Monday, April 23, 2007

அன்புடன் - சிநேகா - கெளதமி


இந்த வாரம் அன்புடன் சன் தொலைகாட்சியில் ஞாயிறு இரவு வருவதற்கு முன்பே இரண்டு மூன்று தினங்களாக, "பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்ற ஒரு பாடலை அரையிருட்டில் ஓர் உருவம் பாடிக் கொண்டே இருக்கும், அதனை கெளதமி அந்த பாடலை பாடுவது யார் தெரியுமா? ஞாயிறு இரவு அன்புடன், காணத் தவறாதீர்கள்! என்று சொல்லி கொன்று கொண்டு இருந்தார்.

அந்த ஞாயிறு இரவும் வந்தது அரையிருட்டில் பாடிக் கொண்டு இருந்த உருவம் முழு வெளிச்சத்தில்அந்த நடிகை சிநேகா பாட, கெளதமி உள்ளே இருந்து "Excellent, Excellent" என்று சொல்லிக் கொண்டுவந்தது படு கேவலமாக இருந்தது. சிநேகாவின் ப்ளஸ் பாயிண்ட் புடவை, அதற்கு நேர் மாறாக மிடியில் வந்து இருந்தார். உடம்பில் வயதான தோற்றம் நன்கு தெரிந்தது. தமிழில் நல்ல வாய்ப்பு இல்லை என்பதை நேரிடையாக ஒத்து கொள்ளமால் நல்ல கேரக்டர்காக காத்து இருப்பதாக சொன்னார். தங்கர் பச்சானின்"பள்ளி கூடம்" ரொம்ப எதிர்பார்ப்பதாக சொன்னார்.

உட்கார்ந்து ஆற அமர பேச ஆரம்பிப்பதற்குள் சிநேகா கடகடவென்று பேசித் தீர்த்து விட்டார். வழக்கம் போல் கெளதமியின் கேள்விகள் படு அபத்தமாகவும் தெண்டமாகவும் இருந்தது. அங்கே அங்கே "Lovely" என்றும்"Excellent" என்றும் "Wow" என்றும் "Really" என்றும் சொல்லி மேலும் மேலும் வெறுப்பேத்திக் கொண்டு இருந்தார். Commercial Break கிற்கு simple ஆக சொல்லமால் செயற்கையாக ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தார். Break முடிந்து மீண்டும் காட்சிக்கு செல்லும் பொழுது "உங்களை மீண்டும் ராஜாகங்கத்திற்கு அழைத்து செல்லவா?" என்று கேட்டு வெறுப்பு ஏத்தினார் என்றால் அது மிகையாகது.

சிநேகாவின் நெருங்கிய தோழர் நடிகர் "ஷ்யாம்" என்றார். இயக்குனர் சீமானின் மூலம் "தமிழ் மொழி"மீது ஆர்வம் வந்தது என்றார். அடிக்கடி எங்க அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என்று குடும்பத்தைப் பேசிக் கொண்டு இருந்தார்.

அன்புடன் நிகழ்ச்சியில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற காரணத்தால் கெளதமி இந்த வாரம்சிநேகா அம்மா, சிநேகாவின் அக்கா பையன் நித்தின் வந்து நிகழ்ச்சியை மேலும் மேலும் வெறுப்புஏத்திக் கொண்டு இருந்தார்கள். இப்படியே சென்றால் எதிர்காலத்தில் அவர்கள் வளர்க்கும் ஜிம்மிநாய் குட்டி, எருமை/பசு மாடு, பூனைக் குட்டி எல்லாம் வர ஆரம்பித்து "சிநேகா" ரொம்ப நல்லடைப், தினமும் அவர்கள் பக்கத்தில் தான் சாப்பிடுவேன், தூங்குவேன் என்று சொன்னால் ஆச்சர்யம் இல்லை.

மொத்ததில் (சத்யராஜ் தவிர) எல்லா பேட்டிகளும் தெண்டம் மற்றும் செம அறுவை. கெளதமியின் பேச்சுகள் மற்றும் கேள்விகள் அனைத்தும் செயற்கையாக / போலியாக இருந்தது. பேட்டியில் ஓர் உயிரோட்டம் இல்லை. அத்தனை கொடுமைகளையும் பார்த்து எழுதுவதற்கு மன்னிக்கவும்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, April 16, 2007

மாயக் கண்ணாடி வெற்றி படமா?


ஏப்ரல் 16 : தமிழ் திரைப் பட இயக்குனர்களில் சேரன் தனக்கென்று ஓரு பாதையை வைத்துக் கொண்டு மிக அருமையான தமிழ் திரைப் படங்களை கொடுத்துக் கொண்டு வருபவர். அடுத்த பாரதிராசா என்று சொல்லபடுபவர்.

ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்தை விட "பொற்காலம், பாரதி கண்ணம்மா" என் மனதை மிகவும் ஆழமாக பாதித்த படங்கள்.

"சிவாஜி" படத்தைவிட நான் "மாயக் கண்ணாடியை" ரொம்ப எதிர்பார்த்து வந்தேன். சிலப் பேர் படம் நன்றாக உள்ளது என்றும்? (Behindwoods) சிலப் பேர் சேரனுக்கு என்னாவாயிற்று(Sify) என்றும் சொல்கிறார்களே?

என்னைக்கு DVD வருவது என்றைக்கு அதனைப் பார்ப்பது? சேரன் பேட்டியெல்லாம் படிக்க போதே சற்று பயந்து கொண்டுதான் இருந்தேன்.

எப்படியாவது இந்த படம் சேரன் அல்லது தாயாரிப்பாளர் கை கடிக்காமல் ஓடிவிட்டால், மனம் தளராமல் அடுத்து நல்ல படங்கள் சேரன் கொடுப்பார்.

வலைப் பூ மக்களிடம் இருந்தும் மாயக் கண்ணாடி பற்றி விமர்சனங்கள் ஏதுவும் வரவில்லையே?!

நன்றி

மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, April 02, 2007

தமிழக அரசின் புரட்சி உத்தரவு! அரவாணிகளுக்கு அறுவை சிகிச்சை!

முத்தமிழ் அறிஞர் நம் தமிழக முதல்வர் கலைஞருக்கு பாராட்டுகள் பல. தொடரட்டும் உனது பணி ....

வாழ்த்துகள் : லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு!!!

***************************************************************************

நன்றி : விகடன்

தமிழக அரசின் புரட்சி உத்தரவு! அரவாணிகளுக்கு அறுவை சிகிச்சை!

‘வாடாமல்லி’ என்றும், ‘சந்திப்பிழைகள்’ என்றும் இலக்கியங்கள் சுட்டும் திருநங்கைகளின் (அரவாணிகள்) நடைமுறை வாழ்க்கை, வலிகள் நிறைந்தது. சமூகத்தில் எந்த திசையில் திரும்பினாலும் புறக்கணிப்புகளும், அவமானங்களும் மட்டுமே எஞ்சியிருக்கும் இவர்களின் வாழ்க்கையில், முதன்முதலாக நம்பிக்கை ஒளியை ஏற்றியிருக்கிறது தமிழக அரசு. ‘பாலின மாற்று அறுவை சிகிச்சையை இனி அரசு மருத்துவமனைகளிலேயே செய்துகொள்ளலாம்’ என்ற அரசின் உத்தரவு, எங்களின் ரணங்களுக்குக் கிடைத்திருக்கும் மாமருந்து’’ என திருநங்கைகள் தெம்போடு பேச ஆரம்பித்துள்ளனர்.


Free Image Hosting at www.ImageShack.us

இந்த உத்தரவு வருவதற்கான மூலக்காரணங்களாக இரண்டு விஷயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஒன்று, அண்மையில் சென்னையில் நடந்த பாலின சிறுபான்மை யினர் மாநாட்டில் இது தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கை. இன்னொன்று, மதுரையில் வசிக்கும் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா என்ற திருநங்கை, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் போட்ட வழக்கு. இவர் தன்னுடைய இயற்பெயரான சரவணன் என்பதை, ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா என்று கெஜட்டில் மாற்றித்தர வேண்டியும், பாலின மாற்றம் வேண்டியும் அரசுக்கு விண்ணப்பித்தார். ஆனால், ‘நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லை’ என்று சொல்லி இவரது கோரிக்கையை நிராகரித்தது அரசு. இதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் வித்யா. அந்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் வந்தது. அதில், வித்யாவுக்கு முறைப்படியான பெயர் மற்றும் பாலின மாற்றுச் சான்றிதழ் வழங்கச் சொல்லி உத்தரவிட்டது கோர்ட். இதைத் தொடர்ந்துதான், தமிழக அரசு இப்படியரு உத்தரவை அறிவித்திருக்கிறது.

திருநங்கைகளின் துயர் மிகுந்த வாழ்வில் இந்த உத்தரவு ஒரு மைல்கல் என்பதால், ‘லிவிங் ஸ்மைல்’ வித்யாவுடன் பேசினோம். ‘‘எங்களைத் தாயன்போடு அரவணைத்து இப்படியரு உத்தரவு பிறப்பிக்கக் காரணமான தமிழக முதல்வர் கலைஞரய்யாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி’’ என்று நெகிழ்ச்சியான குரலில் ஆரம்பித்தார்.

‘‘பாலின மாற்று அறுவை சிகிச்சையை எங்கள் மொழியில் நிர்வாணம் செய்வது என்போம். முன்பெல்லாம் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி ஆணுறுப்பை அறுத்து எடுப்பார்கள். செத்துப் பிழைக்கும் அந்தப் பயங்கர முறை இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டது. தற்போது மருத்துவர்கள் மூலமாக நிர்வாணம் செய்துகொள்ளும் முறை வந்துவிட்டது. இதற்குப் பதினைந்திலிருந்து, இருபதாயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்தத் தொகையை சேமிப்பதுதான் திருநங்கைகளுக்கு மிகப்பெரிய சவால். இதற்காக, ஆண்டுக்கணக்கில் பிச்சை எடுத்தும், விபசாரம் செய்தும் பணம் திரட்டுகின்றனர். நான் நிர்வாணம் செய்துகொள்வதற்காக,வட மாநிலங்களில் ஒரு வருடகாலம் பிச்சை எடுத்துத் திரிந்தேன். இப்போது இந்த சிகிச்சையை அரசு மருத்துவமனை களில் இலவசமாக செய்துகொள்ளலாம் என சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தியாவின் முன்மாதிரி அரசாணையான இதுபற்றி முழு விவரங்கள் இன்னும் வெளிப் படையாகத் தெரியாத நிலையில், ஒரு திருநங்கையாக அந்த அரசாணையில் என்னென்ன அம்சங்கள் இருந்தால் உண்மையிலேயே எங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும். இப்படிப்பட்ட சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, ‘மாறிய பாலினம்’ என்று சான்றிதழ் வழங்கும் பழக்கம் மேலை நாடு களில் இருக்கிறது. அதே மாதிரி இங்கும் சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும். அந்த சான்றிதழைக் கொண்டு, அரசிதழில் பெயர்மாற்றம் செய்துகொள்ள உத்தரவிட வேண்டும். ஒரு திருநங்கையால் வங்கிக் கணக்கு மட்டுமல்ல... டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் என்று எதையுமே பெறமுடியாது. அவ்வளவு ஏன்..? ஒரு செல்போன் இணைப்புக்கூட வாங்க முடியாது. எனவே, இப்படியான எல்லாவித பிரச்னைகளையும் கலைவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் தற்போதைய உத்தரவில், அறுவை சிகிச்சை மட்டுமின்றி, மார்பக வளர்ச்சிக்கான சிகிச்சையும், குரலை மாற்றிக்கொள்வதற்கான வாய்ஸ் தெரப்பியும் வழங்கப்படப் போவதாகச் சொல்லப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். இதில், ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொது வாக மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒரு வீட்டில் திருநங்கை இருந்தால், கணக்கெடுக்கும் அதிகாரிகள் அவரை ஆண் என்றோ, பெண் என்றோ ஒரு பிரிவுக்குள் அடக்கி எழுதி விடுகிறார்கள். இதனால் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் திருநங்கைகளின் எண்ணிக்கைபற்றிய முறையான தகவல்கள் இல்லை. திருநங்கைகளின் வாழ்வில் முதல் சுடரை ஏற்றி வைத்திருக்கும் முதல்வர் அவர்கள், இந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வைத் தருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்...’’ என்று சொன்ன ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா, ‘‘ஊனமுற்ற குழந்தையாக இருந்தாலும் கூட, கடைசிவரைக்கும் சோறுபோட்டு காப்பாற்றும் பெற் றோர்கள், எங்களைப் போன்றவர்களை மட்டும் பருவ வயதில் வீட்டைவிட்டு வெளியேற்றி விடுகின்றனர். அடுத்த வேளை சோற்றுக்கு வழியின்றி தெருவில் நிற்கும்போதுதான், இந்த சமூகத்தின் பொது ஒழுக்க விதிகள் தங்களைக் கட்டுப்படுத்தாது என்ற மனநிலைக்குத் திருநங்கைகள் வந்துவிடுகிறார்கள். எனவே ‘மரம் வளர்ப்போம்’, ‘எய்ட்ஸை தடுப்போம்’ என்றெல்லாம் பிரசாரம் செய்வதுபோல, ‘திருநங்கைகளும் மனிதர்கள்தான். அவர்களையும் மதிப்போம்’ என்று தீவிரமாக எல்லா வடிவங்களிலும் பிரசாரம் செய்ய வேண்டும். திருநங்கைகளின் குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். பெற்றோர் பாதுகாப்பு சட்டம்போல, திருநங்கைகளை வீட்டை விட்டுத் துரத்தும் குடும்பத்தினருக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். தலித்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருப்பதுபோல, திருநங்கை களைப் பொது இடத்தில் கேவலப்படுத்தினால் தண்டனை கொடுக்க வேண்டும்!’’ என்று பொங்கி முடித்தார்.

நன்றி : பாரதி தம்பி
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி


மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது