந்து பாடுபட்ட வரலாற்றை பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கி கொண்ட பகுத்தறிவாளர்களின் பேச்சுகளை கேட்டு உங்கள் சிந்தனையை வளப் படுத்துங்கள்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...
பெரியார் பன்னாட்டு மையம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 26, 2010

பேராசிரியர் மம்மதுவின் தமிழின் முதல் இசை பேரகராதி – அறிமுக விழா


சென்னை. ஆகஸ்டு 15, 2010.

தேவநேய பாவணர் அரங்கில் மதுரை பேராசிரியர் மம்மது அவர்களின் கடின உழைப்பால் உருவான தமிழின் முதல் இசை பேரகராதி அறிமுக விழா நடைபெற்றது.

விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், சென்னைப் பல்கலை கழக இசைத் துறை சிறப்பு நிலைப் பேராசிரியர் எஸ் ஏ கே துர்கா, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கே ஏ குணசேகரன், மற்றும் நட்பு இணையத்தளத்தின் ஆசிரியர் மணா கலந்து கொண்டு நூலை பற்றி அறிமுகம் செய்தார்கள்.

விழாவின் தொடக்கத்தில் எளிமையான இசை நிகழ்ச்சி நடைப் பெற்றது. இந்த இசை நிகழ்வில் “என்றும் நினைவில் இருக்கும் பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்களுக்கு” நினைவஞ்சலியை போற்றும் வகையில் இசை நிகழ்வு இருந்தது. கேசிஎஸ் அருணாசலம், எம்பி சீனிவாசன், டிஎம் செளந்திரராஜன், ஏஎம் ராஜா, லீலா, காமூ ஷெரிப், கேவி மகாதேவன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சம்மந்த மூர்த்தி ஆச்சார்யா போன்ற பலரின் பாடல்கள் பாடப்பட்டது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட பாடல்கள் இன்றும் நீங்கா நினைவில் இருப்பது பழைய பாடல்களுக்கான சக்தியை உணர முடிந்தது.

விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழின் முதல் இசை பேரகராதியை பாராட்டி பேசும் பொழுது, இது ஒரு பல்கலை கழகம் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு மனிதனாக படைத்தது மிகப் பெரிய சாதனை என்று மனதார பாராட்டினார். நூலின் ஆசிரியர் மம்மது அய்யாவின் 5 ஆண்டு கால உழைப்பு நன்கு தெரிகிறது என்றார். 20 பேராசிரியர் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு போராசிரியராக படைத்து இருப்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது என்றார். இசை அகராதியில் உள்ள பல புதிய சொற்களுக்கு புதிய பரிணாமத்தில் புரிந்து கொண்டேன் என்றார். முத்தமிழின் இயல், இசை, நாடகத் துறையில், இசைக்கு இந்த அகராதி ஒரு அங்கீகாரம் என்றார். ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம் வந்து இதனை அறிமுகப் படுத்தி வாழ்த்தி பேசி இருக்க வேண்டும் என்றார்.

அடுத்து பேச வந்த இசைத்துறை சிறப்பு நிலை பேராசிரியர் துர்கா, தமிழில் இசைத் துறையில் உண்மையை நிறுவதற்கு மிகப் பெரிய சான்று இந்த இசை பேரகராதி என்றார். நூலின் ஆசிரியர் “யாப்பு” மற்றும் “புரசோலி” பற்றி விரிவான செய்திகளை எல்லோருக்கும் விளங்கும் வண்ணம் ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்றார். இந்த இசை பேரகராதியில் பண்டைய இசை கருவிகளைப் பற்றியும் இதில் பதிவு செய்து இருக்கிறார் என்றார். அகராதி மிகச் சுருக்கமாக உள்ளது என்றும், அய்யா மம்மது அவர்கள் இதனை கலைகளஞ்சியமாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கே ஏ குணசேகரன், இசை பேரகராதியை மிகவும் வெகுவாகப் பாராட்டி பேசினார். தமிழின் சிறப்பு லகரம் பற்றியும், காலப் போக்கில் நாம் பண்பாட்டில் நாம் இழந்தவற்றைப் பற்றியும், யாழ்பாண நூலகம் தீ வைத்து கொளுத்தப் பட்ட விவரங்களும், குறிப்பாக ஏராளமான இசைப் பற்றிய புத்தகங்கள் எரிக்கப் பட்டதை நினைவு கூர்ந்தார்.

