கவிஞர் ஜெயபாஸ்கரன்

வாசிங்டன் ஆக்ஸ்டு 2009
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை விருந்தினர்களில் கவிஞர் ஜெய பாஸ்கரனும் ஒருவர். மிக எளிமையான அன்பாக பழக கூடிய ஒரு தமிழ் ஆர்வலர் என்றால் அது மிகையல்ல. இவரின் மிகப் பெரிய பலம் இவரது எளிமையான புது கவிதைகள் மட்டுமல்ல, கட்டுரைகளும் இவரை ஒரு தனி மனிதனாக அடையாளம் காண்பிக்கிறது. இவருடைய ஜெயபாஸ்கரன் கவிதைகள் மற்றும் ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் இரண்டும் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள். இவருடைய முதல் வெளிநாட்டு பயணமே அமெரிக்காதான், அதுவும் தமிழ்ச் சங்க பேரவை விழாவிற்கு.
அவருடைய கவியரங்கத்தில் தமிழ்தாய் ஒருவனிடம் பேசுவதை போல ஒரு புது கவிதையை வடித்து இருந்தார். தமிழ்த் தாய் சராசரி தமிழனிடம் கேட்ட கேள்வி எல்லாம் மிக மிக உணர்வு பூர்வமானவை. தமிழனுக்கு என்று ஒரு இடம் இல்லையே என்றும், எங்கெல்லாம் தமிழ் மறக்கப் பட்டு இருக்கிறது என்றும், மிக அழகான தமிழ்ப் பெயர் கொண்ட ஊரின் பெயர்கள் எப்படி கால ஓட்டத்தில் மாற்றப் பட்டு இருக்கிறது என்றும் தன்னுடைய கவிதைகளில் தமிழ்த் தாயின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். இந்த கவிதையை பார்வையாளர் மிக மிக ரசித்து கேட்டார்கள்.
விழாவின் இறுதி நாள் இலக்கிய கூட்டத்தில் சிலப்பதிகாரத்தின் பெருமைகளை பட்டியிலிட்ட சிலம்பொலி சு செல்லபனுக்கு பிறகு, மரபு கவிதைகள் நிறைய பேசி, சங்ககாலத்தின் இலக்கியத்தை அவை மகிழ பேசிய தமிழருவி மணியனுக்கு பிறகு, இவர் எப்படி பேசி அவையோரை கவரப் போகிறார் என்ற கவலையோடு காத்திருந்த வேலையில் கவிஞர் ஜெயபாஸ்கரன் இவருடைய கவிதைகள் மட்டும் அல்லாது, சமுதாயத்தில் சமூக தாக்கத்தோடு எழுதிய கவிதைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இவருடைய பல கவிதைகள் நம் இயல்பு வாழ்க்கையில் கடந்து செல்பவை. இவர் ஒரு முறை தன் கைபையை தொலைத்து இருக்கிறார் அதனை கவிதையாய் எழுதி இருக்கிறார். அந்த கைபையை எடுத்தவன் எப்படிஎல்லாம் இவரைப் பற்றி நினைத்து இருப்பான் என்று! இவருக்கு அணிவித்த பொன்னாடையை என்ன செய்வது என்று கவிதை எழுதி இருக்கிறார். இவர் வசிக்கும் வீட்டிற்கு வாடகை தருவதை வாடகை என்ற கவிதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் உள்ள குயிலுக்கும், அங்கே வரும் தென்றல் காற்றுக்கும் வாடகை தருகிறேன் என்று மிக அழகாக மனதை கொள்ளை கொள்கிறார். இவருடைய கட்டுரை தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரையில் "சமுதாயப் பிரச்சினை" பற்று எழதப் பட்ட கட்டுரைக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு கொடுக்கும் அமைப்புகள் (அரசு உட்பட) அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க கவனம் கொண்டுள்ளதா? என்று கேள்வி கேட்கிறார் கவிஞர்.
இவருடைய பேட்டி ஒன்றில் இவர் எப்படி இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று மிக எளிமையாக சொல்லுகிறார். யானைகள் மிக அபூர்வமான விலங்கினம், இயற்கையோடு மிக தொடர்பு உடைய ஒரு விலங்கினம் யானை என்றும் அது கொஞ்ச கொஞ்சமாக இந்தியாவில் குறைந்து வருவது கண்டு மிக வருத்தப் பட்டார். நம் தோட்டங்களில் வரும் "வேலிகாட்டான்" (வேலிகாத்தன்) என்ற முள் வகையை சார்ந்த தாவரத்தால் நம் தோட்டம், பயிர்கள், வயல் வெளிகள் மிகவும் பாதிப்பிற்கு நாம் ஆளாகிறோம் என்றார். இதனை வேளாண்மைத் துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இதனை அழிக்க முற்பட வேண்டும் என்றார். கடைசியாக இவர் வருத்தமாக சொன்ன விசயம் எனக்கும் மிக மிக பாதித்தது. அதாவது நம் தாய்மொழி நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த, பயிற்று வைத்த, பேச வைத்த மொழி, இதனை நான் இந்த பரம்பரை வரை எடுத்து வந்துவிட்டேன், இதனை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்து செல்ல போகிறேன் என்று கவிஞர் ஜெய பாஸ்கரன் வருத்தப் பட்டது இன்னமும் நீங்கா நினைவில் உள்ளது.
இப்படிபட்ட நல் உள்ளங்களை தொடந்து அறிமுக படுத்தி வரும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவைக்கு எப்படி நன்றிகளை காணிக்கையாக்குவது?
நன்றி
மயிலாடுதுறை சிவா...