ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் பேட்டி - நன்றி விகடன்
இந்த வாரம் தீபாவளி வாரம் சிறப்பு இதழாக விகடன் மலர்ந்து இருக்கிறது. நிறைய நல்ல பல பேட்டிகள். குறிப்பாக திரு காசி ஆனந்தனின் பேட்டி என் மனதை தொட்டது, சில வரிகள் கண்களில் நீர் பனித்தன. விகடன் படிக்காத ஈழ நண்பர்களுக்கு இந்த பேட்டி உத்வேகத்தை தரட்டும். விகடனுக்கு மனப் பூர்வமான நன்றிகள் பல.
படித்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.
‘‘ஈழத்தின் ஒவ்வொரு பறவையும், விடுதலையின் பாடலைத் தன் இறக்கைகளில் சுமந்து உலகெங்கும் பறந்து செல்கிறது!’’ என்கிறார் ஈழக் கவிஞர் காசி ஆனந்தன்.

தாய் மண்ணைத் தொலைத்து, ஈழத்தின் நினைவுகளுடன் உலகெங்கும் அலையும் ஒவ்வொரு ஈழத் தமிழனும், இந்த உணர்ச்சிக் கவிஞரின் கவிதை களுடன்தான் வாழ்கிறான். விடுதலைப் போராளி இயக்கங்களின் துப்பாக்கி முனைகளுக்கு நிகராக, காசி ஆனந்தனின் பேனா முனையும் தங்களை பலவீனப்படுத்துவதாக என்றென்றும் ஒரு கொதிப்பு இலங்கை ராணுவத்துக்கு உண்டு. அதனாலோ என்னவோ... துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக இவரது Ôகட்&அவுட்Õகளை நிற்க வைத்து, சிங்கள ராணுவத்தினர் சுட்டுப் பழகியதாகவும் ஒருகாலத்தில் சொல்வார்கள்.
இன்றும், உலகெங்கும் தன் உணர்ச்சிக் கவிதைகளால் ஈழத் தமிழர்களுக்கான விடுதலை விளக்கை எடுத்துச் செல்லும் இந்தக் கவிஞர், இப்போது தமிழகத்தில் முடக்கப்பட்ட அகதி வாழ்வு வாழ்கிறார். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, விகடனுக்காக தன் மௌனம் கலைக்கிறார் காசி ஆனந்தன். உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த விடுதலைப் புலி திலீபன் பற்றிப் பேச்சு வந்ததும், நொடிப் பொழுதில் கவிஞரின் கண்கள் குளமாகின்றன...
"திலீபனின் தியாக மரணம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணம். ஈழத்தின் விடுதலை உணர்வு தமிழகத்திலும் தீயாகக் கொந்தளித்த நேரம் அது. அங்கே நல்லூர் முருகன் கோயிலில் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். நான்தான் அந்தத் தம்பியை அழைத்துப் போய், விரத மேடையில் அமர வைத்தேன். 12 நாட்கள், சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் வீர மரணம் அடைந்தான் தம்பி. உடல் துவண்டு, உயிர் அடங்கும் நேரத்திலும் கண்களில் ஒளி குன்றாத அந்தத் தம்பி, Ôஎன் கடைசித் தறுவாயில் காசி அண்ணாவின் கவிதை வரிகள் என் இதயத்தை நிரப்ப வேண்டும்Õ என்று ஆசைப்பட்டான்.
"நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்...
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்!Õ என்ற எனது வரிகளைக் கேட்டபடியே திலீபனின் மூச்சு அடங்கியது. மரணத்தைத் தன் பக்கத்திலேயே வைத்து நேசித்தவன் திலீபன். அவனுடைய தியாகத்தை நினைக்கும்போது, ஈழத்துக்குள் காலடி எடுத்துவைக்க முடியாமல் இங்கே அகதி வாழ்க்கை வாழ்கிற எனது துயரம் ஒரு பொருட்டாக எனக்குத் தோன்றுவதில்லைÕÕ என்கிறார் காசி ஆனந்தன்.
அன்று முதல் இன்று வரையிலான தனது வாழ்க்கையின் ஓட்டத்தையும் மெதுவாக நினைவு கூர்கிறார்...
‘‘ஈழம் இன்று உலகின் முற்றத் தில் நிமிர்ந்து நிற்கிறதென்றால், அதற்குப் புலிகளும் ஈழ திலீபன் மக்களும் கொடுத்த விலை கொஞ்சநஞ்சம் அல்ல. தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கிற வேலையை காலங்காலமாகச் செய்து வருகிறது சிங்கள அரசு. சிங்களக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில்கூட வெறுப்பைக் கக்கி, பிஞ்சு உள்ளங்களிலும் தமிழர் களுக்கு எதிரான நஞ்சை விதைக்கும் அரசு அது.