இறுதியாக ஏற்புரையில் பேராசரியர் மம்மது அய்யா, எப்படி இந்த இசை பேரகராதி திட்டமிட்ட எழுதப் பட்டது என்றும், அமெரிக்கா வாழ் தமிழர் திரு பால் பாண்டியன் இதற்கு நிதி உதவி செய்ததுப் பற்றியும், நன்றியோடு நினைவு கூர்ந்தார். நிறைய கருத்துகளில் கே ஏ குணசேகரனும், துர்காவும் ஒன்று போல சிந்திக்கிறார்கள் என்றார். எனது அடுத்த திட்டம் “பண் களஞ்சியங்கள்” (ராகங்கள்) பற்றி என்றார். அடுத்த மூன்றாவது திட்டமாக, பண்டைய இசைக் கருவிகள் பற்றியும், அதனை படத்தோடு காட்சி குறுங்தகடுகளாக, டிவிடி முறையில் தயாரிக்க உள்ளோம் என்றார்.

இதுவரை தமிழ் இசை ஆய்வாளார்களுக்கு இசைக்கு என்று ஒரு அகராதி இல்லை என்பது மிக வருந்ததக்க விசயம். இந்த இசை பேரகராதியை அந்த குறையை போக்கிற்று. மேலும் மொழி மரபுகள், பண்பாடுகள் பற்றிய சான்றுகள் இந்த இசை பேரகராதியில் இருப்பது மிக மிக பெருமையான விசயங்கள்.

நிறைய ஊடகங்களும், நாளிதழ், வார இதழ்களில் இருந்து நிருபர்கள் வந்து இந்த அறிமுக விழாவில் கலந்து கொண்டார்கள்.

வைகோவும் இந்த இசை பேரகராதியை படித்துவிட்டு அய்யா மம்மதுவை வரவழைத்து பாராட்டி பேசி இருக்கிறார். மம்மது அய்யாவின் தமிழ் பெயர், “மாறன் வழுதி” என்பதாகும். வைகோ குறிப்பாக தமிழனால் எதுவும் முடியும் என்பதற்கு இந்த இசை பேரகராதி ஒரு சான்று என்றார்.

அமெரிக்காவாழ் தமிழர்களுக்கு பேராசிரியர் மம்மது அய்யாவை அறிமிக படுத்தியது “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை”. இந்த பேரவைக்கு நன்றிகள் பல…

நன்றி

மயிலாடுதுறை சிவா...

புகைப்பட உதவி : நட்பூ தளம்

கட்டுரை உதவி : பேராசிரியர் மம்மது (மாறன் வழுதி)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, July 15, 2010

செம்மொழி மாநாடு - மேலும் சில உங்கள் பார்வைக்கு


வாசிங்டன் சூலை 2010

செம்மொழி மாநாடு - மேலும் சில உங்கள் பார்வைக்குமாநாட்டில் தினமும் மதிய உணவு மிக மிக அருமை. எடுத்துகாட்டாக உணவு வகைகளில் இனிப்பில் பால் பாயசம், சேமியா பாயசம், அவல் பாயசம், இனிப்பு போளி, கந்தரப்பம், சங்கரை பொங்கல் மற்றும் அசைவ உணவில் சிக்கன் குருமா, மட்டன் குருமா, மீன் வறுவலும் இருந்தது. அதேப் போல் சைவ உணவில் நெய், பருப்பில் ஆரம்பித்து எல்லா வகையான உணவுகளும் இருந்தன. இப்படி தரமான உணவை எல்லோரும் ரசித்து சாப்பிடனர், அனைவரும் இதனை மனதார பாராட்டினார்கள்.

தினமும் “உணவகத்திற்கு” மத்திய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும், குறிப்பாக உணவு அமைச்சர் வேலு வந்து ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். உணவு அமைச்சரை பார்த்து நேரில் வாழ்த்துகளை தெரிவித்தேன்.

மாநாட்டின் பாதுகாப்பிற்கு ஏராளமான காவல்துறை நபர்களை பார்க்க முடிந்தது. அவர்கள் கிட்டதட்ட பத்து நாட்களுக்கும் மேலாக மாநாட்டிற்கு உதவி வருகிறார்கள். அவர்களும் இந்த ஆய்வரங்க உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். இவற்றில் நிறைய இளைஞர்களை பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் வயது 23, 24 இருக்கும், இவர்கள் (எஸ்.ஐ) சப் இன்ஸ்பெக்டர் ஆக கிட்டதட்ட 20 வருடங்கள் ஆகுமாம்! இவர்களுக்கு தங்குவதற்கு திருமண மண்டபங்களை ஒதுக்கி இருக்கிறார்கள். மூன்று வேளையும் உணவு பொட்டலம்தான்! இவர்களுக்கு தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் இன்னும் வசதி செய்து கொடுத்து இருக்கலாம் என்று சிலர் வருத்தம் தெரிவித்தார்கள்.

மாநாட்டில் பேச வந்தவர்களுக்கும், கட்டுரையாளார்களுக்கும் முதல் நாளே “அடையாள அட்டை” தர முடியவில்லை! இதனால் வெளி நாட்டில் வந்து இருந்த சிலர் மிக மிக வருத்தப் பட்டார்கள். இவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் படி ஆகிவிட்டது.
அதேப் போல் வந்து இவர்களுக்கு மாநாட்டு மலரும், ஆய்வரங்க மலரும், விழாவின் இலச்சினை (லோகோ) பொருத்திய பட்டயம் வாங்குவதற்கும் சில சிக்கல் இருந்தன.

மாநாட்டிற்கு கட்டு அடங்காத கூட்டம் காரணமாகவும், தமிழ் நாட்டில் பல்வேறு துறை முக்கிய நபர்களுக்கு அரங்கில் முறையாக அமர இடம் கிடைக்கவில்லை. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு மட்டும் நல்ல இடத்தில் அமர இடம் கிடைத்துவிட்டது. ஆனால் அந்த இடத்திற்கு செல்வதற்கு பல இடங்களில் காவல்துறை அதிகாரிகளிடம் “அடையாள அட்டை மற்றும், விழா அழைப்பிதழை” காண்பிக்க வேண்டி இருந்தது.

விழாவை சுதா சேஷய்யா தொகுத்து வழங்கினார். ஐந்து நாட்களும் அவர்களே தொகுத்து வழங்கினார்கள், வேறு சிலருக்கும் வாய்ப்புகள் கொடுத்து இருக்கலாம்!

குஷ்பு பட்டிமன்றத்தில் ”சின்னத்திரை” சார்பாக பேசுவதாக இருந்தாம்! நல்லவேளை இல்லை!

மத்திய அமைச்சர் ராசா மிக மிக சுறுசுறுப்பாக இருந்தார். கவியரங்கத்தில் போட்டு தள்ளிய பல நபர்களை அமைச்சர் பொன்முடியும், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் சீட்டு கொடுத்தும், அவர்கள் பேசி முடிப்பதாக இல்லை!

பொது அரங்கத்தில் ”கருத்தரங்களில்” மற்றும் “கவியரங்கத்தில்” பேசிய வெகு சிலரை தவிர நிறைய நபர்கள் முழுக்க முழுக்க சிபாரிசில் வந்தார்கள் என்று பேசிக் கொண்டார்கள். குறிப்பாக வைரமுத்து “கவியரங்கில்” யார் பேசுவார்கள் என்பதை முடிவு செய்தார் என்றார்கள்.

விழா ஒருநாளில் காலை திருப்பாவை சகோதரிகளின் நாதஸ்வரம் மிக மிக அருமையாக இருந்தது.

திரைப் பட நடிகர்களுக்கு நல்ல இடங்களை கொடுக்கவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு இருந்தது. பாக்யராஜ், பூர்ணிமா, வடிவேல், தியாகராஜன், பிரசாந்த், பிரகாஷ்ராஜ், விஜய்குமார் மற்றும் பிரபு இவர்கள் மாநாட்டில் தலையை காட்டினார்கள், ஆனால் எல்லா நாட்களும் வந்தார்களா? என்று தெரியவில்லை.

செம்மொழி மாநாடு நடக்கும் பொழுதே, இணைய மாநாடும் நடந்தது. நிறைய நண்பர்களை பார்க்க வேண்டும் என்று இருந்தேன், பார்க்க முடியமால் போய்விட்டது.

ஐந்து நாட்கள் கழித்து சென்னை புறப்படும் பொழுது மீண்டும் இப்படி ஒரு மாநாடு எப்படி எங்கு நடக்கும் என்று ஏக்கமாக இருந்தது. அவனாசி சாலையில் சென்னை நோக்கி பயணிக்கையில், சாலையின் இருபுறமும் மக்கள் சாரை சாரையாக கோவை நோக்கி திரும்பி கொண்டிருந்தார்கள். எண்ணற்ற மக்களை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும், மீண்டும் ஊர் செல்ல வேண்டுமே என்ற வருத்தமும் கலந்து இருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே என் மொழி பிறந்தது என்பதும், உலகின் மிகுந்த பழமையான மொழி என் தாய் மொழி என்பதும், என் தாய் மொழி செம்மொழி இன்னும் காணவேண்டிய வெற்றிகள் பல உள்ளன என்பதை மனது அசைப் போட்டு கொண்டே, மீண்டும் மற்றோரு செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று நம்பிக்கையில் சென்னை சென்று வாசிங்டன் செல்ல ஆயுத்தமானேன்!

வாழ்க என் தாய் மொழி! வளர்க அதன் புகழ்!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது