உங்களுக்கு இது போல் நடந்து இருக்கா?
சிறிய வயதில் சில சில சம்பவங்கள் நடந்து இருக்கும். அதை இப்பொழுது நினைத்து பார்த்தாலும் வருத்தமாக அல்லது அனுபவமாக தோன்றலாம். உங்களுக்கு இதுப் போல் நடந்தது உண்டா?
சிறிய வயதில் அல்லது பள்ளி செல்லும் வயதில் (6ம் வகுப்பில் ஆரம்பித்து 11 வகுப்பு வரை) நீங்கள் நன்றாக உடையணிந்துக் கொண்டு செல்லும் வழியில் செறுப்பு அறுந்து போய் நொந்து நூலாகி போனது உண்டா?
யாராவது பார்த்து விடுவார்களோ என வெட்கமாக இருந்தது உண்டா?
நல்ல மழை காலத்தில் கறுப்பு குடையில் கம்பி நீட்டிக் கொண்டு துணி பிய்ந்து, குடை பழுது பார்ப்பவரிடம் "ட" போல் மற்றும் குடையின் மேல் "ஓ" போல தைத்தது உண்டா?
நல்ல வெயில் காலத்தில் சைக்களில் செல்லும் பொழுது "பஞ்சர்" ஆகி ஓட்ட முடியாமல் தள்ளிக் கொண்டு போனது உண்டா? அல்லது சைக்களில் செயின் அறுந்து கடைக்கு சென்று பழுதை சரி பார்த்தது உண்டா?
பள்ளி பருவத்தில் அழகான "Geometry Box" வைத்துக் கொள்ளவில்லையே என்று ஏங்கியது உண்டா?
பள்ளி பருவத்தில் நல்ல அழகு அழகாய் "ஸ்டெப் கட்டிங்" வைத்து கொள்ள அப்பா அம்மா அனுமதி தரமால் அப்பா அம்மா மேல் செம வெறியாக இருந்தது உண்டா?
கோடை விடுமுறையில் நல்ல அழகான கலர் பட்டமும், நல்ல நிறைய நூல் வைத்து ரொம்ப தூரம் பட்டம் பறக்க விட முடியவில்லையே என்று ஏங்கியது உண்டா?
கல்லூரி விட்டு வரும் பொழுது நல்ல பசியோடு இருக்கும் பொழுது கையில 1.50 பைசா இருக்க, நகர பேருந்தில் சென்றால் 1.00 ரூட் பேருந்தில் சென்றால் 2.00 கட்டணம் கொடுத்து என்றாவது ஒரு நாள் கூட செல்ல முடியவில்லையே என்று இருந்தது உண்டா?
கல்லூரி படிக்கும் காலத்தில் ரேசன் கடையில் மண்ணெண்ய், கோதுமை, சக்கரை வாங்கும் பொழுது இல்லாத கூச்சம் ஏன் அரிசி வாங்கும் பொழுது மட்டும் இருந்தது?
இவை அனைத்தையும் நினைத்து பார்க்கும் பொழுது சற்று வருத்தம் இன்னமும் மிச்சம் இருக்கலாம். அவை அனைத்தும் நல்ல அனுபவமாக இருக்கலாம். அல்லது நம் ஏழ்மையின் அடையாளமாக இருக்கலாம். நடுத்தர குடும்பத்தின் திட்டம் இடமால் இருக்கலாம். என் நண்பர்களில் சிலர் இந்தவிதமான அனுபவமே இல்லாமல் இன்றும் நலமாக இருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் இதுப் போல் ஏற்பட்ட சிறு சிறு சம்பங்கள் மீண்டும் தற்பொழுது நடக்க வேண்டும், அதனை மீண்டும் நிதானமாக ரசிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியுள்ளதா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
மயிலாடுதுறை மக்கள் கவனத்திற்கு!!!
மயிலாடுதுறை மக்கள் கவனத்திற்கு!!!
கூகிள் எர்த்தில் மயிலாடுதுறை வரைபடத்தை பார்த்தேன்.
நம் மயிலாடுதுறை மாஃபியா கும்பலுக்காக இதோ....

நன்றிகள் பல அல்வாசிட்டி விஜயக்கு,
நம் மயிலாடுதுறை பலத்தை காண்பியுங்கள்!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
அம்ம! நாம் அஞ்சும் ஆறே! (திருவாசகம்)
சிம்பொனி திருவாசகத்தைப் பற்றி நம் வலை பூங்காவில் பலரும் பலவிதமாக பதிய வைத்து விட்டார்கள். என் பங்குக்கு என் தளத்தில் என் பாணியில் சொல்ல ஆசை. 
இரண்டு ஆண்டுக்கு முன்பு வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை விழாவில் அருட்தந்தை காஸ்பர் ராஜ் திருவாசகத்தை சிம்பொனியில் இளையராசா மூலம் இசைக்க திட்டம் உள்ளதாக சொன்ன பொழுது மிக ஆவலோடு காத்து இருந்தேன். இரண்டு ஆண்டுக்கு பிறகு தற்பொழுது எங்கள் வட்டாரத்தில் நடந்த திருக்குறள் மாநாட்டில் மீண்டும் அதனைப் பற்றி கூறிய பொழுது மக்கள் கூட்டம் ஓடி பிடித்து வாங்கியது, நானும் ஓர் இசைத் தட்டு வாங்கினேன்.
நல்ல இரவு வேளை சாப்பாடு முடிந்தவுடன் ஆவலோடு விழாவில் அருட்தந்தை பாடி காண்பித்த "புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்" என்ற பாடலை முதன் முதலில் கேட்டேன். ஆகா என்ன வென்று எப்படி அதனை சொல்வேன்? நம் பண்ணை புரத்து இளையராசா அதனை உருகி, உருகி ஆனந்தமாயமாக சிவப் பெருமானை வேண்ட வேண்ட நம் மனகண் முன்னே மாணிக்க வாசகர் தெரிவது உறுதி.
அதுமட்டும் அல்ல ஒவ்வொரு பத்தி முடியும் பொழுது "அம்ம! நாம் அஞ்சும் ஆறே!" என்று வேண்டும் பொழுது அதனோடு மனதும் கரைவது ஓர் இனிய அனுபவம். அதன் பிண்ணனியில் மிக பிரமாண்டமாக நம் தமிழை, நம் இசையை, நம் திருவாசகத்தை, நம் மாணிக்க வாசகர் பாடியதை, நம் இளையராசா பாட பாட கூடவே மேல் நாட்டு இசை கலைஞர்கள் வயலின் மற்றும் அதனோடு சார்ந்த இசையில் இதனை மீட்டு எடுக்கும் பொழுது மனம் எல்லை எல்லா மகிழ்ச்சி அடைகிறது.
5 பத்திகள் முடிந்து அனைத்து இசைகளும் ஒருங்கே சங்கமித்து மெதுவாக தாழ்ந்து பின் ஓங்காரமாக உயிர்பொழும் பொழுது இளையராசா,
"கோணிலா வாளி அஞ்சேன்! கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்!" என்று உச்சத்தில் (High Pitch ல்) பாடும் பொழுது மனமும் கூடவே பலமாய் அடித்து கொள்ளு பொழுது,
அடுத்த வரியில் நிதானமாக "நீணிலா அணியினானை, நினைந்து நைந்து உருகி நெக்கு" என்று பாடி "வாணிலாங் கண்கள் சோர என்று ராகத்தில் ஆங் ஆங் என இழுப்பாரே இளையராசா, நம் கண்களில் நீர் கோர்பது நிசம் அய்யா!!! நிசம்.
என்னை பொறுத்தவரை இது மாபெரும் முயற்சி. நம் தமிழின் வளமைக்கு, செழுமைக்கு, ஆளுமைக்கு கிடைத்த மற்றும் ஓர் பெருமை. மாணிக்க வாசகரின் வரிகளை உலக மெங்கும் உள்ள தமிழன் உச்சரிப்பான், பட்டி தொட்டி எங்கும் இது ஓலிக்கப் படும். அதனை எங்கோ கடை கொடியில் உள்ள நம் பண்ணைபுரத்து இசை கலைஞன் இதனை சாதித்த பொழுது மனம் எல்லை எல்லா மகிழ்கிறது.
சில சில குறைகள் தெரியலாம், அவரே எல்லா பாடலையும் பாடமால் இருந்து இருக்கலாம், புற்றில் வாழ் பாடலில் பேசமால் இருந்து இருக்கலாம், ஆனால் எல்லாவற்றையும் மீறி நம் மனதை இந்த இசைத் தட்டு தொடுவதன் ரகசியந்தான் என்ன? மனதை வருடுவது எது? கண்களில் நீர் கோர்ப்பது எது? மனதை எங்கோ கொண்டு செல்வது எது?

இளையராசாவின் குரலில் உள்ள ஆன்மிகம் கலந்த ஓர் காந்த சக்தி சில பாடல்களுக்கு அப்படியே பொறுந்துகிறது. அவரே சொன்னதைப் போல் இந்தப் பிறவியில் இந்த முயற்சியை செய்ததால் அவர் பிறவி பலனை அடைந்து விட்டதாக சொன்னார். வரலாற்றில் அவரின் பெயர் முன்னரே இடம் பெற்று இருந்தாலும் இதனால் அது நிச்சயிக்கப் பட்டுவிட்டது.
விமர்சனத்திற்கு எல்லாம் உட்பட்டதே, ஆனால் எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளி இளையராசாவின் திருவாசகம் சிம்பொனி கேட்டு பாருங்களேன்...
நன்றி.
மயிலாடுதுறை சிவா...
புடவை கட்டுவதில் இப்படியும் ஓர் பலனா?
புடவை கட்டுவதில் இப்படியும் ஓர் பலனா?சென்ற வாரம் அலபாமாவில் இருந்து என் மனைவியின் அம்மா வந்து 10 நாட்கள் தங்கி இருந்தார்கள். சரி மனைவி தன் அம்மாவிடம் ஜாலியாக அரட்டை அடிக்கட்டும் நாம் ஏன் தொந்தரவு என்று, நான் நைசாக என் அண்ணன் வீட்டிற்கு நியுசெர்சிக்கு எஸ்கேப் ஆனேன். போன வாரம் சனி மற்றும் ஞாயிறு நன்றாக பொழுது போனது. எப்பொழுது அண்ணன் வீட்டிற்கு சென்றாலும் நல்ல திரைப்படம் மற்றும் நல்ல சாப்பாடு, விடிய விடிய சீட்டு இப்படி பொழுது போவதே தெரியாது. இப்படி ஜாலியாக இருந்த காரணத்தால் இரண்டு நாட்கள் மனைவியை தொலைபேசியில் கூப்பிடவே இல்லை. இதனால் மனைவி வருத்தப் பட்டது வேறு விசயம். அப்பொழுது என் அண்ணன் இரண்டு குடும்ப நண்பர்களை சாப்பிட கூப்பிட்டு இருந்தார்கள். அவர்களையும் எனக்கு முன்பே தெரியும். நல்ல சாப்பாடு வழக்கம் போல் நல்ல அரட்டை. நான் ஒர் பெண் நண்பரிடம் நீங்கள் கட்டி இருக்கும் சேலை மிக நன்றாக இருக்கிறது என்றேன். அந்த பெண்மணியும் மிக்க நன்றி என கூறினார். பிறகு அவரே நான் சென்ற ஆண்டு தமிழகம் சென்ற பொழுது எடுத்தது என்றும், இதே போல் குடும்ப நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கட்டுவது வழக்கம் என்றார். நான் என் மனைவிக்கு வாங்குவதற்காக அதன் கடை பெயரை மனதில் குறித்துக் கொண்டேன். மேலும் அப்பெண் நண்பர் பேசிக் கொண்ட இருந்த பொழுது இந்த விசயம் எல்லோரும் பங்கு பெறும் படி பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது இன்னொரு ஆண் நண்பர் நான் ஓரு கருத்தை சொல்லலாமா? என்றார், அனைவரும் அவரை நோக்க அவர் ஆணித்தரமாக அதாவது ஒர் பெண்ணிடம் உங்கள் பொட்டு, புடவை, நகைகள் அழகாக இருப்பதாக ஒர் ஆண் சொன்னால் இதில் மகிழ்ச்சி அடைய ஒன்றுமே இல்லை எனவும், அது பெண்களின் வீக்னெஸ் என்றும் சொன்னார். அவ்வளவுதான் டாப்பிக் சூப்பராக பற்றி கொண்டது. அங்கு வந்து இருந்த எல்லோருமே வேலைக்கு செல்லும் பெண்மணிகள். அனைவருமே நன்கு படித்தவர்கள். அனைவருக்கும் ஓரளவு நாட்டு நடப்பும் தெரியும். நான் முன்பு புடவையை பாராட்டிய பெண்மணி தன் கணவனை வைத்துக் கொண்டே, தைரியமாக " நான் நல்ல அழகான பொட்டு வைத்துக் கொள்வது, நல்ல அழகான புடவை கட்டுவது என் கணவருக்காக மட்டும் அல்ல, மற்ற ஆண் நபர்களும் என்னை பார்த்து பாராட்டதான், இதை நான் சொல்ல கூச்சப் படவில்லை என்றார்." அந்த கணவர் ஒன்றும் சொல்லவில்லை அமைதியாக இருந்தார். தனிப் பட்ட முறையில் அந்த பெண் அப்படி சொன்னதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் எனக்கு மற்ற பெண் வலைப் பூ நண்பர்களின் கருத்து அறிய ஆவல். ஆகையால் அந்த பெண் நண்பரின் முன் அனுமதியோடு இதனை இங்கு பதிய வைக்கிறேன்...
நீங்கள் என்னை நினைக்கிறீர்கள்...?நன்றி...மயிலாடுதுறை சிவா...
நடிகர் பிரகாஷ் ராஜ்...
நம் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ அரசியலும், திரைப் படமும் ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டன. நல்ல ஆரோக்கியமான அரசியலை விரும்புவதை போல, நல்லத் திரைப் படத்தையும், நல்ல திரைப் பட நடிகரையும் மக்கள் ரசித்து ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். அதுமட்டும் அல்ல காலமும் நல்ல திரைப் பட நடிகனை அடையாளம் காட்டும். இதற்கு முக்கிய காரணம் திரைப் படத்தின் இயக்குனரும் கூட. அந்த வகையில் நான் பார்த்து மிக மிக ரசிக்கும் ஓர் நல்ல குணச் சித்திர மற்றும் வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ். பாலசந்தர் பள்ளியில் பயின்றவர்.
சின்னத் திரையில் வந்த பாலசந்தரின் "கையளவு மனசு" ஆரம்பித்து, "டூயட்டில்" தன் திரைவாழ்க்கையை தொடங்கி இன்று நல்ல நடிகன் என்று தன்னை நன்கு உயர்த்திக் கொண்டார்.
"ஆசையில்" இரண்டாவது பாதியில் அஜீத்தை ஓரம் கட்டி தன் வில்லன் கதாப் பாத்திரத்தில் ஓர் கலக்கு கலக்குவார். அதுமட்டும் அல்ல மணிரத்தினத்தின் "உயிரே" படத்தில் ஒர் சிபிஐ அதிகாரிக்கு கம்பீரமாக பிண்ணனி குரல் கொடுத்து இருப்பதை நன்கு கவனித்தால் அவரின் உச்சரிப்பு நன்கு புலப் படும். அவருக்கு தாய் மொழி கன்னடமாக இருந்தாலும் அவரின் தமிழுக்கு ஒர் கவர்ச்சி இருக்கதான் செய்கிறது. அதனை பார்த்துதான் மணிரத்தினம் அவர்கள் தன்னுடைய "இருவர்" படத்தில் கலைஞர் கருணாநிதி பாத்திரத்தை பிரதிபலிக்க கூடிய காதபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் தேர்வு செய்தார் போலும். அந்த படம் வெற்றி படமாக இல்லாமல் போய் இருக்கலாம், ஆனால் பிரகாஷ் ராஜ் தன்னுடைய நடிப்பால் வசன உச்சரிப்பால் தான் தேர்ந்த நடிகனுக்கு உரிய அத்தனை குணங்களும் உள்ளன என்பதை அழுகுப் பட நடித்து இருப்பார். கோபத்தையும், மகிழ்ச்சியும், ஆற்றாமையும் அவர் தன்னுடைய கண்களாலும், உடல் மொழியாலும் காண்பித்து இருப்பார்.
தன்னுடைய நடிப்பு ஆற்றலால் இருமுறை தேசிய விருது வாங்கி இருப்பது அவருடைய நடிப்பிற்கு கிடைக்கும் மரியாதை மற்றும் சான்று. தற்பொழுதைய புது வரவான கில்லியில் கூட செல்லம் என்று சொல்வது ஓர் அழுகுதான்.

நடிகர் பிரகாஷ் ராஜ் நான் பாராட்ட காரணம் கடந்த சூலை 9 தேதி திரைப் பட இயக்குனர் பாலசந்தரின் 75வது பிறந்தத் தினத்தை மிக எளிமையாக கொண்டாடி அவரை மீண்டும் இயக்குவதற்கு அழைத்து இருக்கிறார். பிரகாஷ் ராஜ் "குரு பக்தி" எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அதுமட்டும் அல்ல நல்லத் திறமையான நல்ல புதுமுக இயக்குனர்களை அறிமுகப் படுத்துவதும், நல்ல பல இளைஞர்களை அறிமுகப் படுத்துவதும் பாராட்டதக்கது.

பிரகாஷ் ராஜ் நன்கு நடித்து மேலும் வளரட்டும், நல்ல பல இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும் ஆதரவு கொடுப்பதற்கும் மனதாரப் பாராட்டுகள்.
நன்றி..
மயிலாடுதுறை சிவா...
அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ்...
உலக வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது பேச்சின் மூலம் மக்களை மயக்கிய பலரை காணலாம். குறிப்பாக நமது தமிழ்நாட்டில் அழகு தமிழில் பேசியே நாட்டை பிடித்தவர்கள் உண்டு. அறிஞர் அண்ணா மிகச் சிறந்த மேடை பேச்சாளர் என்று கேள்வி பட்டு இருக்கிறோம். அடுத்து கலைஞர் சிறந்த பேச்சாளர் என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் இந்த 83 வயதிலும் இன்னமும் எத்தனை நிகழ்ச்சிகளில் பேசி வருவதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இந்த தலைமுறைக்கு மிகச் சிறந்த பேச்சாளராக வைகோ மற்றும் திருமா அனைவரும் அறிவர். அதுவும் தற்பொழுது நடைபெற்ற திருவாசகம் சிம்பொனி விழாவில் வைகோ கிட்டதட்ட ஒரு மணி நேரம் அழகு தமிழில், நம் அன்னை தமிழில், ஒர் இலக்கிய சொற்பொழிவை ஆற்றி இருக்கிறார். இளையராசா இசை அமைத்து பாடிய திருவாசக குறிப்பாக அந்த 6 பாடல்களில் உள்ள முக்கியத்துவம் என்னனென்ன? என்பதை அனைவரும் வியக்கும் வண்ணம் பேசி இருக்கிறார். ஆக அனைவரும் விரும்ப பேசுவது ஒரு கலை.
கலைகளில் பலவகை. நடனம் ஆடுவது ஓர் கலை, பாடுவது ஓர் கலை, நடிப்பது ஓர் கலை, இந்த வரிசையில் மக்களை மயக்கும் படி பேசுவது ஓர் மாபெரும் கலையாகாவே நான் எண்ணுகிறேன். எங்கு நல்ல மேடை பேச்சு இருந்தாலும் ஓடி ஓடி போய் பார்க்கிறேன், பேச்சை ரசிக்கிறேன், அதனை மனதில் நினைத்து அசைப் போடுகிறேன். நாகரீகமாக அரசியல் பேசும் தலைவர்களை, சமுதாய சிந்தனைகளை எடுத்தும் சொல்லும் சமுதாயத்தை பிரதி பலிக்கும் பேச்சாளர்களை, நல்ல வளமையான, ஆழமான நம் இலக்கியம் பேசும் இலக்கியவாதிகளை, நான் கண்டு ரசித்து இருக்கிறேன். என்னை மறந்து இருக்கிறேன்.