நான் சிறுவனாக இருந்தபோது தமிழர்களை ‘தமிழ் பள்ளோ’ என்று தான் சிங்களர்கள் அழைப்பார்கள். ‘பள்ளோ’ என்றால் ‘நாயே’ என்று சிங்களத்தில் பொருள். பள்ளோ என்று அழைத்தவர்களை ‘கொட்டியா’ என்று அழைக்க வைத்தோம். கொட்டியா என்றால், ‘புலி’ என்று பொருள்!
எழுபதுகளின் துவக்கத்தில் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தது சிங்கள ராணுவம். என் தம்பிகள் சிவஜெயம், சுதர்சனையும் (பின்னர் சயனைட் அருந்தி இறந்தார்) என் தங்கை சிவமலரையும் சிறையில் அடைத்தார்கள். நான் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன்.
‘பத்துத் தடவை பாடை வராது. பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா... செத்து மடிதல் ஒரே ஒரு முறைதான்... சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!’ என்று ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதைதான் Ôஎன்னைÕயே இலக்காக வைத்து அவர்கள் சுட்டுப் பழகும் அளவுக்கு அவர்களின் கோபத்தைப் பெரிதாக மூட்டிவிட்டது!
என்னோடு சேர்ந்து என் மனைவி சரோஜினிதேவியும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டாள். அப்போதுதான் நாங்கள் அங்கிருந்து அகதியாக இன்னும் சிலருடன் தமிழ்நாட்டுக்கு வந்தோம். மீண்டும் நான் அங்கே போனபோது, மிகப் பெரிய பொறுப்புகள் ஒப்படைக் கப்பட்டன. அவற்றை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு நிலைமை மோசமடைய, மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன். இதோ, இப்போது பதினைந்து வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். இப்போது நான் ஈழம் செல்ல விரும்பினால்கூட அரசு அனுமதிக்காது. நான் கண் காணிக்கப்பட்டு, முடக்கப்பட்டு இருக் கிறேன்’’ என்கிற காசி ஆனந்தனின் சிரிப்பில் சிலிர்ப்பு வழிகிறது.
‘‘இந்திய அரசு ஏன் உங்களை முடக்கி வைத்துள்ளது?’’
‘‘அது ஏன் என்றுதான் எனக்கும் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சுகவீன மாகி ஈழத்தில் இறந்தபோது, ஈமக் காரியங்கள் செய்யக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. என் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எந்தத் தவறுகளும் நான் செய்யவில்லை.
இந்தியாவும் ஈழமும் நட்புடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றோம். எங்களுடையநோக்கம் ஒன்றுதான்... இந்தியா & ஈழத்தின் உறவை வலுப்படுத்துவதும், ஈழத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைதியைக் கொண்டுவருவதும், அமைதிப்படை ஏற்படுத்திய காயங்களைத் துடைப் பதும்தான் எங்கள் நோக்கம். நல்லெண்ணத்துடன் செயல்பட்ட என்னை மீண்டும் மீண்டும் விசார ணைக்கு உட்படுத்துவது மிகப் பெரிய துன்பமாக இருக்கிறது. என்னுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப் பட்டுள்ளது.
‘ஈழம் எங்கள் தாய் நாடு... இந்தியா எங்கள் தந்தை நாடு’ என்று ஆன்டன் பாலசிங்கம் சொன்னதைத்தான் நினைவுகூர்கிறேன். தந்தையின் மடியில்தான் என் உயிர் போக வேண்டும் என்றிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?ÕÕ
‘‘இப்போது இலங்கை யில் நிலவும் அமைதி நிலை யானதா, நிஜமானதா?’’
‘‘சிங்களர்களுக்கும் தமிழர் களுக்குமான மோதல் என்பது இன்று நேற்றல்ல... 1500 ஆண்டு காலமாக நடந்து வரும் மோதல். சிங்களர்களின் நோக்கம், சிக்கலைத் தீர்ப்பதல்ல... தமிழர்களைத் தீர்ப்பதாக இருக்கிறது. சமாதானம் பேச வந்த நார்வேயைக்கூட சிங்கள அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நார்வே அரசுக்கு எதிரான போராட் டங்களை சிங்கள பிக்குகளைத் தூண்டிவிட்டு சந்திரிகா செய்கிறார். ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் விடுதலைப்புலிகளை தடை செய்யக் கோரி உலக நாடுகளுக்குக் கடிதம் எழுதுகிறார் சந்திரிகா.
ஒன்று தெரியுமா... வியட்நாம் தன்னுடைய வி டு த ¬ லக் கு ப் « ப £ராடியபோது சீனாவும் ரஷ்யாவும் வியட்நா முக்கு உதவின. பாலஸ் தீனத்துக்கு அரபு நாடுகளின் ஆதரவு இருந்தது. பங்களாதேஷ் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்தியா தன் கைகளில் தாங்கிப் பிடித்தது. ஆனால், 28 ஆண்டு காலமாக விடுதலைப்புலிகள்எந்த நாட்டின் தயவும் இல்லா மல் வீரம் செறிந்த ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக் கிறார்கள்.
அமைதிப் பேச்சு வார்த்தைக் காலத்தைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான புலிக¬ளைச் சிங்கள ராணுவம் கொன்று குவித்துள்ளது. இதனால், நிலவுவது அமைதியா போரா என்ற ஐயம் தமிழர்கள் மத்தியில் எழுந் துள்ளது. சுனாமிக்குப் பிறகு, உயிரையும் உடைமைகளையும் வீட்டையும் இழந்த தமிழர்களுக்கு, உலக நாடுகள் வழங்கிய உதவிப் பொருட்களைக்கூட கொடுக்காமல் நீதிமன்றத்தின் மூலம் தடுத்து வைத்திருக்கிறது சிங்கள அரசு. ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தைப் பார்க்க வந்த கிளிண்டனைக்கூட ஈழப் பகுதிகளுக்குச் செல்ல, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மறுத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் தமிழர்களை யுத்த முனைக்குக் கொண்டு செல்வதே சிங்கள அரசின் விருப்பமாக இருப்பதுதான் வேதனை!’’
‘‘விடுதலைப்புலிகள் தங்கள் பெயரை சர்வதேச சமூகத்திடம் கெடுத்து வைத்திருக்கிறார்களே?’’
‘‘புலிகளை ஒரு போராளி அமைப்பாகப் புரிந்துகொண்டால் இந்த அவப்பெயரின் மீது இருக்கும் அரசியல் புரியும். உலகெங்கிலும் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் போராளிக் குழுக்கள் மீது சுமத்தப்படும் குற் றச்சாட்டுதான் இது. ஈழ மக்கள் நிராயுதபாணிகளாக நின்றபோது, எமது மக்களைப் பாதுகாக்க ஆயுதம் எடுத்தவர்கள் புலிகள்.
புலிகள் இல்லையென்றால், இலங்கையில் தமிழர்களின் கதி என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அமைதிப் படையுடனான மோதல்கூட தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத் தப்பட்டதுதானே தவிர, இந்தியாவை எதிர்த்து அல்ல!
ஈழ மக்கள் கேட்பதெல்லாம் ஒன்று தான்...பாலஸ்தீனப் போராட்டத்தைப் புரிந்துகொண்டதைப்போல, ஈழப் போராட்டத்தையும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கட்டும். புலிகள் தங்கள் மீது சுமத்தப்படுகிற எல்லா களங்கத்தையும் துடைத்தெறிவார்கள்.
எம் மண்ணின் விடுதலையை நாங்கள் மீட்டெடுப்போம். ஏனெனில், சுதந்திரம் என்பது சலுகை அல்ல... உரிமை!’’
டி.அருள்எழிலன்
படங்கள்: என்.விவேக் நன்றி : விகடன்.
மயிலாடுதுறை சிவா...
அமெரிக்காவின்-Prom(Dance)-இந்திய /தமிழக பிள்ளைகள்
அமெரிக்காவின்-Prom(Dance)-இந்திய /தமிழக பிள்ளைகள்
நேற்றைய வாசிங்டன் போஸ்டில் நியூயார்க்கில் அருகில் உள்ள லாங் ஐலண்ட என்ற ஊரில் உள்ள ஓர் பள்ளியில் அதன் தலைமை ஆசிரியர் இந்த வருடம் Prom கிடையாது என்றும், அதற்காக செலவு செய்வது, அதன் காரணமாக விடுதியில் தங்குவது, அதன் தொடர்பான அனைத்து விதமான விசயங்களும் இந்த ஆண்டு கிடையாது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் இதனால் வருத்தம் அடையகூடும் என்பதால் பள்ளி நிர்வாகம் தலையிடாதப் படி தனிப்பட்ட முறையில் நடத்தலாம் என்று முடிவு செய்து உள்ளார்கள்...இது செய்தி....
அமெரிக்கா வந்த பொழுது Prom என்றால் என்னவென்று கேள்வி பட்டது இல்லை. நாளடைவில் அதனை கூர்ந்து கவனித்து, கேட்டு, பல ஆங்கில படங்கள் பார்த்து தெரிந்துக் கொண்டேன். அதாவது இங்கு படிக்கும் பிள்ளைகள் பனிரெண்டாவது படிக்கும் பொழுது பள்ளி படிப்பு முடியும் தருவாயில் ஓர்பெரிய நடன விழாவை ஏற்பாடு செய்வார்கள். அதற்கு ஆண் மாணவர்கள், தன்னோடு படிக்கும் பெண் நண்பர்களுடன் நடனம் ஆடுவார்கள். எதிர்காலத்தில் அவர்களே திருமணம் செய்து கொள்வதும் உண்டு. எந்த ஆணுடன் அல்லது எந்த அழகான பெண்ணுடன் ஆடுவது என்ற போட்டி இருக்குமாம். அது மட்டும் அல்ல ஓர் ஆண் ஓர் பெண்ணிடம் வந்து என்னோடு நடனம் ஆட வருகிறாயா என்று கேட்பது அந்த பெண்ணிற்கு ஓர் மகிழ்ச்சியான விசயமாம். எந்த ஓர் பெண்ணையும் யாரும் கேட்கவில்லை என்றால் அந்த பெண் நிச்சயம் மனம் வருத்த படுவாள் என்றும், அதற்காக பெற்றோர்களே வேறு ஊரில் உள்ள மற்றொருஆண் மாணவனை ஏற்பாடு செய்வார்கள் என்று நான் கேள்வி பட்டு இருக்கிறேன். பள்ளி படிப்பு முடிக்கும் தருவாயில் வரும் நடப்பு ஆண்டில் வேறு ஊர் சென்று பட்ட படிப்புற்கு செல்லும் மாணவர்கள் வாழ்க்கையில் இந்த நடன விழா சீரும் சிறப்புமாக கொண்டாட பட்டு வருகிறது.

ஆனால் இதன் பிண்ணியில் பல சம்பவங்கள் உள்ளன. அதாவது இந்த நடனத்திற்கு பெண் தன்னை திருமணப் பெண் போல் அலங்கரித்து, நல்ல பல உடைகளை வாங்குவதும் அதனை வாங்குவதற்கு அப்பா அம்மா நிறைய பணம் தரவில்லை என்றால், பகுதி நேர வேலை பார்த்து தனக்கு மிகப் பிடித்தமான உடைகள் வாங்குவதும், தன்னை நன்கு அலங்கரித்து கொள்ள அலங்கார பொருட்களை வாங்குவதும், அழகு நிலையம் சென்று தன்னை மிக அழகாக அலங்கரித்து கொள்வதும் இந்த நடன விழாவிற்கான சிறப்பு அம்சம்.
அதே போல் ஆண் நபர்களும் விலை உயர்ந்த கோட் சூட் சமாசாரங்களை வாங்குவதும், பெண்களை கவர நல்ல ஆடம்பரமான கார்களைவாடகைக்கு எடுப்பதும், குறிப்பாக லீமோ என்ற வகையான கார்களை எடுத்து அவர்கள் பெண் நண்பர்களோடு சேர்ந்து போவதும், சிறப்பானவிழா முடிந்தவுடன், நல்ல விலை உயர்ந்த விடுதிகளை வாடகைக்கு எடுத்து இருப்பார்கள். இரவு முழுவதும் அரட்டை. நல்ல சாப்பாடு, உயர்ந்த மது வகைகள், புகைப் பிடித்தல், சில சமயம் நண்பர்களோடு போதை ஏற்றும் பொருட்களை வாங்கி சுவைத்தல் இதுப் போலஅந்த நாள் கழியும்.

அந்த இரவில், அந்த நடன விழாவின் மகிழ்ச்சியில், நன்கு மது அருந்திய நேரத்தில் ஆண் நபர்கள் நடனம் ஆடிய பெண்களோடு அவர்கள் அனைவரும் தனி அறையில் தங்குவார்கள். அப்பொழுது 90% பேர்கள் உடல்உறவு கொள்வார்கள். அதற்கு முன்னரே அல்லது ஏற்கனவேஅந்த பெண்ணோடு உடல் உறவு வைத்து இருப்பார்கள். அந்த பெண் அந்த ஆண்ணோடு உடல் உறவு வைத்து இருப்பது அவளின் தனிப்பட்டவிசயம். பனிரெண்டாவது படிக்கும் பொழுது அல்லது அதற்கு முன்னரே ஓர் ஆண் அல்லது பெண் குறைந்தது 5 அல்லது 6 பேரோடு தொடர்பு(உடல் உறவு) வைத்து இருப்பார்கள் என்பது ஓர் ஆய்வு சொல்லுகிறது. இது முழுக்க அமெரிக்க கலாச்சாரத்தில் பிறந்து வாழ்ந்து படிக்கிற ஆண்கள் பெண்கள் சம்பந்தப் பட்ட விசயம். இது நல்லதா அல்லது கெட்டதா என்பதை அவர் அவர் தனிபட்ட கருத்திற்கே விட்டு விடுகிறேன்.
கடந்த 6 ஆண்டுகளாக நான் பல இந்திய குடும்பங்களை பார்த்து இருக்கிறேன். இந்த இந்திய/தமிழக/அமெரிக்க சூழ்நிலையில் வளரும் நம்பருவ ஆண் / பெண்கள் இந்த மாதிரி திருமணத்திற்கு முன்பே உடல் உறவு கொள்வார்களா? அதனை அமெரிக்க பெற்றோர்கள் போல நம் இந்திய/ தமிழக பெற்றோர்கள் அனுமதிக்கறார்களா? அல்லது பெற்றோர்களுக்கு தெரியாமல் இந்த பிள்ளைகள் அதனை விரும்பி செய்கிறார்களா?அல்லது இந்த அமெரிக்க கலாச்சார பிள்ளைகளிடம் இருந்து தனித்து விடப் பட்டார்களா? எங்களுடைய குடும்ப நண்பர்(பெற்றோர்கள்) தங்களுடையபெண் யாரிடமாவது படுத்து, தாய்மை அடையாமல் இருந்தால் அதுவே எங்களுக்கு பெரிய நிம்மதி என்றனர். கேட்கும் பொழுது மனதிற்கு ரொம்பவருத்தமாக இருந்தது. இன்னொரு குடும்ப நண்பர் (பெற்றோர்) அவர் மருத்துவர் அவர் தன் பெண்ணிடம் பள்ளியில் எது நடந்தாலும் எங்களிடம்சொல்லிவிடு, அப்படி தவிர்க்க முடியாத காரணத்தால் உன் ஆண் நண்பர்களோடு உடல் உறவு ஏற்பட்டால் பாதுகாப்பாக உடல் உறவு கொள் என்றுதன் பெண்ணிடம் சொன்னதாக சொன்னார். அதற்கு அந்த பெண் Daddy, I am ok, please don't worry என்றாளாம். இன்னொரு பெற்றோர்கள் தன்பையனை பள்ளியில் மாலை அழைத்துவர சென்ற பொழுது அந்த பையன் ஓர் வெள்ளைகார பெண்ணோடு மிக நெருக்கமாக இருந்ததையும், அவர்கள்பிரியும் பொழுது அவர்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் குடுத்ததை பார்த்த அப்பா, வீட்டிற்கு வந்து அம்மாவிற்கு செம டோஸ் விழந்ததாம். ஆனால்அவருடைய பையனை கண்டிக்க தைரியம் இல்லை. அந்த வகுப்பில் படிப்பில் அந்த பெண் முதல் மாணவி, இவன் இரண்டாவது.
நம் இந்திய / தமிழக பிள்ளைகள் அமெரிக்காவில் வளர போவதால் பெற்றோர்களும் அதன் நல்லது கெட்டதுகளை ஏற்று கொண்டு அவர்களை அவர்கள்போக்கில் விடுவது நல்லதா கெட்டதா? பருவ வயது பெண்களை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் மன அழத்ததில் இருப்பார்கள் என்று கேள்வி பட்டுஇருக்கிறேன். ஏனில் பெரும்பான்மையான நம் இந்திய / தமிழக பிள்ளைகள் படிக்கும் பொழுதே அவர்கள் மனதிற்கு பிடித்த ஆண் / பெண்களை அவர்கள் தேர்ந்து எடுத்து கொள்வதில்லை. காரணம் குழப்பமான சூழ்நிலை காரணமாக அவர்கள் அந்த வயதில் நல்ல ஓர் துணையை தேர்ந்து எடுக்காமல் போய்விடுகிறது. அமெரிக்க பையனா, அல்லது இந்திய பையனா? அப்பா அம்மா ஒத்து கொள்வார்களா என்ற குழப்பமான மனநிலையில் உள்ளார் நம் பெண்கள்.25 வயது ஆன பல பெண்கள் இன்னமும் திருமணம் ஆகமால், பெற்றோர்கள் வருத்த படுவதை நான் பார்த்து இருக்கிறேன்.
என்னதான் நாம் அமெரிக்கா வந்துவிட்டாலும் இன்னமும் ஒரு சிலர் (மட்டும்) நம் சாதியிலே ஏதாவது வரன் கிடைக்காதா என்று ஏங்குவது உண்டு. ஆனால் அது குதிரை கொம்பான விசயம். அதே சமயத்தில் பெற்றோர்கள் நம் பெண் பிள்ளைகள் நல்ல இந்திய ஆண்ணை தேர்ந்து எடுத்து விட்டால் நலம் என்று கருதுகிறார்கள். வெள்ளைகார பையனை பிடித்துவிட்டால் சில பேர் பெருமையாக நினைக்கிறார்கள், சில பேர் பயப்படுகிறார்கள், இந்த வெள்ளைகார பையன் கடைசிவரை நம் மகளோடு இருப்பானா என்று சந்தேகம் உள்ளது. ஆனால் கறுப்பின ஆண்ணை தேர்ந்து எடுத்துவிட்டால் மிக மிக வருத்த படுகிறார்கள். எனக்கு தெரிந்தஓர் தமிழ் பெண் ஓர் கறுப்பரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகிறார்கள். இருவருமே வக்கீல் தொழில் புரிகிறார்கள். ஆனால் நம்தமிழ் சமுதாய மக்கள் ஏதாவது விழாவில் கூடினால் அந்த பெண் கறுப்பரைத் திருமணம் செய்து கொண்டதாம் என்று புறம் பேசுகிறார்கள். இன்னோரு குடும்பத்தில் பெண் இங்குள்ள பையனை பார்த்து திருமணம் செய்து கொண்டு 5 ஆண்டுகள் கழித்து மணவிலக்கு ஆகிவிட்டது. அந்த பெண் நல்ல வேலையில்தான் உள்ளார், ஆனால் பெற்றோர்கள் மனம் ஒடிந்து காணப்படுகிறார்கள், மிக விரக்தியாக உள்ளனர். நாம் என்ன ஆறுதல் சொல்வது?
சிறிய வயதில் இருந்து நம் மீது படர்ந்து இருக்கும் போலியான இந்திய / தமிழக கலாச்சார போர்வையில் இருந்து வெளியே வந்து இயற்கையோடு இயந்து மனிதன், சுதந்திர சிந்தைனையோடு, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்வது என்பதை காலம்தான் நல்ல பதிலை சொல்ல வேண்டும். ..
நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...
எனக்குப் பிடித்த கவிதைகள்...
எனக்குப் பிடித்த கவிதைகள்...
இந்த பதிவு நண்பர் சுரேஷ் கண்ணனுக்காக...
வலைப் பூவில் நான் சுரேஷின் கண்ணனின் எழுத்துகளை விரும்பி படிப்பது உண்டு. அதிலும் அவர் ஏதாவது திரைப் படத்தை விமர்சனம் செய்வதும், குறிப்பாக அவர் மன சம்பந்தபட்ட மேலும் சில உளவியல் காரணங்களை சொல்லும் பொழுது நான் விரும்பி வியந்து ரசிப்பது உண்டு. அவரோடு நிறைய கருத்துகளோடு ஒத்து போவது உண்டு. சென்னை செல்லும் பொழுது அவரை பார்க்கவும் ரொம்ப விருப்பம்.
முன்பு ஓர் முறை நண்பர் சுரேஷ் கண்ணன் கவிதைகள் பற்றி ஓர் பதிவு போட்டு இருந்தார். அதில் அவருக்கு கவிதைகள் மீது ரொம்ப ஈடுபாடு அல்லது உடன்பாடு இல்லை என்பதுப் போல் ஏதோ எழுதி இருந்தாக நினைவு. அப்போழுதே அவருக்கு சில கவிதைகளை எடுத்துக் காட்டி பதில் சொல்ல ஆசைப் பட்டேன். என்னால் விகடனில் (2002) பரிசைப் பெற்ற கவிதை தொகுப்புகளை உடன் தேடி எடுக்க முடியாமல் போய்விட்டது. நேற்று வீட்டில் ஏதோ ஒன்றோ தேடப் போக அந்த கவிதை தொகுப்பு கிடைத்துவிட்டது. அதில் உள்ள பல கவிதைகள் எனக்கு பிடித்து இருந்தாலும், சில கவிதைகளை நண்பர் சுரேஷ் கண்ணனுக்காக மீட்டு கொடுக்க ஆசைப் படுகிறேன்.
என் மனதை பிழிய வைத்த கவிதை
வலியின் ஒலி
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசம்பலை
- மகுடேசுவரன்
- நன்றி : ஆனந்த விகடன் (2002)
இந்த கவிதை எனக்கு நேரிடையாக தொடர்பு உடையது. என் உறவினர் ஒருவர் பொருளாதார நெருக்கடி காரணமாக தான் வாழ்ந்த வீட்டை தன் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக வீட்டை விற்கும் பொழுது அவர்கள் வீட்டு பெண்கள் அழுததை நான் கண்களால் பார்த்து இருக்கிறேன். வீடு என்பது என்ன வெறும் செங்கல், கற்கள், மண், சிமெண்டுகளால் எழுப்ப பட்டாதா? பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நல்ல பல கெட்ட சில நினைவுகளின் சங்கமம் அல்லாவா? எனக்கு அந்த அளவு பொருளாதார பலம் அன்று இல்லாமல் போய்விட்டதே என்று பலமுறை வருத்தப் பட்டு இருக்கிறேன்.
அந்த வலியை, அந்த துயரத்தை, அந்த ஆழத்தை, அந்த நேசிப்பை நாம் உணர்ந்தாலும் யாரோ ஒருவர் அதனை எளிய தமிழில், எல்லோருக்கும் புரியும்படி, அந்த உணர்வை வார்த்தைகளால் வடிக்கும் பொழுது, நம் மனம் அதனோடு ஒன்றி போகிறது, மேலும் மனம் அதனை படித்து ரசிக்க சொல்லுகிறது...அந்த கவிதை வடிவத்தை ரசிப்பது ஓர் நல்ல ஆரோக்கியமான விசயம்தானே...
அதே போல் மற்றொன்று நாளைக்கு...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
மால்கம் எக்ஸ்(ரவிக்குமார்_காலச்சுவடு)
அக்டோபர் 11, 2005
ரொம்ப நாட்களாக வலைப் பூவில் எதும் எழுத முடியவில்லை. எதில் ஆரம்பிப்பது என்றுப் புரியவில்லை.
நான் மிகவும் ரசித்த படித்த புத்தகத்தைப் பற்றி எழதலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் ஓய்வாக இருக்கும் பொழுது இந்த புத்தகத்தை நிச்சயம் படித்து பார்க்க வேண்டும்.
தன்னலம் பாரமல் மக்களுக்கு போராடும் தலைவர்களை மிக விருப்பத்தோடு படிப்பது வழக்கம். அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கர்ம வீரர் காமராசர், மார்டின் லூதர் கிங், லிங்கன், இந்த வரிசையில் தற்பொழுது மால்கம் எக்ஸ் பற்றி படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
காலச் சுவடின் பதிப்பில் பாண்டிச்சேரி திரு ரவிக்குமார் எழுதிய மால்கம் எக்ஸ் மிக அருமையான புத்தகத்தை ஓர் நண்பரிடம் இருந்து வாங்கி படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. திரு ரவிக்குமாரின் எழுத்துகளை ஆங்காங்கே படித்து இருக்கிறேன். ஆனால் தொடர்ந்து 22 அத்தியாயங்களை கிட்டதட்ட 135 பக்கங்களை படிப்பது இதுவே முதல் முறை.
முதலில் இதனை தொடராக வெளியிட்ட "எழுச்சி தலித் முரசுக்கு" மனதார நன்றிகளை சொல்லியே ஆக வேண்டும்.
நம் தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், நம் மக்களுக்கு நம் அடிப்படை உரிமைகளை மீட்டு தரவேண்டும், நம் மக்கள் படும் வேதனைகளுக்கு நாம் பங்கு என்ன? ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நாம் எப்படி உதவலாம், நம் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை உள்ள இளைஞர்களுக்கு மாலகம் எகஸின் போராட்டம் எப்படி என்று நன்கு விளக்குகிறது. ஆங்கிலத்தில் இருந்து அதனை தமிழில் சொல்லும் பொழுது படிக்கும் வாசகர்கள் அதனை விரும்பி படிப்பதற்கு ஏதுவாக எளிமையான மனதில் பதியும்படி மால்கமின் போரட்டத்தை விவரித்து இருக்கிறார் ரவிக்குமார். மால்கம் வாழ்ந்த காலங்கள், குழந்தைப் பருவம், இளைஞர், திருமண வாழ்க்கை, இறப்பு வரை மிக மிக அருமையாக வாழ்க்கையின் தளங்களை அதன் அருகே இருந்து சொல்வது போல் இருந்தது ரவிக்குமாரின் எழுத்து. ஓவ்வொரு அத்தியாயம் முடியும் பொழுது அடுத்த அத்தியாயம் என்ன நடக்கும் என்றும், மால்கமின் வாழ்க்கை அவரை எப்படி இழுத்து செல்கிறது என்றும் மிக மிக ரசிக்கும் படி அதனை மொழி பெயர்த்து இருக்கிறார் ரவிக்குமார்.
மால்கம் குழுந்தை பருவத்தில் அவர் அடைந்த இன்னல்கள், ஆசிரியாரல் அவர் பாதிக்கபடுவது, திருமணம் வேண்டாம் என நினைத்த மால்கம் திருமணம் செய்ய முடிவு எடுத்தது, இளைஞராக இருக்கும் பொழுது சிறை சென்றது, அதில் இருந்து மீண்டு வந்தது, சிறை வாழ்க்கை அவரை வெகுவாக பாதிக்கப் பட்டு தன்னை அரும்பாடு பட்டு தன்னை ஓர் புதிய மனிதனாக உலகிற்கு காட்டிக் கொண்டார். சிறையில் ஏராளமான புத்தகங்களை படித்து தன்னை நன்கு செதுக்கி கொண்டார் மால்கம். அதுமட்டும் அல்ல சிறை வாழ்க்கையில் அவர் தன்னை இஸ்லாம் மதத்தில் ஈடுபடுத்தி கொண்டார். தன்னை ஓர் சக்தி வழிநடத்துவதாக அவர் நினைத்தார், அது இஸ்லாமின் பங்கு என்று மனப்பூர்வமாக நம்பினார்.
கறுப்பின் இன மக்களுக்கு தன்னை அவர் அர்பணித்து கொண்டார், வெள்ளையர்களை எதிர்த்து போராட "கறுப்பு முஸ்லிம்கள்" என்று போர்வையில் அவர் தன்னை போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். தன் சிந்தனையில் அடிமைப் பட்டு கிடக்கும் கறுப்பு இன மக்களுக்கு எப்படியாவது நல் வழி காட்ட வேண்டும் என்று அயராது உழைத்தார். அவருடைய காலகட்டதில் அவர் நெருங்கி பழகிய மார்டின் லூதர்கிங், குத்து சண்டை வீரர் முகமது அலி பற்றி மால்கம் குறுப்பிட்டு உள்ளார்.

மால்கம் மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அவருடைய ஆழ்ந்த அறிவு, விரிந்துக் காணப்பட்டு இருக்கும் அறிவு கேட்போரை பிரமிக்க செய்தது. அவருடைய பேச்சுகளை கெட்டு கறுப்பினர் மட்டும் அல்ல வெள்ளையர்களும் எப்படி ஓர் தனிமனிதனாக இப்படி பட்ட ஏராளமான மக்களை கவர முடிந்தது என்று வியந்தனர். மால்கமின் ஓர் சொல்லிற்கு
எண்ணற்று கறுப்பர்கள் பின்னால் நின்றார்கள். மால்கமின் பேச்சைப் பார்த்து விடுதலைக்கு போராடிய ஆப்ரிக்க நேஷனல் காங்கிரஸ் மற்றும் பாலுஸ்தீன விடுதலை இயக்கம் அவரை தம் தம் நாடுகளில் பேச அழைத்து அவரை அங்கீரித்த காரணத்தால் அவர் உலகத் தலைவர் வரிசையில் இடம் பிடித்தார்.
மால்கம் வாழ்க்கை முழுவதுமே புரட்சிதான்.
"புரட்சி என்பது ரத்தம் சிந்துவது,
புரட்சி என்பது சமரசமற்றது,
புரட்சி என்பது தனது பாதையில் எதிர்படும் அனைத்தும் தலைகீழாக புரட்டி போடுவது..."
அப்படிதான் மால்கமும் வாழ்ந்து வந்தார்.
மால்கம் ஓர் கறுப்பின போராளி மட்டும் அல்ல,
பணிய மறுத்து நிமிரும் தலைகளில், மால்கமின் தலை இருக்கிறது,
அடங்க மறுத்து வெளிபடும் குரல்களில், மால்கமின் குரல் இருக்கிறது,
தாழ மறுத்து உயரும் கரங்களில், மால்கமின் கரங்கள் இருக்கிறது.....
படித்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடித்துப் போகும்.
நன்றி : காலச் சுவடு
நன்றி திரு ரவிக்குமார்
மயிலாடுதுறை சிவா...