Saturday, May 21, 2005

நன்றி!!! நன்றி!!!

தமிழில் நிறைய எழுத வேண்டும், சிந்திக்க வேண்டும் என ஊக்கப் படுத்தும் "தமிழ் மணத்திற்கு" நன்றிகளை வார்த்தையால் சொல்லுவது கடினம். நன்றிகள் பல: மதி கந்தசாமி மற்றும் காசிக்கு.

கடந்த ஒரு வாரமாக என்னால் முடிந்தவரை சில பதிவுகளை உங்களோடுப் பகிர்ந்துக் கொள்ள முடிந்தது. பின்னூட்டம் இட்ட, வாழ்த்திய, தவறுகளை சுட்டி காண்பித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

முதன் முதலில் என்னை வலைப்பூ ஆரம்பிக்க என்னை பெரிதும் ஊக்கப் படுத்திய என் மயிலாடுதுறை நண்பர் மூக்கன் (சுந்தருக்கு) என நன்றிகள் பல. அவரின் நகைச் சுவை உணர்வை நான் பலமுறை ரசித்து இருக்கிறேன்.

அமெரிக்க வாழ்க்கையில் எவ்வளவு அனுபவம். அவற்றுள் "தமிழ் மணமும்" இரண்டற கலந்து விட்டது. நம் வலைப் பூக்கள் பூங்காவில் நான் நிறைய படித்து, சிந்தித்து பலமுறை என்னுள் கேள்வி கேட்டு இருக்கிறேன்.

வெகுஜன பத்திரிக்கைகளில் வாரத பல பதிவுகள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். நான் மிகவும் ரசித்த, என்னுள் பாதிப்பை ஏற்படுத்திய சிலவற்றை மீண்டும் உங்களுக்கு மீட்டுக் கொடுக்க ஆசைப் படுகிறேன். இதுப் போல இன்னும் பலப் பேர் நிறைய எழுதி இருக்கிறார்கள். அவற்றுள் சில...

(கறுப்பி...)
"இதை மொழி பெயர்க்கமுடியாது, உங்களுக்குப் புரியாது. இதில் இரண்டாயிர வருட பண்பாடு, ஒழுக்கம், குடும்பப் பாரம்பரியம் இதையெல்லாம் தனது இரண்டு தொடைகளுக்கு நடுவில் வைத்துக்காப்பாற்றும் தமிழ் பண்பாடு இருக்கிறது இது மிக நுட்பமானது"

(தங்கமணி)
...ஒவ்வொருவரும் சமூகத்துக்கு தெரிவிக்க என ஒரு பண்பாட்டு முகமூடியை வைத்திருக்கின்றனர். பண்பாட்டை போதிப்பதற்க்கான (சமூகத்துக்கு) முழு உரிமையுடன் வந்திருப்பதாக என்ணிக்கொள்கின்றனர். இது ஒரு மன வளர்ச்சியற்ற தன்மை. அதுக்கப்புறம் இதில் தேசபக்தி இந்தியக் கலாச்சாரம் என்ற மசாலாக்கள் வேறு இருந்துவிட்டால் நமக்கு வெறியே வந்துவிடும்.

(ரோசா வசந்த்)
...சண்டையில் அறிவியல் விதிகள் மதிக்கப் படவில்லை என்று வலைப்பதிவில் கவலைப் பட்டிருந்தார்கள். நாம் வாழும் யதார்த்த உலகம் முழுக்க முழுக்க அறிவியல் விதிப்படி நடக்கும் அவலத்தை நாம் என்னேரமும் எதிர் கொண்டிருக்க, ரஜினி படத்தின் சண்டைகூட அறிவியல் விதிப்படி நடக்க வேண்டும் என்ற குரூர எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை.


(நரேன்)
...சிலுக்கு சுமிதாவின் அரசியல் வித்தியாசமானது. தனக்கு வந்த வாய்ப்புகளை உபயோகித்துக் கொண்டு, தன் உடலினால் தமிழ்நாட்டினை கட்டிப்போட்ட பெண் அவள். நாக்கினை தொங்கப்போட்டு கொண்டு, மிட் நைட் மசாலா பார்க்கும் யார் பார்வையிலும் சிலுக்கு சுமிதா ஒரு சதை குன்று. ஒரு சாதாரண ரோட்டில் போகும் பெண்ணிற்கு இருக்கும் குறைந்த பட்ச கருணைக்கு கூட லாயகற்ற ஜென்மம். எல்லாரின் பார்வையிலும், சுமிதா ஒரு பெண் என்பதை தாண்டி, கிறங்கடிக்கும் பார்வையும், முலைகளும், யோனியும் மட்டுமே உடைய ஒரு காமவெளி. மொத்த தமிழ்நாட்டினையும் மோகவெறி பிடித்து தன் இருப்பினை மிக அசாதாரணமாய் காட்டி விட்டு சென்ற பெண் அவள். சிலுக்கு சுமிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சோகங்கள் பற்றிய கவலைகள் யாருக்குமில்லை. தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டபோது சுமிதாவின் வயது 30க்கும் குறைவு. சிலுக்கு சுமிதாவின் மார்பினை தாண்டி உள்ளே இருக்கும் விஜயலட்சுமியை யாருமே கண்டுகொள்ளாததின் விளைவு ஒரு உயிரின் மரணம்.

(அல்வா சிட்டி விஜய்)
...இதில் அமெரிக்க மாப்பிள்ளைகளை மட்டும் குறைகூறவும் முடியாது. தன் படிப்பு, தன் லட்சியம் இவற்றிற்கு அமெரிக்க வாழ்க்கையில் எதிர்காலம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விகள் எல்லாம் கேட்காமல், வெறும் டாலர் கனவுகளோடு அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிற நம் பெண்களும், அவற்றிற்குத் தூபம் போடுகிற அவர்களின் பெற்றோர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

(சங்கர பாண்டி)
...சாதிய அடையாளம் என்னை விட்டுப் போகவில்லை. தலித்து இயக்க நூல்களையும், இலக்கியங்களையும் படித்த பொழுது தான் அந்த அடையாளத்தை துறக்க ஆரம்பித்தேன் எனலாம். ஆனாலும் பல தலைமுறைகளின் வழி வந்த எத்தனையோ சாதியக் குணங்கள் இன்னும் என்னுள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்று தான் நினைக்கிறேன். அவை ஒவ்வொன்றும் தலித்திய எழுத்துக்களைப் படிக்கும் பொழுதுதான் கரைந்து கொண்டிருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன் தோழர் திருமாவளவன் அமெரிக்கா வந்த பொழுது பல மணி நேரங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது அவர் ஒரு கேள்வி கேட்டார், தலித்து குடும்பங்களில் இந்தியாவின் அனைத்து தலைவர்கள் பெயரையும் குழந்தைகளுக்கு வைக்கின்றனர். னால் தலித்தல்லாதவர்கள் ஒருவராவது தலித்து தலைவர் பெயரை வைதது உண்டா என்று கேட்டார். சவாலாகக் கேட்கிறேன் என்றார். எனது சாதியக் குணத்துக்கு ஏன் அது வரை இது உரைக்கவில்லை என்றுதான் பட்டது? அவர் என்னிடம் தட்டியெழுப்பிய சிந்தனைகள் பல. அது போல்தான் எழுத்தாளர்கள் சிவகாமியிடமும், இரவிக்குமாரிடமும் பேசும் பொழுது என்னுடைய சாதியக் குணங்கள் கரைந்து போயிருக்கின்றன. இன்னமும் எத்தனை என்னுள் ஒழிந்திருக்கின்றன என்று எனக்கே தெரியாது...

இதுப் போல பத்ரி, சந்திரவதனா, பத்மா அரவிந்த், ஈழநாதன், துளசி கோபால், சுந்தர மூர்த்தி, பிச்சைப் பாத்திரம் சுரேஷ் கண்ணன் இன்னும் பல எனக்குப் பிடித்தவை...


Image Hosted by Your Image Link

கடைசியாக என் வேண்டுகோள்...

தமிழ் மணத்திற்கு வாருங்கள். ..
உங்கள் எண்ணங்களை பதிய வையுங்கள். ..

அமெரிக்காவில் (கனடா) உள்ள அனைத்து வலைப் பதிவாளர்களையும் என்றாவது ஓரு நாள் அனைவரும் சந்திக்க முடியுமா? (2006ல்)

தமிழ் நாட்டிலும் அதேப் போல் முன்னேற அறிவித்து விட்டு நாம் கலந்து கொள்ள முடியுமா? (2006 அல்லது 2007ல்)

மீண்டும் சந்திப்போம்...

நன்றி...
மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, May 20, 2005

தன் வாழ்க்கையை நன்குப் புரிந்துக் கொண்ட கமல்...