அந்த வரிசையில் சென்று ஆண்டும் இந்த ஆண்டும் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை நடத்திய விழாவில் நான் பார்த்து வியந்த, ரசித்த, என்றும் கேட்க துடிக்கிற ஓர் இளைஞர் அருட் தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் அவர்கள். இவருடைய பலம் என்ன? நல்ல பல தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து படித்து இருக்கிறார், தமிழ் மொழியின் மீது தீராத காதல் இருக்கிறது. எல்லாவற்றிக்கும் மேலாக நம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழத்தமிழர்களின் மிகுந்த ஆதரவாளர். இவர் ஓர் கத்தோலிக்க பாதிரியாரும் கூட. மதத்திற்கு அப்பாற் பட்டு தமிழ் இலக்கியத்தில் திருவாசகத்தை எழுதிய மாணிக்க வாசகரின் அருமையான வரிகளை தன்னுடைய பைபிளில் உள்ள வரிகளோடு ஒப்பிட்டு பேசும் பொழுது ஆக என்ன அருமை!!!. "தீதும் நன்று பிறர் தற வாரா", "வாடிய பயிறை கண்டபொழுதெல்லாம் வாடினேன்" "நாமார்க்கும் குடிஎல்லோம், நமனை அஞ்சோம்" இப்படி நம் இலக்கிய வரிகளை கோடிட்டு காண்பித்து, மகா கவி பாரதி பற்றி, பாரதி தாசன் பற்றி, மாணிக்க வாசகர் பற்றி இப்படி பல இலக்கியத்தில் சாதனைகளை படைத்தவர்கள் பற்றி அருட் தந்தை சொல்லும் பொழுது மக்கள் கூட்டம் மெய்மறந்து கேட்கிறது.
அவருக்கு ஆங்கிலம் மட்டும் அல்லாது பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் மொழிகளின் பரிச்சயம் இருந்தாலும் நம் தமிழ் மொழியின் ஆளுமை, செழுமை, தனித் தன்மை, ஏற்புன்மை பற்றி அவர் சொல்லும் பொழுது மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதனாலேயே மகாகவி பாரதி "யாம் அறிந்த மொழிகளே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று சொன்னான் என குறிப்பிட்ட பொழுது கூட்டம் ஆராவரித்து மகிழ்ச்சி கடலில் மூழ்கியது. அதுமட்டுமா?
நம் தொப்புள் கொடி உறவுள்ள நம் ஈழமக்கள் பட்ட, படுகின்ற துயரங்களை, அவலங்களை, போராட்டங்களை, அருட்தந்தை விவரித்த பொழுது மக்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். உரிமைகள் மறுக்கப் பட்டு, நாடுகள் பறிக்கப் பட்டு, ஈழ மக்கள் அகதிகளாக வாழும் துயரத்தை என்ன வென்று சொல்லுவது. அனைத்து தமிழ் மக்களிடம் பாதம் தொட்டு ஒன்றை கேட்டு கொண்டார், ஈழ் மக்கள் படும் துயரங்களைப் பற்றி எதுவும் அக்கறை கொள்ளாமல், கவனியாமல் இருந்தால் பரவாயில்லை, ஆனால் கொச்சை படுத்தாமல் இருக்குமாறு வேண்டி கொண்டார். அப்படி இருந்தால் இதுவே நாம் ஈழ மக்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவி என்றார். உலகெங்கும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களில் நம் தமிழ் மொழியை, கலையை, பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்தை நம் தமிழர்களைவிட ஈழ் தமிழ்ர்களே போற்றி பாதுகாக்கிறார்கள் என்பதை நாகரீகமாக குறிப்பிட்டார்.
மொத்ததில் என்ன சொல்லுவது? அருட் தந்தையின் பேச்சில் மயங்கினேன், அவரின் தமிழ் ஆர்வத்தை பார்த்து ரசித்தேன், அவரின் திருவாசக ஆர்வம் மற்றும் இலக்கிய ஆர்வம் கண்டு வியந்தேன், அவரின் ஈழ் மக்களின் ஆர்வம் கண்டு பிரமித்து போகிறேன். இப்படி இன்னும் பல பல. இப்படிப் பட்ட நல்ல பல உள்ளங்களை எனக்கு அறிமுக படுத்திய வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவைக்கு நான் என்றும் கடமை பட்டவன்...
வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ்!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா...