பாட்டிக்கு ஓர் கடிதம்...

அன்புள்ள பாட்டிக்கு
நலம், நலமா? அமெரிக்க மண்ணில் இருந்து உன் பேரன் எழுதும் அன்பு மடல்.
நடுங்கும் வயதில் தடுமாற்றோத்தோடு நீ எழுதிய கடிதம் கிடைத்தது. இந்த 76 வயதிலும் நீ எனக்கு கடிதம் எழுதியதை நான் பெருமையாக நினைக்கிறேன். எத்தனைப் பேருக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பு?
உனக்கு ஒரு பக்க கண் பார்வை சுத்தமாக தெரியவில்லை என்று நீ எழுதியதைப் பார்த்து என் மனம் பட்ட வேதனைக்கு அளவேயில்லை.
உன்னுடைய ஓய்வு ஊதியத்தில் மாதம் மாதம் நீ கொடுத்த அந்த 10 ரூபாய் அந்த 15 வயதில் எவ்வளவுப் பெரியப் பணம் தெரியுமா?
என்னுடைய சிறிய வயதில் என்னை கடைத் தெருக்கு அழைத்துச் சென்று எனக்கு ஐஸ்கீரிமும், என் காலுக்கு செருப்பும் வாங்கி கொடுத்ததை எப்படி நான் மறவேன்?
சில நாட்கள் என் அம்மா எனக்கு பிடிக்காத உணவு செய்தப் பொழுது, எனக்கு மிகவும் பிடித்த உணவுகளையும், வார விடுமுறையில் நீ செய்த ரவா கேசரியும், பஜ்ஜியும் என் நாவில் இன்னுமும் இனிக்கிறதே...
சென்ற முறை தமிழகம் வந்தப் பொழுது, உன்னிடம் நான் உனக்கு என்ன வேண்டும் பாட்டி என்று ஆவலாக நான் கேட்க, நீ வந்து என்னைப் பார்த்ததே போதும் என்று சொன்னது இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே...
5 வாரங்கள் ஓட்டமாய் ஒடிவிட என் விமானத்திற்கு முதல் நாள் நான் உன்னிடம் ஆசிப் பெற ஒடிவந்தப் பொழுது நீ தேம்பி அழததை நான் எப்படி வார்த்தையால் சொல்லுவேன்? அதுமட்டும் அல்ல, அடுத்தமுறை நான் வரும் வரை நான் உயிருடன் இருக்கமாட்டேன் என நீ சொல்ல, என் தாய் மாமன் (உன் பிள்ளை) உன்னை அதட்ட, என் நெஞ்சு வெடித்துவிடும் போல் ஆயிற்றே எப்படி சொல்லுவேன் அந்த ரணத்தை?
76 வயதில் நீ ஆரோக்கியமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. என் மனதை கல்லாக்கி கொண்டு இதனை எழுதுகிறேன். உன்னுடைய இறுதி காலத்தில் குறைந்தது 15 தினங்கள் நான் உனக்கு பணிவிடைச்செய்ய வேண்டும். அப்பொழுது "நீ இறந்தால் உனக்கு நான் நால்வரில் ஒருவராக தோள் போட" எனக்கு ஒர் வாய்ப்பு கிடைக்காதா? என்று ஏங்குகிறேன் நான்...
உன் அன்பு பேரன்....
சிவா...