அரசியலும், திரைப் படமும் நாம் வாழ்வோடு தெரிந்தோ, தெரியாமலோ கலந்து விட்ட ஓர் விசயம். சின்ன வயதில் இருந்தே எனக்கு கமலின் நடிப்பை பார்த்தோ, அல்லது அவரின் அழகை பார்த்தோ நாம் பிரம்மித்துப் போனது இல்லை.

ஆனால் அவரின் பேட்டிகளை சின்னத் திரையிலோ அல்லது பத்திரிக்கையிலோ பார்க்கும் பொழுது ஓர் கலைஞன் தன்னை எப்படி நன்கு புரிந்து வைத்து இருக்கிறான் என்று நான் வியந்தது உண்டு.

கமலின் போராடும் குணம் பிடித்து இருக்கிறது. தன்னை தக்க வைத்தக் கொள்ள அவர் கடுமையாக உழைப்பது எல்லோரும் அறிந்த ஓன்று. திரைப்படம் என்ற மிகப் பெரிய சக்தி வாய்ந்த சாதனத்தில் அவர் புதிது புதிதாக கற்றுக் கொள்வது பாராட்டபட வேண்டிய விசயம். இன்று புதிய பல இளைஞர்கள் வந்துவிட்ட இக்காலத்திலும் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டது மிகவும் பாராட்டுக்கு உரியது. இப்படி கமலைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

Image Hosted by Your Image Link


கமல் என்ற கலைஞனின் பேட்டியில் ஒரு சில என் மனதை பாதித்த அசைப் போட வைத்த பேட்டிகளை உங்களுக்கு மீட்டுக் கொடுக்க ஆசைப் படுகிறேன். இவற்றுள் பலதை நீங்கள் விகடன் (நன்றி : விகடன்) மற்றும் சின்னத் திரையில் பார்த்து இருக்கலாம்.

திருமண வாழ்க்கைப் பற்றி பேசுகையில் என்ன ஓர் தெளிவான சிந்தனை, தன் மனதில் பட்டதை அப்படியே அழகாக சொல்லும் பாங்கு. இவற்றை நாம் படிக்கும் பொழுது அவரின் அந்த ரணம் நமக்குப் புரிகிறது.

“திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்னீங்க! ஆனாலும், இரண்டு முறை திருமணம் செய்து பிரிஞ்சிருக்கீங்க?”

கமல்: மா! எனக்கு அதில் உடன்பாடில்லை, இப்போதும்! ஆனாலும், இந்தச் சமூகத்தில் வாழ வேண்டி, சில விஷயங்களை சமரசம் செய்துகொள்ள வேண்டியது தேவையாகிறது. அப்படி ஆனதுதான் என் கல்யாணம். இப்போ நாங்க பிரிஞ்சுட்டாலும், அப்போ இருந்த அன்பும் காதலும் பொய்யாகிவிடாது. நான் உண்மையாகக் காதலித்தேன். குழந்தைகள் பெற்றோம். எல்லாம் சரியாக இருந்தது போல் இருந்தது. பிறகு கருத்து வேறுபாடுகளால், தவிர்க்க முடியாததாகிவிட்டது பிரிவு!”

“சில தவறுகளைச் சரி செய்யலாம். சிலவற்றைச் செப்பனிட முடியாமலே போகும். என் திருமண வாழ்க்கை அப்படிச் செப்பனிட முடியாத ஒன்றாகிவிட்டது”

எனக்கு இதில் பிடித்த விசயம் அவருடைய பழைய வாழ்க்கை நன்குதான் இருந்தது நாளடைவில் அது தவிர்க்க முடியாதாகிவிட்டது என்று அவர் சொல்லுகிற தெளிவு மற்றும் ஓத்துக் கொள்வது என்னை கவர்கிறது.

“பிரிவுக்குக் காரணம்தான் என்ன?”

... சுருக்கமா சொல்லணும்னா ஈகோ!”

எத்தனைப் பேர் இப்படி ஓத்துக் கொள்வார்கள் “ஈகோ” என்று?
எல்லாவற்றிற்கும் மேலாக இங்குதான் கமல் தன்னை மிக அழகாக ஓத்துக் கொள்ளும் விதம் மிக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

“அவ்வப்போது ஏதாவது ஒரு பெண்ணுடன் இணைத்துப் பேசப்படுகிறீர்கள்... இப்போது புதிதாக கவுதமி!”

கமல்: பெண்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது! நான் பெண்களோடு சேர்ந்து வளர்ந்தவன். அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலினு என்னைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்... இருப்பார்கள். எனக்குக் காதல் இன்னமும் இருக்கிறது. உணர்வுகள் இன்னும் இருக்கின்றன. இது மனித இயற்கை!

இதை விட தன்னுடைய உணர்வுகளை எப்படி மென்மையாக சொல்ல முடியும்?

என்னைப் பற்றி எழுதப்படுவதைத் தவிர்க்கணும்னு கூட நான் நினைக்கலை. ஏனென்றால், நான் அடுத்தவர்களுக்காக வாழவில்லை!”

நாம் இன்னமும் அடுத்தவரைப் பற்றியும் நம் சமுகத்தைப் பற்றியும் நினைக்கும் காலத்தில் நான் சமூகதிற்காக வாழவில்லை என்று சொல்லுகின்ற தைரியம், ஓர் ஆண்மைத் தனம், ஓர் தனி ஆளுமை கமலிடம் இருப்பதைப் பார்த்து நான் வியக்கிறேன்.
அடுத்து அவருடைய தற்கால பெண் நண்பர் கௌதமிப் பற்றி பேசும் பொழுது,

‘‘கௌதமிக்கும் உங்களுக்கும் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டும்தானா?’’

‘‘இல்லவே இல்லை. நட்பும் இருக்கிறது. ம்... குணா ஸ்டைலில் சொல்வதென்றால் இது அதையும் தாண்டிப் புனிதமானது.!’’

கலக்கல் கமல் கலக்கல்!!!

பத்திரிக்கை மக்கள் எப்போழுதும் பண்ணும் வேலை தேவை இல்லாத ஓப்புமை? இந்த கேள்வி கூட அப்படிதான்.

‘‘ரஜினி மாமனார் ஆகி விட்டார். உங்க வீட்ல எப்போ விசேஷம்?’’

‘‘அநேகமா இந்த மாசமே இருக்கலாம்! என் மகள் ஸ்ருதி மேற்படிப்புக்காக வெளிநாடு போறாங்க. இந்தியா மாதிரி பெண்ணடிமை சமூகத்தில் ஒரு பெண்ணை வெளிநாடு அனுப்பிப் படிக்க வைப்பதுதான் நிஜமாவே விசேஷம். மற்றபடி கல்யாணத்தை தான் விசேஷம்னு நினைச்சீங்கன்னா, அதை என் மகள்தான் தீர்மானிக்கணும். அவர் தன் விருப்பத்தைச் சொல்லும்போது, ஒரு தந்தையாக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வேன். அவ்வளவுதான்!’’

விசேஷம் என்றால் வெறும் கல்யாணம், குழந்தைப் பெற்றுக் கொள்ளுதல் என்று நினைக்கும் நம் சமுத்தாயத்தில் தன்னுடையக் கருத்துகளை மிக ஆழமாக தெளிவாக சொல்லுகிறார். இதைவிடத் தெளிவாக தன்னுடைய கருத்துகளை எப்படி சொல்ல முடியும்?

‘‘ஏன், ‘வேட்டையாடு விளையாடு’ என்று நல்ல தமிழ்ப் பெயருடன் அவசர அவசரமாகப் புதிய படம் தொடங்கினீர்கள்?’’

கமல் : ‘‘நான் தமிழில் பெயர் வைப்பதே செய்தியாகிறது என்பது எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது. தொடர்ந்து என்னை ஒரு தமிழ்த் துரோகியாகவே புரிந்துகொள்வது ஏனென்று புரிய வில்லை. ஒருவேளை, தமிழனாகப் பிறந்து, நல்ல தமிழ் பேசி, தமிழிலேயே சிந்திப்பதால் என்னைத் தமிழ் விரோதியாகப் பார்க்கிறார்கள் போல! ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’. ஆனால், வீட்டில் இருக்கிற சகோதரனைக் கண்டுக்க மாட்டங்களோ, என்னவோ!’’

அதுமட்டும் அல்ல "குணா" என்றப் படம் எடுக்கும் பொழுது அந்தப் படத்திற்கு "மதி கெட்டான் சோலை" என்று வைக்க கமல் வைக்க ஆசைப் பட்டதாக சன் தொலைகாட்சியில் சொன்னார். ஆனால் தமிழ் திரைப்பட வர்த்தகம் அதற்கு ஓத்துக் கொள்ளவில்லை என்று ஆதங்கப் பட்டார்.

பழைய விகடன் பேட்டியில் கூட என்னுடையத் தனிபட்ட வாழ்க்கையை ஏன் எல்லோரும் குத்தி குதறுகீறீர்கள்? நீங்கள் காய்கறி கடைக் காரனிடம் காய்கறி வாங்கிவிட்டு அதோடு நடையை கட்டுகீறீர்கள். அந்த காய்கறி கடைக்காரிடம் முதல் நாள் உன் மனைவியுடம் உறவு வைத்து இருந்தாயா? என்று கேட்பதில்லையே? ஆனால் என்னிடம் மட்டும் ஏன் இப்படி? என் வீட்டில் என் சன்னலை மட்டும் திறந்து வைத்து இருக்கிறேன். னால் நீங்கள் என் வாச கதவு வழியாக வர முயற்சி செய்யாதீர்கள் என்று தாழ்மையாக கேட்டுக் கொண்டார்.

உலகத்திலேயே என்னை சரியாகப் புரிந்துக் கொண்ட ஓரே ஆள் நான் தான். ஆனால் நான் என்னைப் புரிந்துக் கொண்டதைப் போல் பிறரும் என்னைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது எவ்வளவு தவறு? என்றார் கமல்.

கமல் என்ற மாபெரும் கலைஞனின் நடிப்பை சமூகம் போற்றலாம். ஆனால் அவரின் தனிப் பட்ட வாழ்க்கையில் அவர் போராடும் குணம் என்னை மிக கவருகிறது.

தன்னை நன்குப் புரிந்து மிக யாதர்த்தமாக அவர் கொடுக்கும் பேட்டிகள் என் மனதை கவருகின்றன. அதிலும் குறிப்பாக,

...என்னைப் பற்றி எழுதப்படுவதைத் தவிர்க்கணும்னு கூட நான் நினைக்கலை. ஏனென்றால், நான் அடுத்தவர்களுக்காக வாழவில்லை!”

இதைவிட கமல் வேறு நாகரீகமாக என்ன சொல்ல முடியும்? நடிகன் என்ற கமலைவிட வாழ்க்கை யாதர்த்ததை மிகத் தெளிவாகச் சொல்லும் பேசும் கமலை நான் ரசிக்கிறேன்...

நன்றி!
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, May 19, 2005

எழுச்சித் தலைவன் தொல். திருமா...


சின்ன வயதில் இருந்தே மனம் அரசியலில் மிகுந்த ஈடுபாடு மற்றும் ஆர்வம். அது மட்டும் அல்ல, சமுதாய மாற்றத்தை, சமுதாய எழுச்சியை, சமுதாய விழிப்புணர்வை அரசியலால் மட்டுமே செய்ய மற்றும் மாற்ற முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

சிறிய வயதில் பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் பற்றி நிறைய கேள்விப் பட்டு இருக்கிறேன். அறிஞர் அண்ணாப் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறேன். கலைஞர் கருணாநிதியைப் பார்த்து வருகிறோம். அவருக்கு அடுத்த அந்த பேச்சாற்றல், மக்கள் நன்கு அறிந்த வைகோவைப் பற்றி எல்லோரும் பார்த்து வருகிறோம். இப்படிப் பட்ட திராவிட மக்கள் தலைவருக்குப் பிறகு, காலம் மீண்டும் ஓர் தலைவனை, வேறு ஓருத் தளத்தில் அத்தி பூத்தாற்ப் போல் ஓர் தலைவனை தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு போராடும் ஒர் கறுப்பு வைரம், அம்பேத்கார் வழித் தோன்றல் அண்ணன் தொல்.திருமா பார்த்து வியந்து இருக்கிறேன். அதனை தங்களோடு பகிர்ந்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

Image Hosted by Your Image Link

மக்கள் அரசியல்வாதிகளைப் பற்றி சதாரணமாக விமர்சிக்கும், ஒர் சராசரி அரசியல்வாதி அல்ல அண்ணன் திருமா. அவருடைய எழுச்சி மிக்க பேச்சு, அவரது உரைவீச்சு எனது சிந்தனைகளை புரட்டிப்போட்டது. என் மனதில் பல கேள்விகளை எழுப்பிவிட்டது. தலித் தலைவர் என்றே எனக்கு அறிமுகம் ஆனாலும் அவரது எழுச்சிமிக்க இந்த பேச்சு, அவரை முற்றிலும் புதிய நபராக எனக்கு காட்டியிருக்கிறது.

தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகள் என்ன என்பதை தெளிவாக புரிந்துக் கொண்டவர், தன்னலம் கருத்தாமல் தன் வாழ்க்கையை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அர்பணித்துகொண்டவர், ஓயாத உழைப்பாளி, அஞ்சா நெஞ்சத்துடன் அநீதிகளைத் தட்டிகேட்ப்பவர், தன்னுடைய சிந்தனையிலும், நோக்கத்திலும் மிகத்தெளிவாக இருப்பவர். எளிமையாகவும் அமைதியாகவும் காணப்படுகிற இவரின் பின்னால் இன்று தமிழ் நாட்டில் மிகப்பெரிய எழுச்சி மிக்க இளைஞர் படை திரண்டு நிற்கிறது.

"தமிழ் தேசியத்தையும் சாதி ஒழிப்பையும்" தன் இரு கண்களாக கருதி இவர் செயலாற்றி வருகிறார். “தற்பொழுது தமிழ் பாதுகாப்பு இயக்கம்” என்று வைத்து தமிழ்நாட்டில் உள்ள போலித்தனமான ஆங்கில மோகத்தை போக்க போராடி வருகிறார். அதற்கு ஐய்யா நெடுமாறன், ஐய்யா இராமதாசு, திரு சேதுராமன் அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பது மனத்தாரப் பாராட்டத் தக்கது.

Image Hosted by Your Image Link

அமெரிக்கா, பிரான்சு, இலங்கை, ஆப்பிரிக்கா, லண்டன் இப்படிப் பல நாடுகள் சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை பேசி வருகிறார். புலம் பெயர்ந்த தமிழர்களை அடிக்கடிப் பாராட்டி பேசி வருகிறார். தமிழ் நாட்டில் ஆங்கில ஆதிக்கத்தால் தமிழ் அழிந்துகொண்டிருக்கும்போது, வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் இவ்வளவு ஆர்வத்துடன், தமிழ் உணர்வுடன் சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பதைப்பார்த்து மிகவும் பாராட்டினார்.

நமது சமுதாயம் சாதி மத உணர்வுகளுக்கு அடிமையாகி அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாம் பிறக்கும் போதே சாதியும் மதமும் நம் மீது திணிக்கப்பட்டு, அதன் பிடியிலேயே நாம் வளர்ந்து வருகிறோம். நம் நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை அலசிப்பார்த்தால், அவற்றில் பெரும்பான்மையானவை சாதி மதங்களினால் வேர் முளைத்தவைகளாகத்தான் இருக்கும். நாம் சாதியையும் மதத்தையும் துறந்தால் அன்றி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

சாதி மதம் இல்லாமல் எப்படி வாழ்வது? அவை இல்லையென்றால் நமக்கு ஏது அடையாளம்? என்ற கேள்விகள் எழும். அதற்கு திருமாவின் பதில் - பேசுகிற மொழி ஒன்றை மட்டுமே அடையாளமாகக்கொண்டு இயற்க்கையுடன் இயைந்து, எந்த மதச் சாயலும் இல்லாமல் நம்மால் வாழமுடியும். நமது தாய்மொழி தமிழ். தமிழன் என்கிற அடையாளமே சாகும் வரை போதும் என்கிறார். இது நமக்கு முற்றிலும் ஒரு புதுமையான கருத்து. இது சாத்தியம் என்பதை நிலை நாட்ட நாம் தமிழ் பெயர்களை ஏற்க வேண்டும் என்கிறார். இதைச் சொல்வதோடு மட்டும் நிறுத்தாமல், தமிழ் பெயர் ஏற்பு விழாக்களை நடத்தி, தனது இயக்கத் தோழர்களுக்கு தமிழ் பெயர்கள் சூட்டினார். தனது குடும்பத்தினரின் பெயர்களையும் தமிழ் பெயர்களாக மாற்றினார். இதைப்பார்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகமெங்கும் இந்த தமிழ் பெயர் ஏற்பு விழாக்களுக்கு வந்து தமது பெயர்களை மாற்றிக்கொள்கின்றனர். இதனால் அவர்கள் தங்கள் மேல் திணிக்கப்பட்ட சாதி, மதங்களில் இருந்து விடுதலை பெறுகின்றனர். இது சந்தேகமேயில்லாமல் ஒரு மகத்தான சாதனை.

சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும் இன்னும் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பரிபூரண சமுதாய அந்தஸ்த்து மற்றும் ஏற்றத்தாழ்வு இல்லாத நடைமுறை வாழ்க்கை கிடைப்பதற்க்காக சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் மேற்கொண்ட போராட்டத்தை இன்று திருமா தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். இதற்காக திருமா தனது பெரும்பான்மையான நேரத்தை தாழ்த்தப்பட்ட மக்களுடன் செலவு செய்கிறார். நடு நிசியில் உறங்கும் போது கூட இயக்கதோழர்கள் அவரை எழுப்பி 'பக்கத்து ஊரில் குடிசையை எரித்து விட்டார்கள்', 'ஒருவரை மரத்தில் கட்டி அடித்துவிட்டார்கள்' ‘தலித் பெண்கள் கற்பழிக்க பட்டார்கள்” போன்ற செய்திகளை சொல்லுவார்களாம். இவரும் உடனே அந்த இடத்துக்குச்சென்று பிரச்சினைக்கு தீர்வு காண முனைவார். அம்மக்களுக்கு நேரும் கொடுமைகளைப்பற்றி அவர் சொன்னது, மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எல்லா அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்தமாக 'தமிழர்களை முன்னேற்றுவோம்' என்று பேசுகிறார்களே, மலத்தை திணித்த தமிழனும், மலத்தை தின்ற தமிழனும் எப்படி ஒன்றாவான்? சிறு நீர் கழித்த தமிழனும், சிறு நீர் குடித்த தமிழனும் எப்படி ஒன்றாவான்? என்று திருமா தங்கப்பட்டார். அவரோடு சேர்ந்து எனது மனமும் தங்கப்பட்டது. இந்த ஒடுக்கப்பட்டவர்கள் தமது முனேற்றத்திற்க்காக அவர்களே எத்தனை நாள் போராடிக்கொண்டிருப்பார்கள்? மற்றவர்களின் ஆதரவும் அவர்களுக்கு கிடத்தாலே ஒழிய, இவர்களது போராட்டம் வெற்றி பெற மிக நீண்ட காலம் ஆகும்.

"எங்கு ஒரு தவறை கண்டாலும் அதை செய்பவர் எவராயிருந்தாலும் அதனால் பாதிப்புக்கு ஆளாகிறவர் தமக்கு தெரியாதவராக இருந்தாலும் அந்த தவற்றைக் கண்டு கொதித்து எழுகின்ற பண்பே சமூக பொது மனசாட்சியாகும். கறுப்பின மக்கள் துன்பப்படும் போது, ஒடுக்கப்பட்டபோது அதற்கான போராட்டங்களில் தம்மையும் ஈடுபடுத்திக்கொண்ட வெள்ளையர்கள் சிறந்த உதாரணம் வார்கள்"(டாக்டர் அம்பேத்கர்). எனவே ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்க்கான போராட்டத்திற்க்கு உலகேங்கும் வாழும் தமிழர்கள் திரண்டு தங்கள் ஆதரவைத் தரவேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் என்ற ஒரு இனமே நமது சமுதாயத்தில் இருக்கக்கூடாது.

கறுப்பு இன மக்களுக்கு போராடிய நெல்சன் மண்டேலா, அமெரிக்க கறுப்பின மக்களுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்த மார்டின் லூதர் கிங், இந்திய தலித் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு போராடிய அம்பேத்கார், இவர்களுடைய போரட்டங்களை உள்வாங்கி அண்ணன் திருமாவும் களத்தில் தன்னை அற்பணித்துக் கொண்டது பாராட்டப்பட வேண்டிய விசயம்.

Image Hosted by Your Image Link

"எவன் ஒருவன் எவ்வித பயமுமின்றி, எந்த சார்புமின்றி தன்னுடைய மக்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று துணிந்து சொல்கிறானோ - அவனையே நான் தலைவனாகக் கருதுவேன்..." என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருக்கிறார். இதற்குத் திருமா மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

ஆபத்துகள் நிறைந்த சாதி வெறிக்காட்டில் துணிவோடும், தன்னம்பிக்கையோடும் தலித் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்க்கும் பாதை அமைக்கப் போ¡ராடும் இவரைப்போல ஒரு தலைவர் கிடைப்பதற்க்கு தலித் மக்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அவர்களது ஒளிமயமான எதிர் காலம் என் கண்களில் தெரிகிறது.

"சாதி மதம் தொலைத்த
சமநிலை வாழ்வு நிலைத்த
தமிழ் அறம் தழைத்த
தமிழர் இனமாய்
தமிழர் நிலமாய்
தலை நிமிர்வோம்! தலை நிமிர்வோம்!"

நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...






Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நான் ரசித்தப் புகைப் படங்கள்...

எனக்கு புகைப் படங்கள் சேகரிப்பது வழக்கம்.
அடுத்தப் பதிவு அரசியல் மற்றும் சினிமா பற்றிய நல்ல புகைப் படங்கள் போடலாம் என முடிவு செய்துபார்த்து கொண்டு இருந்த பொழுது,
சிலப் படங்களை உங்கள் பார்வைக்கு காண்பிக்க ஆசைப் பட்டேன்...
இதோ உங்கள் பார்வைக்கு...

முதலில் அரசியல்...

Image Hosted by Your Image Link

Image Hosted by Your Image Link

Image Hosted by Your Image Link

Image Hosted by Your Image Link

Image Hosted by Your Image Link

அடுத்து நம்ம திரைப்பட மக்கள்...

Image Hosted by Your Image Link

Image Hosted by Your Image Link

Image Hosted by Your Image Link

Image Hosted by Your Image Link

Image Hosted by Your Image Link

Image Hosted by Your Image Link

Image Hosted by Your Image Link


நீங்கள் விரும்பினால் இன்னும் இதுப் போல பல இருக்கு...

நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...








Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, May 18, 2005

மொழிப் பாடங்களில் நிறைய மதிப்பெண் எடுத்து என்ன பலன்?

இன்று தமிழகத்தில் பனிரெண்டாவது தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. வழக்கம் போல் பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள். பாராட்டுகள்!!!

நம் தாய் மொழி தமிழில் சத்யா(196), ரம்யா(195) - நாமக்கல், மோனிஷா (195) - ராசிபுரம், தமிழகத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!!!

அதுமட்டும் அல்ல ஆங்கிலம், உருது, பிரெஞ்சு, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஜெர்மனி மற்றும் சமஸ்கிருத்ததிலும் எண்ணற்ற மாணவர்கள் 198 முதல் 185 வரை மதிப்பெண்கள் எடுத்து கலக்கி உள்ளார்கள். அனைவரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

+1, +2 இரண்டு வருடம் கடினப் பட்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் 200க்கு 196 மதிப்பெண்கள் எடுப்பது சதாரண விசயம் அல்ல. அப்படி எடுத்த மதிப்பெண்கள் பின்னர் பயன் படாமல் போவதுதான் வேதனையிலும் வேதனை.

இப்படி மதிப்பெண்கள் எடுத்ததிற்கு சில பாராட்டுகளும் சில பரிசுகளும் மட்டும் கிடைக்கும், ஆனால் எதிர் காலத்திற்கு?

BE/MBBS/AGRI/DENTAL/ போன்ற Professional படிப்புகளில் மொழிப் பாடத்தின் மதிப்பெண்கள் தேவை படாது என்பது சோகத்திலும் சோகம். மேலை நாடுகளில் விளையாட்டு மற்றும் நீச்சல் பாடத்தை கூட மேற்படிப்பிற்கு கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.

கணிதத்தில் 200/200 எந்தளவு கடினமோ அதைவிட மொழிப் பாடத்தில் 196, 195 எடுப்பது மகா கடினம். சின்ன சந்திப் பிழை, இலக்கணப் பிழை உட்பட ஆசிரியர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். அதைவிட கொடுமை இதனாலேயே பள்ளிகளில் மொழி ஆசிரியர்களுக்கும் மதிப்பு இருப்பது இல்லை.

மொழிப் பாடத்தில் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் நிச்சயம் மற்றப் பாடங்களிலும் நிறைய மதிப்பெண்கள் எடுத்து Professional படிப்புகளுக்கு சென்று விடுவார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவராக, பொறியாளராக போவதாக பேட்டி கொடுக்கிறார்கள். அவர்களைச் சொல்லி எந்த தவறும் இல்லை. ஆனால் மொழிப் பாடங்கள் ஆன இளங்கலை (BA) தமிழ், ஆங்கிலம் யாரும் சேருவதும் இல்லை. வேறு ஏதாவது பாடங்கள் (Bsc, Physics, Chemistry, Mathematics) கிடைக்காமல் தமிழிலும், ஆங்கிலத்திலும் சேர்வார்கள்.

மேலை நாடுகளில் எல்லா படிப்பிற்கும் நல்ல ஆர்வத்தோடு சேர்கிறார்கள், படிக்கிறார்கள், வேலையைத் தேடிக் கொள்கிறார்கள்.

மொழிப் பாடத்தை கட்டாய பாடமாக பக்கத்து மாநிலங்கள்(கேரளா, ஆந்திரா, கர்நாடகா) போல ஆக்க கழக அரசுகள் தவறி விட்டன. மொழிப் பாடத்திலும் நிறைய மதிப்பெண்கள் எடுப்பவர்கள் நுழைவுத் தேர்வுக்கு அனுமதித்தால் எண்ணற்ற கிராமத்து மாணவர்கள் முன்னேற இது ஓர் நல்ல வாய்ப்பாக இருந்து இருக்கும்.

ஆனால் பத்தாவது மற்றும் பனிரெண்டாவது மாநிலத்தில் முதல் மாணவனாக வருவதற்கு "தமிழை" முதல் பாடமாக எடுத்து படிப்பவர்களுக்கு பரிசு தருவது ஓர் ஆறுதலான விசயம்.

நமது கல்வித் திட்டத்தில் உள்ள குறையா?
அல்லது நமது சமூக கட்டமைப்பில் உள்ள தவறா? அல்லது மிக அதிகமாக உள்ள மக்கள் தொகையா? அல்லது பொருளாதார ரீதியாக நாம் படும் சிரமங்களா? போட்டி நிறைந்த உலகில் மொழிப் பாடத்தை எடுத்து படித்து வெற்றி பெற முடியாதா?

எப்படி பெற்றோரின் மனநிலையை,
நம் சமுதாயத்தின் மனநிலையை, மொழிப் பாடம் எடுத்துப் படிக்கும் மாணவனின் மனநிலையை
ஊக்கப் படுத்தி உலக அரங்கில் வலம் வர செய்வது?

நன்றி...

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, May 17, 2005

சைக்கிள் வாங்க வேண்டும்!!!

சைக்கிள்...

இன்றையத் தினத்தில் Two Wheeler இல்லாத வீடுகளே இல்லை எனலாம். எவ்வளவு வித விதமான அழகு அழகான Bikes. Hero Honda, Yamaha, TVs Suzuki, Bajaj, Scooter, Scooty, TVS 50, TVS Champ மற்றும் Luna இப்படி எத்தனை வகைகள். எந்த தொலைகாட்சியை நீங்கள் பார்த்தாலும் அதில் Two Wheeler இல்லாத விளம்பரங்களே இல்லை எனலாம்.

Image Hosted by Your Image Link

ஆனால் இவை எல்லாவற்றிற்க்கும் மூலம் “’சைக்கிள்”. எவ்வளவு அற்புதமான, எளிமையான, சுற்றுப் புறச் சூழல் பாதிக்காத வாகனம் இந்த சைக்கிள். ஏழைகளின் நண்பன்.

நாம் சின்ன வயதில் சைக்கிள் கற்றுக் கொண்டது 5ம் வகுப்பு படிக்கும் பொழுது. ஆரம்பத்தில் குரங்கு பெடல் ஒட்டுவது, பின்னர் Barல் உட்கார்ந்து ஓட்டுவது, பின்னர் சற்று வளர்ந்தவுடன் Seatல் உட்கார்ந்து ஓட்டியது நினைவிற்கு வருகிறது.

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அப்பா என்னையும், தம்பியையும் சைக்களில் கொண்டு போய் பள்ளியில் விடுவார். சில பணக்கார பிள்ளைகள் சின்ன சைக்கிளில் வருவதைப் பார்த்தால் ஏக்கமாக இருக்கும்.

Image Hosted by Your Image Link

ஓரே வீட்டில் இருவர் அல்லது மூவர் ஓரே சைக்கிளை உபயோகப் படுத்துவது பயங்கர கடுப்பான விசயம். ஞாயிறு மாலை நண்பர்களோடு திரைப் படம் போகலாம் நாம திட்டம் போட்டு இருந்தா, தம்பி ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகு காலத்திற்கு துர்கை அம்மன் கோவிலுக்கு போக சைக்கிள் வேணும் என்று கேட்பான், தம்பிக்கு வீட்டில் நம்மை விட செல்வாக்கு ஜாஸ்தி. வெறி தலைக்கு ஏறும். அப்ப எல்லாம் வேலைக்குப் போய் முதலில் சைக்கிள் வாங்க வேண்டும் என்பது பெரிய லட்சியமாய் இருந்தது.

கோடை விடுமுறையில் காலை வேளையில் சிலு சிலு காற்றில் சைக்கிளில் பயணம் செய்வது ஓர் ஆனந்தம். சில சில சமயம் எதிர் காற்றில் வேகமாய் போய் விட்டு வரும் பொழுது மெதுவாக வருவது மற்றொரு சுகம். அல்லது பெரிய பாலத்தில் வேகமாய் ஏறிவிட்டு இறங்கும் பொழுது ஹாயாக இறங்குவது சூப்பரோ சூப்பர்!!!

சைக்கிளில் நண்பர்களோடு கும்பலாக திரைப் படம் செல்லுவது, அருகில் உள்ள கோவில்களுக்கு செல்லுவது சுகமோ சுகம்.

வீட்டில் சைக்கிள் இல்லாத பொழுது வாடகை சைக்கிள் எடுத்து சுத்துவது அலாதியான அனுபவம். வாடகை கடையில் அழகு அழகாய் சைக்கிள் வரிசையாய் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும். 1 மணி நேரத்திற்கு 1 ரூபாய்.
அந்த பணத்தை வீட்டில் வாங்குவதற்குள் போதும் போதும் என்று கிவிடும்.

சைக்கிளில் முன்பக்கம் காதலியை வைத்து வேகமாக ஓட்டிக் கொண்டு போனது உண்டா? அந்த சுகத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது. அதுவும் யாருக்கும் தெரியாமல்"escape" வது கலக்கல் கண்ணா, கலக்கல்..

Image Hosted by Your Image Link

சைக்கிளில் doubles, triples போய் போலிஸிடம் மாட்டி, சில சமயம் அவர் காற்றை புடுங்கி விட்டு, அவரிடம் கெஞ்சி கூத்தாடி வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.

12வது முடித்தவுடன் BE சேர வேண்டிகிட்டு மயிலாடுதுறையில் இருந்து (15 கீ.மீ) சைக்கிளில் வைத்திஸ்வரன் கோவில் சென்றது ஓரு காலம்? ஓரு ஆண்டு நடந்து கூட போய் இருக்கிறேன். (BE கிடைக்கவில்லை என்பது அதைவிட பெரிய சோகம்)


சைக்கிள்தான் எல்லாவற்றிற்கும் மூலம். ரைட் சகோதரர்கள் கூட இதனை வைத்துதான் ஏரோபிளேன் வரை திட்டம் போட்டு கண்டுபிடித்தாக நினைவு.

ஹாலந்து, டென்மார்க் போல நாடுகளில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப் படுத்துவதைப் போல நம் நாட்டிலும் ஊக்கப் படுத்தினால், பாதி சுற்றுப் புறசுழல் காப்பாற்றப்படும்.

சைக்கிளை கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த பேரான் வான் டிராஸ் மற்றும் ஸ்காட்லேண்டை சேர்ந்த கிர்பாட்ரிக் மேக்மிலன் அவர்களுக்கு மனதார நன்றிகள் பல...

சைக்கிளில் Raleigh, Hercules, Atlas, BSA, BSA XLR, BSA Sports இப்படி பல மாடல்கள் இருந்தன. தற்பொழுது என்னனென்ன உள்ளது என்று விசாரிக்க வேண்டும்.

காலை மாலை உடற்பெயர்ச்சி செய்யவாது சைக்கிள் வாங்கி ஓட்ட வேண்டும்...

என்னதான் சொந்த ஊரில் அழகான வீடுக் கட்டினாலும், மாருதி கார் வாங்கினாலும், Hero Honda, Bajaj Bike வாங்கினாலும் ஒரு சைக்கிள் வாங்கிய தீர வேண்டும்.

நன்றி...

மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, May 16, 2005

தொலைந்த போன காலங்கள்...தொலைந்து போன நட்புகள்...

எதிர்கால நிஜம் தெரிந்தும், இப்படி ஓரளவு நல்ல வாழ்க்கை அமையும் என்று முன்பே தெரிந்தும் இருந்தால் பழைய வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் ஆற அமர அனுபவித்து இருக்கலாம்...ஹம்ம்...

தொலைந்த போன காலங்கள்தான் எவ்வளவு? எவ்வளவு? என்னத்த சொல்றது?


காவிரி ஆத்துல இன்னும் கொஞ்சம் பொறுமையா குளித்து இருக்கலாம், நல்ல நீச்சல் கற்று இருக்கலாம். நண்பர்களோடு வீட்டிற்கு தெரியமல் இன்னும் கொஞ்சம் சினிமா பார்த்து இருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரம் கிட்டி புல் ஆடி இருக்கலாம், நல்ல கபடி ஆடி உடம்ப திட படுத்தி இருக்கலாம். கோடை விடுமுறையில் மாலை வேளைகளில் நல்ல அழகு ஆழகான பட்டம் விட்டு இருக்கலாம். பத்தாவது படித்து முடித்துவிட்டு

பாலிடெக்னிக் சேர்ந்து தொழில் கல்வி கற்று இருக்கலாம்.

சிறு வயது முதல், திருமண வாழ்க்கை வரை வேக வேகமாய் ஏன் ஒடினோம்? எதற்கு ஓடினோம்? ஒன்றுமே புரியவில்லை!

எதிர்கால பயம் இல்லமல் கையில் ஓரு ரூபா இல்லாமல் எந்த கவலையும் இல்லாமல் மாலை வேளைகளில் கோயில்களில் “கலர் கலராய்” பார்த்த காலங்கள் மீண்டும் வருமா?

தேர் ஓடும் வீதியில், வருடம் இரு முறை தேர் இழுத்து அன்று முழுவதும் அதைப் பற்றியே பெருமையாய் பேசிக் கொண்டு இருந்த காலங்கள் மீண்டும் வருமா?

நண்பர்கள் திருமணத்திற்கு ஆளுக்கு 10 ரூபாய் போட்டு நல்ல பெரிய சுவர் கடிகாரம் வாங்கி கொடுத்து விட்டு, இரவில் விடிய விடிய சீட்டு ஆடிய காலங்கள் திரும்ப வருமா?

நண்பன் காதலுக்கு தூது போய், அவள் கொடுத்த கடிதத்தை நண்பனிடம் கொடுத்து விட்டு, நண்பன் மகிழ்ச்சியில் வாங்கி கொடுத்த கோழிப் பிரியாணியும், மட்டன் சால்னாவும்... என்னத்த சொல்ல, மீண்டும் வருமா அந்த காலம்?

பக்கத்துத் தெருவில் ஓர் தோழி கிடைத்து, பார்த்து நட்பு ஆகி, அது நட்பா அல்லது காதலில் போய்முடியுமா என்று நினைப்பதற்கு முன்பே அந்த பெண்ணிற்கு திருமணம் ஆன அந்த சோக நாட்களை நான் எப்படி சொல்ல?

சிறிய வயதில் அனுபவத்தோடு செல்லமாய் கண்டிக்க நல்ல ஓர் ஆள் இல்லாமல் போன காரணத்தினாலே, 16, 18 வயதில் நண்பர்களோடு ஜாதகம் பார்த்த போழுது லக்னத்தில் சுக்கிரன் இருக்கிறான், மனம் பொழுதுப் போக்கு நாட்டங்களில் அதிகம் இருக்கும் என்று அவன் சொல்ல, 5ந்தில் சந்திரன் இருக்கிறான் அதிரூப மனைவி வாய்ப்பாள் என்று மேலும் சொல்ல, கடல் கடந்து போவது இந்த ஜாதகத்தின் விதி என்று சொன்னதை கேட்டு 10 வருடங்கள் அதேயே நினைத்துக் கொண்டு இருக்க...

கல்லூரியில் படித்துக் கொண்டே, முடிந்தால் நமக்குப் பிடித்த பெண்ணை காதலித்துக் கொண்டே, எதிர்கால பயம் இல்லாம கழித்த காலம் மீண்டும் வருமா?

இப்படி கடந்து போன காலங்களை நினைத்து நினைத்து என்ன பலன்? இன்னும் கொஞ்சம் பொறுமையாய் வாழ்க்கையை நிதானமாக அனுபவித்து இருக்கலாமே என்று மனம் ஏங்குகிறது மற்றும் வருத்தப் படுகிறதே?


Image Hosted by Your Image Link


தொலைந்துப் போன நட்புகள் எத்தனை எத்தனை?

நம் மனித உறவுகளில் “நட்புக்கு” மட்டும் ஓர் தனி இடம், மரியாதை, அன்பு, பாசம் மற்றும் நேசம் எல்லாம்...

நம் வாழ்க்கையின் பாதையில் “நட்பின்” ஆழத்தை, உறவை, அந்த அருமையான தருணங்களை அணு அணுவாக அனுபவித்து இருப்போம். அப்படி பட்ட நட்புகள் இன்னமும் நம்மோடு இருக்கிறதா? அப்படி தொடர்ந்தால் வாழ்த்துகள்.

அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விசயத்தை,
சகோதர சகோதிரியிடம் பகிர்ந்து கொள்ளாத விசயத்தை,
உற்ற உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளாத விசயத்தை,
எப்படி எந்த தொப்புள் கொடி உறவில்லாத உறவான
“நட்பிடம்” பகிர்ந்துக் கொள்ள முடிகிறது?


தூய்மையான நட்பிடம் மதம் இல்லை, ஜாதி இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை, Ego இல்லை. எப்படி எத்தனை “இல்லைகள்”?

அப்படி நமக்கு வாய்த்த பல நட்புகள் இன்று எங்கே?
கால ஓட்டத்தில் அடித்துச் சென்ற நம் நண்பர்கள் எங்கே?

நட்பில்தான் எத்தனை வகை? எல்லாவற்றையும் எல்லோரிடமும் நம்மால் பேச முடியவில்லை? ஒவ்வொரு விசயத்திற்கும் வித விதமான நட்புகள்!!!

பள்ளிப் படிக்கும் பொழுது மேற்கொண்டு படிக்க, BE, MBBS, Agri யா? இப்படி படிப்பு சம்பந்தமாக பேசிய நட்பு,

கலைஞரா, ஜெயலலிதாவா என்று பாதி நேரம் அடித்து பேசிய அரசியல் நட்பு,

குஷ்பூவிற்கு பிறகு சினேகாதான் அழகு என்று வாதிட, இல்லை இல்லை திரிஷாதான் செம அழகு என்று வாதிட்ட சினிமா நட்பு,

ரியல் எஸ்டேட் நல்ல வியாபாரமாமே? இல்லை Automobiles நல்ல வியாபாரம் என பேசிய வியாபார நட்பு,

இப்படி எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக நல்ல ஊர்கதைப் பற்றி பேசிய பல நட்புகள் எத்தனை எத்தனை?

சிறு வயது முதல் பழகிய எழுத்தவீட்டு, பக்கத்து வீட்டு பெண்களின் நட்பு, காலப்போக்கில் அவர்களுக்கு திருமணம் ஆனவுடன் தொலைந்து போனதன் மாயம்தான் என்ன?

தற்பொழுது வெளிநாடுகளில் வாழும் பொழுது நம் மொழிப் பேசக் கூடிய பல நட்புகள் வந்தாலும் ஏன் அவர்களிடம் நம் தமிழகத்து நட்புப் போல அனைத்தையும் பேச முடியவில்லை? ஏன் உள்ளத்து அனைத்து உணர்வுகளையும் அப்படியே படம் புடித்து காண்பிக்க முடியவில்லை? பல சமயம் பட்டும் படாமலும் மட்டுமே பேச முடிகிறது?


என் பொருளாதாரப் பிரச்சனைகளை, என் மன அழுத்தத்தை, என் எதிர்கால லட்சியத்தை, என் ஆசைகளை, அந்தரங்க உணர்வுகளை, என் துன்பங்களை, என் மகிழ்ச்சிகளை, என் உறவின் பிரிவுகளை ஏன் அப்படியே பகிர்ந்து கொள்ள முடியவில்லை? ஏன்?

காதலிலே தோல்வி பற்றி பார்க்கிறோம், பேசுகிறோம், ஆனால் நாம் இழந்த ஆழமான நட்புகளைப் பற்றி பேசுவதும் இல்லை, அதனைப் பற்றி மனதிலேயே பூட்டி வைத்து வருத்தப் படுகிறோம்.

காலங்கள் மாற, மாற சூழ்நிலைகள் மாற மாற மனிதனும் மாறுவான், இது இயற்கையின் விதியாய் இருக்கலாம்..

ஆனால் நாம் தொலைத்த காலத்தை, நாம் தொலைத்த நட்பை எப்படி மீட்டு எடுப்பது?

நன்றி
மயிலாடுதுறை சிவா...




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இஸ்லாமியர் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போகமுடியுமா?

இஸ்லாமியர் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போகமுடியுமா?

ஓர் புகைப் படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள்.

இந்த மெக்கா புகைப் படத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனம் புரியாத ஓர் மகிழ்ச்சி. மதத்திற்கு அப்பாற்ப் பட்டு இந்தப் புகைப் படத்தை பல முறை ரசித்து இருக்கிறேன்.

Image Hosted by Your Image Link


இஸ்லாமியர் அல்லாதவர்கள் அங்கு போக முடியாது என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். வலைப் பூ இஸ்லாமிய நண்பர்கள் விளக்கவும்.

Image Hosted by Your Image Link

கிட்டதட்ட எத்தனைப் பேர் இங்கு தொழுகலாம்? சாப்பாடு வசதிகள் எப்படி இருக்கும்?சுற்றுப் புற சுகாதரம் எப்படி இருக்கும்? கழிப்பறை வசதிகள் எப்படி இருக்கும்? இப்படி கேள்வி கேட்டதற்கு மன்னிக்கவும்.

ஏனெனில் ஐய்யப்பன் கோவில் சென்று பார்த்து இருக்கிறேன். ஆகையால் வருத்ததோடு இதனை கேள்வி கேட்கிறேன்.

நன்றி...
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, May 15, 2005

முதலில் என் ஆசிரியர்களுக்கு சமர்பணம்...

எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

இந்த வாரம் என்னை நட்சத்திர பதிவாளராக இருக்கும்படி கேட்டுக் கொண்ட மதி அவர்களுக்கும் காசி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நமது வலைப் பூக்கள் பூங்காவில் எத்தனையோ எழுத்துக்களைப் படித்து பிரமித்து, அசைப் போட்டு இருக்கிறேன். அவர்களை எல்லாம் பார்க்கும் பொழுது நான் ஒரு மிக சதாரணமாக எழுதும் ஒர் சராசரி வலைப் பூ பதிவாளன். என் எழுத்துக்கள் மூலம் பிறரை கவர்ந்து இழுக்க முடியும் என்றோ, பிறரை சிந்திக்க வைக்க முடியும் என்றோ நான் நிச்சயம் நம்பவில்லை. நமக்கு தெரிந்தக் கருத்துகளை வலைப்பூவில் பதிய வைப்பது ஓர் சுகம். சில பின்னூட்டம் வந்தால் மேலும் ஒர் சுகம். அவ்வளவே!!!

ஆனால் எனக்கு இங்கு கொடுக்கப் பட்டு இருக்கும் வாய்ப்பை என்னால் முடிந்தவரை எனக்குப் பிடித்த விசயங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளப் பிரியப் படுகிறேன்.

முதலில் என் ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்...

நாம் கடந்த வந்த பாதையில் நாம் எத்தனையோ பேர்களிடம் பழகுகிறோம், பார்த்து இருக்கிறோம். சிலர் மனதை கிள்ளியவர்கள், சிலர் மனதை அள்ளியவர்கள், சிலர் மனதை தொட்டவர்கள், சிலர் மனதை பாதித்தவர்கள், சிலர் மனதை நோக அடித்தவர்கள், சிலர் நம் சிந்தனையை தூண்டியவர்கள், இப்படி எத்தனை எத்தனை பேர்கள்? இப்படி நம் வாழ்வை சுற்றி அறிந்தும் அறியாமலும் எத்தனை மனித உறவுகள்? எல்லா உறவுகளும் நம்மோடு இருப்பதும் இல்லை, நம்மோடு வருவதும் இல்லை. இது இயற்கையின் விளையாட்டோ? ஆனால் அந்த உறவுகள் விட்டுவிட்டு சென்ற தடங்கள் நம் கூடவே பயணம் செய்துக் கொண்டுதான் இருக்கிறது...

அப்படி நாம் கடந்து வந்த பாதையில் நம் ஆசிரியர்களுக்கு ஓர் குறிபிட்ட பங்கு இருப்பதாகவே நான் நம்புகிறேன். அப்படி பட்ட ஆசிரியர்களுக்கு, எந்தவித சுயநலம் இல்லாத ஆசிரியர்களுக்கு, நான் என்றும் என்றும் கடமைப் பட்டவன். நாம் அளவு கடந்த அன்பும், மரியாதையும், பண்பும், வைத்து இருப்பதன் காரணந்தான் என்ன? அவர்களுக்கு தெரிந்த பாடங்களை மிக தெளிவாக நடத்துவது, அவர்களுடைய வெளி உலக பார்வை, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களிடம் உள்ள ஏதோ ஒர் தனித்துவம் மற்றும் மனித நேயமாககூட இருக்கலாம் அல்லவா?

அப்படி என் வாழ்வில் என் மனதில் இன்றும் கொடிகட்டி பறக்கும் என் மனவெளியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கும் சில ஆசான்களை ஓர் சில வார்த்தைகளில் உங்களோடு பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். இந்த என் பார்வை உங்களில் யாருக்கேனும் அவர்கள் ஆசிரியர் நினைவு வந்தால் அதைப் பற்றி ஒர் சில நேரம் சிந்தித்தால் அதுவே எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சி!!!

6 ஆம் வகுப்பு : இராமநாதன் ஆசிரியர். மிக அருமையாக கணிதம் மற்றும் ஆங்கிலம் நடத்திய ஆசிரியர். மாணவர்களோடு மிக அன்பாக நடந்துக் கொள்பவர். எனக்கு தெரிந்த விடியகாலை எழுந்து குளித்துவிட்டு 4 அல்லது 5 கீ.மீ நடந்து செல்பவர். சிரித்த முகத்தோடு இருப்பவர்.

7ஆம் வகுப்பு : விஜயலச்சுமி ஆசிரியை. என் பள்ளி பருவத்தில் நான் பார்த்த முதல் மிக அழகான ஆசிரியை. அறிவியல் எடுத்தார். சற்று கண்டிப்பானவர்.

8ஆம் வகுப்பு : தமிழ் ஆசிரியர் மணி. அழகுத் தமிழில் அருமையாக பாடம் எடுக்க கூடியவர். தமிழ் இலக்கணங்களை புரியம்படி நடத்தியவர். தமிழ் ஆசிரியர் என்றப் பெருமையோடு பாடம் நடத்துபவர்.

9 ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு : வெங்கட்ராமன் ஆசிரியர். பள்ளியிலும் மற்றும் மயிலாடுதுறையிலும் மிக பிரபலமான ஆசிரியர். கணிதத்திலும் ஆங்கிலத்திலும் வல்லவர். எனக்கு நினைவுத் தெரிந்து எந்த உணவகத்திலும் சாப்பிடாத மனிதர். அவர்கள் வீட்டிற்கு எப்பொழுது வேண்டுமானலும் போய் அவரை பார்க்கலாம் பேசலாம் அரட்டை அடிக்கலாம். நல்ல ஜாலியான மனிதர். மிகச் சிறந்த அனுமார் பக்தர்.

11 மற்றும் 12ஆம் வகுப்பு : பாலகிருஷ்ணன் கணித ஆசிரியர். மிக அருமையாக எளிமையாக கணக்கு நடத்துபவர். வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவனை அடையாளம் கண்டு அவர்கள் வெற்றிப் பெற தனி கவனம் செலுத்துபவர். இவரின் அன்பும் எளிமையும் நக்கலும் இன்னமும் மனக் கண் முன்னே

நிழலாடுகிறது. தற்பொழுது அவருக்கு வயதாகி விட்டது. அவரை பார்த்து பேசிய பொழுது அவருடைய வயோதிகம் என்னை ரொம்ப பாதித்தது.

கல்லூரி இளங்கலை : தமிழ் பேராசிரியர் சோ.சிங்காரவேலன். மிகச் சிறந்தத் தமிழ் பேராசிரியர். இலக்கியவாதி, இவர் இல்லத்தில் தினம் தினம் ஒர் திருக்குறளை எழுதும் பழக்கம் உள்ளவர். தற்பொழுது உயிருடன் இல்லை.

பேராசிரியர் செம்பியன் : மிக கலகலப்பாக அன்போடு எளிய தமிழில் உரையாடகூடிய ஆசிரியர். சிறந்த பட்டிமன்ற மற்றும் மேடைப் பேச்சாளர். தலித் முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்டவர். சமுதாய சேவைகளை செய்து வருபவர். தமிழில் கையொப்பம் இடும் ஆசிரியர்.

முதுகலை : ஆங்கில பேராசிரியர் மேத்யூ தாரகன். கல்லூரியில் சற்று முரண்பாடான ஆசிரியர். ஆனால் அவருடைய இலக்கிய அறிவு ஏராளம். மிக அருமையாக ஆங்கில நாடகம், பாடல்கள், உரைநடை எல்லோருக்கும் புரியும் வண்ணம் மனதில் பதியும் வண்ணம் ஆங்கிலம் நடத்த கூடிய ஆற்றல் படைத்தவர். அவருடைய ஆங்கில அறிவை, நடத்தும் ஆற்றலை பார்த்து அவரை 20 வயது பெண் அவரைத் திருமணம் செய்துக் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். (அவருக்கு அப்பொழுது வயது 46). பைபிளை கரைத்து குடித்தவர். அவர் ஆங்கில இலக்கியங்களை நடத்தியவிதம் சாகும்வரை மறவாது.

இப்படி பல ஆசிரியர்கள் திறம்பட நடத்தி என் மனதை தொட்டவர்கள். தனக்கு தெரிந்த பாடத்தை மாணவனுக்குப் புரியும் படி ஆழமாக பதியும் வண்ணம் நடத்தும் ஆசான்களை நினைத்து பிரமிக்கிறேன். ஆத்ம திருப்தி தரும் தொழில்களில் ஆசிரியர் தொழில் முக்கியமான தொழில், தொண்டு, கைமாறு, இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நண்பன் போல பழகும் ஆசிரியர் மீது மேலும் ஓர் தனி மரியாதை.

என்னுடைய நிகழ்கால மற்றும் எதிர்கால வெற்றிகளுக்கு எனது அருமை ஆசிரியர்களுக்கு ஒரளவு பங்கு உள்ளது என்றே நான் நினைக்கிறேன்.

தமிழகம் செல்லும் பொழுது எல்லாம் அவர்களை தேடி தேடி சென்றுப் பார்க்கிறேன்...

நீங்களும் அவ்வப்பொழுது உங்கள் ஆசிரியரை நினைத்து பார்ப்பது உண்டா?

நாளை சந்திப்போமா?...

நன்றி...
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, May 10, 2005

நன்றி கெட்ட ஜெயகாந்தன்....நன்றி நெல்லை கண்ணன்!!!

நன்றி குமுதம் இதழுக்கு!!!

Image Hosted by Your Image Link

23.4.05 அன்று சென்னையில் சமஸ்கிருத சேவாசமிதியில் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது:

‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’

இதுகுறித்து ஜெயகாந்தனுக்கு நெல்லை கண்ணன் பகிரங்கக் கடிதம் எழுதுகிறார்.

அன்புள்ள அண்ணாச்சி,
வணக்கம்.

தமிழனாக, தமிழுக்காகவும், ஏழைகளுக்காகவும் வாழ்ந்து ஏழையாகவே மரணமடைந்த தோழர் ப. ஜீவானந்தம், தங்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ‘‘தமிழைப்படி; தவறில்லாமல் எழுதப்படி என்று கற்றுத்தந்த தமிழால், முழுமையாக இலக்கணம் கற்று ஒரு முழுமையான தமிழ்ப்புலவனுக்குரிய தகுதி பெற்றேன்’’ என்று நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்.

ஆனால் இன்றோ, ‘‘தமிழ் ஒன்றும் சொத்தல்ல. நான்தான் தமிழுக் குச் சொத்து’’ என்கிறீர்கள்.

எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?

அத்தனை தமிழறிவையும் உங்களுக்குத்தந்த தோழர் ஜீவாவின் வாழ்க்கை போன்றதா உங்கள் வாழ்க்கை?

அதனால்தான் ஏற்றத்தாழ்வுகளும் வர்ணபேதங்களும் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும் என்கிறீர்கள்!

உங்கள் பிரளயம் அம்மாசிக்கிழவனும், விழுதுகள் ஓங்கூர் சாமியாரும், ரிஷிமூலம் ராஜாராமனும், பாரீஸ§க்குப் போ சாரங்கனும், ஒருவீடு, ஒரு மனிதன் ஒரு உலகம் துரைக்கண்ணுப்பிள்ளையும், ஹென்றிப்பிள்ளையும், யாருக்காக அழுதான் ஜோசப்பும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியும் அக்னிப்பிரவேசமும், சிலநேரங்களில் சில மனிதர்கள் கங்காவும் சுமைதாங்கியும், அந்தரங்கம் புனிதமானது அக்ரஹாரத்துப்பூனையும், ஒருவீடு பூட்டிக்கிடக்கிறதும் படித்து மேடைகள் தோறும் அவைகுறித்துப் பேசி வருகின்ற என்னால் தாங்கமுடியவில்லை.

நான் ‘சாதி’ பேசறதா நினைக்கக்கூடாது. ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களில்’ நீங்கள் எழுதினீர்கள்’, எதிர்காலத்தில் என் பெயருக்குப் பின்னால் ஏதேனும் பட்டம் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டால் என் ஜாதிப்பெயரான ‘பிள்ளைமார்’ என்ற பட்டத்தையே போட்டுக்கொள்வேன்’ என்று.

அந்தப் பிள்ளைமார்களில் ஒருவரான மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளைதான்,

‘‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து

சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே’’ என்கின்றார்.

வடலூர் இராமலிங்கம் பிள்ளையிடம் ஒரு துறவி ‘சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகட்கும் தாய்’ என்றாராம். வள்ளலாரோ ‘ஆமாம் ஆமாம்’ என்று சொல்லி, ‘தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி’ என்றாராம்.

பிறமொழிகளைத் தூற்றுதல் கூடாது என்கின்ற தெளிவு எனக்கு உண்டு. ஆனால், எங்கேயும் வழக்கிலில்லாத மொழியன்றை தமிழைவிடச் சிறந்த மொழி என்று பேசுவதும், தமிழில் கலப்பின்றி பேசவேண்டும் _ எழுத வேண்டும் என்பவர்களை தங்களையே நக்கித்திரியும் நாய்கள் என்றும் சொல்லியிருக்கின்றீர்களே! ஆமாம். நாங்களெல்லாம் எங்கள் அன்னைத் தமிழுக்கு நன்றியுள்ள நாய்கள்தான்.

நீங்கள்..........?

தங்களின் ஞானத்தை பீடத்தில் அடகு வைத்துப் பெற்ற விருதிற்காகவா அன்னைத் தமிழைப் பழிப்பது? சாகித்ய அகாடமி விருது தந்த பொழுது ‘‘எனக்கு விருது தந்து சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது’’ என்று பேசிய அந்த ஜெயகாந்தனா?

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய கதையில், ஒருத்தி என்பதற்கு ஒருவள் என்று எழுதிய போது, இலக்கணத்தைப் படித்துவிட்டு, ‘‘இலக்கணத்தை மீறுங்கள். படிக்காமல் உடைக்காதீர்கள்’’ என்ற தாங்களா தமிழைப்பழிக்கின்றீர்கள்.

முன்பொருமுறை குமுதத்தில் ‘‘நான் முரண்பாடுகளில் மூட்டையாகிப்போனேன்’’ என்று எழுதினீர்கள்.

தங்களுக்கு வடமொழி நண்பர்கள் நிறைய உண்டு அறிவோம். அந்த வடமொழியும், வடமொழி நண்பர்களும் தங்களை வந்து சேர்ந்ததே _ அன்னைத் தமிழ் உங்களுக்கு அளித்த அளப்பரிய அறிவினாலும் எழுத்தாற்றலாலும்தான். இல்லையெனில் ஏது அந்த நட்பு?

நீங்களே எழுதியிருந்தீர்கள், ‘‘யாராவது வேண்டியவர்கள் உறவோ, நட்போ இறந்து போனால் அந்தச்சடலத்திற்கு மரியாதை செலுத்த வர வேண்டுமென்று அழைக்கக் கூடாது. ஏனென்றால் கம்பீரமான தோற்றத்தோடு பார்த்த அவர்களை பிணமாகப் பார்த்து அந்த உருவம் மனதில் பதிந்துவிடக் கூடாது’’ என்று.

எங்கள் நிலைமையைப் பாருங்கள். கம்பீரமாகப் பார்த்த உங்கள் உருவத்தை மறந்துபோக வேண்டிய சூழலை நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்.

பட்டினத்தார் சொல்வார் _ வயதானால் ‘‘செவி திமிர் வந்து, குழற மொழிந்து’’ என்று. திருநெல்வேலியில சாதாரணமா வயசானவங்க உளறுனா ‘‘போதங்கெட்டுப்போச்சு’’ம் பாங்க

உங்களுக்கு போதங்கெட்டுப்போச்சா?

உங்கள் தோழர் ஜீவாவும், ஞானத்தந்தை பாரதியும் நல்ல தமிழ் இருந்தும் வறுமையில்தான் செத்தார்கள்.

நீங்களோ வசதியாகி, வளமாகி, அதை வழங்கிய தமிழைப் பழிக்கின்றீர்கள்.

பொழச்சுப் போங்க அண்ணாச்சி!
அன்புடன்,
நெல்லை கண்ணன்...

தொகுப்பு : திருவேங்கிமலை சரவணன்
படங்கள் : ஆர். சண்முகம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது